20 Jan 2020

30.0



            "நானோ விகடுவோ பேசுறது இப்போ முக்கியமா படல. புதுசா ஒரு பையன் வந்திருக்காப்புல. பேரு குகன். கதை எழுதிட்டு வந்திருக்காப்புல தெரியுது. வாசிச்சிடட்டும். பிற்பாடு நாங்க பேசிக்கிறோம்!" என்று வில்சன் அண்ணன் சொன்னதும் குகன் தன் கதையை வாசிக்கத் தொடங்குகிறார்.

            "நான் எழுதிட்டு வந்திருக்கிற கதையோட தலைப்பு - தந்தையால் சீரழியும் குடும்பம். இப்போ அதெ வாசிக்கப் போறேன்.
            காரையூர் என்ற சிற்றூரில் பொன்னுசாமி, பொன்னம்மாள் தம்பதியர் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு மணி, சீதை என்று இரண்டு குழந்தைகள். அரசு வழங்கிய காணி நிலத்தை உழவு செய்து வாழ்ந்து வந்தது அந்தக் குடும்பம். மணி ப்ளஸ்டூ படித்துக் கொண்டிருந்தான். சீதையை ஐந்தாம் வகுப்போடு நிறுத்த வேண்டியதாகி விட்டது.
            மணி படிப்பிலும் விளையாட்டிலும் கெட்டிக்காரன். ஆனால் அவனது தந்தை பெரும் குடிகாரர். படிக்கும் மணிக்கு ஒத்தாசையாக இல்லாமல் சதா தொந்தரவு கொடுத்து வந்தார் பொன்னுசாமி. ‍
            மணி மாவட்ட அளவில் ஓட்ட போட்டியில் தங்கப் பதக்கம் பெற்று பெருமகிழ்ச்சியோடு அதை தனது குடும்பத்தினரிடம் காட்டுவதற்காக வந்தான். தாய் பூரிப்படைந்தாள். தந்தையோ அந்தப் பரிசைக் கொடு, அடகு வைத்து விட்டு செலவு செய்ய வேண்டும் என கேட்டார். தாயும் மகனும் பெற்ற பரிசை நினைவு பொருளாக வைத்துக் கொள்வோம் என சொல்லி விட்டனர்.
            மேலும் பொன்னுசாமிக்குத் தெரியாமல் அந்தப் பதக்கத்தை வீட்டிற்குள் சாமர்த்தியமாக ஒளித்தும் வைத்து விட்டனர். அன்று மணி பள்ளிக்கூடத்துக்குச் சென்றிருந்தான். பொன்னம்மாள் நடவு வேலைக்குப் போயிருந்தாள். வீட்டிற்கு வந்த பொன்னுசாமி தூங்கிக் கொண்டிருந்த சீதைக்குத் தெரியாமல் தங்கப்பதக்கத்தினை எடுத்துக் கொண்டு அடகு கடைக்குச் சென்று விட்டார். அவர் அடகுக் கடையில் பதக்கத்தை அடகு வைப்பதை பார்த்து விட்ட ஊர்ப் பெரியவர் ரங்கசாமி மணி பள்ளிக்கூடம் விட்டு வரும் நேரத்தில் தான் கண்டதைச் சொன்னார்.
            மணி ஓடோடி வந்து வீட்டில் பதக்கத்தை ஒளித்த வைத்த இடத்தைப் பார்த்தான். பதக்கத்தைக் காணவில்லை. அழுது புலம்பினான். நடவு வேலை முடித்து வந்து பொன்னம்மாளின் காலில் விழுந்து புரண்டான். வீடே அல்லோகலப்பட்டது.
            இனியும் இந்த வீட்டில் இருந்தால் தனது அப்பா பொன்னுசாமி மகனெனக் கூட பாராது தன்னையும் விற்று விடுவார் என்று நினைத்து வீட்டை விட்டே வெளியேறினான் மணி."
            குகன் வாசித்து முடித்ததும், "முதல் கதைல்ல. நல்லா இருக்கு. குகன் தொடர்ந்து எழுதணும்!" என்கிறார் வில்சன் அண்ணன்.
*****


No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...