செய்யு - 326
சில நேரங்கள்ல ஒரு விசயத்தை எல்லாத்துக்கிட்டேயும்
சரியா கலந்துக்க முடியாம அவசர கோலத்துல ஏதோ ஒரு நெருக்கடியில பண்ணி முடிச்சிட வேண்டியதா
இருக்கு. அதுக்காக அதெ மறைச்சி அதெயே தொடந்தாப்புல செஞ்சிக்கிட்டு இருக்குறது சரியான
ஒரு செயல்முறையா இருக்காதுல்ல. எது நடந்துச்சோ அதெப் பத்தி எடுத்துச் சொல்லி, எந்தச்
சூழ்நெலையில அப்பிடி பண்ற மாதிரி ஆச்சுங்றதெயும் விளக்கமா எடுத்துச் சொல்லிப்புடறதுதாம்
நல்லதுங்றதெ மனசுல வெச்சிக்கிட்டு விகடு பேச ஆரம்பிச்சாம். இதெ எல்லாத்துகிட்டேயும்
பேசப் போறோம், நடந்ததெ சொல்லப் போறேம்ங்ற நெனைக்குறப்பயே அவனோட மனசுல இருந்த குத்த
உணர்வு பாதி கொறைஞ்சாப்புல இருந்துச்சு.
"கூடியிருக்குற அனைவரையும் இந்த நேரத்துல
வணங்குவதுல மகிழ்ச்சியடையறேன். நாமெல்லாம் ஏதோ ஒரு நம்பிக்கையிலத்தாம் ஒண்ணு சேர்ந்திருக்கோம்.
அந்த நம்பிக்கைத்தாம் நம்ம எல்லாத்தையும் ஒண்ணு சேத்திருக்குன்னும் சொல்லலாம். அந்த
மாபெரும் நம்பிக்கையோட சொந்தக்காரரு எங்களோட பேராசிரியர் மாலிக் ஐயாதாம். அவர்ர
நம்பித்தாம் என்ன ஏதுன்னு தெரியாத ஒண்ணுல தைரியமா பெருந்தொகைய கொண்டாந்து போட்டு
மொதலீடு பண்ணியிருக்கீங்க. நிச்சயமா நம்மளோட புரோக்கிங் ஆபீஸூ மாதிரியான ஒரு ஆபீஸூதமிழ்நாட்டுலயே
இருக்க வாய்ப்பில்ல. உலக அளவுலயே இப்பிடி ஒரு புரோக்கிங் ஆபீஸூ இருக்குமான்னு கேட்டாக்கா
இருக்காதுன்னுத்தாம் சொல்ல முடியும்.
அக்கெளண்ட் பண்ண நாள்லயும் அப்பைக்கப்போ
ஒரு சில நாள்லயும்தாம் நீஞ்ஞ ஆபீஸூ பக்கம் வந்திருக்கீங்க. எங்களோட பேராசிரியர் அய்யா
கூட எப்பவாச்சுத்தும் இந்தப் பக்கம் எட்டிப் பாத்திருக்கிறாரு. இப்படி ஒரு ஆபீஸூ எங்கும்
இல்ல. புரோக்கிங் ஆபீஸ்ங்றது டிரேட் பண்றவங்க மொய்க்குற எடம். எந்நேரத்துக்கும் ஆர்டர்
போட்டுக்கிட்டே இருக்குற எடம். இதுல பணம் உள்ள வரதும், உள்ள வந்தப் பணம் பெருகி வெளியில
வரதும் மட்டுந்தாம் உங்கள்ல பல பேருக்குத் தெரியும். அநேகமாக சில பேருக்குத்தாம் இதுல
பங்குகள எப்பிடி வாங்கி விக்குறது, வித்து வாங்குறது, அதுல எப்பிடி லாபம் பாக்குறதுங்றது
தெரியும்னு நெனைக்கிறேன். இந்த விசயங்கள ஒரு புரோக்கிங் ஆபீஸூ நடத்துறோங்ற முறையில
உங்களுக்கு விளக்க வேண்டியது எங்களோட கடமெ. அந்தக் கடமெய நம்மோட ஆபீஸூ செய்யல. இனுமேலும்
செய்யப் போறது இல்ல. அதெ செய்யக் கூடாதுன்னு இல்ல. அதெ தெரிஞ்சுக்கிட்டு சந்தையில
லாபம் பண்ணவங்கள விட நட்டம் பண்ணவங்கத்தாம் அதிகமா இருக்காங்க.
பங்குச் சந்தை பல பேரு பண்ற நட்டத்தைத்தாம்
ஒண்ணா சேத்து சாமர்த்தியமா யேவாரம் பண்றவங்க கையில லாபமா அள்ளிக் கொடுக்குது. இந்தச்
சந்தையில ஒருத்தரு எல்லா நேரத்துலயும் சாமத்தியமா இருந்துட முடியாது. ஏன்னா இதுக்குன்னு
இப்பிடித்தாம் லாபம் பண்ணலாம்னு பொதுவாக எந்த விதிகளும் இல்ல. அப்படி ஏதாவது ஒரு விதிய
உருவாக்குனா அதெ அடிச்சு நொறுக்குறாப்புல சந்தையில எதாச்சும் நடக்கும். நிலையில்லாத
வாழ்க்கைன்னு சொல்வாங்க இல்ல அப்பிடி நிலையில்லாத தன்மையிலத்தாம் சந்தை எப்பவும் இயங்கிக்கிட்டு
இருக்கும். இஞ்ஞ எது எந்த நேரத்துல எப்பிடி மாறும்னு சொல்ல முடியாது.
நம்ம ஆபீஸ்ல இது வரைக்கும் தினசரி யேவாரம்
நடந்தது கெடையாது. பெரும்பாலான ஆபீஸ்கள்ல அதுதாம் சம்பாத்தியத்துக்கான அச்சாணியா இருக்கு.
நம்ம ஆபீஸ்ல அது இது வரைக்கும் கெடையாது. இனுமேலும் கெடையாதுங்றதுல நாம்ம உறுதியா இருக்கேம்.
இஞ்ஞ சந்தைங்றது எந்நேரத்துக்கும் அந்தரத்துல கயித்தக் கட்டிக்கிட்டு அதுல நடக்குறாப்புலாத்தாம்
இருக்கு. இஞ்ஞ உடம்போட ஒழைப்பு அதிகம் கெடையாதுன்னாலும் மனசோட ஒழைப்புங்றது அதிகம்.
எந்நேரத்துக்கும் பங்குகள கண்கொத்திப் பாம்பாட்டாம் கண்காணிச்சிக்கிட்டே இருக்க வேண்டிக்
கெடக்கும். இதுல நடக்குற ஒரு சின்ன கீறலா இருந்தாலும் அது இதயத்துல கீறுற கீறலப் போல.
கொஞ்சம் பெசகுனா மனுஷன அரைக்குற எந்திரத்துக்குள்ள வுழுந்துடுறாப்புல ஆயிடும்.
ஒங்கள இது நாளு வரைக்கும் எதுவும் பெரிசா
கலந்துக்காமத்தாம் பங்குகள வாங்குறேம். விக்குறேம். ஒரு போனைப் போட்டு கேக்குறதோட
செரி. இதெ சுருக்கமாச் சொல்லணும்னா ஒரு மியூட்சுவல் பண்ட்ல என்னா பண்ணுவாங்களோ அதெத்தாம்
இஞ்ஞ பண்றோம். மியூட்சுவல் பண்டுங்றதுல பணத்தெ கட்டுறது மட்டுந்தாம் நம்மளோட வேல.
சந்தையில பாத்து பக்குவமா முதலீடு பண்றதுங்றது அவங்களோட வேல. அப்படி அவங்க நம்ம சார்பா
இருந்து முதலீடு பண்ணி லாபம் பண்ணித் தர்றதுக்கு நாம்ம முதலீடு பண்ணப் பணத்துலேந்து
வருசாந்திர செலவுத் தொகையா ஒரு தொகையா எடுத்துப்பாங்க. நம்ம ஆபீஸ்ல அப்பிடி எதையும்
நாம்ம எடுத்துக்கல. ஆனா பங்கெ வாங்கி விக்குறதுக்குன்னா கமிஷன் மட்டும் இருக்கு. அதுலத்தாம்
ஆபீஸூக்கான செலவு, நமக்கான சம்பளம்னு ஓட்டிக்கிட்டு இருக்கேம்.
இப்படி ஆபீஸ ஓட்டிட்டுப் போறதுல ரெண்டு
வெதமான செரமங்க உண்டாயிப் போவுது. ஒண்ணு நம்மளோட தொண்டாமுத்தூரு கேப்பிட்டலோடு
ஹெட் ஆபீஸூ ஒவ்வொரு மாசத்துக்கும் இம்மாம் டிரேட் பண்ணி இம்மாம் கமிஷன் அவுங்களுக்கு
வருமானம் வரணும்னு ஒரு டார்கெட்ட வெச்சிருக்காங்க. ரெண்டு அவுங்க வெச்சிருக்குற அந்த
டார்கெட்டு அளவுக்குப் பண்ணாத்தாம் நமக்கும் ஆபீஸூ நடத்துற செலவு, நமக்கான சம்பளம்னு
கட்டுப்படியாகும். ஆக ஹெட் ஆபீஸூ டார்கெட்டு, நம்ம ஆபீஸூக்குக் கட்டுபடியாகுற வருமானம்னு
இதுல ரெண்டு விசயங்க இருக்கு.
பொதுவா இந்த ஆபீஸ நடத்துற நம்மளோட கொணம்
என்னான்னா, பங்கெ வாங்குவேமே தவுர சாமானியத்துல அதெ வித்துட மாட்டேம். அப்பிடி வாங்குன
பங்குகள விக்காம கெடந்தா இடைப்பட்ட நாட்கள்ல ஆபீஸூக்கான வருமானம்னு ஒண்ணும் இல்லாம
போயி ஹெட் ஆபீஸ்லேந்து வர்ற நெருக்கடிய சமயங்கள்ல சமாளிக்க முடியாமப் போறப்ப ஒங்களோட
பங்குகள இடையில வித்து பிற்பாடு வெலை கொறையுறப்ப வாங்கிக்கிறதும் இஞ்ஞ நடக்குது. அப்பத்தாம்
ஒங்களுக்கு அடிக்கடி போனப் போட்டு இந்தப் பங்கு வெல எறங்கி வர்றது வாங்கிப்போமான்னு
நாம்ம கேக்குறதும், வெல ஏறிப் போச்சி வித்துக்கிட்டு பிற்பாடு வாங்கிப்போமான்னு நாம்ம
கேட்டிருக்கேம். நீஞ்ஞளும் நமக்கென்ன தெரியும் வாங்குறதுன்னா வாங்குங்க, விக்குறதுன்னு
வித்துப்புடுங்க, பணத்தெ எம்மாம் கட்டணும்ங்றது மட்டும் சொல்லுங்கன்னு சொல்லிருப்பீங்க.
அந்த நேரத்துலத்தாம் அப்பிடி வாங்கி வித்ததுல ஒங்களுக்கு ஐநூறு ஆயிரம்னு அக்கெளண்ட்
பண்ணி விட்டுருப்பதெ பாத்திருப்பீங்க.
சமீப நாட்கள்ல இதெ கொஞ்சம் அதிகமாவே பண்ணிட்டு
இருக்கேம். பொதுவா மியூட்சுவல் பண்டுலயே இதெ ஆர்பிட்ரேஷன்னுச் சொல்லிப் பண்றாங்கத்தாம்.
ஆனா நமக்கு இதுல உடன்பாடு கெடையாது. காத்திருந்து லாவம் பாக்கணும். ஆனா சூழ்நெல அப்பிடி
இல்லாமப் போறப்ப அந்தத் தப்ப பண்ற மாதிரி ஆயிடுது. ஆபீஸ நடத்துறதுல உள்ள நெருக்கடியா
இதெ பாக்குறேம். இது நம்மளோட மனசெ ரொம்ப நாள உறுத்திக்கிட்டே இருக்குங்ற காரணத்தால
இதெ பத்தி ஒங்ககிட்ட சொல்லணும்னுத்தாம் இந்தக் கூட்டத்தெ போட்டேம்.
நம்ம ஆபீஸப் பொருத்த மட்டுல அக்கெளண்ட்
பண்ணவங்களுக்கு ஒத்த பைசா லாபம் வர்றாம அவங்ககிட்டேயிருந்து நயா பைசா கமிஷன கூட வாங்கக்
கூடாதுங்றதுல உறுதியா இருக்கேம். இருந்தாலும் இப்பிடி அடிக்கடி வாங்கி விக்குறதுங்றது
தப்போன்னு நெனைக்கிறேம். இதெ பத்தி ஒங்ககிட்ட சொல்லி ஒங்களோட கருத்தெயும் கேட்டுக்கிட்டா
நல்லா இருக்கணுங்றதுக்குத்தாம் இந்தக் கூட்டம். நீஞ்ஞ யாரும் தப்பா நெனைச்சிடக் கூடாது.
இதுல எந்த ஒளிவு மறைவும் இல்ல. வாங்கி வித்ததுக்கான அத்தனெ டாக்குமெண்டும் இஞ்ஞ இருக்கு.
இதுல லாபமோ நட்டமோ அதெ யாரும் மாத்திட முடியாது. எல்லாம் அக்கெளண்ட்டுக்கு அக்கெளண்டுக்கு
நம்பரா மாறுமே தவுர யாரும் எதையும் இடையில கைய வெச்சி எடுத்துட முடியாது.
மறுபடியும் சொல்றேம் ஒங்ககிட்டே ஒரு வார்த்தை
கேட்டுடாம இதுல எதையும் செய்யுறதில்ல. ஆனா இதுல ஒங்களுக்கு அதிகம் வெவரம் தெரியாதுங்றதால
நாம்ம சொல்றதெ கேட்டு அப்பிடியே செய்யுங்கன்னு நீஞ்ஞ சொல்றதும் புரியுது. அதெயும்
இந்த நேரத்துல வெளிப்படையா சொல்ல வேண்டிய நெலையிலத்தாம் நாம்ம இருக்கேம். இதெ ஒங்ககிட்ட
நியாயமான மொறையில ஒளிக்காம கொள்ளாம மறைக்காம கொள்ளாம சொல்லிப்புடறது நல்லதுதாம்னு
சொல்றேம். அதே நேரத்துல இது வரைக்கும் நாம்ம எடுத்த எந்த பொசிசன்லயும் எந்த எடத்துலயும்
நட்டமும் பண்ணலெ. அதெயும் இந்த நேரத்துல ஒங்ககிட்ட சொல்லிக்கிறேம். இதெப் பத்தி நீஞ்ஞத்தாம்
மேக்கொண்டு இப்பிடிப் பண்றது சரியா? தப்பாங்றதுல ஒரு அபிப்ராயம் சொல்லணும். நம்ம
பக்கத்துல நமக்கு இருக்குற நெருக்கடிய சொல்லிட்டேம். நீஞ்ஞ ஒங்க பக்கத்துல இருக்குற
ஞாயத்தையெும் சொன்னீங்கன்னா மேக்கொண்டு இதெ எப்பிடித் தவித்துக்கலாமா? இல்ல இதெ மாத்தி
வேற எப்படியும் செய்யலாமா?ங்றதெ ஒரு முடிவு பண்ணிக்கலாம்!" அப்பிடின்னு பேசி முடிச்சான்
விகடு.
மித்த மித்த விசயங்க மாதிரி கெடையாதுல்ல
இது. பண விசயம். இன்னிக்கு லாபம் வர்றதுங்றதால இதுல இன்னிக்குக் கேள்வி எழும்பாம இருக்கலாம்.
நாளைய தேதிக்கு ஒரு சின்ன நட்டம் வந்தாலும் இதுல எழும்புற கேள்வியில நெறைய சிக்கல்
உண்டாயில்ல போயிடுங்ற இன்னொரு மொகமும் வேறல்ல இருக்கு இதுக்கு. ஆனா அப்பிடி எதுவும்
நட்டம் ஆயிடாம இதுல பண்ணிடலாம்தாம். அது வேறன்னாலும் அப்பிடி நட்டமே ஆயிடாம பண்ணிட
முடியாதுங்றதுக்கு எல்லாம் இங்க எந்த உத்திரவாதமும் இல்ல.
கடவுளே இங்க வந்தாலும் வரம் கொடுத்துப்புட்டு
மாட்டிக்கிற கதைத்தாம் இங்க நடக்கும். அவரு இந்தப் பங்கு ஏறட்டும்னு வரம் கொடுப்பாருன்னு
வெச்சிப்போம். ஆனா அந்தப் பங்கைத்தாம் போட்டு சந்தையில சாவடி அடிச்சுக் கீழே வெலைய
எறக்குவாங்க. ஏன்னா அதுதாம் பங்குச் சந்தை. இதைத்தாம் பங்குச் சந்தையோட ஹை ரிஸ்க்
பேக்டர்னு நிபுணருங்க எப்பவும் சொல்லுவாங்க. இங்க சந்தையில எந்தப் பங்கு அல்ப ஆயுசுல
புட்டுக்கிட்டுப் போவும், எந்தப் பங்கு நீண்ட ஆயுசோட இருக்குங்றல்லாம் மனுஷனோட வாழ்நாள
கணிக்குறாப்புல கொஞ்சம் செரமமான காரியந்தாம். இத்து எல்லாத்தையும் வுட அப்பிடி எதுவும்
நடந்து அதெப் பத்தின சேதியக் கேள்விப்பட்டா சுப்பு வாத்தியாரு சும்மா இருக்க மாட்டாருல்ல.
ஆரம்பத்துலேந்து வேணாம் வேணாம்னு தலெ தலயா அடிச்சிக்கிட்டேன்னு அவரு வேற, வேற லெவல்ல
கொடைச்சல கொடுக்க ஆரம்பிச்சிடுவாரு. பொதுவா வாழ்க்கையில புள்ளைங்க அப்பங்காரருக்குப்
பிடிக்காத வேலையத்தாம் செய்யணும்ங்ற மாதிரியும், புள்ளைங்களுக்குப் பிடிச்சுப் போயி
விரும்பிச் செய்யுறது அப்பங்காரருக்குப் பிடிக்காம போகும்ங்ற மாதிரித்தாம் விதி அமைஞ்சிப்
போவுது இல்லீங்களா!
*****
No comments:
Post a Comment