18 Jan 2020

இண்டர்வியூவுக்குப் போடா மவனே!



செய்யு - 331

            வாத்தியாரு வேலை வேண்டியதில்லன்னு விகடு நெனைச்சுகிட்டு இருந்தத போல சுப்பு வாத்தியார்ல இருக்க முடியல. அவரோட கனவே மகனை நல்ல வெதமா கவர்மெண்டு வேலையில கொண்டுப் போயி வெச்சிடணுங்றதுதாம். அதால அவரு மவனோட மனநெலைய வாசம் பிடிச்சிக்கிட்டு, எறங்கி பேச ஆரம்பிச்சாரு. "இந்த ஆபீஸூல்லாம் வுட்டுப்புட்டு இண்டர்வியூவுக்குப் போயி நல்ல வெதமா பொழைக்குற போற வழியப் பாருடாம்பீ!"ன்னு சொல்றாரு அவரு.
            அதுக்கு விகடு, "நீஞ்ஞ சொல்ற வேலையில மாசச் சம்பாத்தியம் எம்மாம்?"ன்னு அப்பங்காரரையே எதிர்கேள்விக் கேட்டுப் பாக்குறான்.
            "ஆரம்பத்துல நாலாயிரத்து ஐநூத்து பேசிக்கு, அதுல ரண்டாயிரத்து எரநூத்து ஐம்பதெ மெர்ஜ் பண்ணிருக்காம், ஆக மொத்தத்துல ஆறாயிரத்து எழுநூத்து அம்பது பேசிக்கு ஆவுது. டி.ஏ. ரண்டாயிரத்து சொச்சம், ஹெச்.ஆர்.ஏ. முந்நூத்து எம்பது, எம்.ஏ. அம்பதுன்னு பாத்தாக்க ஒம்பதாயிரத்து சொச்சம் வரும்டாம்பீ. அதுல பிடிச்சம் அது இதுன்னு போனாக்கா கையில எட்டாயிரத்துச் சொச்சம் கொறையாதுடாம்பீ. வருஷா வருஷம் இங்கிரிமெண்ட் நூத்து இருபத்து அஞ்சு இருக்கு. அதுக்கு டி.ஏ. அது இதுன்னு பார்த்தா ரண்டு வருஷத்துல சம்பளத்துல நீயி பத்தாயிரத்தெ தாண்டிப்புடுவேடாம்பீ!வருஷத்துக்கு ரண்டு தடவெ டி.ஏ. ஏறும். போகப் போக ரூவாயி அதிகமாயிட்டே போகும்டாம்பீ! வருஷத்துக்கு பதினஞ்சு நாளு இ.எல்.ல சரண்டரு பண்ணேன்னு வெச்சுக்கோ அது ஒரு பாதிச் சம்பளத்துக்கு வரும். தீவாளி முன்பணம் ரெண்டாயிரம் கொடுப்பாம். பொங்கலு போனஸ் கொடுப்பாம். வருமானம் போதுமடாம்பீ! அத்தெ வெச்சிப் பாத்துக்க வேண்டியதுத்தாம்!" அப்பிடிங்கிறாரு.
            "நாம்ம இப்போ போட்டு இருக்குற ஆபீஸ்ல மாசத்துக்கு இருபதாயிரத்துலேந்து முப்பதாயிரம் வரை சம்பாதிச்சிட்டு இருக்கேம். கூட கொறைச்சலு வந்தாலும் இருபதாயிரத்துக்குக் கொறையாது. கிட்டத்தட மூணு மடங்குக்கு மேலப்பா! போகப் போக இந்த வருமானம் அதிகமாயிட்டேத்தாம் போவும். இப்போ இந்த நெலையில இந்த வேலைய விட்டுப்புட்டு நம்மால வார முடியா. நம்மள வுட்டுப்புடுங்க! ஒங்களோட இந்த வாத்தியாருமாரு உத்தியோகம் ஒங்களோட போவட்டும். நமக்குல்லாம் யேவாரம்தாம்பா செட்டாவும்." அப்பிடிங்கிறான் விகடு.
            "இந்தாருடாம்பீ! ஒமக்கு வேலை கெடைக்கலன்னுத்தாம் எதாச்சிம் போயி ஒரு வேலைய செஞ்சிட்டுக் கெடன்னு விட்டேம்டாம்பீ. ஏன்னா வாலிப வயசுல ச்சும்மாவும் இருக்க முடியா. அப்பிடி இருக்கவும் கூடாது பாருடாம்பீ. அதால ஒண்ணுஞ் சொல்லவும் முடியாம, மெல்லவும் முடியாம வுட்டேம். ஒமக்கு ஒரு வேலை வர்ற நாளைத்தாம் இத்தினி நாளும் எதிருபாத்துக்கிட்டுக் கெடந்தேம்டாம்பீ. இப்போ வேலை வந்துச்சல்லோ பேயாம போயி வேலையில சேர்ற வழியப் பாருடாம்பீ. இதாங் சரியான வேல. நீயி வேலைன்னுப் போயி நின்ன எடம் சரியான எடம் கெடையாது. நீயி பாக்குறதும் சரியான வேல கெடையாது. நல்லா இருக்குற குடும்பங்கள்ல நடுத்தெருவுல நிறுத்துற வேலையப் பாத்துக்கிட்டு இருக்கிறே. சம்பாத்தியம்னா ஒழைச்சிச் சம்பாதிக்கணும்டாம்பீ. இப்பிடிச் சம்பாதிக்கிறதெல்லாம் நிக்கா பாத்துக்கோ. ஒழைச்சிச் சம்பாதிக்கிறதே ஒடம்புல ஒட்ட மாட்டேங்குதாம். இதுல இவ்வேம் சூதாடுற மேரி சம்பாதிக்குற காசு எப்பிடி நிக்குமாக்கும்! சொல்றதெ கேளு! அதெல்லாம் சுத்தப்பட்டு வராதுடாம்பீ!" அப்பிடின்னு கறாரா பேசுறாரு சுப்பு வாத்தியாரு.
            "கவர்மெண்டு உத்தியோகத்துல ஆயுசுக்கும் சம்பாதிக்கிறதெ நாம்ம யேவாரத்துல அஞ்சே வருஷத்துல சம்பாதிச்சி முடிச்சிடுவேம்பா. ஆயுசுக்கும் நீஞ்ஞ இதுல இருந்து கஷ்டப்பட்டுகிட்டு கெடக்குறது போல நம்மாள இருக்க முடியாதுப்பா. சம்பாதிச்சுட்டு வாழ்க்கையில ஒரு நெலைக்கு வாரணும்னு பாக்குறேம்." அப்பிடின்னு அதுக்குப் பதிலெ சொல்றாம் விகடு.
            "யேவாரங்றது ஒரு தூக்குல உச்சாணிக் கொம்புல கொண்டு போயி வைக்குங்றது செரித்தாம். அங்கேயிருந்து வுழுந்தா அடியும் பெலமாத்தாம் படும். அதே போலக்கா ஒரு எறக்கு எறக்குனா அதள பாதாளத்துல வெச்சி அடைச்சிடுப்புடும்டாம்பீ யேவாரம்! எவ்வளவத்தையோ அனுபவத்துல பாத்தாச்சுடாம்பீ! ஒத்து வாராது. அதுவும் நீயி பண்ற யேவாரம் இருக்கே பல குடும்பத்தோட தாலியறுக்குற யேவாரம்டாம்பீ! அத்து நம்ம குடும்பத்துக்கு ஆகாது பாத்துக்கோடாம்பீ! ஏதோ கெரகம் பாத்தே! அத்தோட வுட்டுப்புடு. கெரகம் இப்போ வேற மாதிரி மாறுது. பிடிச்சிக்கிட்டு கதையேறிக்கணும்டாம்பீ! நாம்ம வாழ்றதுக்காகத்தாம் சம்பாதிக்கணும். சம்பாதிக்கிறதுக்காக வாழ கூடாதுடாம்பீ! அத்து வேணாம்! மறுக்கா மறுக்கா சொல்றேம் வுட்டுப்புடு!" ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "நம்மள நம்பி மாலிக் அய்யா ஆபீஸப் போட்டுருக்காரு. எடையில வுட்டுப்புட்டுல்லாம் வார்ற முடியாதுப்பா!" அப்பிடிங்கிறான் விகடு.
            "இந்தாருடா அவருக்கு உள்ள சொத்துப் பத்து வருமானம்லாம் போதும். அதெ வெச்சிக்கிட்டு அவரு நிம்மதியா இருந்துக்க வேண்டியதுத்தாம். அவரு மேல மேல ஆசெப்பட்டு சம்பாதிக்கிறதுக்கு ஒண்ணுமில்ல. ஒமக்கும்தாம்டா! இதுல கவருமெண்டு உத்தியோகத்துல வர்ற வருமானம் போதும். அதெ வெச்சிக்கிட்டு குடும்பத்த ஓட்டிக்கப் பாக்கணும். ரொம்பச் சம்பாதிக்கணும்னு நெனைச்சின்னு வெச்சிக்கோ அதுலயே எல்லா கவனமும் போயி எதுக்குப் போறந்தோம்? ஏம் வாழ்றோம்?ன்னே தெரியாம போயிடும். குடும்பத்தெ நடத்துறத்துக்குக் கொஞ்சம் காசு வேணும். அத்தோட வுட்டுப்புடணும். அதெ வுட்டுப்புட்டு காசி காசின்னு இருபத்து நாலு மணி நேரமும் அதுலயே கவனம் போச்சுன்னு வெச்சிக்கோ அது நல்லதுக்கில்ல. அத்துச் சுத்தப்பட்டு வாராது. மனுஷன் மனுஷனத்தாம் இருக்கணும். எந்திரம் மாதிரியோ பணப்பிசாசு மாதிரியோ ஆயிடக் கூடாது. அதாலத்தாம் சொல்றேம், அதெ வுட்டுப்புட்டு வேலையில சேர்ற சோலியப் பாரு. மறுக்கா மறுக்கா சொல்றேம்! யேவாரங்றது ஒரு காலத்துல நல்லா ஒடும். இன்னொரு காலத்துல அப்பிடியே படுத்துப்புடும். கவர்மென்ட் வேலைங்றது அப்பிடில்ல அது பாட்டுக்கு ஓடிட்டு கெடக்கும். கைக்கு வர்ற காசிங்றது கூடவோ கொறைச்சலோ ஒரே சீரா வந்துக்கிட்டு இருக்கணும். ஒரேடியா வர்றதும், ஒரேடியா போறதும் நல்லதில்ல. அது மனசுல திரிபைப் பண்ணிப்புடும். பணந்தாங் வாழ்க்கைங்ற ஒரு தோற்றத்தெ உண்டு பண்ணிப்புடும் பாத்துக்கோ!" அப்பிடிங்கிறாரு சுப்பு வாத்தியாரு.
            "முந்நூத்து அம்பது பேருக்கு மேல வாடிக்கை யேவாரம் பண்றாங்கப்பா! எடையில வுட்டுட்டு வர்றதுங்றது நடுத்தெருவுல விட்டுப்புட்டு வர்றது மாதிரித்தாம்." அப்பிடிங்கிறான் விகடு.
            "கவர்மெண்டுக்கார்ரேம் வேலைய கையில கொடுத்து கெஞ்சிக்கிட்டு இருக்க மாட்டாம். நீயி போகலன்னா அடுத்த ஆளை வரச் சொல்லி சோலிய முடிச்சிப்புடுவாம். நாட்டுல படிச்சவேம்லாம் வேலை எப்போ கெடைக்கும்னு நிக்குறாம். ஒனக்கென்ன வேல வர்றங்கறப்போ அழிச்சாட்டியம் பண்ணிட்டு நிக்குறே? விநாயகம் வாத்தியாரு சொல்லிட்டாரு, இந்த இண்டர்வியூவுக்குப் போனீன்னா வேலெ நிச்சயம்னு. இந்த மாரியில்லாம் பின்னாடி ஒரு நெலை வராது பாத்துக்கோ. நீயே இந்த வேலைக்கிப் படிச்சு ஆறு வருஷத்துக்கு மேல வேலைக்குக் காத்துகிட்டு கெடந்திருக்கே. இந்த சந்தர்ப்பத்த அசந்தர்ப்பமா ஆக்குனே பிற்பாடு வேலெ எப்போ கெடைக்குங்றதுக்கு உத்தரவாதமில்லே. அய்யருகாரு வர்ற வரைக்கும் அமாவாசியும் காத்திருக்காது. காத்து இருக்குறப்பவே தூத்தி முடிக்கணும். தும்ப வுட்டுப்புட்டு வாலெ பிடிச்சிக்கிட்டு நிக்கப்புடாது பாத்துக்கோடாம்பீ! முடிவா சொல்றேம் இண்டர்வியூவுக்குப் போற வேலைய மொதல்ல பாரு. நீயி வேலையில சேர்றது, சேராம இருக்குறது பத்தியில்லாம் பின்னாடி பாக்கலாம்!" அப்பிடிங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "இல்லேப்பா! நம்மாள முடியாது. நம்மள நம்ம போக்குல வுட்டுப்புடுங்க நீஞ்ஞ! ஒங்க காலம் வேற! நம்ம காலம் வேற!" ங்றான் விகடு.

            "எல்லா காலமும் ஒண்ணுத்தாம். அந்தக் காலத்துலயும் செரி, இந்தக் காலத்துலயும் செரித்தாம் கவர்மெண்ட்டு காசின்னா அத்து தனித்தாம். ஒருத்தெனயும் நம்பிக் கெடக்க வேணாம் பாத்துக்கோ.மாசம் ஆச்சுன்னா டான்னு துட்டு கைக்கு வந்துடும். கடன கிடன வாங்கணும்னாலும் நம்பி நாலு பேரு கொடுக்க நிப்பாம். ஒறவு மொறையிலயும் அதுக்குத்தாம் மதிப்பு. கவர்மெண்டு வேலைக்கார்ரேம்னு அவனவனும் பொண்ண தூக்கிக் கொடுக்க நிப்பாம். இன்னும் ரண்டு வருஷத்துல நாம்ம ரிட்டையர்டு ஆனாக்கா வூட்டுல வந்து உக்காந்துடுவேம். ஒந் தங்காச்சிய பொண்ணு பாக்க வர்றவேம் அண்ணங்கார்ரேம் வேலையத்தாம் கணக்குப் பண்ணுவாம். நீயி ஒரு வாத்தியார்ன்னாத்தாம் நல்லா நகெ நெட்டுப் போட்டுச் செய்வாம்னு நம்புவாம். நமக்குப் பிற்பாடு குடும்பத்தெ தூக்கி நிறுத்தியாவணும். அதுக்கு நெலையான வருமானம் வந்தாத்தாம் நல்லதா இருக்கும். இந்த மாதிரி நெலையில்லா வருமானம் உள்ள வேலெ நல்லதுக்கு இல்லே! புரிஞ்சுக்கோடாம்பீ! காசிய செலவழிக்குறது சுலுவு ஒலகத்துல. அதெ சம்பாதிக்கிறது இருக்கே அது ரொம்ப கஷ்டம். அந்தக் கஷ்டம் வாணாம்னாக்க கவர்மெண்டு உத்தியயோகத்த வுட்டுப்புடக் கூடாதுடா மவனே!" அப்பிடிங்கிறாரு சுப்பு வாத்தியாரு ரொம்ப எறங்கி வந்து.
            "யப்பா! நாம்ம நல்லா சம்பாதிப்பேம்ப்பா! அதுல நமக்கு நம்பிக்கெ இருக்கு. நம்ம நாட்டுல பங்குச் சந்தையில முதலீடு பண்றவங்க ரொம்ப கம்மிப்பா. இப்பத்தாம் அத்த பத்தின விழிப்புணர்வு வந்துகிட்டு இருக்கு. அதால வருங்காலத்துல நம்ம ஆபீஸப் பாத்து வர்றப் போறவங்க அதிகமாவேங்களே தவுர கொறைஞ்சிப் போயிட மாட்டாங்க! இத்து நல்லா பெரமாதமா வரும். நம்மள நம்புங்க! நீஞ்ஞ சொல்ற வாத்தியாரு உத்தியோகத்துல வருஷ வருமானமே லட்சத்தெ தாண்டல. இத்து அப்பிடியில்ல நாலு மாசத்துலயே சம்பாத்தியம் லட்சத் தாண்டும்! ச்சும்மா இல்லப்பா! இத்துவும் ஒரு வகையான ஒழைப்புத்தாம்!" அப்பிடிங்றான் விகடுவும் கெஞ்சிக் கேக்குற தொணியில.
            "நாம்ம கவர்மெண்டு வேலைக்குப் போறப்ப வயசு முப்பத்தெ தொட்டிடுச்சு. அதுக்குப் பிற்பாடு கலியாணத்தப் பண்ணி பொண்ணு புள்ளைகளப் பெத்து நெனைச்சிப் பாருடாம்பீ! எம்மட வயசுக்கு உள்ள வாத்தியாருமாருக இன்னிக்கு பேரப் புள்ளைகள மடியில வெச்சிக் கொஞ்சிக்கிட்டு இருக்காக. நமக்கு வேலெ வர்ற தாமசம் ஆச்சுன்னு எல்லாமே அஞ்சு வருஷத்துக்கு மேல தாமசம் ஆவுது. நமக்கு தாமசம் ஆனது அஞ்சு வருஷத்துக்கு மின்னாடி ஒமக்கு வருது. அதுவும் வூடு தேடி வருது. ஒரு உத்தியோகத்துல அஞ்சு வருஷங்றது சம்பாத்தியம்டா! அத்தனெ வருஷ இங்கிரிமெண்டு போவுது தெர்யுமா? அத்தென வருஷத்துக்கு சீனியாரிட்டி, செலக்சன் கிரேடு, ஸ்பெஷல் கிரேடுன்னு வர வேண்டியது அஞ்சு வருஷத்துக்குத் தள்ளுனா இழப்புக நெறைய இருக்கு. இன்னிய தேதியில நம்மட யூனியன்ல எம்மட வயசுக்குக் கம்மியானவங்க அதிகமா சம்பாத்தியம் பண்ணிட்டு இருக்காங்க. அதுக்குக் காரணம் அவுங்களுக்கு மின்னாடியே வேலை கெடைச்சதுதாம். வேல பாக்க பாக்க இஞ்ஞ சம்பளம் அது பாட்டுக்கு ஏறிட்டு இருக்கும். நமக்குக் கெடைக்காத ஒண்ணு ஒமக்குக் கெடைக்குது. அதெ புரிஞ்சிக்கிட்டு சாமத்தியம் பண்ணப் பாரு. பெலாக்கணம் பண்ணிட்டு கோட்டைய வுட்டுப்புட்டு நிக்காதேடாம்பீ! நீயி இப்போ நாம்ம சொல்றதக் கேளு. அன்னிய தேதிக்கு நாமளும் ஒம்மட கூட வர்றேம். ஒன்னய நம்ப முடியா. இண்டர்வியூவுக்குப் போறேம்னு சொல்லிப்புட்டு நீயி பாட்டுக்கு ஆபீஸ்ஸ தொறந்து போட்டுக்கிட்டு அஞ்ஞ உக்காந்திருப்பே! பெறவு ஆச்சா போச்சான்னு என்னெத்த கத்துனாலும் ஒண்ணும் பண்ண முடியாதுடாம்பீ!"ன்னு இப்போ முண்ட முடியாம, அசைக்க கிசைக்க கொள்ள முடியாம, மொறையா பிடிக்கிறாரு சுப்பு வாத்தியாரு.
            அப்பங்காரரும், மவங்காரனும் இப்பிடி பேசிட்டு நிக்குறதெப் பாத்து அதெ அப்பிடியும் இப்பிடியுமா கேட்டுப்புட்டு அவுங்கப் பக்கத்துல அம்மாக்காரியும், தங்காச்சிக்காரியும் கிட்டக்கா வர்றாங்க இப்போ.
            "அப்பா சொல்றெத கேட்டுப்புட்டு ஒழுங்கு மருவாதியா எஞ்ஞப் போகணுமோ அஞ்ஞப் போயிட்டு வந்துருடாம்பீ! நம்மாள பெராணனெ கொடுக்க முடியல. நீயி ஒரு திக்குக்கு நிக்குறே. அவர்ரு ஒரு திக்குக்கு நிக்குறாரு. இதெயே காலம் பூராத்துக்கும் அனுபவிச்சிக்கிட்டு சித்தரவதெ பட்டுகிட்டு கெடக்க முடியாது. ரண்டு காசோ, நாலு காசோ, நாப்பது காசோ இந்த வேலையில வர்ற சம்பாத்தியம் போதும். அதெ வெச்சிப் பாத்துக்கோ. சம்பாதிக்கிறது முக்கிமில்லேடாம்பீ! அத்து எந்த வழியில சம்பாதிக்கிறேம்ங்றதுதாம் முக்கியெம். கொலைய பண்ணிட்டு, களவாண்டு செய்யுறதெ செஞ்சிப்புட்டு சம்பாதிக்கிறதும் சம்பாத்தியம்தாம். அதுக்காக எல்லாமும் சம்பாத்தியம்னு ஒத்துக்கிட முடியுமாடாம்பீ! சம்பாத்தியங்கிறது நல்ல வழியிலயில்ல வர்றோணும். அப்பா சொன்னபடியே கேட்டுக்கிட்டு இண்டர்வியூவுக்கு போய்ட்டு வந்துடாடா என்னய பெத்த ராசா! ஏம் ஒஞ்ஞ அப்பா அவர்ரு சம்பாத்தியத்துல காலத்தெ ஓட்டலையா? அத்தெப் போல நீயும் ஓட்டலாம்டாம்பீ! நீயி கோடி கோடிய சம்பாதிப்படாம்பீ! ஒமக்கு எல்லாமே வர்ரும்டாம்பீ!" அப்பிடிங்கிது வெங்கு.
            "அத்தாம்மா! இப்டியே ஆபீஸ்ல வெச்சி நின்னேன்னாக்கா நீயி சொன்னீயே கோடி கோடியா அத்தெ சம்பாதிச்சிப் புடுவேம்தாம். ஆன்னா அத்தெ வாத்தியாரு உத்தியோகத்துல பண்ண முடியாது!"ங்றான் விகடு.
            "நாம்ம ஒருத்தி! நாம்ம ஒண்ணுத்தச் சொன்னா, இவ்வேம் வேற ஒண்ணுத்த பிடிச்சிக்கிட்டு நிக்குறாம்! கோட்டிக்கா பேசிக்கிட்டு நிக்காதே. அவுங்க சொல்றதுதாம் செரி. அதுப்படி போயிக்கோ. ஒங்கிட்டப் பேசி ஒன்னய அசெமடக்க நம்மாள முடியாதுடாம்பீ"ங்குது வெங்கு.
            "ஏம்ண்ணே! அப்பாத்தாம் சொல்லுதுறாங்கள்லல. அதுபடியே வேலைக்குப் போயிடேம். எதுக்கெடுத்தாலும் எதுக்கு முட்டிக்கிட்டு நிக்கணும்னு தலையெழுத்தா ஒமக்கும் அப்பாவுக்கும்? ஒமக்கு வாத்தியாரு வேலத்தாம் செரி." அப்பிடிங்கிறா செய்யு.
            "நாமெல்லாம் நடுத்தரெ குடும்பம்டாம்பீ! நடுவுல தொங்கிகிட்டு நிக்கிறேம்ங்றதெ மறந்துப்புட கூடாது. இப்பிடியும் வுழுவ முடியாது, அப்பிடியும் வுழுவ முடியாது. அதுக்காக வுழுவாமலும் போயிட முடியாது. எதாச்சிம் ஒரு பக்கம் வுழுவுறாப்புல ஆனாலும் சமாளிச்சிக்க புடிமானம் வேணும் பாத்துக்கோடாம்பீ! வுழுந்துடாம நல்ல புளியங் கொம்பா அத்து கெடைக்கிறப்பபே பிடிச்சுக்கணும்டாம்பீ! இந்தப் பக்கமா? அந்தப் பக்கமா?ன்னு பூனை கணக்கால்லாம் யோஜிச்சிகிட்டு நிக்க முடியாது. மதிலு சுவருத்தாம் கடெசி வரைக்கும். அந்தச் சுவத்துக்கு ரண்டு பக்கமும் கைப்பிடிச் சுவர்ர போட்டு வெச்சிக்கிறாப்புல கவர்மெண்டு வேலங்றது. அப்பிடியே அதெ பிடிச்சுக்கிட்டு ஓட்டிக்கிட்டும் உருட்டிக்கிட்டும் போயிக்கிட்டே இருக்கணும் ஆமாம்டாம்பீ!"ன்னு தன்னோட கடெசி அஸ்திரம் வரைக்கும் எல்லாத்தையும் பயன்படுத்திப் பாக்குறாரு சுப்பு வாத்தியாரு விகடுவோட மனசெ கரைச்சுப்புடுறதுங்ற முடிவோட.
*****


No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...