செய்யு - 329
"ஏம்யா நீங்க சம்பாதிக்க நம்மளப்
போட்டு பகடைக் காயா உருட்டுறீங்களோ?" அப்பிடின்னு காதர் பாட்சா இன்னொரு சங்கடமான
கேள்வியையும் கேட்டுப்புட்டாரு. அவரு அப்பிடித்தாம் மனசுல படுறதைப் பட்டுன்னு கேட்டுப்புடுவாரு.
அதுக்கு பகுத்தறிவான ஒரு சரியான ஒரு விளக்கத்தக் கொடுத்தாகணும். இல்லேன்னா பொட்டு
நொங்கு எடுத்துடுவாரு. அவ்வளவு சுலபத்துல சிக்கனமா பதிலு சொல்ற மாதிரியா கேள்விய
கேட்டுருக்காரு காதர் பாட்ஷா. கொஞ்சம் நீட்டி மொழங்கித்தாம் இதுக்கு வெளக்கம் சொல்லியாகணுங்றது
விகடுவுக்குப் புரியுது. மித்தவங்க மேதிரி சிரிச்சி மலுப்பிச் சமாளிச்சுல்லாம் ஒரு
விசயத்துல காதர் பாட்ஷாவெ சமாதானமும் பண்ணிட முடியாது. வேற வழியில்லாம விகடு நீட்டி
மொழங்க ஆரம்பிச்சான்.
"அய்யா! அது வந்துங்கய்யா... ஒரு
வகையில சூதாட்டம்னும், இன்னொரு வகையில புத்திசாலிகளுக்கான பணத்தோட்டம்னும் எப்பிடி
வேணாலும் சொல்லலாம் பங்குச் சந்தைய. ஒரு நிறுவனம் பெரிய அளவுல வளரணும்னா அதோட வளர்ச்சிக்கான
முதலீடு ரொம்ப பெரிய அளவுல தேவைப்படும். அம்மாம் பெரிய முதலீட்டை ரெண்டு வழிகள்லத்தாம்
ஒரு நிறுவனம் திரட்ட முடியும். ஒண்ணு பேங்குலேந்து கடன் வாங்கலாம். இல்லேன்னா பங்குச்
சந்தையில தன்னோட பங்குகள பட்டியிலிட்டு வித்து நிதிய தெரட்டலாம். அந்த ரெண்டுக்குமே
நம்பிக்கைத்தாம் அடிப்படை. பேங்குல பேங்குக்கார்ரேம் கடன் கொடுக்கணும்னா அந்த நிறுவனத்தப்
பத்தின நல்லெண்ணமும், நம்பிக்கையும் பேங்குக்காரங்களுக்கு இருக்கணும். அந்த நிறுவனத்துக்கு
நல்ல சொத்து மதிப்பும் இருக்கணும். அப்போத்தாம் அவுங்க கேட்ட கடனெ கொடுப்பாங்க.
அதே போல பங்குச்சந்தையில பட்டியிடுறப்போ
அந்த நிறுவனம் நல்லா வளரணும்ங்ற நம்பிக்கை அந்த நிறுவனத்தோட பங்குகள வாங்குறவங்களுக்கு
இருக்கணும். அப்பிடி இருந்தாத்தாம் அந்தப் பங்குகளப் பட்டியிலிடறப்ப அவுங்க நிர்ணயிச்ச
வெலைக்கு வாங்க நான் நீயின்னுப் போட்டிப் போட்டுட்டு வாங்குவாங்க. நெறையப் பேரு போட்டிப்
போட்டுட்டு வாங்குவாங்கன்னு நெலை இருக்குறப்பத்தாம் பத்து ரூவாய் முக மதிப்பு வெலையுள்ள
பங்கை அவுங்க நெனைக்கிற அளவுக்கு வெலை நிர்ணயம் பண்ணி ஆயிரம் ரூபாய்னு கூட விக்க முடியும்.
அந்தப் பங்கை வாங்க போட்டியே இல்லேன்னா பத்து ரூவா முக மதிப்புள்ள பங்கை பத்து ரூவாய்ன்னு
போட்டுத்தாம் கொடுக்க வேண்டியிருக்கும். அதுக்கும் வாங்க ஆளே இல்லைன்னா அதெ பங்குச்
சந்தையில பட்டியிலிடவே முடியாது.
பேங்குல கடனெ வாங்குறதெ வுட பங்குச் சந்தையில
பட்டியலிடுறதத்தாம் வளர்ற ஒரு நிறுவனம் அதிகமா விரும்பும். ஏன்னா பேங்குல கடனெ வாங்குனா
அதெ திருப்பிக் கொடுத்தாவணும். திருப்பிக் கொடுக்க முடியாத நெலையில திருட்டுத் தனமா
வெளிநாட்டுக்குத் தப்பிச்சி ஓடியாவணும். பங்குச் சந்தையில பட்டியிட்டா அந்த மாதிரியான
பிரச்சனைக எதுவும் இல்ல. பங்குகள வித்து நிதியத் திரட்டிக்கிட்டு அதெ முதலீடா வெச்சி
நிறுவனத்த நல்ல விதமா வளர்த்தா போதும். பங்குகளோட வெலை பாட்டுக்கு ஏறிட்டு இருக்கும்.
அப்படி முடியாமா போயி பங்குகளோட வெலை எறங்கி நிறுவனமே திவாலா போனாலும் பங்குகள வாங்குனவங்களுக்கு
பணத்தைத் திரும்பக் கொடுக்கணுங்ற அவசியமெல்லாம் இல்ல. அந்தப் பங்குகள வாங்குனவங்கத்தாம்
தலையில துண்டப் போட்டுக்கிட்டு உக்காந்துக்கணும். பங்குகள வித்தவங்களுக்கு எந்தப்
பங்கமும் வந்துப்புடாது.
பங்குச் சந்தையில பட்டியிலிடறப்போ இன்னொரு
செளகரியமும் ஒரு நிறுவனத்துக்கு இருக்கு. கடனா கேக்குறப்போ அதெ கொடுக்க முடியாதுன்னு
சொல்ற பேங்குக்கார்ரேம் பங்குச் சந்தையில பட்டியலாவுற பின்னால அந்த நிறுவனத்துக்குத்
தைரியமா கடனெ கொடுப்பாரு. அது ஒரு வசதி.
நாட்டோட தொழிலுக்கான வணிகத்துக்கான வளர்ச்சிக்கு
அரசாங்கமோ, பேங்குகளோ மட்டும் தேவையான அவ்வளவு முதலீட்டையும் செஞ்சிட முடியாதுங்கய்யா.
ஏன்னா அரசாங்கத்துகிட்டேயும், பேங்குகிட்டயும் இருக்குற முதலீடுங்றதே பொதுசனத்தோட
சொத்துதாம். அதெத்தாம் அவுங்க ஒரு அமைப்பா நிர்வகிக்கிறாங்க. அவங்களுக்கு முதலீட்டுல
கெடைக்குற அசுர பலங்றது எப்பிடிப் பாத்தாலும் பொதுசனத்துகிட்டேயிருந்து கிடைக்கிறதுதாம்.
அது பொதுசனத்துக்குப் புரியாத அளவுக்கு நிர்வாக மொறைகள் இருக்குதே தவிர இதுல நிசமான
பலம் பொதுசனத்தோடதுதாம். அவங்க அரசாங்கத்துக்குக் கொடுக்குற வரியும், பேங்குக்குக்
கொடுக்குற வட்டியும்தாம் அவங்களோட ஆகப் பெரிய முதலீடு. பூனை கணக்கா இருக்குற பொதுசனத்தோட
சின்ன சின்ன முதலீட்டைச் சேர்த்தா யானை கணக்குக்கு வந்துடும். அரசாங்கத்தோட வரிக்கும்,
பேங்கோட வரிக்கும் அதுதாம் அச்சாரம். கொஞ்சம் கொஞ்சமா ஒவ்வொரு சனத்துக்கிட்ட வசூலிக்கிற
வரியும், கொஞ்சம் கொஞ்சமா ஒவ்வொரு சனத்துக்கிட்ட வசூலிக்கிற வட்டியும் எம்மாம் பெரிய
தொகைய வர்றதுங்றதே அதோட வரவு செலவு கணக்கைப் பாக்குறப்பத்தாம் தெரியும். அம்மாம்
சக்தி படைச்சது பொது சனத்தோட ஒவ்வொரு சின்ன சின்ன விசயமும்.
இந்த விசயத்தைத்தாம் பங்குச் சந்தையும்
பயன்படுத்துது. ஒரு பொதுசனத்தால லட்ச ரூபாய்க்கான ஒரு பங்க வாங்க முடியாம இருக்கலாம்.
அதே லட்ச ரூபாய் பங்கை பத்துப் பத்து ரூவாயி பங்குன்னு பத்தாயிரம் பங்கா பிரிச்சி பத்தாயிரம்
பேருகிட்ட கொண்டு போனா, பத்து ரூவாயிப் பங்குதானே, ஒண்ணே ஒண்ணு வாங்கிக்கிலாம்னு
பொதுசனங்க நினைச்சு பத்தாயிரம் பேரு வாங்குனா லட்ச ரூவா ரொம்ப ஈஸியா சேந்துடும்ல.
அந்தப் பத்து ரூவாயிப் பங்கெ லட்சம் பேரு வாங்குனா பத்து லட்ச ரூவாயிடும். அதையே பத்து
லட்சம் பேரு வாங்குனா கோடி ரூவாயி ஆயிப்புடும். அதேயே கோடி பேரு, பத்து கோடி பேருன்னு
வாங்குனா நெனைச்சிப் பாருங்க. இது பத்து ரூவாயிப் பங்கெ பத்து ரூவாயின்னு உள்ள வெலைக்கு
விக்குறப்போ. அதெ பத்து ரூவாயிப் பங்கே நூறு ரூவாய்கு வித்தா நெனைச்சிப் பாருங்க.
அதெ பத்து ரூவாயிப் பங்கெ ஐநூத்து ரூவாய்க்கு வித்தா நெனைச்சிப் பாருங்க. எம்மாம் முதலீடு
கெடைக்கும்னு ஒங்களுக்கு இப்போ புரியுதா? பங்குகள பட்டியிலிடுற ஒரு நிறுவனம் யேவாரத்துல
இருக்குற தன்னோட செல்வாக்கு, தன்னோட நிறுவனத்துக்கு இருக்குற கிராக்கி, முன்னணி நெலைக்குத்
தகுந்தாப்புலத்தாம் வெலைய நிர்ணயம் பண்ணும். அதெ போட்டிப் போட்டுட்டு வாங்க பங்குதாரவுக
தயார்ன்னா வெலை ஆகாயத்துலத்தாம் பறக்கும்.
உண்மையெச் சொல்லணும்னா பங்குச் சந்தைங்றது
ஒரு நிறுவனத்துக்கு நிதி திரட்டலுக்கு அருமையான வழியால்ல இருக்கு. அத்தோட மட்டுமில்லாம
அந்த நிறுவனத்தோட பங்குகள வாங்குன ஒவ்வொருத்தரும் அந்த நிறுவனத்தோட பங்குதாரங்களா
ஆயிடுறாங்க. அதால அந்த நிறுவனம் பிற்பாடு முக்கியமான முடிவுகள எடுக்குறப்போ அதுக்கு
பங்குதாரங்களோட அனுமதிய ஓட்டெடுப்பு வெச்சித்தாம் செய்யும். ஒரு நிறுவனங்கறது அதால
ஒரு தனிமனிதரோடு கட்டுக்குள்ள இல்லாமல அந்த நிறுவனத்துல பங்குதாரங்களா இருக்குற எல்லாரோட
கட்டுக்குள்ளயும் இருக்கும். இதுல இப்பிடி ஒரு சனநாயகமான தன்மையும் இருக்கு. இதுல அதிகமனா
பங்குகள வெச்சிருக்கவங்களுக்கு அதிகமான செல்வாக்கும், கொறைஞ்ச பங்குகள வெச்சிருக்கவங்களுக்கு
கொறைவான செல்வாக்கும் இருக்கும்னாலும் முக்கியமான முடிவப் பத்தி தங்களோட ஆதரவையும்,
எதிர்ப்பையும் பதிவு பண்ண முடியும். அதால ஒரு நிறுவத்தெ நடத்துறங்றது ஒரு தனிமனுஷரோட
சர்வாதிகாரமா இல்லாம ஒரு கூட்டுப்பொறுப்பா மாறிடுது.
எல்லாத்திலயும் சாதக பாதகம் இருக்குற மாரித்தாங்கய்யா
இதுலயும். ரெண்டுமே இருக்கு. அப்படிப்பட்ட பங்குச்சந்தையோட பங்குகள வாங்கி வித்து
அதுக்கு ஒரு கமிஷன் பண்ற ஒரு நிறுவனத்தெ நடத்துறோம். மித்தபடி ஒங்களப் போட்டு பகடைக்காயல்லாம்
உருட்டல்ல. ஒங்களுக்கு விருப்பம் இல்லாத ஒரு பங்கெ வாங்குங்கன்னு சொல்லவோ, வித்துப்புடுங்கண்ணு
சொல்லவோ ஆபீஸப் போட்டுருக்குற நமக்கு எந்த அதியாரமும் இல்லேங்கய்யா. அதே நேரத்துல
நம்ம ஆபீஸ்ல வாடிக்கை பண்ற யாரும் நட்டத்தெ பண்ணிப்புடப் புடாதேங்றதுல ரொம்ப கறாரா
இருக்கேம். அதாலத்தாம் இஞ்ஞ டிரேட் பண்ண வுடுறதில்ல. சில பங்குகள இந்த வெலைக்கு வித்துப்புடுவேம்,
இந்த வெலை வந்தா வாங்கிப்புடுவோம்ங்றதுல கொஞ்சம் பிடிவாதமா இருக்குறது உண்மைதாங்கய்யா.
நம்ம ஆபீஸ்ல ஒருத்தரும் ஒத்த பைசா காசிய நட்டம் பண்ணிடப் புடாதுங்ற அதீதமான ஒரு எச்சரிக்கெத்தாம்யா
அதுக்குக் காரணம்னு நெனைக்கிறேம். லாவமே பண்ணாட்டலும் பரவாயில்ல, நட்டம் மட்டும் இதுல
பண்ணிடக் கூடாதுங்கய்யா. இதுல நட்டம் பண்ண ஆரம்பிச்சா அதுலேந்து தப்பிச்சி வர்றது சாதாரணதில்லைங்றது
நம்மளோட தனிப்பட்ட கருத்துங்கய்யா!" அப்பின்னு மொழங்கி நிறுத்துனான் விகடு.
"அத்துச் சரிதாம்யா! சனநாயகத்தன்மை
அது இதுன்னு சொல்லிப்புட்டு திடீர் திடீர்ன்னு போனைப் போட்டு வித்துப்புடுவா வாங்கிப்புடுவான்னு
திடுதிடுப்புனா கேட்டாக்கா அது ஞாயமெ ஞாயமாரே?" அப்பிடிங்கிறாரு இப்போ காதர்பாட்ஷா.
"அய்யா நம்மளப் போட்டு கொலைக் குத்தால
குத்துதீரு. முடியலங்கய்யா! இஞ்ஞ ஒரு பங்கு நீங்க நெனைக்கற அளவுக்கெல்லாம் கால அவகாசம்
எடுத்துக்கிட்டு வெலெ ஏறுறதோ, எறங்கிறதோ பண்ணாது. சர்ருன்னு ஏறும், எறங்கும் இல்லாட்டி
அப்படியே படுத்த படுக்கையா கெடக்கும். டைமிங் முக்கியம்யா. அந்தந்த நேரத்துக்கு முடிவு
எடுத்தாவணும். இன்னிக்கு நூறு ரூவாய்க்கு யேவாரம் ஆவுற பங்கு நாளைக்கே பத்து ரூவாய்க்கு
எறங்கி யேவாரம் ஆவும். அதெ இன்னிக்கு விக்காம நாளைக்கு விக்கலாம்னு பாத்தா தொண்ணூறு
ரூவாயி நட்டத்தெத்தாம் சுமந்தாவணும். அதெல்லாம் ரொம்ப விரிவாச் சொல்லி புரிய வைக்க
நேரமிருக்காது. அதுக்குள்ள சம்பவெம் நடந்து முடிஞ்சிப் போயிடும். நீஞ்ஞ சந்தைக்கு
வெளியில இருக்கறதால இப்பிடி ஆடலாம், அப்பிடி ஆடலாம்னு வெத வெதமா நெனைச்சிக்கிட்டு இருக்கீங்க.
உள்ள ஆட்டத்துக்குள்ள வந்துப் பாத்தாத்தாம் இதொட சங்கடமும், செரமமும் புரியுங்கய்யா.
நமக்கு நட்டம் பிடிக்காது. லாவம் மட்டுந்தாம் பிடிக்கும். அதுக்காக கொஞ்சம் அடாவடியா
பண்றது உண்மைதாங்கய்யா!" அப்பிடிங்றான் விகடு.
"அதுவும் சரித்தாம்யா! பகுத்தறிவா
சிந்திக்கச் சொன்ன நம்ம அய்யா கூட அதெத்தாம் சொல்வாரு, நமக்கு நாம்ம சொல்றதெ செய்யுற
ஆளுங்க இருந்தா போதும்னு. அதுல கொஞ்சம் கறாராவும் இருப்பாப்புலன்னு சொல்லுவாங்க.
அத்து மாரில்லா நீயி இருக்கேய்யா. அது செரி ஆளாளுக்கு ஒண்ண சொல்லி ஆளாளுக்கு ஒரு தெசையில
நகத்திக்கிட்டு இருந்தா ஆபீஸ நடத்துற ஒம்மட நெலைமெ தலைய பிய்ச்சுக்கிறாப்புலத்தாம்
ஆயிடும். நாம்ம ஒத்துக்கிறேம்யா ஒம்மோட வாதத்தெ. தயவு பண்ணி இனுமே எதாச்சிம் நாம்ம
கேட்டேம்ங்றதுக்காக இம்மாம் பெரிய வெளக்கத்தையெல்லாம் சொல்லாதேய்யா. நம்ம அய்யாவெ
தாண்டுன ஆளா இருப்பே போலருக்கே. இம்மாம் பொறுமையா நுணுக்கி நுணுக்கி வெளக்கத்தெ சொல்றே.
நம்மாள பொறுமையா கேட்க முடியாதும்யா இதெ!" அப்பிடிங்கிறாரு இப்போ காதர் பாட்ஷா.
"அப்போ இனுமே எடக்கு மொடக்கால்லாம்
கேள்வி கேட்க மாட்டீருதான்னே?"ன்னு கேக்குறாம் விகடு.
"அதெல்லாம் கேப்பேம். வெளக்கத்த மட்டும்
சின்னமா சேலைய வரிச்சுச் சுருட்டிக் கட்டிக்கிறாப்புல இல்லாம கோணவத்தெ கட்டிக்கிற
மாதிரி சொல்லணும்!" அப்பிடின்னுச் சொல்லிட்டு சிரிக்கிறாரு காதர்பாட்ஷா.
"நாம்ம யாரையும் கோவணாண்டியால்லாம்
ஆக்க மாட்டேம்ங்ய்யா!"ங்றான் அதுக்கு விகடு.
"அடேயப்பா! ஒம்மயப் பத்தி வெளில விசாரிச்சா
பேசுறதுக்கு காசிய கொடுக்கணும்னு சொல்றானுவோ! நம்மளப் போட்டு இந்தப் பொள பொளக்குறீரேய்யா!
காசியப் பத்தின வெசயம்னா எம்மாம் வேணாலும் பேசுதீரோ?" அப்பிடிங்கிறாரு காதர்
பாட்ஷா.
"பாத்தியளா மறுக்கா வாரி வுடறதெ!"
அப்பிடிங்றான் விகடு. அதுக்குப் பதிலா அவரோட வெடிச்சிரிப்புத்தாம் வருது மறுபடியும்
வாரி விட மாட்டேங்ற மாதிரி.
விகடுவும் அடிப்படையில ஒரு பெரியாரிஸ்ட்டத்தாம்
இருந்தாம். அதால விகடுவுக்கும், காதர்பாட்சாவுக்கும் இடையே தோஸ்த்து நல்லாவே ஒட்டிக்கிடுச்சி.
அவுங்க ரெண்டு பேரும் பேச ஆரம்பிச்சா பேசிக்கிட்டே இருக்கிறாங்க. மார்கெட்டு பாட்டுக்கு
ஓடிட்டு இருக்கு. இவங்க பாட்டுக்கு பேசிட்டு கெடக்குறாங்க. காதர் பாட்ஷா எடக்கு மொடக்கா
கேள்வி கேட்பாருன்னாலும் அவருக்கு விகடு மேல தனியான நம்பிக்கெ இருந்துச்சி. அதே போல
விகடுவுக்கும் காதர் பாட்ஷா மேல ஒரு மதிப்பு இருந்துச்சி, அவரு அப்பிடி கேள்வி கேக்குற
ஆளுன்னாலும் மனசுல எதையும் வெச்சிக்கிறது ஆளு கெடையாதுங்றதால.
*****
No comments:
Post a Comment