17 Jan 2020

பல்டியடிக்கிற வாழ்க்கை!



செய்யு - 330

            எல்லாம் நல்ல வெதமா போயிட்டு இருக்குறப்போத்தாம் அதெ தொடர்ந்து நல்ல வெதமா செய்ய முடியாம வேறொரு திக்குக்குப் போறாப்புல சூழ்நிலைக அமைஞ்சிப் போயிடும். அப்படி ஒரு நெலமைய விகடு சந்திக்கிறாப்புல ஆயிடுச்சு. வழக்கமா பங்குச் சந்தையில இருக்குற பங்குகளோட நெலைமைத்தாம் அப்பிடி ஆவும். நல்லா போயிட்டு இருக்குற பங்குக தலைக்குப்புற பல்டி அடிக்கிறதும், மோசமா போயிட்டு இருக்குற பங்குக திடீர்னு யூ டேர்னு போட்டு எகிறிப் போறதும் நடக்கும். அந்தப் பங்குகளோட நெலைமை மாதிரியே அந்தப் பங்குகளோட சந்தையில வேலை பாக்குற விகடுவோட நெலமையும் ஆவுது.
            ஆபீஸூ நல்ல நெலையில போக ஆரம்பிச்சிடுச்சு. முந்நூத்து அம்பது பேருக்கு மேல ஆபீஸ்ல வாடிக்கை பண்ண ஆரம்பிச்சாங்க. அத்தனை கணக்குகளயும் ஒத்த ஆளா இருந்து விகடு பாத்துக்கிட்டாம். இங்க கூத்தாநல்லூரு தொண்டாமுத்தூரு கேப்பிட்டல் கிளையில பங்கு யேவாரங்றது டெலிவரி எடுத்து வாங்கி விக்குறது மட்டுந்தாங்குறதுல விகடு உறுதியா இருந்ததால அவனால இதெ சமாளிக்க முடிஞ்சிது. தினசரி யேவாரம்னு இருந்தா இந்த நெலையச் சமாளிக்க முடியாது. கொறைஞ்சது நாலைஞ்சு டெர்மினலாவது போட்டாகணும். அதுக்கு முதலீடு செஞ்சாகணும். அதுக்கு நாலைஞ்சுப் பேரை ஆபரேட்டரா போட்டு தலைக்கு அஞ்சாயிரம் வீதம் சம்பளம் கொடுத்தாகணும். அந்தச் சம்பளத்தெ கொடுக்குறதுக்கும், போட்ட முதலீட்டை எடுக்குறதுக்கும் வாடிக்கை பண்றவங்களோட மனச மாத்தி, தினசரி யேவாரம் பண்ணுங்கன்னு சொல்லுற நெலைமைக்குக் கொண்டு போயி நிறுத்துற மாதிரி ஆயிடும்.
            பின்னே ஆபரேட்டர்கள போட்டு அவுங்கள சும்மா உக்கார வைக்க முடியுமா? அப்போ வாழ்க்கையில ஒரு சம்பாத்தியத்துக்கு யேவாரங்ற நெலைமை மாறி, யேவாரத்துக்கு யேவாரங்ற நெலைமை உண்டாயிடும். யாரு லாவம் பாத்தா என்னா? நட்டம் பாத்தா என்னா? மாசா மாசம் ஆபீஸ ஓட்டுற அளவுக்குப் பணம் வந்து நாமளும் நாலு காசு பாத்தா எல்லாஞ் சரித்தாம்ங்ற மனநெலை நம்மளையும் அறியாம உண்டாயிடும். நெருக்கடிங்க இருக்கே அது மனுஷனெ வேற மாதிரி மாத்திப்புடும். அந்தந்த நெருக்கடிக்குத் தகுந்தாப்புல பேச வைச்சி, பொய்கள அவுத்து வுடப் பண்ணி, அந்தந்த நெருக்கடியான நெலமையச் சமாளிக்க என்னா வேணும்னாலும் பண்ணலாங்ற நிலையில அது கொண்டு போயி விட்டுப்புடும்.
            தினசரி என்ன வேணாலும் நடக்கலாங்ற பங்குச் சந்தையில விகடு அந்த மாதிரியான எந்த வெதமான நெருக்கடியும் இல்லாம இருந்ததுக்குக் காரணமா, எதெச் செய்யணும், எதெ செய்யக் கூடாதுங்றதுல தெளிவு இருந்ததும், அதெ எதுக்காகவும் வுட்டுக் கொடுக்காம பிடிவாதமா கடைபிடிச்சதுதாம்னு சொல்லலாம். அதெ விட முக்கியமா இதுல சுப்பு வாத்தியாரோட நிலைபாட்டுக்கு அதிமான முக்கியத்துவம் இருக்கு. யாருக்கும் எந்த வெதமான கஷ்டமும் கொடுக்காம, எந்தக் குடும்பத்தையும் நடுத்தெருவுல நிறுத்தாம வாழ்றதுதாம் உத்தமான வாழ்க்கைன்னு நம்புறவரு அவரு. அப்பிடி ஒரு நெலமை தன்னோட மகனால யாருக்கும் வந்துப்புடக் கூடாதுங்றதுல இன்னிய தேதி வரைக்கும் பயந்துக்கிட்டே இருக்குறவரு அவரு. அவரோட அந்த நெனைப்புக்கு எந்தப் பங்கமும் வந்துடக் கூடாதுங்ற பயம் விகடுவோட மனசுலயும் இருக்கு. அதுக்குப் பயந்துகிட்டு, அப்பங்காரரு மனசு நொம்பலப்படுற மாதிரி எந்தச் சம்பவமும் நிகழ்ந்திடாம பாத்துக்கணுங்றதுல பாத்துப் பாத்து யேவாரம் பண்றதும், யாரையும் அதிகமா யேவாரம் பண்ண வுடாம பண்ணி, கண்கொத்திப் பாம்பு கணக்காவும், கண்ணுல வெளக்கெண்ணெய்யை வுட்டுக்கிட்டும் பங்குகள பாத்துப் பாத்து வாங்கிக் கொடுத்து, வித்துக் கொடுத்து இத்தனி நாளு வரைக்கும் சமாளிச்சிக்கிட்டு வர்றாம். அவனோட அந்தப் பயத்தை பயம்னு சொல்றதா, தொழில்ல காட்டுற பயபக்தின்னு சொல்றதான்னு அவனுக்கும் புரியல.
            ஒரு புரோக்கிங் ஆபீஸ்ல அக்கெளண்ட் ஆரம்பிச்சா, அந்த ஆபீஸ்ல நட்டமே கெடையாதுங்ற சேதி ஓரிடத்துல இருக்காது. அது ஊரு சுத்த ஆரம்பிச்சிடும். விகடு ஆரம்பிச்ச ஆபீஸூ அப்படி இருந்ததால, அந்தச் சேதி ஊரு ஊரா சுத்த ஆரம்பிச்சதுல பல எடங்கள்ல பலவிதமான புரோக்கிங் ஆபீஸ்ல யேவாரம் பண்றவங்களும் இங்க வந்து இவங்கிட்டே ஒரு அக்கெளண்ட்ட பண்ணிக்கிட்டு இதெ ஒங்க போக்குலயே வெச்சிக்கிட்டு லாவத்தப் பண்ணி வுடுங்கன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. இதுல உச்சபட்சமா குஞ்சு கவுண்டரே அவரோட பொண்டாட்டிப் பேர்ல ஒரு அக்கெளண்ட கூத்தாநல்லூரு கிளையில பண்ணி வெச்சி அதெ பாத்துக்கன்னு சொல்ற அளவுக்கு ஆயிப் போச்சுது நெலமை. அவரு அப்படிப் பண்ணப்போ விகடு ஒரு வார்த்தெ சொன்னாம், "கவுண்டரே! இஞ்ஞ அக்கெளண்ட் பண்ணியிருக்கிறவங்க எல்லாத்துக்கும் வாங்கி விக்குறப்போ வர்ற கமிஷம் மட்டுந்தாம். ஆனா ஒங்களுக்கு மட்டும் லட்சத்து ரூவா லாவத்துக்கு அதெ வாங்கி வித்த கமிஷனு போக  பத்தாயிரம் ரூவா தனியா கமிஷனா கொடுத்துப்புடணும்." அப்பிடின்னு.
             அதுக்குக் குஞ்சு கவுண்டரு சிரிச்சிக்கிட்டே சொல்றாரு, "அதென்னடா பத்தாயிரம் ரூவாயின்னு சில்லித்தனமால்லோ கேக்குறே. பாதிக்குப் பாதி எடுத்துக்கோடா. எனன்கென்ன ஒத்த காசியா இருந்தாலும் வருமானம் வந்துக்கிட்டே இருக்கணும். நீயி கோடி ரூவாய வேணாலும் சம்பாதிச்சுக் கொடுத்துப்புட்டு அதுல பாதிய எடுத்துக்கோயேம். அதுல நமக்கென்னடா மெனக்கெடு இருக்கு? கையில இருக்குற காசிய போடுறேம். நீயி பெருக்கித் தர்ற போறே. நம்ம கையில இருந்தா சும்மாத்தான இருக்கப் போவுது. அது நாலு காசிய சம்பாதிச்சாத்தாம்டா அது இன்னும் பெருவும். அப்பத்தாம் அதுக்கு ஒரு மதிப்பு. சும்மா வெச்சிருக்கிறதுக்காவா காசிய சம்பாதிச்சேம். அத்தெ சம்பாதிச்சிட்டே இருக்கோணுமடா. நீயி சம்பாதிச்சிக் கொடுத்துப்புட்டு எம்புட்டு வாணும்னாலும் எடுத்துக்கோடா. அப்பத்தாம் ஒமக்கும் நெறைய சம்பாதிக்கணும்னு மூளெ வேலை செய்யும். நீயும் நெறைய சம்பாதிச்சிக்கிட்டு நமக்கும் நெறைய சம்பாதிச்சுப் போடுவியாக்கும்!"

            குஞ்சுக் கவுண்டரு பணம் சம்பாதிக்கிற எந்த வழியையும் விட்டுட மாட்டாரு. அதுக்குத் தோதான ஆளுன்னு தெரிஞ்சா அந்த ஆளை எந்த வெலை கொடுத்தும் சமாதானம் பண்ணுவாரு. அவரோட நோக்கத்துக்குச் சம்மதிக்க வைப்பாரு. அதே நேரத்துல அந்த ஆளால பிரயோஜனம் இல்லன்னு புரிஞ்சிப் போச்சுன்னா அந்த ஆளெ வெட்டி வுட கணக்கெல்லாம் பாத்துக்கிட்டு நிக்க மாட்டாரு. ஒரே போடுதாம். போட்டுத் தள்ளிக்கிட்டே போயிட்டு இருப்பாரு. ஒரு கருத்துக்குப் பாத்தா அவர்ர சுத்தி பணத்தெ சம்பாதிச்சிக் கொடுக்குற ஆளுங்களா இருக்குற மாதிரித்தாம் பாத்துப்பாரு. பண விசயத்துல சொணக்கம் காட்டுனா அந்த ஆள எங்கத் தூக்கி எப்பிடி வீசுவார்ன்னு யாருக்கும் தெரியாது. அப்படிப்பட்ட ஆளுங்க அவரோட பக்கத்துல கூட நெருங்க முடியாது.
            இப்படியே அக்கெளண்ட் பண்ணி வாடிக்கை பண்றவங்களோட நெலை அதிகமாயிப் போற இதே நிலை தொடர்ந்துச்சுன்னா தொண்டாமுத்தூர் கேப்பிட்டல் கிளைகள்லயே கூத்தாநல்லூரு கிளைதாம் அதிகமா பணம் பண்ணிக் கொடுக்குற கிளைங்ற பேரும் கொஞ்ச நாள்ல வந்துப்புடும். எந்தக் கூத்தாநல்லூரு கிளையில யேவாரம் சரியில்லன்னு குஞ்சு கவுண்டரு சொன்னாரோ, அந்தக் கிளைதாம் இப்போ அதிகமா யேவாரம் பண்துங்ற பேரும் அவரு வாயாலேயே வந்துப்புடும். காலம் எல்லாத்துக்கும் ஒரு வாய்ப்பைத் தந்துகிட்டுத்தாம் இருக்கு. ஆனா அதெ காலந்தாம் அப்படி ஒரு வாய்ப்பைத் தந்து அதெ பறிச்சிப் போட்டுட்டும் போயிடுது. அப்படிக் காலம் தர்றத அந்த வாய்ப்பை, அந்த எடத்துல பறி கொடுக்காம இருக்கணும்னா நெஞ்சழுத்தம் இருக்குற மனுஷனா இருந்தாகணும். அப்படி இறுகிக் கெடந்து ஆவப் போறது என்னான்னு விட்டுக் கொடுத்துட்டுப் போறப்ப பாதைய மாத்திக்கிட்டுத்தாம் வாழ வேண்டிய நெலைமை உண்டாயிப் போயிடுது.
            அந்த நெலைமைத்தாம் விகடுவுக்கு இண்டர்வியூ கார்டு வடிவத்துல வந்துச்சு.
            ரெண்டாயிரத்து எட்டாவது வருஷ வாக்குல விகடுவுக்கு வாத்தியாரு வேலைக்கான இண்டர்வியூ கார்டு கெடைச்சது. அவன் அதுக்கான டிப்ளமா டீச்சர் டிரெய்னிங்கை ரெண்டாயிரத்து ரெண்டாவது வருஷ வாக்குல முடிச்சி வெச்சிருந்தாம்ங்ற சங்கதியெல்லாம் ஒங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சததாம். அந்தப் படிப்புக்கான வேலைக்கான இண்டர்வியூ கார்டு அவன் படிப்பை முடிச்ச ரெண்டு வருஷமா வந்துகிட்டு இருந்தது, பெறவு வராம, ஒரு நாலு வருஷத்துக்குப் பெறவு இப்பத்தாம் வருது. ஒரு காலி எடத்துக்கு பத்துப் பேர்ன்னு கணக்கு வெச்சி எம்ப்ளாய்மெண்டு ஆபீஸ்ல அதுக்குன்னு இண்டர்வியூ கார்டு போடுவாங்க. அதால இண்டர்வியூ கார்டு வந்த எல்லாரும் வேலைக்குப் போயிட முடியாது. அதுல ஆண் - பெண் விகிதச்சாரம், சாதி வாரியான இட ஒதுக்கீடுன்னு கணக்குப் பாத்துதாம் வேலையப் போடுவாங்க. இண்டர்வியூங்றது சர்டிபிகேட் வெரிபி‍கேஷன்தாம். அதுக்குப் போயிட்டு வந்தா, வேலை வர்ற மாதிரி இருந்தா அதுக்கான கடுதாசியைப் பிற்பாடு அனுப்புவாங்க. அதெ எடுத்துக்கிட்டு மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகத்துப் போயி அங்க ஒரு ஆணைய வாங்கிக்கிட்டு, பிறவு அதெ எடுத்துக்கிட்டு எந்த ஒன்றியத்துல வேலை வந்திருக்கோ அங்க இருக்குற உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்துக்குப் போயி அங்க ஒரு ஆணைய வாங்கிக்கிட்டு, எந்தப் பள்ளிக்கூடத்துல‍  வேலையப் போட்டு இருக்காங்களோ அங்கப் போவணும். இதாங் அப்போ நடைமுறை.
            நாலு வருஷத்துக்கு மின்னாடி வந்த இண்டர்வியூ கார்டுல வேலை கெடைக்காம போனது மாதிரில்ல இப்போ வந்திருக்கிற இண்டர்வியூ கார்டு. இந்த இண்டர்வியூ கார்டுக்கு நிச்சயம் வேலை கெடைக்குங்ற நெலமை. அதுக்குக் காரணம் மின்னாடியிலிருந்து காலியிடங்கள ரொம்ப நிரப்பாம கம்மியாத்தாம் நிரப்பிட்டு வந்தாங்க. அப்பவே ஏகப்பட்ட வாத்தியாருமாருக ரிட்டர்ட்மெண்ட் ஆயி காலி எடங்க அதிகமாத்தாம் இருந்துச்சு. காமராசர் காலத்துல அதிக அளவுல பள்ளிக்கூடம் ஆரம்பிச்ச பிற்பாடு வாத்தியாருங்க அதிகமா கெடைக்காம அப்போ எட்டாப்பு, பத்தாப்பு படிச்ச ஆளுங்கள எல்லாம் பிடிச்சி வாத்தியார்ரா போட்டு இருந்தாங்க. அவுங்க எல்லாம் வேற வரிசையா ரிட்டையர்ட்மெண்டு ஆகி காலியிடங்க ஏற்கனவே அதிகமாத்தாம் இருந்துச்சு. அத்தோட புதுசு புதுசா வேற பள்ளிக்கூடங்கள 'அனைவருக்கும் கல்வி இயக்கம்'ங்ற பேருல ஆரம்பிச்சி இருந்ததால டீச்சர் டிரெய்னிங் முடிச்ச டிப்ளமா வாத்தியாருமாருகளோட தேவை இப்போ ரொம்பவே அதிகமா இருந்துச்சு. மத்திய அரசாங்கமும் அதிக அளவுல நிதிய ஒதுக்கி நெறைய பள்ளிக்கூடங்கள திறக்கவும், நெறைய வாத்தியார்மார்கள நியமனம் பண்றதுக்கும் தோது பண்ணியிருந்தாங்க. அநேகமா இண்டர்வியூ கார்டு வந்திருக்குற அத்தனைப் பேருக்குமே வேலை கெடைக்குங்ற நெலமை இப்போ.
              படிச்சு முடிச்சதுலேந்து ஆறு வருஷம் கழிச்சி விகடுவுக்கு இப்போ வந்திருந்த இண்டர்வியூ கார்டுல வேலை கெடைக்குங்ற நெலை உண்டாயிருந்துச்சு. சுப்பு வாத்தியாரும், விநாயகம் வாத்தியாரும் எந்த வேலை கெடைச்சிடும்னு சொன்னாங்களோ அந்த வேலை கெடைக்குற நெலமை. ஆனா விகடுவோட நெலைமை அந்த வேலை கெடைச்சி வர்ற சம்பாத்தியத்தை விட இப்போ அதிகமான சம்பாத்தியத்தைத் தரக் கூடியதா இருந்ததால அவ்வேன் இந்த இண்டர்வியூ கார்டைப் பெரிசா எடுத்துக்கிடல. அந்த இண்டர்வியூவுக்கே போக வேணாங்ற முடிவுல இருந்தாம்.
*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...