20 Jan 2020

ஒண்ணுக்கு ரெண்டா யோசிச்சுக்கோ!



செய்யு - 333

            மறுநாளு மாலிக்கைப் போயிப் பாத்த விகடு தயங்கித் தயங்கிச் சொல்றாம், "ஆபீஸ்ஸப் பாத்துக்க வேற ஆளப் போட்டுக்கணுங்யா!" அப்பிடின்னு.
            "அதுக்கென்ன போட்டா போச்சு! நீயி மேம்பார்வெ பாத்துக்கோ! ஆவட்டும்! வேல பாட்டுக்கு வேல போவட்டும். இத்து பாட்டுக்கு இத்து போவட்டும்." அப்பிடிங்கிறாரு.
            "திருவாரூ ஆபீஸ்லேந்து அதெப் பாத்துப்பாங்கய்யா! நாம்ம இதுலேந்து முத்திலுமா வெலகிக்கலாம்னு பாக்குறேம்!" அப்பிடிங்கிறான் விகடு.
            மாலிக்கைத் தூக்கி அந்தாண்ட அடிச்சாப்புல அவரு முகத்துல சுரீர்னு கோபம் ஏறுது.
            "என்னம்டா நெனைச்சுக்கிட்டு இருக்குறே ஒம் மனசுல! அன்னிக்கு அப்பிடித்தாம் சொல்லாம கொள்ளாம படிச்ச படிப்பெ பாதியில வுட்டுப்புட்டு ஓடுனே! இன்னிக்கு என்னம்னா நல்லா போயிட்டு இருக்குற ஆபீஸ்ஸ பாதியில வுட்டுப்புட்டுப் போறேம்ங்றே? என்னம்தாம்டா ஒம் பெரச்சென?"ங்றாரு மாலிக்.
            "ஒரே நேரத்துல ரெண்டு கால்ல ரெண்டு இடத்துல வெச்சிட்டு நிக்க முடியாதுங்கய்யா!"ங்றாம் விகடு.
            "அட எங்கோட்டிப் பயெ மவனே! ரண்டு கால்லயும் ஒரே எடத்துல வெச்சிட்டு ஒண்ணு மேல வெச்சு ஒண்ணு மேலத்தாம் நிக்க முடியாது. ரண்டு கால்ல ரண்டு எடத்துல வெச்சிட்டுத்தாம் நிக்கணும்."ங்றாரு மாலிக்.
            "ரண்டு கால்லயும் பக்கத்துப் பக்கத்துல வெச்சிக்கிறதெ சொல்லலங்கய்யா! ஒரு கால்ல திருவாரூர்லயும், இன்னொரு கால கூத்தாநல்லூர்லயும் அகலக்காலா வெச்சிக்கிறதெப் பத்திச் சொல்றேம்யா!"ங்றான் விகடு.
            "இந்தத் தத்துவ மசுருக்கெல்லாம் ஒண்ணுங் கொறைச்சலு இல்ல. பெரிசா வியாக்யானம் பேசு! ஒமக்கென்னடா ஒரு போனைப் போட்டுச் சொன்னாக்கா இஞ்ஞ வேல நடக்கப் போவுது. வருமானம் வர்ற வழிய எப்பவும் அடைச்சிடக் கூடாது. ஒமக்குத் தெரிஞ்ச சங்கதி நமக்குல்லாம் ஒம்மட வயசுக்குத் தெரியாது. பணத்தெ பத்தித்தாம்டா மொதல்ல மனுஷனுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கணும். அதெ வுட்டுப்புட்டு என்னென்னத்தையோ சொல்லிக் கொடுத்துட்டு இருக்குறோம். ஒந் நல்ல நேரம் பாரு அத்து எப்பிடியே ஒனக்கு அத்துப்படியா ஆயிடுச்சு!"ங்றாரு மாலிக்.
            "அதெத்தாம்யா எஞ்ஞ அப்பா வேணாங்றாரு. நாம்ம எவ்வளவோ சொல்லிப் பாத்துட்டேம். தலகீழ நிக்குறாரு. ரத்தம் கொதிக்குது. சத்தமா பேசுறாரு. எம்மட வயசுக்கு அவர்ர இந்த கணக்கா பாத்ததில்லே. வூட்டுல இருக்குறவங்க வேணும்னா அதெ வுட்டுப்புட்டு இரு. இல்லன்னா சந்தையில போயிக் கெட. இந்தப் பக்கம் வாராதேங்றாரு. ஒண்ணுஞ் சொல்ல முடியலங்கய்யா!"ங்றாம் விகடு.
            "நெனைச்சேம்! சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதடே மவ்வனே! ஒஞ்ஞ அப்பாவப் பத்திக் கொறையாத்தாம் சொல்லப் போறேம். அவரு அந்தக் காலத்து ஆளாவே இருக்காரு. அத்து இந்தக் காலத்துக்குச் சோலிக்கு ஒதவாது. அப்பிடி இருந்தா சோலிய முடிச்சிப்புடுவாங்க. இந்த ஆபீஸ்ஸப் போடுறதுக்கு ஒமக்கு மின்னாடி அவர்ரு ஒஞ்ஞ யம்மாவயும், இன்னொரு வாத்தியையும் அழச்சிட்டு வந்தாப்புல பாரு, அப்ப அவரு பேசுனப்பவே கண்டுபிடிச்சிட்டேம். நல்லா சொல்றேம் அழுத்திச் சொல்றேம் கேட்டுக்கோ. நாம்ம ஒஞ்ஞ அப்பாவ மதிப்பேம். நமக்கு மனுஷரோட மதிப்புத் தெரியும். அதால மதிப்பேம். எல்லாப் பெயலும் மதிக்க மாட்டாம். இஞ்ஞ இருக்குற அத்தென பயலுக்கும் மனுஷரோட மதிப்புத் தெரியாது. பணத்தோட மதிப்புத்தாம் தெரியும். அத்து இருக்கற மனுஷர மதிப்பாம். இல்லாத மனுஷர ஏறித்தாம் மிதிப்பாம். தண்ணியோட இருக்குற வரைக்கும் மீனுக்கு மதிப்பு. பணத்தோட இருக்கற வரைக்கும்தாம் மனுஷருக்கு மதிப்பு. நமக்கு ரண்டுச் சோத்தப் போடுவாம்னு தெரிஞ்சாத்தாம் நாயி கூட மனுஷம் கூட நிக்கும். இல்லாட்டி அதெ போடுற மனுஷம் எவனோ அவனெ பாத்துட்டுப் போயிட்டே இருக்கும். ஒலகம் தெரியாத ஆளா இருக்கறாருடா ஒஞ்ஞ அப்பா! யோஜிச்சு முடிவெடு!"ங்றாரு மாலிக்.

            "யோஜிச்சிட்டேம். மண்டெய வலிக்குது. ஒண்ணு அத்தோட அத்துக்கிட்டு போ. இல்ல இத்தோட வாங்கறாரு. ரண்டுலயும் நிக்காதே. ஏத்தோ வேல வெட்டி இல்லேன்னே கெடைச்சதெ பாத்தேங்றதுல ஞாயம் இருக்கு. நல்லதா ஒரு வேல கெடைச்ச பிற்பாடு ரண்டு வேலய பாத்துக்கிட்டு இன்னொருத்தனுக்குக் கெடைக்குற வேலயக் கெடுக்காதேங்றாரு. ஒரு மனுஷனுக்கு ஒத்த வேலைத்தாம்ங்றாரு. அப்பிடிப் பாக்கணும்னு நெனைச்சா வூட்டுவேல ஆயிரத்தெ கெடக்கு. அதெ பாருங்றாரு. பள்ளியோடம் வுட்டு வந்து வயலெப் பாரு. நீயி திங்குற சோறு நீயி வெதைச்சதா இருக்கணுங்றாரு. எவ்வளவோ சொல்லிப் பாத்தாச்சு. கேக்கற பாடாயில்ல. இதுக்கு மேல முட்டிக்கிறாப்புல இல்லங்கய்யா. நாம்மத்தாம் இந்த ஆபிசுக்கு வேணும்னுயில்லே. யாரு வாணாலும் இதெப் பாத்துக்கலாம்யா!"ங்றான் விகடு.
            "நம்பிக்கெ இல்லாத ஆளுககிட்டு வுட்டுப்புட்டு யேவாரம் பாக்குறது எஞ்ஞ வழக்கமில்லடா மவ்வனே! நம்பிக்கெ இல்லாத ஆளுகளப் பக்கத்துலய வெச்சிக்க மாட்டேம். நீயிப் போனீன்னா ஆபீஸ்ஸ இழுத்து மூடிப்புடுவேம்டா! ஒண்ணும் அவசரமில்லே! நெதானமா யோஜிச்சுப் பதிலெச் சொல்லு! இப்பிடில்லாம் குடும்பத்துல ஆளாளுக்கு ஒண்ணு ஒண்ணு சொல்லுவாங்கத்தாம்! எல்லாத்தையும் கேட்டுப்பிட்டு நிக்க முடியாது பாத்துக்கோடா! சம்பாத்தியம் பண்றது சாமர்த்தியமான வேல. எல்லாரலயும் பண்ண முடியாது. சமத்தா இருந்துக்கோணும். சாமர்த்தியம் பண்ணோணும். நீயி கொழம்பிப் போயிருக்கே! ரண்டு நாளு கழிச்சு வந்துப் பேசு. நீயி இப்போ கெளம்பு! அப்பயும் இத்தையே சொன்னாக்கா ஏத்துக்கிறேம். பாத்துப்பேம் வா!"ங்றாரு மாலிக்.
            ஒண்ணும் சொல்ல முடியாம விகடு கெளம்புறாம் மாலிக் வூட்டுலேந்து. "எஞ்ஞடா கெளம்புறே! இதெ குடிச்சிப்புட்டுக் கெளம்பு! மேட்டரே அடியிலத்தாம் இருக்கும். கலக்கிக் குடி!"ங்றாரு மாலிக்.
            இவுங்க பேசிட்டு இருக்குறப்பவே ஆயிஷா நாச்சியா ரெண்டு கிளாஸ்ல ரோஸ் மில்க்க வெச்சிட்டுப் போனதெ இப்பத்தாம் கவனிக்கிறாம் விகடு. கெளம்ப எந்திரிச்சவேம் ஷோபாவுல உக்காந்து குடிக்கிறாம். அவரு சொன்னபடியே பாதி கிளாஸூக்கு வந்ததும் நல்லா கலக்கிக் குடிக்கிறாம். குடிச்சு முடிச்சு வெச்சா கிளாஸூ தொடைச்சி வெச்ச மாதிரி இருக்கு.
            "பரவாயில்ல குடிக்க கத்துக்கிட்டேடா! நெறைய பேருக்கு இதெ குடிக்கத் தெரியாது. மேல உள்ளதெ உறிஞ்சிப்புட்டு கீழே உள்ள மேட்டர வுட்டுப்புடுவாம்!"ம்னு என்னவோ விகடு இருக்குற நெலமைக்கு பொருந்தி வராப்புல உள்ளுறை உவமத்துல பேசுறது போல பேசுறாரு மாலிக். அவரு தமிழ் இலக்கியத்துலயும் கரை கண்டு ஆளாச்சே. தாவரவியலு பாடம் நடத்துறப்போ சங்க இலக்கியத்துல வர்ற தாவரங்களப் பத்தின குறிப்புகளுக்கு இடையே முடிச்சுப் போட்டு பாடம் நடத்துற பேராசியருல்ல அவரு.
            விகடு அப்பிடியே உக்காந்துட்டாம். "மவ்வனே! இன்னொண்ணு குடிக்கிறீயாடா?"ங்றாரு மாலிக்.
            அவ்வேம் ஒண்ணும் சொல்லாம் உக்காந்துட்டாம்.
            "ஏம் நாச்சியா!"ன்னு உள்ள குரல கொடுக்குறாரு மாலிக்.
            "ம்! எல்லாம் கேட்டிச்சு! இந்தா வந்துட்டேம்!"ன்னு அங்கேயிருந்து குரலு வந்த அடுத்த கொஞ்ச நிமிஷத்துல ரோஸ் மில்க் வந்து டீப்பாயில உக்காந்திருக்கு.
            விகடு அதெயும் எடுத்துக் கழுவி வெச்சாப்புல குடிச்சுட்டு வெச்சாம்.
            "ஒரு தடவெக்கு ரண்டு தடவேயா யோஜிக்கணும்டா மவ்வனே! ஒண்ணு சொல்ல மறந்துட்டேம் பாரு. கெழக்குக் கோட்டையாரு ஒன்னயப் பத்தி வெசாரிச்சாரு. அக்கெளண்ட் பண்ணணும்னு பட்டும் படாம இப்பத்தாம் பேசிட்டு இருக்காரு. ரண்டு வருஷமா நாமளும் சொல்லிட்டுத்தாம் இருக்குறேம். இப்பத்தாம் எறங்கி வர்றாரு. அவரு எறங்குனார்ன்னா கோடியிலத்தாம் பண்ணுவாரு. ஒங் கமிஷனெ நெனச்சிப் பாரு. அது கெடக்கு கழுதே. அதெ வுடு. அவரு கவனிக்குற கவனிப்பு தனித்தாம். அத்து கமிஷன் காசிக்குக் கிட்டக்கக் கூட வாராது. கெழக்குக் கோட்டையாரு சாமானியத்துல யாரயும் நம்ப மாட்டாரு. நம்புனார்னு வெச்சிக்கோ நம்ம ஆளு, பிறாத்தியா ஆளுன்னு பாக்க மாட்டாரு. தூக்கி வுடுவாரு. ஒன்னய பிடிச்சுப் போச்சுன்னா பக்கத்துலயே வெச்சிப்பாரு. எங்கேயோ போயிடுவேடா நீயி! ஒன்னய இன்னும் நல்ல நெலையில வெச்சிப் பாக்கணும்னு நெனைக்கிறேம். இம்மாம் சம்பாதிச்சும் இன்னும் நீயி சைக்கிள்லயே வர்றே, போறேங்ற வெசயத்தெ கேட்டுப்பிட்டு ரொம்ப சிலாகிச்சிப் போயிட்டாருடப்பா கெழக்குக் கோட்டையாரு. ஒன்னயப் பாத்தாரு, பேசுனார்ன்னா அவுகளுக்கு ரொம்பப் பிடிச்சுப் போயிடும். அவுக அழைச்சிட்டு வான்னு சொன்னாக்கா அடுத்த நிமிஷமே கொண்டு போயி நிப்பாட்டிப் புடுவேம்! அதால மறுக்கா சொல்றேம்னு நெனைக்காது, ஒரு தடவெக்கு ரண்டு தடவேயா யோஜன பண்ணு. தப்பேயில்ல!"ங்றாரு மாலிக்.
            ஒண்ணுக்கு ரண்டா ரோஸ்மில்க்க குடிச்சும் அந்தக் கிளாஸ்ஸ கழுவி வெச்சாப்புலத்தாம் மனசு இருக்கே தவுர, ஒரு சின்ன சஞ்சலம் கூட வர்றாப்புல தெரியல. அப்பிடி வந்தாத்தான மனசு மாறுறதுக்கு. எல்லாம் ஊத்தி முடிச்சு கழுவு கவுத்தாச்சுங்றதுக்கு இந்த கிளாஸூத்தாம் சாட்சி. விகடு இப்போ எழும்பிட்டாம்.
*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...