15 Jan 2020

நீயே சம்பாதிச்சிட்டுப் போவ வேண்டியதுத்தானே?!


செய்யு - 328

            பணத்தோட தேவைங்றது வேற. பணத்தோட ஆசைங்றது வேற. இல்லாதவங்க தங்களோட அடிப்படையான தேவைகள நிறைவேத்திக்கிறதுக்காக பணத்த எதிர்பாத்து நிக்குறாங்களே அது பணத்தோட தேவை. அதாவது பணத்து மேல உள்ள மனுஷனுக்கான தேவை. எல்லா அடிப்படையான தேவைகளும் பணத்தால நிறைவடைஞ்ச பின்னால இன்னும் இன்னும் பணம் தேவைன்னு நினைக்குறாங்களே அது பணத்தோட ஆசை. அதாவது பணத்து மேல உள்ள மனுஷனோட ஆசை. அந்த ஆசைய ஒரு அளவுல நிக்க வுடாம பேராசையா மாத்தி அலைய வுடுறதுதாம் பங்குச் சந்தை. மித்த மித்த வேலைகள்ல இருக்குறாப்புல உழைப்போட வெகுமதியா பணம் இங்க புரளல. பணத்தோட வெகுமதியா பணம் புரளுற எடமால்ல இது இருக்குது. இங்க பணத்த சம்பாதிக்கிறதுக்கு, இங்க இந்தப் பங்குகள வாங்குங்க, இங்க வித்து வையுங்கன்னோ, இங்கு வித்து வெச்சு இங்க பங்குகள வாங்குங்கன்னோ சொன்னா போதும். அப்படிச் சொன்னது சரியா இருந்துச்சுன்னா பணமா பொரளும். சரியா யேவாரத்தப் பண்ணத் தெரிஞ்சா பங்குச் சந்தைங்றது பணங் காய்ச்சி மரந்தாம். தப்பா பண்ணிப்புட்டா பரம்பரைப் பரம்பரையா சேத்து வெச்ச அத்தனை சொத்தையும் ஒரு நிமிஷ நேரத்துல வுழுங்கி ஏப்பத்த வுட்டுப்புடும்.
            நேத்திய கூட்டத்துக்கு வந்துப் பாத்தவங்களோட மனநெலையும் சரித்தாம், நேத்திக்கு கூட்டத்துக்கு வர முடியாம, மறுநாளு இன்னிக்கு வந்துப் பாக்குற பல பேரோட மனநெலையும் சரித்தாம் பங்குச் சந்தையிலேந்து பணமா சம்பாதிக்கிறதப் பத்தித்தாம் இருக்குது. இங்க இது ஒரு பழக்கம் என்னான்னா... ஒரு தேவையோ, விஷேசமோ, சம்பவமோ அன்னிய நாளுக்க வர முடியலன்னா மறுநாளு வந்து கட்டாயம பாத்துப்புடுவாங்க. அப்படி வந்த அவுங்கள்ல பெரும்பாலனவங்க பத்து ரூவாயா பணம் வந்தா என்னா? லட்ச ரூவாயா பணம் வந்தா என்ன? பணமா வந்துகிட்டே இருக்கணுங்ற ஆசையத்தாம் சொன்னாங்க. விகடுகிட்ட இஷ்டப்படி விக்கிறதயும், வாங்கிறதயும் பத்தி அவுங்களுக்கு ஒண்ணும் ஆட்சேபனை இல்லைன்னும், பணமா கொட்டிக்கிட்டு இருந்தா போதும்னும் சொன்னாங்க அவுங்க. பொதுவான மனுஷப் புத்தி அது. ஒரு சில பேருத்தாம் அதுலேந்து மாறுபட்டு ஆணி வேர்ர அசைக்குறாப்புல சில கேள்விகளயும் கேட்டாங்க.
            அதுல ஒருத்தரு காதர் பாட்ஷா. அவரு முற்போக்கான ஆளு. கடவுள் இல்லேன்னு சொல்ற பெரியாரு கட்சியோட ஆளு அவரு. ஆனா எல்லாரோடயும் நல்ல வெதமா பழகுவாரு. அதுக்காக தன்னோட கொள்கைய விட்டுக் கொடுத்துட மாட்டாரு. பெரியாரோட சிந்தனைகள படிச்சதுக்குப் பெறவு மாஸ்க்குக்குப் போறதில்லங்றதெ பெருமையா சொல்லிக்கிற ஆளு. அப்பிடி அவரு இருந்ததால அவங்களோட இசுலாமிய சமூக அமைப்புல இருக்குற ஜமாத்லேந்து நெறைய நெருக்கடி வந்ததாவும், அதெ இன்னிய வரைக்கும் பொருட்படுத்துறது இல்லேங்றதையும் சிரிச்சிக்கிட்டே சொல்வாரு. சாதி, மதம், கடவுள்னு எதுவும் கெடையாதுங்றத அடிச்சிச் சொல்ற ஆளு. அவருக்கு மத்தவங்களுக்கு உதவுற குணம் ரொம்ப அதிகம். உதவணும்னு நெனைச்சிட்டார்ன்னா கடவுள கும்புடுறவங்க, கும்புடாதவங்கன்னுல்லாம் பாக்க மாட்டாரு. மனுஷநேயம்தாம்யா முக்கியம்னு சொல்லி உதவிப்புட்டு, "கடவுளா? மனுஷனா?ன்னு கேட்டாக்க மனுஷன்தாம்யா முக்கியம், அந்த மனுஷம்தாம்யா கடவுளையும் படைச்சவேம், கடவுளையே படைச்ச மனுஷம்தாம்யா உலகத்துலயே உசந்தவம்"ங்றதெயும் நக்கலா சொல்லிட்டுப் போயிகிட்டே இருப்பாரு. அதாலயே ஒரு கூட்டம் அவர்ர சுத்தி எப்பயும் இருக்கும்.  அதெ பாத்துப்புட்டு ஒரு கட்டத்துல ஜமாத்லயும் இந்த ஆளோட போக்க மாத்தவும் முடியாது, திருத்தவும் முடியாதுன்னு வெலக்கி வெச்சு அத்தோட விட்டுப்புட்டாங்க.
            காதர் பாட்சா கூத்தாநல்லூரு சின்ன பள்ளிவாசல் தெரு முக்குல சாகிப் தாளகங்ற பேர்ல பேனா, நோட்டு, புத்தகம், தினசரி பேப்பரு, வார மாத இதழ்னு விக்குற கடையோட ஜெராக்ஸ் எடுக்குற கடையையும், மிட்டாய், சாக்குலேட்டு, பிஸ்கட்டு விக்கற கடையையும் கலந்து கட்டி ஒரே கடையா வெச்சிருக்காரு. ஒரு சாமாஞ் செட்ட கடையில வாங்குனா அப்படியே ரேட்டைப் போட்டு வாங்காம அதுல அஞ்சோ பத்தோ கொறைச்சோத்தாம் வாங்குவாரு. அஞ்சு ரூவா பேனாவ நாலு ரூபாய்க்கும், பத்து ரூவா பேனாவ ஒம்போது ரூவாய்க்கும் கொடுப்பாரு. பள்ளியோடத்துப் புள்ளைகள்னா அதுங்க நோட்டுப் புத்தகம் வாங்குறப்போ ஒரு சாக்குலேட்டோ, மிட்டாயோ சேத்துக் கொடுப்பாரு. அதால அவரு கடையில எந்நேரமும் கூட்டத்துக்குக் கொறைவு இருக்காது.
            காதர் பாட்சா ஆளு நல்ல வாட்ட சாட்டமா இருப்பாரு. மேலே கருஞ்சட்டையும், கீழே வெள்ளை கைலியுமா இருப்பாரு. நாட்டுல சாதி மத பேதம்னு எதுவும் இருக்கக் கூடாதுங்றதெ தன்னோட வாழ்க்கையில கடைபிடிக்கிறவரு. அவரோட வூட்டுக்காரவங்களோட பேரு ஜெனிட்டா மேரி. ஆம்மா இவரு இசுலாமியரா இருந்தாலும், அவரு காலேஜ்ல படிச்ச காலத்துல அவரோட கூட படிச்ச அவருக்குப் பிடிச்சுப் போன கிறித்துவ சமூகத்தைச் சேர்ந்த பொண்ணத்தாம் கலியாணத்தெ பண்ணிக்கிட்டாரு.
            அவரு அப்படி பண்ணிட்டதால இங்க இவரோட சமூகத்திலயும், அங்க அவரோட வூட்டுக்காரியோட சமூகத்திலயும் பயங்கர எதிர்ப்பா போயிடுச்சுங்றதெ ரொம்ப வேடிக்கையா சொல்வாரு. "நாம்ம ன்னா குரங்கையோ, டைனோசரையோவா மேரேஜ் பண்ணிக்கிட்டேம்? மனுஷப் பொண்ணைத்தாம்யா பண்ணிக்கிட்டேம். அதெ என்னமோ கலப்புத் திருமணம் அது இதுன்னு சொல்லிப்புட்டானுவோ? மனுஷ ஆணும், மனுஷப் பொண்ணும் பண்றது எப்பிடியா கலப்புத் திருமணம் ஆவும்? மனுஷனும் மிருகமும் பண்ணிகிட்டாத்தாம்யா அது கலப்புத் திருமணம். செல பேரு கழுதைக்குத் தாலி கட்டுவாம்னு கேள்விப்பட்டு இருக்கீயேளா? அதாம்யா நெசமான கலப்புத் திருமணம்!" அப்பிடிம்பாரு ஒரு வெடிச் சிரிப்ப போட்டுக்கிட்டே.

            கலியாணத்துக்குப் பெறவு எதெப் பத்தியும் கவலைப்படாம ரொம்ப காலத்துக்கு அவரும் வூட்டுக்காரியுமா திராவிடர் கழகத்துல கட்சிப் பணி செஞ்சுகிட்டு இருந்தவங்க இப்போ ஒரு பத்து வருஷத்துக்கு மின்னாடித்தாம் சின்ன பள்ளிவாசல் தெருவுல ஒரு கடையப் போட்டு நெலையா தங்கி இருக்காங்க. அதுக்கு மின்னாடில்லாம் ஊரு ஊராப் போயி பெரியார்ர பத்தியும், அவரோட கொள்கைளப் பத்தியும் பிரசங்கம் பண்றதுதாம் அவங்களோட வேலையா இருந்துச்சு. புள்ளைங்க பொறந்த பிற்பாடு அவங்கள ஓரிடத்துல வெச்சுப் படிக்க வைக்கணுங்றதுக்காக இப்பிடித் தங்கிட்டதா சொல்வாரு. இப்பவும் திராவிடம் கழகத்துல கூட்டம், மாநாடுன்னா கடையப் போட்டுட்டு அவரு பாட்டுக்குக் கெளம்பிப் போயிடுவாரு. அப்போ கடைய யாரு பாத்துக்கிறதுனனு கேட்டாக்க அவரோட வூட்டுக்காரங்க மேரியம்மாத்தாம் பாத்துப்பாங்க. அதுக்கும் ஒரு வெளக்கத்த சொல்வாரு அவரு, "கடைன்னா அதெ ஆம்பளத்தாம் பாத்துக்கிடணுமா? அவுங்க ஒரு நாளு பாத்துக்கிடட்டும். நாம்ம ஒரு நாளு வூட்டுல இருந்து சோறாக்கிப் போடுறேம். நாம்ம ஒரு நாளு பாத்துக்கிடறேம். அவுங்க ஒரு நாளு சோறாக்கிப் போடுறேம்!" அப்பிடிம்பாரு. அந்தக் கதிக்கு ரெண்டு பேருமாத்தாம் கடையில இருப்பாங்கன்னாலும் மேரியம்மாத்தாம் கடையில இருப்பாங்க. நம்ம ஆளுத்தாம் உதவின்னா காலுல சக்கரத்த கட்டிக்கிட்டு கெளம்புற ஆளாச்சே.
            அவங்களுக்கு ரெண்டு புள்ளைங்க. ஒண்ணு ஆம்பளைப் புள்ளை. இன்னொண்ணு பொம்பளைப் புள்ளை. ஆம்பளைப் புள்ளைக்கு லாரன்ஸ் சாகிப்புன்னும், பொம்பளைப் புள்ளைக்கு ஜெனிபர் பாத்திமான்னு பேர்ர கூட கலந்து கட்டித்தாம் வெச்சிருக்காரு. புள்ளைங்கள்ல ஒண்ணு பத்தாப்பும், இன்னொன்னு எட்டாப்பும் படிக்குது. அதுங்க ரெண்டும் ‍பேசுற பேச்ச கேட்டீங்கன்னா சத்தியமா ஒலகத்துல சாமியே கெடையாதுன்னு தலையில அடிச்சி சத்தியம் பண்ணிட்டு ஓடிடுவீங்க. அப்படி ஒரு வளர்ப்பா வளத்து வெச்சிருக்காங்க ரெண்டு பேருமா சேர்ந்து.
            இந்த காதர்பாட்சாவோட விகடுவுக்கு எப்பிடி தொடர்பு வந்துச்சுன்னா, பங்குகள வாங்கி விக்குற அக்ரிமெண்ட யேவாரம் நடக்குற ஒவ்வொரு நாளும் பிரிண்ட் எடுத்து யாருக்குப் பங்க வாங்கி விக்குறோமோ அவுங்ககிட்ட போன போட்டு வரச் சொல்லி கையெழுத்து வாங்கிப்புடணும். அதாவது யேவாரம் பண்றவங்களோட அனுமதியில்லாம யேவாரம் நடக்கலேங்றதெ பங்குச் சந்தைக அமைப்பு உறுதிப் பண்றதுக்காக அப்படி ஒரு நடைமுறைய வெச்சிருக்காங்க. பின்னாடி ஆபீஸ் ஆடிட் நடக்குறப்பயோ, திடீர் விசிட் நடக்குறப்பயோ அதையெல்லாம் பாப்பாங்க. அதால யேவாரம் பண்ற பங்குகளுக்கான அக்ரிமெண்ட ஒவ்வொரு புரோக்கிங் ஆபீசும் ஒவ்வொரு மாதிரியா பிரிண்டு எடுத்து யேவாரம் பண்றவங்களோட கையெழுத்த வாங்கி வெச்சுக்கும். இங்க தொண்டாமுத்தூர் கேப்பிட்டல்ல அதெ ஏ4 சீட்டுலத்தாம் பிரிண்ட் எடுக்குறது வழக்கம்.
            அந்த ஏ4 சீட்ட வாங்குறதுக்காக அப்துல் ரகுமான் ரோட்டுலேந்து ரண்டு தெரு தள்ளியிருக்கிற சாகிக் தாளகத்துக்குத்தாம் போவாம் விகடு. அப்பிடி போறப்ப பழக்கமானவர்தாம் காதர் பாட்சா. காதர் பாட்சாவுக்கு ஒரு பழக்கம் என்னான்னா கடைக்கு யாராச்சும் வாடிக்கையா வந்துகிட்டும் போய்கிட்டும் இருந்தா அவங்களோட நதி மூலம், ரிஷி மூலம் எல்லாத்தையும் விசாரிச்சித் தெரிஞ்சிக்கிடுவாரு. அப்பிடி விகடுவப் பத்தி மத்தவங்ககிட்டயும், விகடுகிட்டயும் விசாரிச்சுத் தெரிஞ்சிக்கிட்டவரு பங்குச் சந்தையையும் பத்தித் தெரிஞ்சிகிட்டாரு. தெரிஞ்சிக்கிட்டவரு, "ஏம்யா இப்பிடி ஒரு சூதாட்டத்தெ பண்ணிக்கிட்டு நாட்டைக் கெடுக்குதீரு?"ன்ன நேரடியாவே கேட்டுப்புட்டாரு. விகடு ஒரு நிமிஷம் நெல தடுமாறி விக்கிச்சுப் போயிட்டாம். இப்பிடியா முகத்துல அறையுறாப்புல கேள்விய கேக்குறதுன்ன அதிர்ந்துப் போயிட்டாம்.
            இருந்தாலும் ஒரு வழியா சமாளிச்சிகிட்டு, "தங்கத்துல பண்ற முதலீட வுட இதுல பண்ற முதலீடு நாட்டோட பொருளாதாரத்த உயத்தும்ங்கய்யா!"ன்னு பொத்தாம் பொதுவா சொல்ற வெளக்கத்தைச் சொல்லித் தப்பிச்சி ஓடிடணும்னு நெனைச்சவனெ நிப்பாட்டி, "சரிதாம்யா! அய்யாவும் இதெத்தாம்யா சொல்வாரு. தங்கத்துல மொதலீடு பண்ணி அதுக்காக சம்பாதிச்சி, அது தப்புதாம்யா. ஏம்யா நாமளும் அதுல மொதலீடு பண்ணலாம்யா?"ன்னு ஆரம்பிச்சிட்டாரு காதர்பாட்சா. பங்குச் சந்தைக்கு யேவாரம் பண்றதுக்கு ஒரு வாடிக்கையாளரு கெடைக்குறார்னா சும்மாவா? விகடு வளைச்சுப் போட்டுட்டாம். காதர் பாட்சா அப்பைக்கப்போ வருவாரு. பணத்தெ செக் போட்டுக் கொடுத்துட்டு, "இந்தாரும்யா! நீயா பாத்து எதாச்சிம் வாங்கிப் போட்டுக்க! லாவம் வந்தா மட்டும் போனைப் போட்டுச் சொல்லு!"ன்னு பெரியார்ர பத்தி ஒரு பத்து நிமிஷத்துக்குப் பேசிட்டு அவரு பாட்டுக்குப் போயிட்டே இருப்பாரு.
             அவருதாம் இப்போ அந்தக் ‍வெவரமான கேள்விய கேட்டாரு, "இப்பிடி பணத்தெ சம்பாதிக்கிற வித்தைய தெரிஞ்சு வெச்சிக்கிட்டு நீஞ்ஞ ஏம் எங்களுக்குச் சம்பாதிச்சிட்டுக் கொடுத்துட்டு கெடக்குறீங்க? நீஞ்ஞளே சம்பாதிச்சிட்டுப் போவ வேண்டியதுதானே?"ன்னும் கேட்டாரு. சரியான கேள்வி அதுதாம்.
            பங்குச் சந்தைக்குப் புரோக்கிங் ஆபீஸப் போடுறவங்க அந்தத் தப்பை மட்டும் பண்ண மாட்டாங்க. அவுங்களுக்குத் தெரியும் இதுல லாபமும், நஷ்டமும் நிலையானது கெடையாதுன்னு. அவுங்கப் பங்குச் சந்தையில பெரும்பாலும் வித்து வாங்குற மாதிரியான சோலிகளப் பண்ண மாட்டாங்க. ஒரு முதலீடா பங்குகள வாங்கிப் போடுவாங்க. அதுவும் மிதமிஞ்சிக் கெடக்கற காசுலத்தாம் அதெ பண்ணுவாங்க. சுமாரா மிஞ்சுற காசுக்கு இன்னொரு புரோக்கிங் ஆபீஸப் போடத்தாம் நெனைப்பாங்களே தவுர அதுக்கு சந்தையில முதலீடு பண்ணணும்னு நெனைக்க மாட்டாங்க. அப்படி மித மிஞ்சுன காசுல மொதலீடு பண்ற பங்குலயும் நல்ல வெலை வர்றப்பத்தாம் வித்துட்டு வெளியில வருவாங்க. அடிக்கடி பங்குகள வாங்கி விக்குறதெல்லாம் வாடிக்கை யேவாரம் பண்றவங்களுக்குத்தாங்றதுல அவுங்க தெளிவா இருப்பாங்க. அடிக்கடி வாங்கி விக்குறப்ப அதுல என்ன வேணாலும் நடக்கலாம். முதலீடு பண்றதுல அந்த மாதிரியான பிரச்சனைகள் வராது. கொஞ்சம் கொஞ்சமா முதலீடு பண்ணிட்டு வர்றப்போ அது பிற்காலத்துல கொழுத்த லாபத்துல வந்துத்தாம் நிக்கும். அந்த நெலைப்பாட்டோட புரோக்கிங் ஆபீஸூ போடுறவங்கத்தாம் இதுல நெலைச்சி நிக்க முடியும். அப்பிடியில்லாம புரோக்கிங் ஆபீஸைப் போட்டு அதுல தானும் வாடிக்கையாளரா யேவாரம் பண்றவங்க இதெ வுட்டுக் காணாமப் போயிடுவாங்கங்றதுதாம் புரோக்கிங் ஆபீஸூ போட்டவங்களோட வரலாறுல இருக்குற சங்கதி.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...