21 Jan 2020

ஒத்த வேலைய மட்டும் பாரு!



செய்யு - 334

            ஆபீஸத் தொறந்து கொஞ்ச நேரம் உக்காந்திருந்த விகடுவுக்கு ரொம்ப நேரம் அப்படியே உக்காரத் தோணல. இனுமே இந்த வேலையப் பாக்கப் போறதில்லங்றப்போ அதுல கவனம் போக மாட்டேங்குது. வந்த ஒடனே துடைப்பத்த எடுத்து ஒரு கூட்டு கூட்டி, தொடைக்க வேண்டியதையெல்லாம் ஒரு தொடைப்புத் தொடைச்சிட்டு, சிஸ்டத்தை ஆன் பண்ணிடுறவேம் இன்னிக்கு அப்படியே உக்காந்திருக்கான். மனசுக்குள்ள சோம்பலா இருக்குறாப்புல இருக்கு. அதெ நெட்டி முரிச்சு அந்தாண்ட தள்ள வழியில்லாதது போல இருக்கு. அவனோட அப்பங்காரரு, அம்மாக்காரி, தங்காச்சிக்காரின்னு எல்லாமும் சேந்துகிட்டுப் பேசுனது அவனோட மனசுல அலையலையா ஓடுது.
            இண்டர்வியூவுக்கு அழைச்சுட்டுப் போயிட்டு வந்த அவனோட அப்பங்காரரு வூட்டுல ஒரு பஞ்சாயத்த வெச்சுப்புட்டாரு. அவரு அதுக்கு மின்னாடி வாங்கிக் கொடுத்துத் தின்ன வெச்ச அல்வா வயுத்துக்குள்ள போயி கசக்குறாப்புல ஆயிடுச்சு விகடுவுக்கு. எதுக்கு அம்மாக்காரியையும், தங்காச்சிக்காரியையும் கூப்புட்டு உக்கார வெச்சார்ன்னு மொதல்ல தெரியல அவனுக்கு. போவப் போவத்தாம் புரியுது. எடுத்த எடுப்புலயே, "அந்த ஆபீஸூ பக்கம் தலெ வெச்சுப் படுக்கக் கூடாது. நாளைக்கிப் போயி கதெயெ முடிச்சிட்டு வந்துப்புடு. அதுல லாவமோ நட்டமோ ஒத்த காசி வாணாம். வூடு, பள்ளியோடம், வயக்காடோட நிப்பாட்டிக்கணும். சம்சாரிக ஒருத்தர்ர ஏமாத்திப் பொழச்சாம்னு இருக்கக் கூடாது. நம்மாள ஒரு குடும்பம் கெட்டதுன்னு, நடுத்தெருவுல நின்னதுன்னு நாளைக்கி பேச்சு வந்துப்புட கூடாது!"ன்னு கடைசியா ஒரு ரிவீட்டை வெச்சு அடிச்சாரு சுப்பு வாத்தியாரு.
            இந்த விசயத்தைத்தாம் டிசைன் டிசைன்னா இண்டர்வியூ கார்டு வந்து நாள்லேந்துப் போட்டு பொளந்து கட்டிக்கிட்டு இருக்காரேன்னு நெனைச்சக்கிட்டு விகடு கொஞ்சம் அசால்ட்டா மறுபடியும் பதிலெச் சொல்றாம். "நம்மாள இத்து வரைக்கும் கெடல. யாரும் நடுத்தெருவுல நிக்கல. எல்லாம் நல்லாத்தாம் இருக்காங்க. அவுங்க ஒருத்தரு மாத்தி ஒருத்தருகிட்ட சொல்லி நெறைய பேரு யேவாரத்துக்குள்ள வந்திருக்காங்க! வாத்தியாரு வேல பாட்டுக்கு ஒரு சைடுல போவட்டும். அது பாட்டுக்கு அது ஒரு சைடுல போவட்டும். ஆளெ போட்டு ஓட்டிக்கிடலாம். ஒண்ணுக்கு ரண்டு வருமானம் வர்றது நல்லதுத்தாம்பா!"ங்றாம் விகடு.
            "அதாங் வேணாங்கிறேம். பங்குச் சந்தையெல்லாம் நமக்குச் சரிபெட்டு வராது. குடும்பத்துல இருக்கிறவேம் பண்ற வேலையில்லடப்பா யது. பணத்த மித மிஞ்சி வெச்சிருக்கிறாங் பாரு. அவனுக்கு ஏத்தது அத்து. அவ்வேம் பண்ண வேண்டியது அது. மாசச் சம்பளக்கார நாம்ம. அதெ வெச்சி குடும்பத்த ஓட்டியாவணும். அதெ கொண்டு போயி அஞ்ஞ போட்டுகிட்டு நாதாரித்தனம் பண்ணி ஓட்டாண்டியா நிக்கக் கூடாது." ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "யப்பா! என்னப்பா சம்பந்தம் சம்பந்தம் இல்லாம புரியாம பேசிட்டு..."ன்னு விகடு சொல்றதுக்கு மின்னாடியே,
            "எலே! நாளிக்குச் சம்பளத்த வாங்குனா நீயி அஞ்ஞக் கொண்டு போயி போடுறதுலத்தாம்டே நிப்பே. அதாங் வேணாங்றேம். ஒழுங்கு மருவாதியா வேலயப் பாத்துட்டு குடும்பத்தெ பாக்குற வழியப் பாரு!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "யிப்போ ன்னா சொல்ல வர்றீங்கன்னு தெளிவா சொல்லுங்க!"ங்றான் விகடு.
            "அதாம்டா! அதெ வுட்டுப்புடு. அந்தப் பக்கம் தல வெச்சுப் படுக்காதே. அதெத்தாம் திரும்பத் திரும்பச் சொல்றேம்!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "அதாங் ஏம்ங்றேம்?"ங்றான் விகடு இப்போ சத்தத்தெ கொஞ்சம் உசத்தி.
            "அதத்தாம்டா சொல்றேம். நமக்கு ஆகாது. நம்ம குடும்பத்துக்கு ஆகாதுன்னு. ஒத்துக்காதுன்னா வுட்டுப்புட வேண்டியதுதாம்னே. எதுக்குடா எதிருக்கேள்வியப் போட்டுகிட்டு?" சுப்பு வாத்தியாரும் இப்போ குரல உசத்துறாரு.
            "ஏம் ஆகாது? எப்பிடி ஆகாது? ஏம் ஒத்துக்காது? எப்பிடி ஒத்துக்காது? நாட்டுல ஷேர் மார்கெட்டுல இருக்கிறவங் எல்லாம் குடும்பம் நடத்தாமலா இருக்காம்? நல்லாதாங் நடத்திக்கிட்டு இருக்காம். நல்லா ன்னா நல்லா ரொம்ப நல்லாத்தாம் நடத்திக்கிட்டு இருக்காம். நாம்மத்தாம் ஒண்ணொத்துக்கும் பாத்து பாத்து சிலவ பண்ணிக்கிட்டு, சிலவுல நாலு காசி கூட போயிட்டுன்னா மலைச்சிப் போயி தெகைச்சிப் போயி நிக்கிறேம். எதுக்கெடுத்தாலும் கணக்குப் பாத்துக்கிட்டு கெடக்கிறேம். எதெ செய்யுறதன்னாலும் செய்யுறதா வேணாவான்னு கொழம்பிப் போயி நிக்கிறேம்."ங்றான் விகடு அதுக்கு.
            "அப்பிடித்தாம்டா இருக்கணும். அதாம்டா வாழ்க்கெ. கஷ்டம் தெரியறதுதாங் வாழ்க்கெ. அதெ சமாளிக்கிறதுதாங் வாழ்க்கெ. ஒவ்வொண்ணுத்துக்கும் யோஜனெ பண்ணணும். பாத்துப் பாத்துத்தாம் செய்யணும். கஷ்ட நஷ்டங்றது கடெசி வரைக்கும் இருக்கணும். அதெ நாமே போக்கிக்கணுங்றதுக்காக நம்மாள நாலு பேரு கஷ்டப்பட்டாங்ற மாதிரி இருக்கக் கூடாது. அதெ புரிஞ்சிக்கோ!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "ச்சும்மா புரியாத்தனமா பேயாதீங்கப்பா! நம்மாள யாரும் கஷ்டப்படவுமில்ல, நஷ்டப்படவுமில்ல. ஒங்களாலத்தாம் நாம்ம கஷ்டப்படறேம். ஏம் இப்பிடி புரியாத்தனமாவே பேசிட்டு இருக்கீங்கன்னு புரியல. நம்மாள யாரு கஷ்டப்பட்டா அதாச்சிம் சொல்லித் தொலைங்க. இந்த எளவெடுத்த வேலையே வாணாம்னு கைய கழுவிட்டு வந்திடறேம்! அதெ இப்போ நீஞ்ஞ சொல்றீங்களா இல்லையா?"ங்றாம் விகடு.
            "ஏம்டா இப்பிடி அப்பனும் மவனும் சண்டெ கோழியா நின்னு சண்டெ பிடிச்சிட்டு நிக்குறீங்க. இதுக்கு நாஞ்ஞ ன்னா சாட்சியா? எஞ்ஞள வேற கூப்ட்டு உக்கார வெச்சிக்கிட்டு மாரடிக்க வெக்க? யே யப்பாடி! எஞ்ஞ அப்பம் ஆயி புண்ணியவானுங்க போயி சேந்துப்புட்டாங்க! நம்மள பெத்துப் போட்டு இதுக ரண்டுக்கும் மத்தியில கெடந்து சீரழியின்னு. ஒரு நாளு நிம்மதியா போவுதா? நீஞ்ஞ ரண்டு பேருமே வேலைக்கும் போவ வாணாம், ஒரு மசுத்துக்கும் போவ வாணாம். நாம்ம நாலு வூட்டுல போயி பத்துப் பாத்திரம் தேய்ச்சு சோத்தப் போடுறேம். தயவு பண்ணி இப்பிடியெல்லாம் ரண்டு பேரும் ரண்டு திக்குல நின்னுகிட்டு நம்மள வெச்சிக்கிட்டுப் பஞ்சாயத்து பண்ணிகிட்டுக் கெடக்காதீங்க! அசிங்கமால்ல இருக்கு." அப்பிடிங்கிது வெங்கு.
            "இத்து ன்னாம்மா? இதுங்க ரண்டு பேரும் பண்றதும் பேசிக்கிறதும் ஒண்ணும் வெளங்குறாப்புலயே யில்ல? ஏம் இதுங்க ரண்டும் இப்பிடிப் பண்ணிக்கிடுதுங்க?" அப்பிடிங்கிது செய்யு.
            "கொழுப்புடி. நேரா நேரத்துக்குச் சோத்த ஆக்கிப் போடுறேம்ல. அதெ தின்னுப்புட்டு உக்காந்து கெடக்காம, மேக்கோண்டு ன்னா செய்யணும்னு தெரியாம ரண்டும் போட்டுக்கிட்டு நம்மள இப்பிடி அலமலந்துக்கிட்டுக் கெடக்குதுங்க." அப்பிடிங்கிது வெங்கு.

            "நீஞ்ஞ ரண்டு பேரும் சித்தே சும்மா இருங்க. சம்பாதிக்கிறதுங்றது எப்பிடி வாணாலும் சம்பாதிச்சிப்புடலாம். நாளைக்கி யாரு பொல்லாப்பும் வந்துப்புடக் கூடாது. வாத்தியாரு மவ்வேன் பொல்லாங்குப் பண்ணிச் சம்பாதிச்சுப்புட்டாம்னு பேரு வந்துப்புடக் கூடாது. இவ்வேன் அவ்வேன் தலைமுறை காலத்த மட்டும் பாக்குறாம். நாம்ம காலா காலத்துக்கும் பாக்குறேம். இவ்வேம் சொல்றான்னே... யாருக்கு ன்னா நட்டமின்னு? இவ்வேம் விக்குறாம்னே பங்கெ அதெ வாங்குறவேம் லாவத்துக்குத்தாம் விப்பாம்னு எதாச்சிம் அத்தாச்சி இருக்காம்னு கேக்குறேம்?"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "யய்யோ லூசு புடிச்சத்தனமா கேக்காதீயேப்பா! எவனோ விக்குற பங்கெத்தாம் நாம்ம வாங்கிப் போடுறேம். நாம்ம விக்குற பங்கெ எவனோ வாங்கிப் போடுறாம். அதெ அவ்வேன் லாபத்துல விக்குறானா? நட்டத்துல விக்குறானாங்றது நமக்கு எப்பிடித் தெரியும்? வாங்குறவேம் அதெ டெலிவரிக்கு வாங்குறானா? டிரேட் பண்றதுக்கு வாங்குறானா? அதெல்லாம் பாத்துட்டு நிக்க முடியாது இஞ்ஞ. நம்ம சுத்தி உள்ளவங்க நஷ்டம் ஆகாம இருக்குறாங்களா? அவ்வளவுத்தாம் இஞ்ஞ பாக்கலாம். அதெ பண்ணிட்டுப் போயிட்டே இருக்கணும்."ங்றாம் விகடு.
            "அதாம்டா சொல்றேம். நாம்ம இஞ்ஞ நெல்ல வெளஞ்சிப் போட்டாக்கா அதெ விக்குற யேவாரி லாவத்துலத்தாம் விப்பாம். உளுந்த வெதச்சிப் போட்டாலும் சரித்தாம், பயித்த வெதச்சிப் போட்டாலும் சரித்தாம் அதெ விக்குறப்போ நமக்கும் நாலு காசி, யேவாரிக்கும் நாலு காசி. அதாங் யேவாரம். நீயி பண்றதுக்குப் பேரு யேவாராமா? ஒருத்தன கொட அடிக்க வுட்டுப்புட்டு இன்னொருத்தங் லாவம் பண்றான்னே? அதுக்குப் பேரு யேவாரமாடா? அத்து யேவாராமான்னு கேக்குறேம்? அதெ பெரிய யேவாரங்ற மாரில்ல பண்ணிட்டுக் கெடக்குறே? பேசிட்டு நிக்குறே? நீயி பண்றதுக்குப் பேரு சூதுடா? பெரிசா புத்தகம் படிக்கிறேம், மசுரப் படிக்கிறேம்ங்றீயே! அதுல ன்னாடா சொல்லிருக்கு? சூதும் வாதும் வேதனெ செய்யும்ணுத்தான சொல்லிருக்கு. எதெ பண்ணாலும் அத்து ரண்டு பேருக்கும் நல்லதா இருக்கோணும். ஒருத்தனெ அழ வுட்டுப்புட்டு இன்னொருத்தம் சந்தோஷமா இருக்கப் படாது. ஒருத்தம் லாவத்தப் பண்ணிப்புட்டு இன்னொருத்தன நட்டத்த பண்ண வுட்டுப்புடக் கூடாது. கண்ணுக்குத் தெரியாத எவனோ ஒருத்தனெ நட்டத்த பண்ணி வுட்டுப்புட்டு, ஒன்னய சுத்தி உள்ள ஆளுகளுக்கு லாவத்தப் பண்ணி வுட்டுப்புட்டா நீயி பண்ற யேவாரம் ஞாயமா ஆயிடுமடா? கண்ணுக்குத் தெரியாம நட்டத்த பண்ணிட்டு நிக்குறானே அவ்வேம் வுடுற வாசாப்பு, அவ்வேமோட வவுத்தெரிச்சலு யாருட்டடா வந்துச் சேரும்? நம்ம வமிசத்தத்தாம்டா வந்து சேரும்? இந்தாருடா வருங்காலத்த கணிச்சிச் சொல்லி சம்பாதிக்கிறவேம், பில்லி சூன்யம் ஏவலு தகடு வெச்சிச் சம்பாதிக்கிறவேம், ஒருத்தனெ கொட சாய்ச்சி வுட்டுப்புட்டு இன்னொருத்தம் சம்பாதிக்கிறவேம், ஒருத்தனெ நயவஞ்சகமா ஏமாத்திச் சம்பாதிக்கிறவேம், உண்ட வூட்டுக்கு ரண்டகம் பண்ணிச் சம்பாதிக்கிறவேம் இவ்வேம் தலைமொறையெல்லாம் நல்லா இருக்காது பாத்துக்கோ. நீயி இப்போ எந்த நெலையில நிக்குறேன்னு நல்லா புரிஞ்சிக்கோ!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "சின்ன பயெதாம்னே! நாலு காசியச் சம்பாதிக்கணும்னு அவனுக்கு ஆசெ இருக்கும்தான! தெரியாமத்தாம் செய்யுறாம்!" அப்பிடிங்கிது வெங்கு இப்போ உருக்கமா.
            "அதாங் இப்பிடி உக்காத்தி வெச்சி கிளிப் புள்ளைக்குச் சொல்ற மாதிரி சொல்லிட்டு இருக்கேம். இந்த வயசுக்கு நாம்ம சொல்றது புரியாது. மண்டெயில ஏறாது. அதுக்கா வுட்டுப்புட முடியுமா? செஞ்சா பாவம் செஞ்சதுதாம். அதுல அனுபவப்பட்டு கத்துக்கிடறதுக்கு ஒண்ணுமில்ல. அனுபவப்பட்டவங்க சொல்றதெ கேட்டுப்புட்டே கத்துக்கிடணும். நெருப்பு சுடும்னா சுடும்தாம். அதெ தொட்டுப் பாத்து கைய கருக்க்கிட்டு ஆம்மா நெருப்பு சுடும்னா ன்னா அர்த்தம்?" ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "எலே அதாங் அப்பா சொல்றார்ல! அந்தக் கருமெத்த வுட்டுப்புட்டு ஒழுங்கா வேலைக்கி மட்டும் போறேம்னு சொல்லிட்டுப் போயித் தொல. நாலு நாளா ஒஞ்ஞ ரண்டு பேரோட நச்சரிப்பு காங்கல. ஒம் மனசுக்கு நெல்லா இருப்படா. வாத்தியாரு வேலெ, இத்துல வர்ற சம்பாத்தியம் போதும்டா ஒனக்கு. நீயி சம்பாதிச்சு ஒண்ணும் நமக்கு ஒரு புடவெ எடுத்துத் தார வாணாம். பவுனுல ஒரு சங்கிலி போட வாணாம். இந்தாருடா ஒரு வாயிச் சோறு கூட போட வாணாம். நீயி சம்பாதிக்கிறதெ நீயே வெச்சிக்கிட்டு, ஒரு கலியாணத்த பண்ணி வைக்கிறேம், ஒம் பொண்டாட்டிப் புள்ளயோட நல்ல வெதமா இருந்துக்கோடா. பெறவென்னடா?"ங்குது வெங்கு.
            விகடுவுக்கு என்ன சொல்வதென்று புரியாமல் மவுனிச்சுப் போயி உக்காந்திருக்காம். "எதாச்சிம் வாயத் தொறந்து சொல்றானா பாரு? எலே ஆத்துல ஒரு காலு, சேத்துல ஒரு காலுன்னு வெச்சிக்கிட்டு நிக்காதே? நாயி வாய வெச்ச மாதிரி கண்டத்துலயும் வாய வெச்சிட்டு நிக்காதே. பேயாம அப்பாரு சொல்றதெ கேட்டுட்டு ஆவுற வழியப் பாரு! காசி காசின்னு நிக்காதே. காசி யாருட்ட நிக்கணுமோ அவுங்ககிட்ட நிக்கும். ஒனக்கு வரணும்னு இருந்தா வரும் போ. எங் கண்ணுல வாத்தியாரு வேலய மட்டும் பாத்துட்டு வூட்டோட கெடக்கேன்னு சொல்லிட்டுப் போடா!"ங்குது வெங்கு.
            "அதாங் யம்மா யப்பா ரண்டு பேரும் சொல்லுதுங்களே! சரிண்ணு சொல்லிட்டு போண்ணே. நீயி நமக்கும் ஒண்ணுஞ் செய்ய வாணாம். ஒரு மணி கூட வாங்கித் தர்ற வாணாம். யப்பா சொல்ற கணக்கா இருந்துட்டுப் போறேம்னு சொல்லிட்டுப் போ!"ங்குது செய்யு.
            "கவர்மெண்டெ இன்னிய தேதிக்கு டாஸ்மாக்க தொறந்து வெச்சி சம்பாதிக்கிது. அந்தச் சம்பாத்தியத்துலத்தாம் ஒங்களுக்குச் சம்பளமே ஆவுது. அத்து மட்டும் நல்ல சம்பளமா ஆயிப்புடுமா? ஏம்ப்பா எப்ப பாத்தாலும் கோட்டித்தனமா பேசி வுட்டுட்டு எல்லாத்தையும் போட்டு கொழப்பி வுட்டுப்புட்டு கெடக்குதீயே?"ங்றான் இப்போ விகடு வாயைத் தொறந்து.
            "எலே இந்தாருடா கவர்மெண்டுக்கு ஆயிரத்தெட்டு வருமானம். அதுல எந்த வருமானத்துலேந்து சம்பாத்தியம் கொடுக்குறாங்கன்னு ஒனக்கு ன்னா தெரியும்? நாம்ம ஒழைக்கிறேம்டா! அதுக்குச் சம்பளம் வாங்குறேம். அவ்வேம் மொதலாளி. நாம்ம தொழிலாளி. ஏமாத்தில்லாம் யாரயும் நட்டம் பண்ணில்லாம் சம்பாதிக்கல. கவர்மெண்டு டாஸ்மாக்க நடத்துனாலும் சாராயத்த குடிக்கக் கூடாதுன்னு பாடத்தெ சொல்லிக் கொடுத்துட்டுச் சம்பாதிக்கிறேம்."ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "இந்தாருடி குட்டி! இத்து இன்னிக்கு முடியுற கதையில்ல. கெளம்பு. வூட்டுல ஆயிரத்தெட்டு வேல கெடக்கு. அதெப் பாத்தாலும் புண்ணியமா போவும். இப்பிடி வெட்டிய உக்காந்து பேசிக்கிட்டு?"ங்குது வெங்கு.
            "ஆரும் அந்தாண்ட இந்தாண்ட நவுரக் கூடாது. ஒரு முடிவு தெரியாம இன்னிக்கு யாரும் நவுரக் கூடாது!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "நாட்டுல சிகரெட்டு பாக்கு வித்து சம்பாதிக்கலே? சாராயத்தெ வித்துச் சம்பாதிக்கலே? அதெல்லாம் நல்ல சம்பாத்தியமா ன்னா? நாம்ம அப்பிடில்லாம் சம்பாதிக்கலப்பா!" விகடு அழுவுற கணக்குக்குப் பேசிப் பாக்குறாம் இப்போ.
            "நாட்டுல திருடிச் சம்பாதிக்கிறவேம் இருக்காம். கொலயப் பண்ணிப்புட்டுச் சம்பாதிக்கிறவேம் இருக்காம். நாலு பேத்த சொரண்டிச் சம்பாதிக்கிறவேம் இருக்காம். நீயும் அத்தெ போலச் சம்பாதிப்பியா? அவ்வேம் அப்பிடிச் சம்பாதிக்கிறான்னா நீயும் அப்பிடிச் சம்பாதிக்கணும்னு நெனைக்காதே! அவனெ ஒன்னால திருத்த முடியலன்னாலும் நீயி கெட்டுப் போயிடக் கூடாது. நாலு பேத்த அதெ காரணம் காட்டி வெச்சி கெட்டுப் போயிடச் செஞ்சிடக் கூடாது. போனாக்கா திரும்புற பாதை கெடையாது அதெல்லாம். போவாத ஊருக்கு ஆவாத காரியத்துக்கு வழிய தேடிட்டு நிக்காதெ. வுட்டுப்புடு ஆமாம்."ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "ஆறு வருஷமா கஷ்டப்பட்டு இருக்கேம். எத்தினியோ ராத்திரி தூங்க முடியாம யோஜிச்சிக்கிறேம். வுட்டுப்புடு வுட்டுப்புடுன்னா எப்பிடி? எவ்வேம் வூட்டுக் காசியையும் அள்ளிட்டுப் போயி ஆபீஸப் போடல. யாரெயும் தெகைக்க வுட்டுப்புட்டுச் சம்பாதிக்கல. அப்பிடில்லாம் சமய சந்தர்ப்பம் வந்திச்சித்தாம். அப்பல்லாம் நீஞ்ஞ சொன்னெத மனசுல வெச்சிக்கிட்டுத்தாம் சமாளிச்சேம். இப்போ நல்லா வந்துகிட்டு இருக்கு. இப்போ போயி..."ன்னு விகடு இழுத்ததும், சுப்பு வாத்தியாரு ஒரே அடியாய்ப் போட்டாரு, "வாத்தியாரு வேலைக்கி மட்டும் போற மாரி இருந்தா வூட்டுல இரு. யில்லே வூட்ட வுட்டுப்புட்டுப் போயிடு." அதுக்கு மேல சுப்பு வாத்தியாரு எதுவும் பேசல. எழும்பிப் போயிட்டாரு.
            "பேசிட்டே இருக்குறப்ப எழுந்திச்சிப் போனா எப்பிடி?"ங்றான் விகடு.
            "எலே ஒண்ணு கெடக்க ஒண்ணு பேசித் தொலையதடா? கோவம் வர்றாத மனுஷம். கோவப்பட்டு எழும்பிப் போறாரு. அந்தக் கருமத்தெ! அதுல அப்பிடிச் சம்பாதிச்சி ன்னத்தாடா பண்ணப் போறே? ஒரு வேளைக்கு நாலு குண்டாச் சோறா தின்னப் போறே? ஒத்த ஒடம்புக்கு ஒரே நேரத்துல பத்து சட்டையையா போட்டுக்கப் போறே? பங்களா கட்டி வெச்சி பங்களாவுல ஆயிரத்தெட்டு ரூமுகள கட்டி வெச்சி அத்தினி ரூமுகள்லயா இருக்கப் போறே? காப்படிச் சோத்த தின்ன அதிகம்டா. இருக்குற நாலு மாத்துச் சட்டையே மாத்தி மாத்திப் போட்டுக்கிட்டு அதெ தொவைச்சிப் போட்டுக்கு ஆயுசுக்கும் தெம்பு இருக்கறது பேரிசுடா. இருக்குற வூட்ட நாளுக்கு ரண்டு தடவெ குனிஞ்சி நிமுந்து பெருக்கிப் போடுறதெ கஷ்டம்டா. இருக்குறது போதும்டா. இதெ வெச்சிக்கிட்டு நல்ல வெதமா இருந்துட்டுப் போ." சொல்லிட்டு வெங்குவும் எழும்பிப் போவுது.
            "போண்‍ணே போ! நாலு புள்ளைக்கிப் பாடத்தெ சொல்லிக் கொடுக்குற வேலயப் பாரு! எடக்கு மொடக்கா வாதெம் பண்ணிக்கிட்டு?"ன்னு செய்யுவும் எழும்பிப் போறா. இப்போ அவ்வேம் மட்டும் உக்காந்திருக்காம் விகடு.
*****


No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...