செய்யு - 327
எந்த ரெண்டு மனுஷருக்கும் கருத்து ஒண்ணு
மாதிரி இருக்காது. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். எல்லா செடியும்
ஒரு மாதிரியாவா பூக்குது? பூக்குற ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ரகம்ங்ற மாதிரித்தாம் மனுஷரோட
மனசுல தோணுற கருத்துகளும். ஒரு செடிகிட்டப் போயி ஏம் இப்பிடிப் பூத்தே? வேற மாதிரி
பூத்தா என்னான்னா கேக்க முடியும்? அந்தச் செடி அப்பிடித்தாம் பூக்குங்ற மாதிரித்தாம்
மனசுல எழும்புற கருத்துகளும். ஆனா பூக்குற பூவ வேற மாதிரி மாத்த முடியுமோ இல்லையோ,
மனுஷங்களோட மனசுல எழும்புற கருத்தெ வேற மாதிரி மாத்திட முடியும். அது பேசுறவங்களோட
பேச்சு முறையில இருக்கு. அணுக்கமாவும், புரிஞ்சிக்கிற மாதிரியும் பேசுறப்போ அதெ கேக்குறவங்க,
தம்மோட கருத்து வேற வெதமா இருந்தாலும் அதெ விட்டுப்புட்டு பேசுறவங்களோட கருத்துக்கு
ஒத்து வந்துப்புடுவாங்க. அதுலயும் ஒரு விசயத்துல ஆதாயமும், லாவமும் இருக்கும்னு தெரிஞ்சா
அந்தக் கருத்துக்கு எல்லாரும் ஒத்து வந்துடுவாங்க.
தொண்டாமுத்தூரு கேப்பிட்டலோடு கூத்தாநல்லூரு
பிராஞ்சு பண்ணிக் கொடுக்குற லாவத்துல யாருக்கும் எந்தக் கருத்து மாறுபாடும் இருக்க
முடியாதுன்னுத்தாம் விகடு அவனோட பேச்சை வந்திருந்தவங்க ஆர்வத்தோட கவனிச்சதெ வெச்சி
ஒரு வெதமா கணிச்சாம். அந்த லாவத்தெ அவுங்க எப்பிடி எதிர்பார்க்குறாங்க? இந்த மொறை
அவுங்களுக்குப் பிடிச்சிருக்கா? இல்லையா? நம்மள வெச்சி ஆதாயம் பண்றாம்னு தன்னெ பத்தி
நெனைச்சிடுவாங்களோ?ங்ற ஒரு விசயத்த மட்டும்தாம் அவனால இதுல கணிக்க முடியல. இந்தச்
சந்தையில கெடந்து கெடந்து எத்தா இருந்தாலும் அதெ கணிக்கிறது அவனுக்கு ஒரு பழக்கமா போயிடுச்சு.
அவ்வேன் பேசி முடிச்சி மாலிக் அய்யாவோட மொகத்தைத்தாம் பாத்தாம். அவனுக்கு அவரோட
கருத்து இதுல ரொம்ப முக்கியம். ஏன்னா இந்த ஆபீஸோடு கட்டுமானமே அவருதாம். அவரு போட்ட
அஸ்திவாரம்தாம் இந்த ஆபீஸூ. மாலிக் அய்யா ஒரு கனைப்புக் கனைச்சிட்டு அழுத்தமாவே பேச
ஆரம்பிச்சாரு.
"யேவாரம் பண்றதல வெளிப்படைத் தன்மை
வேணுங்றதால வெகடு இப்பிடிச் சொல்றாப்புல. இதுல தப்பு ஒண்ணும் இருக்குறாப்புல தெரியல.
ஆதாயம் இல்லாம யேவாரங்றது இல்ல. நமக்கு ஒரு ஆதாயத்தப் பண்ணிப்புட்டு அவுங்க ஒரு ஆதாயத்த
எடுத்துக்குறதுல தப்பு இல்லன்னுத்தாம் நமக்குத் தோணுது. இந்த ஷேர் மார்க்கெட்டப் பத்தி
எஞ்ஞளுக்கு அதிகெம் தெரியலங்றதெ ஒரு சாதகமா எடுத்துக்கிடாம இதெ புரிய வெச்சி ஞாயமா
செய்யணும்னு வெகடு பண்றதெ நெனைக்கிறப்ப சந்தோஷமாத்தாம்யா இருக்கு. இதுல மேக்கொண்டு
சொல்ல ஒண்ணும் இல்லன்னு நெனைக்கிறேம்.
சுருக்கமா சொல்லணும்னா இத்து வண்டி ஓட்டுற
மாதிரித்தாம்னு நெனைக்கிறேம். வண்டிய இப்பிடி இப்பிடின்னு அப்பிடி அப்பிடின்னு ஓட்டணும்னு
விதிக, முறைக இருக்குங்றதுக்காக ரோட்ட அனுசரிக்காம ஓட்ட முடியாது.விதிகப்படியும்,
முறைகப்படியும்தாம் வண்டியும் ஓட்டணுங்றதுக்காக ஆக்சிடென்ட் பண்ணிட்டு வந்து நிக்க
முடியாது. அந்த விதிகளும், முறைகளும் ஆக்சிடென்ட் பண்ணிடக் கூடாதுங்றதுக்காத்தாம்.
அதால வண்டிய ஓட்டுறவேம்தாம் சூழ்நெலைய அனுசரிச்சு அந்த நேரத்துக்கு எப்பிடி நடந்துக்கணுமோ
அப்படி நடந்துக்கிட்டு வண்டிய சாமர்த்தியமா ஓட்டி ப்ரசன்ஸ் ஆப் மைண்டுன்னு சொல்லுவாங்களே
அப்படி அதெ உபயோகிச்சி நல்ல வெதமா ஊரு கொண்டாந்து சேக்கணும். கிட்டதட்ட ஷேர் மார்கெட்டும்
அப்பிடித்தாம். இதுல அந்த பிரசன்ஸ் ஆப் மைண்ட் இல்லாம ஒண்ணும் பண்ண முடியாது.
ரொம்பச் சுலமா கொறைஞ்ச வெலையில பங்குகள
வாங்கணும், அதிகமான வெலையில பங்குகள விக்கணும்னு இதெப் பத்திச் சொல்லிடலாம். ஆனா எத்து
கொறைஞ்ச வெலை, எத்து அதிகமான வெலைன்னு யாருக்குத் தெரியும்? அத்து தெரியணும்னா இதுலயே
கெடந்து ஊறியிருக்கணும். வேற வேல சொலி இல்லாம இதுலயே முழுகிக் கெடந்திருக்கணும். அதெல்லாம்
பல சொலிகள்ல இருக்குற நமக்கு ஆவுற காரியமா? வேலெ செய்யறதெ வுட பொறுமையா இதெ உக்காந்துப்
பாக்கறதுங்றது கஷ்டமான காரியெம். பொறுமைன்னா எப்போ எதெ செய்யணுமோ அதெ மட்டும் செஞ்சிக்கிட்டு
மித்த நேரத்துல எதுவும் செய்யாம உக்காந்திருக்கணும். அத்து ரொம்ப கஷ்டம். எதயாச்சிம்
செஞ்சுப் பழக்கப்பட்ட மனசுக்கு அது லாயக்குப்பட்டு வராது. நம்மளயே எடுத்துக்கிடுங்க
சித்தெ நேரம் வூட்டுல சும்மா உக்காந்திருக்க முடியல. இந்தச் சோலிய பாப்பேமே, அந்தச்
சொலிய பாப்பேமேன்னு எதாச்சிம் செஞ்சிட்டுத்தாம் கெடக்குறேம். ஷேர் மார்கெட்டுல அப்பிடி
ச்சும்மா உக்கார முடியாம எதாச்சிம் வாங்கிப் போடுவோமே, வித்துப் போடுவோமேன்னு நெனச்சிச்
செஞ்சிட முடியாது. ஆனா மனசு அப்பிடித்தாம் போவும். இம்மாம் நேரம் உக்காந்து கவனிச்சிப்புட்டேம்.
எதாச்சிம் வாங்கி வித்து எதாச்சிம் பண்ணுவோம்னுத்தாம் தோணும். அதுக்கான மனக்கட்டுபாடுல்லாம்
இருந்தாத்தாம் இஞ்ஞ நிக்க முடியும்.
வெகடு இந்த ஆபீஸப் போடறப்பவே ஒரு வெசயத்தெ
தெளிவா சொல்லிப்புட்டாப்புல, ஆபீஸப் போட்டு டிரேடர்ஸ்ஸ உற்பத்திப் பண்ணிடக் கூடாதுன்னு.
எதெப் பண்ணாலும் லாவத்தோட பண்ணணும். இல்லன்னா பண்ணவே கூடாதுன்னு. அதெல்லாம் இதுல எம்மாம்
கஷ்டம்னு நமக்குத் தெரியும். அதுக்குல்லாம் ரொம்ப பொறுமையும், மெனக்கெடும் வேணும்.
அதெல்லாம் இஞ்ஞ இருக்குற நம்ம அசாமிங்களுக்குக் கெடையாது. அத்தோட ரொம்ப ஆசைப்படாம
பங்குகள கவனிக்கெணும், வாங்கெணும். அதெல்லாம் எல்லாத்துக்கும் வாய்க்காதுங்றேம்.
நாஞ்ஞ அக்கெளண்ட வேறன்னோ, ஆபீஸ்ஸ வேறன்னோ
நெனைக்கல. ரண்டும் ஒண்ணுத்தாம் எஞ்ஞளுக்கு. அதால ஆபீஸூ நடத்துறதுக்குச் சில விசயங்களப்
பண்ணியாவணும்னா அதெ பண்ணிக்க வெகடுவுக்கு முழு அதிகாரத்தையும் சொதந்திரத்தையும் கொடுக்கலாம்ங்றது
நம்ம முடிவு. கூட்டத்துல இருக்குற ஒங்களோட கருத்துகளெயும் சொல்லிப்புடுங்க! அப்பத்தாம்
இந்தப் பையேம் நம்புவாம் ஆமா!" அப்பிடின்னு பேசி முடிச்சாரு மாலிக்.
கூட்டத்திலேந்து பல பேருக்குப் பேசணுங்ற
எண்ணம் இப்போ வந்துப் போச்சு. ஆளாளுக்கு முந்தி அடிச்சிக் கருத்துகள சொல்ல ஆரம்பிச்சாங்க.
அவுங்க சொன்னதையெல்லாம் எழுத ஆரம்பிச்சா அது பல அத்தியாயங்களுக்குக் கெளப்பிட்டுப்
போவும். அதுல ரெண்டு பேரு சொன்ன கருத்து முக்கியமா இருந்துச்சு. ஒருத்தரு அக்பர்
அலி. இன்னொருத்தரு முகையதீன் பாய். அக்பர் அலிங்றவரு கூத்தாநல்லூரு ரேடியோ பார்க்
பக்கத்துல சின்னதா மளிகை கடை வெச்சிருக்கிறவரு. காலையில ஆறு மணிக்கெல்லாம் கடையத் தொறந்தார்ன்னா
ராத்திரி பத்து மணிக்குத்தாம் கடைய மூடுவாரு. இப்போ கூட்டம்னு சொன்னதும் வேற வழியில்லாமத்தாம்
கடைய மூட முடியாம அவரோட பெரியண்ணன் மவனை உக்கார வெச்சிட்டு ஓடியாந்திருக்காரு. எந்நேரத்துக்கும்
கடையில நின்னத்தாம் அவரு கடைய கட்டுறப்போ எரநூறோ, முந்நூறோ அவரு கண்ணால பாக்க முடியும்.
அவரு சொன்னாரு, "நாமெல்லாம் வருஷத்துக்கு
அய்யாயிரம் பத்தாயிரம்தாம் கட்டி அக்கெளண்ட்ட பண்ண முடியுது. அதுக்கு மூணு மாசத்துக்கு
ஒரு தபா ஆயிரம் ஐநூறுன்னு வர்றதே போதும். அப்பிடி வர்றப்போ அது ஒரு செலவுக்கு உபயோகமாப்
போவுது. பணத்தெ ஒஞ்ஞகிட்ட நெறைய அக்கெளண்ட்ட பண்ணவங்க வேணா ரொம்ப காலத்துக்குக் காத்துக்
கெடக்கலாம். அவுங்ககிட்ட பணம் கெடக்கு. எடுத்துச் செலவு பண்ணிக்கலாம். கடையெ நடத்துற
நமக்கு ரோட்டேஷன் முக்கியம்ல. நாம்ம அம்மாம் பணத்தெ லாக் பண்ணிட்டு நிக்க முடியாதுங்றேம்.
நமக்கெல்லாம் அய்யாயிரம் பத்தாயிரங்றது பெரிய காசி. அதெ இஞ்ஞப் போட்டுக்கிட்டு அதுலேந்து
ரண்டு வருஷம் கழிச்சி, மூணு வருஷம் கழிச்சி பணம் வரும்னா அதெயெல்லாம் நம்மாள தாங்க
முடியாது. பண வரத்து இல்லன்னு வெச்சிக்கோங்க அக்கெளண்ட் பண்ணி விட்ட பணத்தெ கொடுங்கன்னு
நாமளே கேட்டாலும் கேட்டதுதாம். அதால இப்பிடி லாவம் கெடைக்கிறப்போ அத்து கொஞ்சமா இருந்தாலும்
அதெ வித்து அக்கெளண்ட் பண்ணி விடறதுதாம் நம்மள மாதிரி ஆளுங்களுக்குச் செரின்னுத் தோணும்.
நீஞ்ஞ பண்றது அதுவும் இப்ப பண்றதுதாம் செரி. வூட்டுலயும் கேட்டாக்காங்ன்னு வெச்சிக்கோங்களேம்
இந்தப் பாரு அய்யாயிரத்தப் போட்டேம் அதுக்கு ஆயிரத்த அக்கெளண்ட் பண்ணி விட்டுருக்காங்கன்னு
சொல்லிப்புடலாம்ல. யேவாரத்துல கடையில போட்ட காசி சம்பாதிக்கிற மேரித்தாம் அத்துவும்
சம்பாதிக்குதுன்னு சொல்லிப்புடலாம் பாத்துக்குங்க. வெல கொறையுதுன்னு ஒங்களுக்கு எப்போ
தோணுதோ அப்போ வாங்குங்க. அதுக்குல்லாம் போனைப் போட்டு கேட்டுகிட்டு நேரத்த தொம்சம்
பண்ணிட்டுக் கெடக்க வாணாம். வெல எப்போ ஏறுதோ வித்துப்புட்டு லாவத்த அக்கெளண்ட் பண்ணி
வுட்டுப்புட்டுப் போஞ்ஞ. அப்ப மட்டும் ஒரு போனைப் போட்டு பணத்த அக்கெளண்ட் பண்ணி
விட்டுருக்கேம்னு சொல்லுங்க போதும்." இது அக்பர் அலியோட கருத்தன்னா முகையதீன்
பாய் வேற மாதிரி சொன்னாரு.
கூத்தாநல்லூரு மஸ்தான் சாகிபு தெருவுல
பங்களா மாதிரி வூட்டைக் கட்டிட்டு இருக்குறவரு முகையதீன் பாய். அவரு ஒரு வலுத்த கையி.
ரியல் எஸ்டேட்டு, காம்ப்ளக்ஸ் கட்டி கடைக்கு விடறது, சும்மா கெடக்குற வூடுகள வாங்கிப்
போடுறது?தங்கம்னு அவரோட சொத்துக் கணக்கு ரொம்ப பெரிசு. அவரோட கருத்து என்னான்னா,
"பணத்தெ சும்மா போடக் கூடாதுன்னு சொல்லுவாங்க புள்ளே! அதுக்கு இருவத்து நாலு
மணி நேரமும் ஒழைக்குற சக்தியும் கொணமும் இருக்குடே புள்ளே! நாம்ம ராத்திரியாக்க ஆனா
தூங்கிப் போடலாம். பணம் தூங்காது மவனே! அத்து பணத்துக்கு மேல பணத்தெ சம்பாதிச்சிக்கிட்டே
இருக்கும். இந்த புவியில எயங்கிக்கிட்டே இருக்குற ஒண்ணு என்னான்ன நெனைக்கிறே அத்து
பணந்தாம். எல்லா பணத்தையெும் ஒண்ணுலயே போட்டுக் கூடாது மவனே! பல வெதமா பிரிச்சிப்
போடணும்டா புள்ளே! அதாம் இத்தப் பத்தி மாலிக் சொன்னதுமே நாம்ம கொண்டாந்துப் போட்டுட்டேம்.
நமக்கு ஒண்ணும் பெரச்சனையில்ல. நீயி அப்பைக்கப்போ வாங்கி வித்தாலும் செரித்தாம். வெச்சிருந்து
வித்தாலும் செரித்தாம். ஆனா போட்டிருக்க காசி இருக்கே அத்து காசியே சம்பாதிச்சிக்கிட்டுக்
கொழுத்துக்கிட்டும் பெருத்துக்கிட்டும் இருக்கும் மவனே! அத்தே மட்டும் பாத்துக்கே.
மத்தப்படி நமக்குச் சம்பாதிச்சிப் போடுறே. அதுல நீயி நாலு காசிய கூடவோ கொறைச்சியோ
பாக்குறதுல நமக்கு ஒண்ணும் அட்டியில்லையடப்பா! உள்ள போன காசி இருக்கே அத்து ஒத்து
காசியாவது லாவத்தோடத்தாம் வரணும்டா மவனே!" அப்பிடின்னாரு.
ஒவ்வொருத்தருமே பொதுவா கூட்டத்துல பேசாம
இருந்தாலும் தனிப்பட்ட முறையில தனியா வந்து தங்களோட கருத்துகளச் சொல்லிட்டுத்தாம்
போனாங்க. அவுங்க சொன்னதெ வெச்சிப் பாத்தப்போ லாவத்தைக் கொடுக்குற வரைக்கும் எந்தப்
பிரச்சனையும் எழும்பாதுன்னு தோணுச்சி விகடுவுக்கு. ஒரு சில பேருங்க வந்து ஒரே வருஷத்துலயே
போட்ட பணம் மூணு மடங்கு, நாலு மடங்கா பெருகணும்னும், அப்பிடிப் பெருகுனா அதுல பாதி
பணத்தெ எடுத்துக்கிட்டு மீதிப் பணத்தெ கொடுத்தாலே போதும்னும் ரொம்ப பேராசையோடும்
சொல்லிட்டுத்தாம் போனாங்க. அவுங்ககிட்டயேல்லாம் அக்கெளண்ட் பண்ணி வுடுற பணத்துல அப்படியெல்லாம்
எடுத்துக்க முடியாதுன்னு சொல்லிப் புரிய வெச்சான் விகடு. அதுக்கு அவுங்க பணத்தெ அக்கெளண்ட
பண்ணி விட்டதும் மொத வேலையா அக்கெளண்ட்லேந்து ஒங்களுக்குப் பேசுனபடி பங்குப் பணத்தெ
கொண்டாந்துத் தந்துப்புடுவோம்னு அப்பாவித்தனமா சொல்றதைக் கேக்குறப்போ விகடுவுக்கு
ரொம்ப கூச்சமாத்தாம் போச்சு. அவங்ககிட்டயெல்லாம் அம்மாம் லாவத்தெல்லாம் எதிர்பாக்க
முடியாது. வருஷத்துக்கு முப்பதுலேந்து நாப்பது அம்பது பெர்சென்ட்ல லாவத்தெ கண்டுபிடிச்சு
முதலீடு பண்றதே பெரிய விசயங்ற எதார்த்தத்தையும் விகடு மறுபடியும் மறுபடியும் சொன்னாம்.
எப்பவாச்சிம் அப்படி மொதலீடு பண்ண பணம் பல மடங்கா பெருகிப் போறதும் நடக்குறதும் உண்டுத்தாம்னாலும்,
எப்பப் பாத்தாலும் அப்பிடில்லாம் நடக்காதுங்றதெயும் கூடுதலா சொல்லி வெச்சான்.
ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வெதமா பேசி,
கேள்விகள கேட்டு, அவங்களோட எதிர்பார்ப்புகள சொல்லி அதையெல்லாம் விகடு கவனமா கேட்டுக்கிட்டு,
அதுக்கெல்லாம் பொறுமையா ஒரு பதிலச் சொல்லிக் கூட்டத்தை முடிச்சிக் கெளம்புறப்போ
நடுராத்திரி பன்னெண்டுக்கு மேல ஆயிப் போச்சு. யாருக்கும் ராத்திரிச் சாப்பாட்டுக்கு
பசி எடுத்த மாதிரியே தெரியல. ரொம்ப ஆர்வமா பேசுறதும், கேள்விக் கேக்குறதுமா இருந்தாங்க.
நேரம் ஆயிப் போனதால அந்த ராத்திரியில பத்து மணி வாக்குல மாலிக்தாம் வூட்டுல சொல்லி
எல்லாத்துக்கும் மறுபடியும் காப்பியும், காரச்சேவும் கொடுக்க ஏற்பாடு பண்ணாரு. அத்தோட
கூட்டத்துக்கு டிபனுக்கு ஏற்பாடு பண்ணலாம்னு சொன்னதெ விகடு வேண்டாம்னு சொன்னதுக்கு
மாலிக் இப்போ அவனெ இப்போ கடிஞ்சிக்கிட்டாரு. அப்படி கடிஞ்சிக்கிட்டதோட இந்த நேரத்துக்கு
மேல விகடு சைக்கிள மிதிச்சிக்கிட்டு என்னத்தெ போவுறதுன்னு மாலிக் தன்னோட கார்ல கொண்டாந்து
விகடுவ வூட்டுல விட்டுப்புட்டுப் போனாரு.
மறுநாளு அவ்வேன் கெளம்பி ஆபீஸூக்கு வந்து
தொறக்குறப்போ பதினோரு மணிக்கு மேல ஆயிடுச்சி. அதுக்கு மின்னாடியே நேத்திக்கு கூட்டத்துக்கு
வர முடியாம போனவங்க எல்லாம் விசாரிச்சிட்டுப் போவோம்னு பத்து பேருக்கு மேல வந்து
நின்னுகிட்டு இருந்தாங்க. அவுங்க எல்லாத்தையும் ஆபீஸூக்குள்ள கூப்புட்டு அவங்க எல்லாத்துக்கும்
மறுபடியும் ஒரு வெளக்கமும், அவங்க கேக்குற கேள்விகளுக்கு ஏத்தப்படி வெளக்கமும் கொடுக்குற
நெலை ஆயிப் போச்சு விகடுவுக்கு.
*****
No comments:
Post a Comment