2 Jan 2020

25.2



            கவிதை போதை இரண்டுக்கும் என்ன பெரிய வேறுபாடு? எழுத்து ஒரு வகை போதை. போதைக்கு அடிமையானவர்கள் எந்தக் காலத்தில் அதிலிருந்து விடுபடுகிறார்கள்?
            அரசாங்கம் ஆயிரம் சட்டங்களைக் கொண்டு வரலாம். மதுவிலக்கைச் சட்டமாக அறிவிக்கலாம். போதைப்பொருள் பயன்பாட்டைத் தடை செய்யலாம். குடிப்பவர்கள் குறைந்து விடப் போகிறார்களா? போதைப் பொருளைப் பயன்படுத்துபவர்கள் இல்லாமல் போய் விடப் போகிறார்களா?

            மனிதருக்குப் போதை தேவை. அஃது எந்தெந்த வடிவங்களில் கிடைக்கிறதோ, அந்தந்த வடிவங்களில் அதை நுகரத் துடிப்பர்.
            குடிபோதையும், மதுபோதையும் விலைக்கு வாங்கப்படும் மகிழ்ச்சி. மகிழ்ச்சியை விலை கொடுத்து வாங்க முடியும், விலை வைத்து விற்க முடியும் என்ற பொருளாதார நம்பிக்கையின் அச்சாரம் அது. உலகின் எந்த வியாபாரம் படுத்தாலும் அந்த வியாபாரம் படுக்கப் போவதில்லை. மனிதர் மகிழ்ச்சிக்கு ஏங்கும் பரிதவிப்பாளர்கள். அவர்களால் மகிழ்ச்சியின்றி இருக்க முடியாது. அதன் வடிவம் என்ன விலையானாலும் அதற்காக களவு, கொலை, பாவம் என எதைச் செய்தாவது அதை அடைவர்.
            பொருளாதாரம் மதிப்பை அடிப்படையாகக் கொண்டது மட்டும் கிடையாது. அது மகிழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. மகிழ்ச்சியைத் தருவதும் விளைவிப்பதுமான பொருள்கள் உச்ச விலையில் வியாபாரம் ஆகும். அது மனிதர்களின் மகிழ்ச்சிக்கான விலை. தங்கத்தின் விலை என்பதோ, கொக்கொய்னின் விலை என்பதோ அதன் மதிப்பு தரும் விலையல்ல. அது தரும் மகிழ்ச்சியின் விலை.
            குடிகாரர் குடிப்பதை நிறுத்தப் போவதில்லை. போதை அடிமை போதையைச் சுகிப்பதை நிறுத்தப் போவதில்லை. எழுத்தாளர் எழுதுவதை நிறுத்தப் போவதில்லை. போதைக்கு அடிமையாகி விட்டால் அதிலிருந்து விடுபடுவது எளிதன்று. அந்தப் போதை எழுதச் செய்கிறது. இந்தப் போதையின் உச்சம் கவிதை.
            ஆடிய பாதம் மட்டுமா? பாடிய வாய் மட்டுமா? சொரிந்து விடும் கை மட்டுமா? கவிதை எழுதும் கரங்கள் எங்கே சும்மா இருக்கிறது?
            வசந்தங்கள் வர மறுத்தாலும், பெளர்ணமிகள் பூக்க மறந்தாலும், அமாவாசைகள் அஸ்தமிக்காமல் போனாலும், தலைமயிரை இரண்டாக்கி நாராக கிழிக்க முடிந்தாலும் கவிதைகள் ஒரு போதும் வற்றுவதில்லை. அது ஒவ்வொரு மனிதரின் மனதிலிருந்தும் பிரவகித்துக் கொண்டிருக்கிறது. அதன் பிரவாகம் நிற்பதில்லை.
            மாணிக்கம் ஐயா தான் எழுதிய கவிதைகளை வாசிக்கத் தொடங்குகிறார்.
            1. மாலையில் மலர்கள் கட்டுப்பட்டு இருக்கின்றன
            மணத்துக்கு யார் கட்டுபாடு போடுவது
            சுதந்திரமாய்ச் சுற்றி வருகிறது மணம்
            2. நிலவை அபகரித்து விட்டதாக
            அமாவாசை மீது
            வானம் வழக்குத் தொடுக்கத்தாம் முடியுமா
            அபகரித்து நிலவைத் தந்து விட்டதாக
            பெளர்ணமி மீது சத்தியம் செய்து
            தொடுத்த வழக்கை வாபஸ் வாங்கத்தாம் முடியுமா
இந்த இரண்டு கவிதைகளையும் மாணிக்கம் ஐயா வாசித்த முடிக்கிற கையோடு, கவிஞர் வேலு தமது கவிதை கர்ஜனையைப் புரிகிறார்.
            இருக்க வேண்டிவது நிறை பாராட்டல்
            இருக்க வேண்டாதது குறை பாராட்டல்
            மகிழ்ச்சியுற வேண்டுவது பிறர் வளர்ச்சி கண்டு
            மகிழ்வுற வேண்டாதது பிறர் தளர்ச்சி கண்டு
            தலையிடல் வேண்டுவது பொதுமைபடு சமூக விசயங்களில்
            தலையிடல் வேண்டாதது பிறர்தம் தனிப்பட்ட விசயங்களில்
            வளர வேண்டுவது அறிவு
            வளர வேண்டாதது பிரிவு
இக்கவிதை அமர்வோடு நிறைவு கொள்கிறது அகலின் 4வது இலக்கியக் கூடல்.
*****


No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...