19 Jan 2020

எல்லா காலத்திலயும் இருக்கு அல்வா கொடுக்குறது!



செய்யு - 332

            மாலிக் அய்யாவுக்கு போனைப் போட்டு, "இன்னிக்கு ஒரு நாளு ஆபீஸூக்கு லீவுங்கய்யா!" ங்றான் விகடு.
            "ரண்டு வருஷத்துல இன்னிக்குத்தாம் ஆபீஸூக்கு லீவுன்னு வுடுறே. ஒரு நாளுத்தானே பாத்துக்கலாம். ஆபீஸூக்கு யாருனாச்சும் வந்தா நாம்ம பாத்து சொல்லிக்கிறேம். ஒடம்பு எதுனாச்சும் சரியில்லையாடப்பா?" ங்றாரு மாலிக்.
            "ஒடம்புல்லாம் நல்லாத்தாம் இருக்குங்கய்யா. நமக்கு வாத்தியாருமாரு வேலைக்கி இண்டர்வியூ கார்டு வந்திருக்குங். அதுக்குப் போவணும்னுத்தாம் இன்னிக்கு ஒரு நாளு..."ன்னு இழுக்குறாம் விகடு.
            "நல்ல சேதி சொன்னேடா மவ்வனே! நீயி வாத்தியாரு வேலைக்கிப் படிச்சு வெச்சிருக்குற சங்கதியெ நம்மகிட்ட சொல்லவே இல்லையேடாப்பா! நல்ல வெதமா போயிட்டு வாடாப்பா!"ன்னு சொல்றாரு மாலிக்.
            "சரிங்கய்யா! நாளைக்கி வந்துப்புடறேம்! வந்து சங்கதியெ சொல்றேம்"ன்னு சொல்லி செல்போனை நிப்பாட்டிக்கிறாம்.
            அன்னைக்கி சுப்பு வாத்தியாரு பள்ளியோடத்துக்கு லீவு எடுத்துக்கிட்டு, மவனை டிவியெஸ் பிப்டிக்குப் பின்னாடி சின்னபுள்ளைய உக்காத்தி வெச்சிக்கிறாப்புல வெச்சிக்கிட்டு போறாரு. பள்ளியோடம் வர மாட்டேன்னு அழுது அடம் பண்ணுற கொழந்தைய மல்லுகட்டி பள்ளியோடம் கொண்டு போவாங்க இல்ல அப்பிடித்தாம் இருக்கு அவரு மவனெ இண்டர்வியூவுக்கு வெச்சிக் கொண்டு போறது. இவரு அதுக்கு முன்னாடியே இண்டர்வியூ கார்டு வந்ததும் விநாயகம் வாத்தியார்கிட்ட இது பத்தி பேசியிருக்காரு.
            "சரிதாம் நீயி போட்ட ஆபீஸ்லயே வேலையப் பாருன்னு சொல்ற மாரியான்ன ஆபீஸூ கெடையாதும்யா அது. மண்குதுரயெ நம்பி ஆத்துல எறங்குற கதெத்தாம் அவ்வேம் போட்டு இருக்குற ஆபீஸூ. எப்ப வாணாலும் குதுர ஆத்தோட கரைஞ்சிப் போவும். அதுல போற இவனும் ஆத்தோட ஆத்தா போயிடுவாம். வெவரம் தெரிஞ்ச நாமளே இப்பிடி வுட்டுப்புட்டேம்னு ஊர்ல அவனவனும் காறி மூஞ்சுல துப்பாத கொறையாப் போயிடும். அப்படி ஆயிப் போச்சுன்னா நமக்கென்னன்னு இந்தப் பயலும் எங்காச்சிம் கெளம்பி போயிட்டே இருப்பாம். நமக்குள்ள அசிங்கமாப் போவுது ஊருக்குள்ள. ஏற்கனவே அப்பிடி ஒரு தடவெ கெளம்பிப் போயி நம்மள அசிங்கம் பண்ணப் பயத்தானே இவ்வேம்! மறுக்கா மறுக்கா அப்பிடி வுட்டுப்புட முடியுமா? இந்தப் பயலே கொண்டு போயி எப்பிடிய்யாச்சிம்  வேலையில சேத்து வுட்டாத்தாம் நாம்ம நிம்மதியா மூச்செ வுடலாம்! பத்து வருஷமா நம்மளப் போட்டு அலங்க மலங்க அடிச்சிட்டுக் கெடக்குறாம். சொல்றதெயே கேக்குறதில்ல." அப்பிடின்னு சுப்பு வாத்தியாரு விநாயகம் வாத்தியர்ட்ட சொல்லிருக்கிறாரு.
            "நெல்லா ஊக்கமாத்தாம் இருக்காம். இப்டியே வுட்டா நம்மட தம்பிக அளவுக்கு வந்திடுவாம். நீஞ்ஞத்தாம் என்னவோ பயப்படுறீங்க வாத்தியாரே!"ன்னு விநாயகம் வாத்தியாரு அதுக்குப் பதிலச் சொல்லிருக்கிறாரு.
            "அதெல்லாம் நமக்குச் சுத்தப்படுமா சொல்லுங்க. ஏம் நீஞ்ஞ இல்லியா? நாம்ம இல்லியா? ன்னா கொறைஞ்சிப் போயிட்டேம். சம்பாதிச்சா ஆயிப்புட்டா? மனசுல நெதானம்தாம் முக்கியெம். புயல் காத்துல படகெ ஓட்டிட்டுப் போறாப்புல வாழக் கூடாதில்ல. இந்தப் பயெ பங்குச் சந்தையில இருக்கிறதுக்கு நாம்ம பயந்துட்டுக் கெடக்கேம். பேப்பர்லயோ, டி.வி.யிலயோ பங்குச் சந்தையில சரிவுன்னா நமக்கு பக் பக்குன்னு இருக்குது. இந்தப் பயெ ஏகப்பட்ட பேர்ர இதுல இழுத்து வுட்டு யேவாரம் பண்ணிட்டுக் கெடக்குறாம். நாளைக்கே ஒண்ணு கெடக்கு ஒண்ணு ஆயிப் போச்சுன்னா இவனெச் சுத்திக்க மாட்டாங்களா ன்னா? அவுங்களோட வாசாப்புல்லாம் எதுக்குங் வாத்தியார்ரே? இவ்வேம் பண்றது சரியில்லே. நாம்மத்தாம் இவ்வேம் என்னவோ பெரிய ஆபீஸ்ல வேல பாக்குறான்னு ஒரு நாளு பாக்கப் போகலியா? ஒரு யம்மா மண்ண வாரி எறைச்சதில்லே! இப்பிடியா ஒரு வேலயத் தேடிட்டுப் பாக்குறது? ஒரு குடும்பத்துல மண்ணள்ளிப் போடுற வேலயப் பாக்குறாம். சூதாடுன காசு வூடு வந்து சேருமா? எம் பரம்பரையில இப்பிடி ஒருத்தரும் சம்பாதிச்சதில்ல. இவ்வேம் இப்பிடிப் போயி நிக்குறாம். இத்தினி நாளு ஒண்ணும் சொல்லவும் முடியல. கேக்கவும் முடியல. இன்னிக்குத்தாம் வகையான தோது வந்திருக்கு. இந்த வேலைய முடிச்சுக் கொடுத்துப்புட்டு இனுமே அந்தப் பக்கம் தலெய வெச்சிப் படுக்கக் கூடாதுன்னு சொன்னாத்தாம் சரிபெட்டு வருவாம் அவ்வேன்!" அப்பிடின்னிருக்காரு அதுக்கு சுப்பு வாத்தியாரு.
            "செரி!‍ செரி! அத்து வந்து... அதுபடியே பாத்துப்பேம். மொதல்ல நீஞ்ஞ கையோட கையா அவனெ கெளப்பிக்கிட்டுப் போயிட்டு வாஞ்ஞ. நாம்ம சங்கத்து ஆளுங்ககிட்டெ சொல்லி கிட்டக்க வர்றாப்புல ஒரு பள்ளியோடத்துல போட்டு வாங்கிப்புடுவேம்!"ன்னு சொல்லிருக்கிறாரு விநாயகம் வாத்தியாரு.
            இண்டர்வியூ திருவாரூர்ல இருக்குற ஜி.ஆர்.எம். பள்ளியோடத்துல போட்டிருந்தாங்க. திருவாரூ பஸ் ஸ்டாண்டுலேந்து நேரா போயி காரைக்காட்டு தெருவுல திரும்பி உள்ளாக்கப் போனா அந்தப் பள்ளியோடம் வரும். இந்த இண்டர்வியூவுக்காக பத்து வகுப்பறைய ஒதுக்கி ஒவ்வொண்ணுத்துக்கும் அறை எண் போட்டுருந்தாங்க. பள்ளியோடத்துக்கு முன்னாடி ஒரு போர்டை வெச்சி அதுல இண்டர்வியூ கார்டுல இருக்குற நம்பர்ல எந்த நம்பர்லேந்து எந்த நம்பர் வரைக்கும் ஒவ்வொரு அறையிலயும் போயி உக்காரணுங்றதுக்கு நோட்டீஸ ஒட்டியிருந்தாங்க. ஒவ்வொரு அறைக்கும் முப்பது பேரை கணக்குப் பண்ணி அறை ஒதுக்கீடு பண்ணியிருந்தாங்க. விகடுவுக்கு மூணாவது அறை போட்டிருந்துச்சு.

            அவனோட கூட படிச்ச ஏகப்பட்ட பேரு அந்த இண்டர்வியூவுக்கு வந்திருந்தாங்க. எல்லாரும் படிக்குற காலத்துலயே ரொம்ப மெலிஞ்சு இருந்த ஆளுங்க. இப்போ இன்னமும் மெலிஞ்சு இருந்தாங்க. இவ்வேன் ஒருத்தன்தான் கொஞ்சம் பூசுனாப்புல இருக்காம். அதெப் பாத்துப்புட்டு அவுங்கள்ல சிலபேர சொல்றாங்க, "நாம்மல்லாம் குடும்ப கஷ்டத்துக்கு ஆயித்துக்கும், ஐநூத்துக்கும் வேலயப் பாத்துட்டுக் கெடந்தேம். இவ்வேம் அவ்வேம் அப்பாரு வாத்தியார்ங்றதால தின்னுப்புட்டு தின்னுப்புட்டு வூட்டுல தூங்கிருப்பாம் போலருக்கு!" அப்பிடின்னு.
            அவுங்க ஒவ்வொருத்தருட்டயும் பேசுறப்ப மெட்ரிகுலேஷன் பள்ளியோடத்துல வேலை பாத்த அனுபவத்தையும், அரசாங்கப் பள்ளியோடத்துல பெற்றோர் ஆசிரியர் கழகத்து ஆசிரியரா வேலை பாக்குற அனுபவத்தையும் சொல்றாங்க. இவன் ஒருத்தன் மட்டுந்தாம் வித்தியாசமா படிச்சப் படிப்புக்கும், பாக்கற வேலைக்கும் சம்பந்தம் இல்லாம ஷேர் புரோக்கிங் ஆபீஸ்ல வேல பாத்து, இப்போ ஆபீஸப் போட்டிருக்கிறத சொல்லவும் முடியாம, சொல்லாம இருக்கவும் முடியாம அல்லாடிட்டு இருந்தாம்.
            அரசாங்கப் பள்ளியோடத்துல மாசச் சம்பளமா எழுநூத்து ரூவாயும், மெட்ரிகுலேஷன் பள்ளியோடத்துல ஆயிரத்து இருநூத்து ரூவாயும் தர்றதயும் அவுங்கப் பேச்சு வாக்குல சொல்றாங்க. இந்த வேலை கெடைச்சா ஒம்பதாயிரம் சம்பளங்றதெ ரொம்ப பிரமிப்பா அவுங்க பேசிட்டு இருக்காங்க. இவனெயும் வுடாம அவுங்க எல்லாரும் நோண்டி நோண்டி, "இத்தினி நாளுல்ல ன்னா வேலை பாத்தே? எம்மாம் சம்பளம் வாங்குனே? யில்லே வூட்டுலயே படுத்துக் கெடந்தியா?"ன்னு கேட்டுக்கிட்டு இருந்தாங்க. அவுங்க மாசச் சம்பளமா வாங்குற எழுநூத்து ரூவாயோ, ஆயிரத்து இருநூத்து ரூவாயோ அதெ ஒரே நாள்ல சம்பாதிச்சிப்புடற புரோக்கிங் ஆபீஸப் போட்டு சம்பாதிச்சிட்டு இருக்கேம்னு சொல்லி அவுங்கள மலைச்சுப் போக வைக்க விகடுவுக்கு விருப்பம் இல்லாம, ஆபீஸூ ஒண்ணுல அக்கெளண்டன்டா வேல பாத்ததாவும், மாசச் சம்பளம் ஆயிரத்து ஐநூத்து ரூவாயின்னும் சொன்னாம். அதெ கேட்டுப்புட்டு அதுக்கே மெட்ரிகுலேஷன் பள்ளியோடத்துல வாங்குற சம்பளத்தெ வுட முந்நூத்து ரூவாயல்ல கூட சம்பாதிச்சிருக்காம்னு அவனெ பாத்து ஆச்சரியப்பட்டாங்க. "கத்தாம கொள்ளாம பிராணத்த வுடாம உக்காந்தே கணக்கெழுதி வேல பாத்திருக்காம்ல. அத்தாம் ஒடம்பு போட்டிடுச்சு. மாப்ள கணக்கா இருக்காம் மாப்ள. நாளைக்கியே பொண்ண பாத்து கலியாணத்த முடிச்சிப்புடலாம்டா மச்சாம் ஒனக்கு!" அப்பிடின்னு சொல்லி வேற சிரிக்கிறாங்க கூட படிச்ச சோக்காளிங்க.
            அப்படிப் பேசிக்கிட்டே இண்டர்வியூவுக்கு எடுத்துட்டு வந்திருக்கிற சர்டிபிகேட்டுக, செராக்ஸூங்க சரியா இருக்காங்றதெயும் ஒவ்வொருத்தரும் அப்பைக்கப்போ எடுத்துப் பாத்துக்கிறாங்க.
            இந்த இண்ர்வியூவ பண்றதுக்காக ஒவ்வொரு அறையிலயும் ஒரு ஹை ஸ்கூலு ஹெட் மாஸ்டரையும், அவருக்குத் உதவியா ஒரு வாத்தியாருமாரையும் வேலைக்குப் போட்டிருந்தாங்க. அவுங்க ரெண்டு பேரும் ரொம்ப நுணுக்கமா ஒரிஜினல் சர்டிபிக்கேட்டுக்கும், ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டு போயிருக்கிற சர்டிபிகேட்டுக்கும் வித்தியாசம் இருக்காங்றதெ பாத்துப் பாத்து, அதுங்க ரெண்டுலயும் இருக்குற நம்பருங்க ஒண்ணா இருக்கா, வேற மாதிரி இருக்காங்றத பென்சிலால டிக் போட்டு சரி பாத்துக்கிட்டாங்க. ஒரு தனி தாள்ல ஒவ்வொருத்தரு பேரையும் எழுதி சர்டிபிகேட் நம்பரையும் எழுதி அதுல கையெழுத்தும் வாங்கிக்கிட்டாங்க. ஒவ்வொருத்தரையும் எங்க படிச்சே? என்னென்ன படிச்சே?ன்ன கேள்விகளக் கேட்டு விசாரிச்சிக்கிட்டே சர்டிபிகேட்டயும் சரிபாத்து முடிக்க இருவது நிமிஷத்திலேந்து முப்பது நிமிஷம் வரைக்கும் ஆனுச்சு. அவுங்க சரிபாத்து முடிக்க முடிக்க தொடர்ந்து அங்க ஆளுகள உக்கார வுடாம, "செரி கெளம்பு! வூட்டுக்கு ஒரு வாரத்துக்குள்ள நியமனக் கடுதாசி வந்துப்புடும்! சீக்கரமே வேலயப் போடச் சொல்லி அரசாங்கத்துலேந்து தாக்கலு ஆயிருக்கு"ன்னு சொல்லி அனுப்பிக்கிட்டே இருந்தாங்க. விகடுவோட முறை வந்து அவனெ விசாரிச்சி, அவனோட சர்டிபிகேட்டுகள சரிபாத்து முடிக்க மதியானம் மூணு மணிக்கு மேல ஆயிடுச்சு.
            எல்லாத்தையும் முடிச்சிட்டு வெளியில வந்த விகடுவெ அப்போ திருவாரூர்ல பிரபலமா இருந்த மாடி மேல இருக்குற வாசன் ஹோட்டலுக்கு அழைச்சிட்டுப் போறாரு சுப்பு வாத்தியாரு. சாப்பாட்ட சாப்புடுறதுக்கு மின்னாடி அம்பது கிராமு அல்வாவக் கொண்டாரச் சொல்றாரு. அல்வாவ அவரே வாங்கி மவ்வேங்கிட்ட கொடுக்குறாரு. கொடுத்துப்புட்டு அவனுக்கு ஒரு பட்டர்நானும், அவருக்கு ஒரு அளவு சாப்பாட்டையும் சொல்லி வுடுறாரு. அவனுக்குப் பிடிச்ச மாதிரி சாப்பாட்ட பண்ணி விடணும்னு நெனைக்கிறாரு சுப்பு வாத்தியாரு.
            வழக்கமா அவ்வேன் அல்வான்னா ஒரு கிலோவ வாங்கிக் கொடுத்தாலும் தெகட்டாம சாப்புடுவான். அல்வா சாப்புடுறதுல அம்புட்டு ஆசெ அவனுக்குங்றது சுப்பு வாத்தியாருக்குத் தெரியும். அதாலத்தாம் அல்வாவ்ல ஆரம்பிச்சாரு சுப்பு வாத்தியாரு. அதெ போல பட்டர்நான் சாப்புடுறதலயும் அவனுக்கு அம்புட்டு இஷ்டம். வாசன் ஓட்டல்ல ஒரு பட்டர்நான் சாப்புட்டாலே வவுத்துக்குப் போதும். அதெ அவ்வளவுத்தாம் சாப்பிட முடியும். இன்னொன்ணு சாப்புடணும்னு ஆசெ இருந்தாலும் இன்னொன்ன வாங்கிப் பாதிச் சாப்புடுறப்பவே ஒமட்டுறாப்புல ஆயிப்புடும். அதிலயும் வித்தியாசமான ஆளு விகடு. ரண்ட வாங்கிக் கொடுத்தாலும் அதெ ஒமட்டாம சாப்புட்டுப்புட்டு இன்னொன்ணு வேணாலும் வாங்கிக் கொடுங்கன்னு மொகத்த வெச்சிக்கிற ஆளு அவ்வேன். அன்னிக்கு மூணு பட்டர்நான வாங்கிக் கொடுத்தாரு அவனுக்கு சுப்பு வாத்தியாரு. அவரு மட்டும் அளவுச்சாப்பாடுத்தாம் சாப்பிட்டுக்கிட்டாரு. சாப்புட்டு முடிச்சதும் கால் கிலோ அல்வாவையும் வாங்கி அவ்வேன் கையில கொடுத்தாரு. எல்லாத்துக்கும் சேர்த்து பில்லு நூத்து எம்பது ரூவா வந்துச்சு.
            சாப்புட்டு முடிச்சு கொஞ்ச நேரத்துல அல்வா சாப்புடுறதும் அவனுக்குப் பிடிச்ச சமாச்சாரம்ங்றதால அப்பிடி கால் கிலோ அல்வாக வாங்கி அவ்வேம் கையில கொடுத்துருக்காரு சுப்பு வாத்தியாரு. இப்பிடி அவரு பாத்துப் பாத்துச் செய்யுறார்ன்னா அதுக்குப் பின்னாடி ஏதோ ஒரு வெடிய வைக்கப் போறார்ங்றது அப்போ விகடுவுக்குத் தெரியல.
*****


No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...