"... சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்பார்
வள்ளுவப் பெருந்தகை. ஒன்று சுவை, இரண்டு ஒளி, மூன்று ஊறு, நான்கு ஓசை, ஐந்து நாற்றம்.
ஆக மொத்தம் ஐந்து வகையான புலன் உணர்வுகள்.
கண்,வாய்,செவி, மூக்கு, மெய் என்று சொல்லப்படும்
ஐம்புலனுக்கான நுகர்ச்சிகள் இருக்கிறதே அவை கற்றலின் வாயில்கள். புலன்களின் வழி நடக்கும்
கற்றலும் கற்பித்தலும் புரிதலை அதிகப்படுத்தும். புரிதல் இயல்பாக அங்கேதாம் அரங்கேறுகிறது.
பார்த்தல், கேட்டல், உணர்தல், தெளிதல்,
அமர்தல், படுத்தல், ஆடுதல், பாடுதல், குளித்தல், நீந்துதல், மரமேறுதல், மலையேறுதல்,
உண்டல், உறங்குதல், விழித்தல், குதித்தல், தாண்டுதல், பாலுணர்வு, வேட்டையாடுதல், விளையாடுதல்,
கழிவுகளை வெளியேற்றுதல், உடலைத் தூய்மை செய்தல், திருத்துதல், பழக்கப்படுத்துதல் என
ஒவ்வொரு நிலையிலும் கற்றல் இருக்கிறது. அதற்கான கற்பித்தலும் இருக்கிறது.
சில நேரங்களில் முயன்று தவறிக் கற்பது
பல புதுமைகளுக்கு வித்திடுவதும், கற்றலில் அதிக ஆதிக்கம் செலுத்துவதாகவும் இருக்கலாம்.
கற்றலில் ஒரு சில கற்றல் முறைகள் கூடுதல் ஆதிக்கம் செலுத்தினாலும் அனைத்துக் கற்றல்
முறைகளும் முயன்றுப் பார்க்க வேண்டியவை. ஏனென்றால் ஒவ்வொரு மனிதரும் தமக்கே உரிய வெவ்வேறு
விதமான கற்றல் முறைகளில் கற்கிறார்கள். அடுத்ததாக ஒவ்வொரு கற்றல் நிலைக்கும், வகைக்கும்
காலங்கள் உருண்டோடி புதுப்புது அனுபவங்கள் வாயிலாக செறிவைக் கூட்டுகிறது என்பது நாம்
அறிய வேண்டிய ஒன்றாகும்.
செய்கை, ஒலி, சொற்கள், உணர்ச்சி, கோபம்,
மகிழ்ச்சி இவற்றுக்கு மொழி ஒலி வடிவத்தையும், வரி வடிவத்தையும் கொடுக்கிறதே அது ஓர்
அற்புதம். அந்த அற்புதத்தின் வழியே குடும்பம், சமூகம் ஆகியன கோட்பாடுகளோடு விரிந்து
தலைமைப் பண்பு ஏற்பட்டு அது அரசு, அரசாட்சி என மாற்றம் கொள்கிறது.
இந்த மாற்றம் காலந்தோறும் மீண்டும் மீண்டும்
மீள மீள நடைபெற்று, செழுமைப்பட்டு மனித நாகரிகம் இன்று உச்சி முகட்டில் அதைப் பெருமையாக
ஏந்தி நிற்கிறது.
இந்த மாற்றங்கள் ஒரு நாளில் நடைபெறவில்லை.
காலந்தோறும் நடைபெற்றன. இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் நாளைய செழுமையான
நிலையில் காலந்தோறுமான கற்றலும் அதில் நிகழ்த்தப்பட்ட மேம்படுத்தல்களும் அடங்கியிருக்கின்றன.
அத்தகைய கற்றலுக்கு இன்று பல்வேறு தளங்கள் உருவாகியிருக்கின்றன..."
*****
No comments:
Post a Comment