21 Jan 2020

30.1



            அறிந்தோ அறியாமலோ உடலில் உயிர் போல கலந்திருக்கிறது கதை. காதுகள் வழியே புகுந்து இதயத்தில் நிரம்பி ஒவ்வொரு நாடி நரம்பிலும் அதுவே நிறைந்திருக்கிறது.

            மனிதர் முதலில் கேட்டது பெண்ணிடமிருந்து கேட்ட கதைதாம். தாயோ, பாட்டியோ அந்தக் கதையைச் சொல்லியிருக்கலாம். உலகின் ஆதி கதைசொல்லி பெண். பெண் கதைகளின் அட்சயப் பாத்திரம். குழந்தையை, குடும்பத்தை, உறவைச் சுமந்து சுமந்து கதைகளால் நிறைந்திருக்கிறாள் பெண். அப்பெண்ணிடமிருந்து கற்ற வித்தையை ஆண் கதையாகச் சொல்லி உலகின் மிகப் பெரிய கதை சொல்லியாக தன்னை நிறுவிக் கொள்கிறான்.
            கதை சொல்லும் மற்றும் கதை கேட்கும் மரபில்லாத ஒரு சமூகத்தை இந்த உலகில் நாம் காண முடியாது. கதை சொல்லலின் வடிவங்கள் எவ்வளவோ இருக்கலாம். எளிமையான கதை சொல்லலாகவோ, சிக்கலான கதை சொல்லலாகவோ, நவீனமான கதை சொல்லலாகவோ அது எப்படி வேண்டுமானலும் இருந்து விட்டுப் போகட்டும். கதை கேட்கும் அந்த மனோநிலை வற்றிப் போய் விடாது.
            வில்சன் அண்ணன் அப்படித்தான் தன்னுடைய காலத்தின் கதை சொல்லியாக இருக்கிறார். அவர் பார்த்த, பழகிய மனிதர்கள் அனைவரும் அவரின் கதைகளின் வழியாகப் புகுந்து புறப்படுகிறார்கள்.
            வில்சன் அண்ணன் ஒரு கதையைச் சொல்கிறார்.
            "சுதாகர் பிரில் கிரீம் போட்டு வட்ட சீப்பால் தலையைச் சீவிக் கொண்டிருந்தான். ஷாம்பூ போட்ட தலைமுடி பளபளப்பாக ஆரோக்கியமாக மின்னியது. டோனி போல் பிடரி வரை வழியும் கேச அழகை கண்ணாடி முன் நின்று பெருமையுடன் பார்த்துக் கொண்டான் சுதாகர். இதைக் காண எரிச்சலாய் வந்தது அங்கம்மாளுக்கு. "இது என்னடா தலையும் கோலமும்? ச்சேய்!" என்றாள் எரிச்சலாய்.
            "ப்போம்மா! இப்ப இதான் பேஷன்!" என்றான் சுதாகர்.
            "பேஷனாம் பேஷன்! படிப்புல ஒண்ணுத்தையும் காணும். ரெளடி மாதிரி தலையப் பாரு! ஒட்ட வெட்டுடா!" என்றாள் அங்கம்மாள்.
            "போம்மா! ஒனக்கு என்னா தெர்யும்?" என்றான் சுதாகர்.
            "ஆமாடா! எனக்கு ஒண்ணுந் தெரியாதுதான். படிக்குற புள்ளை அடக்க ஒடுக்கமா இல்லாம இது என்னா கன்றாவியோ போ!" என அலுத்துக் கொண்டாள். தாய்க்கும் மகனுக்கும் இதே பிரச்சனைதான். மகன் வளர்க்கும் தலைமுடியால் வீட்டில் தினமும் சண்டைதான். தாய் எத்தனை மன்றாடியும் தன் முடியை ஒரு அங்குலம் கூட குறைத்துக் கொள்ளவில்லை சுதாகர். அப்படிப்பட்டவன் இன்று முடி திருத்தும் சிங்காரத்தின் முன் உட்கார்ந்தான். முன் பக்கமாய்த் தலையைக் குனிந்து காட்டினான்.
            அடுத்த நிமிடமே சிங்காரத்தின் கத்தி சுதாகரின் தலையைச் சுத்தமாக மழிக்கத் தொடங்கியது. சுருள் சுருளாய் உதிரும் தன் கேசத்தை கண்ணீர் திரையிட வெறித்துப் பார்த்தான் சுதாகர். அம்மா கேட்ட போதெல்லாம் குறைத்துக் கொள்ளாத முடியை இன்று அம்மா கேட்காமலேயே முழுவதுமாய் மழித்துக் கொண்டான் சுதாகர். கண்ணீரைத் துடைத்துக் கொண்டே, மொட்டைத் தலையுடன், தீச்சட்டியை எடுத்தபடி நடக்க ஆரம்பித்தான் சுதாகர், தன் தாய்க்குக் கொள்ளி போட!" என்று முடிக்கிறார் வில்சன் அண்ணன். எல்லார் முகத்திலும் ஒரு துக்கம் புகுந்து கொள்கிறது. கண்களில் கண்ணீர் அப்பிக் கொள்கிறது. வழுக்கை விழுந்த பிற்பாடு வந்த சீப்பைப் பார்த்தாற் போல காலமும் ஒரு கணம் ஆச்சரியச் சிமிட்டு சிமிட்டி வெறித்து நிற்கிறது.
*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...