12 Jan 2020

விஷேச வூடுங்க!



செய்யு - 325

            எரநூத்து அம்பது பேரு வாடிக்கை பண்ற ஆபீஸ்ல கூட்டம்னு போட்டப்போ நூத்து சொச்சம் பேருதாம் வந்திருந்தாங்க. எரநூறு பேராவது வருவாங்கன்னு எதிர்பாத்துப் போட்ட கூட்டம் அது. ஆபீஸா இருக்குற வீடே பெருசா இருந்ததால அதுக்குன்னு தனியா மண்டபத்த தேடாம அங்கேயே கூட்டத்தைப் போட்டாச்சு. இங்கே இசுலாமியரோட வூடுங்க அப்பிடித்தாம் இருக்குது. கூடம் ரொம்ப பெரிசா இருக்கும். அந்த வூட்டோட கூடத்துக்கு முன்னாடி இருக்குற ஒரு சின்ன அறைதானே ஆபீஸூ. அதால ஆபீஸூக்குப் பக்கத்துல இருக்குற அந்த கூடமே கூட்டத்தைப் போட ரொம்ப வசதியாப் போச்சுது. கூட்டம் போடறதுன்னு முடிவானதும் மாலிக் அந்தக் கூடத்தை அலங்காரம் பண்றவங்கள வெச்சி அழகு பண்ணிப்புட்டாரு. அந்த அலங்காரம் பண்ணதுக்கு அப்புறம் அதெ பாக்குறப்பவே ஒரு அம்சமா இருந்துச்சு. அந்த வூடு முழுசுமே மொசைக் போட்டு வழுவழுன்னு அது ஒரு அழகு. மொத்தத்துல கூட்டம் போடுற கூடத்துக்கு ஒரு விழாக் கோலமே வந்துப் போச்சு.
            இங்க கூத்தாநல்லூரப் பொருத்த வரைக்கும், இங்க பெரிசா இருக்குற இசுலாமியரோடு வீடுகள்ல ஒரு விஷேசம்னா அந்தக் கூடத்தயே மண்டபம் போல பயன்படுத்தி எல்லா தேவைங்களையும் செய்யலாம். வூட்டை அரண்மனை போல, மாளிகை போல, பங்களா போல பல வெதமா கட்டி வெச்சிருக்காங்க. எப்படியும் தெருவுக்கு நாலஞ்சு வீடுகளாவது அப்படித்தாம் இருக்கும். அவுங்க வூடுகளப் பாக்குறப்போ, வூடு கட்டுறதையே தங்களோட வாழ்நாள் லட்சியமா நெனைச்சு கட்டுறாங்களோ என்னவோன்னு தோணும்! ஒவ்வொரு வூடும் ஒவ்வொரு மாதிரி பிரமாண்டமா இருக்கு. சம்பாதிக்கிற அத்தனை காசையும் வூட்டுல போட்டு கட்டுனாத்தாம் அப்படி ஒரு வூட்டைக் கட்ட முடியும்.
            விஷேசம்னு வர்றப்ப தெருவை அடைச்சி பந்தலைப் போட்டுடுவாங்க. வீடு பெரிசா இருக்குறவங்க, சின்னதா இருக்குறவங்க எல்லாத்துக்கும் பெரிய வூடு கட்டியிருக்கவங்க விஷேச நாள்ல வூட்டை ஒதுக்கிக் கொடுத்திடுவாங்க. விஷேசம் பண்ணிக்கிறது, சாப்பாடு பரிமாறி பந்தி வைக்கிறது எல்லாம் அந்த வூடுகள்லத்தாம். அதுவும் நிக்காஹ்ன்னு சொல்ற கலியாணத்துல அவுங்க பண்ற பந்தி இருக்கே அது ரொம்ப விஷேசமா இருக்கும். பந்திப் பாயை விரிச்சிப் போட்டு வரிசையா உடக்கார வெச்சிடுவாங்க. எப்படியும் முந்நூத்துலேந்து ஐநூத்துப் பேருக்கு கொறைவு இருக்காது அந்தக் கூடத்துல. அத்தனை பேத்துக்கும் நாப்பது அம்பது பேரு வரிசையா நின்னுகிட்டு வரிசையா தட்டுல எலையப் போட்டு அதுல பிரியாணிய வெச்சி, மீன் வறுவல வச்சி, சிக்கன் சுக்காவ வெச்சி கை மாத்தி கை மாத்தி உக்காந்திருக்கிற ஒவ்வொருத்தருக்கும் பரிமாறுற காட்சியப் பாத்தீங்கன்னா அசந்துப் போயிடுவீங்க.
            எந்த தட்டுலயும் பிரியாணி கூடவும் இருக்காது, கொறைவாவும் இருக்காது. அதுல இருக்குற மட்டன் துண்டுலேந்து, மீன் வறுவல் துண்டு, சிக்கன் சுக்கா அளவு வரைக்கும் துல்லியமா அளந்து வெச்சது போல ஒரே சீரா இருக்கும். அந்தப் பிரியாணிக்குத் தொடுகறியா தாளிச்சாவ தயாரு பண்ணிருப்பாங்க. ஆட்டோட கொழுப்பும், கத்திரிகாயையும், உருளைக் கெழங்கையும் போட்டு செஞ்ச சாம்பாரு மாதிரி இருக்கும் அது. அதோட சுவை இருக்கே, பிரியாணிக்குத் தொட்டுக்கிட்டுச் சாப்புட சாப்புட நாலு பிளேட்டு பிரியாணி அசால்ட்டா உள்ள எறங்கும். அந்த தாளிச்சா நெரம்புன வாளிகள கையில வெச்சிக்கிட்டு தாளிச்சா போடவா போடாவான்னு பத்துப் பேராவது ஒரு வரிசைக்கு நிப்பாங்க.
            மத்தியான சாப்பாடு இப்பிடி முடிஞ்சதுன்னா சாயுங்கால நேரத்துல பரோட்டாவும், கறி குருமாவும் டிப்பன் போல போடுவாங்க பாருங்க. அது ரொம்ப ருசியா இருக்கும். அதெ சூடா சுட்டுப் போட்டு தட்டுல இருக்குற வாழையிலை அந்தச் சூட்டுல வெந்து அதுலேந்து அதெ எடுத்து பரோட்டாவ தின்ன தின்ன அது அப்படியே நெய்யில வுட்டு பொறிச்சது போல நாக்கை வுட்டு அதோட ருசி மறையாது. அந்த குருமா கறியெல்லாம் அவுங்களாலத்தாம் செய்ய முடியும். அப்படி ஒரு மணமும், ருசியும் அதுக்கு இருக்கும். ரொம்ப அற்புதமா இருக்கும்ன்னு அதெப் பத்திச் சொல்றது சாதாரண வார்த்தைத்தாம். எப்படியும் வாரத்துல ரெண்டு நாளாவது இப்பிடி எதாச்சிம் ஒரு விஷேசம் வந்து விஷேசத்துல விகடு சாப்பிட்டுக்கிட்டு இருக்கான்ங்றது சொல்றப்போ ஒங்களுக்கே ஒரு பொறாமை வந்துப்புடும்னு நெனைக்கிறேன். எல்லாம் கூத்தாநல்லூர்ல ஆபீஸூ போட்ட நேரம். ஆபீஸ்ல வாடிக்கை பண்றவங்களோட வூட்டுல எந்த விஷேசம்னாலும் இவனுக்கு ஒரு அழைப்பு வெச்சிப்புடுவாங்க. அதுக்கு இவ்வேன் போனான்னா கவனிப்பு தனி கவனிப்பா இருக்கும்.
            அப்படி அவன் சாப்புடுறதைப் பத்தி ஒரு தடவே வூட்டுல சொல்லப் போயி, அதே கேட்டுக்கிட்டு இருந்த செய்யு, "ஏம்ண்ணே! கொஞ்சம் அப்பிடியே வூட்டுக்கும் கொஞ்சம் வாங்கியாந்தியேன்னா நாங்களும் சாப்புட்டுப் பாப்போம்ல. நீயி சொல்றாப்புல அதுல அப்பிடி என்னத்தாம் ருசி இருக்குன்னு? நீயி மட்டும் போயி தின்னுப்புட்டு தின்னுப்புட்டு வந்து அதெ பத்திச் சொல்லிச் சொல்லி நாக்குல எச்சில ஊற வெச்சி வெறுப்புத்துறே?" ன்னு கேட்டுப்புட்டா. "அடடா! நாம்ம இப்பிடிச் சாப்புட்டத வூட்டுல சொல்லி அதுகளுக்கு ஆசையெ கெளப்பி விட்டுப்புட்டோமே!"ன்னு அவனுக்குக் கொஞ்சம் இப்போ யோசனையாத்தாம் போச்சு. இதெ நெனைச்சி கொஞ்ச நாளைக்கு அவ்வேன் வருத்தப்பட்டுக்கிட்டு அதுலேந்து விஷேசம்னா போயிச் சாப்பிட்டு வர்றதைச் சொல்லாம இருந்தாம்.

            அப்படி இருந்த ஒரு நாள்ல, ஒரு விஷேசத்தப்போ மாலிக்கே கேட்டாரு, "என்னம்ய்யா! விஷேசத்துக்கு வர்றே போறே! சாப்பாட்டு ருசியப் பத்தி ஒரு வார்த்தே சொல்ல மாட்டேங்றே? நல்லா இருக்கு இல்லன்னு சொன்னாக்கத்தான அடுத்த மொற கொறை இருந்தா சரி பண்ணலாம்!" அப்பிடின்னு கேட்டுப்புட்டாரு. அதுக்கு இந்த விகடு பயலும் யோசிக்காம, "அதெ ஏங்கய்யா கேட்குறீங்கே! இஞ்ஞ சாப்புடுறதப் பத்தி அத்தோட ருசியப் பத்தி ஒரு தபா வூட்டுல பேசிப் புட்டேம். அதெ கேட்டுப்புட்ட எந்த தங்காச்சி ஏம்ண்ணே நமக்கும் கொஞ்சம் எடுத்துப்புட்டு வந்துடக் கூடாதா? நாமாளும் சாப்புட்டுப் பாப்பேமே! அப்பிடின்னுபுட்டா." அப்பிடின்னு சொல்லிப்புட்டான். அதுலேந்து ஆரம்பிச்சிட்டாரு மாலிக்கு, எந்த விஷேசத்துக்குப் போனாலும் அங்க அவரு இருந்தார்ன்னா இவ்வேன் சாப்புட்டு முடிச்சதும் ஒரு பார்சல்ல இவனோட கையில கொண்டாந்து கொடுத்துடுவாரு. விஷேசம்னு மட்டுமில்ல தர்காவுல கந்தூரி நடந்தாலும் சரித்தாம் அங்க கொடுக்குற நெய்சோறுலயும் ஒரு பார்சல் பண்ணிக் கொடுத்து அனுப்பிப்புடுவாரு.
            அந்த பார்சல்ல வாங்கியாந்து வூட்டுல கொடுத்த பிற்பாடுதாம், "நீயிச் சொல்றது உண்மைத்தாம்ணே! இப்பிடி ஒரு பிரியாணிய நாம்ம சாப்புட்டதேயில்ல"ன்னு உச் கொட்டிக்கிட்டே சாப்பிடுவா செய்யு. நல்லா வயிறு பொடைக்கச் சாப்புட்டுப்புட்டு, "நம்மால நகரக் கூட முடியலயே யண்ணே! இத்தே நீயி சாப்புட்டுப்புட்டு எப்பிடிண்ணே அஞ்ஞயிருந்து உருண்டுகிட்டு வந்தே? நீயி ஆபீஸூ போட்டதுல உருப்படியா நடந்தது இது ஒண்ணுத்தாம். நல்லவேள கூத்தாநல்லூர்ல போட்டே! ஏம்ண்ணே நீயி இப்பிடில்லாம் பிரியாணி தின்னலாம்னுத்தான்னே அஞ்ஞப் போயி ஆபீஸப் போட்டே?" அப்பிடின்னு கிண்டலு வேற அடிப்பா.
            அப்துல் ரகுமான் ரோட்டுல இருக்குற எல்லா வூடும் அப்பிடித்தாம் இந்த மாதிரி விஷேசம் பண்றதுக்கு ஏத்தாப்புல பெரிசா இருக்குது. ஒரு விஷேசம்னா பிரியாணி வாசனெ அந்த வூடுகள்லேர்ந்து கெளம்பிடுது. அதுல கெழக்குக் கோட்டையாரோட வூடு ரொம்ப பெரிசு. அந்த தெருவுல யாரு வூட்டு விஷேசமா இருந்தாலும் அந்த விஷேசத்துக்குக் கெழக்குக் கோட்டையாரு வூடுதாம் மண்டபத்தைப் போல.
            சாயுங்கால நேரமா அஞ்சு மணி வாக்குல கூட்டம் ஆரம்பமானுச்சு. இந்தக் கூட்டத்தப் பத்திச் சொன்னதுமே மாலிக் தன்னோட செலவுல பரோட்டாவும், கறிகுருமாவும், பாதாம் பாலும் ஏற்பாடு பண்றத சொல்லிப்புட்டாரு. விகடுதாம் ரொம்ப கஷ்டப்பட்டு, "ஒரு சமோசாவும், டீயும் மட்டும் போதும். அரை மணி நேரத்துல கூட்டத்தை முடிச்சிப்புடுவோம். பின்னாடி ரண்டு வருஷம் நெறையுறப்போ பெரிசா பண்ணிக்கலாம். அதுக்கு கவுண்டரும், டேரக்டரும் வருவாங்க. அப்போ பாத்துக்கலாம்!"ன்னு அவருக்கிட்ட கெஞ்சிக் கூத்தாடி சம்மதிக்க வைக்க வேண்டியதா போச்சுது. அதுக்குச் சம்மதப்பட்ட மாலிக் அதெ ஸ்வீட்டு காரம் பாதாம் பால்ன்னு மாத்திப்புட்டாரு.
            அந்த நேரத்துல கூத்தாநல்லூர்ல இருந்த மெளலானா பேக்கரி சாப்பாடு வகையறாவுக்கும், நொறுக்குத் தீனி வகையறாவுக்கும் ரொம்ப பேமஸூ. ஸ்வீட் காரம் பேக்கரி வகையறாவுல ருசியா செய்யுறதுல அவுங்கள அடிச்சிக்க ஆளில்ல. இந்தச் சுத்து வட்டாரத்துல அங்க தயாராவுற ரஸ்க், பன்னுன்னு எந்தப் பொட்டிக்கடைய எடுத்துக்கிட்டாலும் அதுல மெளலானா ரஸ்க்கும், மெளலான பன்னும்தாம் இருக்கும். ஸ்வீட் காரத்துக்கு அங்க சொல்லி வுட்டாரு மாலிக். அவுங்க ஒரு கப்புல குளோப்ஜாமூன், ரெண்டு ஜிலேபி அதுக்கு காரமா காரசேவு அம்பது கிராமு அளவுக்குன்னு கொடுத்து அசத்திப்புட்டாங்க. அத்தோட பாதாம் பாலும் சேந்ததுல அதுவும் அந்தக் கூட்டத்துக்கு ரொம்ப அம்சமாத்தாம் இருந்துச்சுது.
            பொதுவா கூட்டம் முடிஞ்சித்தாம் சாப்பாட்டு வகையறாவக் கொடுக்குறது வழக்கம். மாலிக் கூட்டம் ஆரம்பிக்கிறதுக்கு மின்னாடியே ஆட்கள் வர்ற வர்ற இதையெல்லாம் கொடுக்குற மாதிரி ஆட்களப் போட்டு ஏற்பாடு பண்ணிட்டாரு. அதெ பாக்குறப்போ கூட்டம் போட்ட மாதிரியே தெரியல. ஏதோ வாடிக்கை பண்றவங்களுக்கு ஒரு டிரீட் கொடுக்கற மாதிரி அது தெரிஞ்சிச்சு. நூத்துச் சொச்சம் பேருதாம் வந்திருந்தாங்கன்னாலும் அவுங்க எல்லாத்துக்கும் இதெ கொடுத்து முடிச்சு கூட்டத்தை ஆரம்பிக்கிறப்போ ஆறரை மணிக்கு மேல ஆயிடுச்சு. அஞ்சு மணிக்கு ஆரம்பிக்கிறதா இருந்த கூட்டம் ஒன்றரை மணி நேரம் தள்ளித்தாம் ஆரம்பம் ஆயிடுச்சு.
            கூட்டத்துக்குன்னு பெரிசா முஸ்தீப்புகள ஒண்ணும் தயாரு பண்ணிக்கல. அப்பிடியான கூட்டமும் இது கெடையாது. தன்னோட மனசுல உள்ளதெ சொல்றதுக்கா விகடு கூட்ட நெனைச்ச கூட்டம்தான இது. அன்னைக்கு சப்பாரி டிரெஸ்ஸப் போட்டுக்கிட்டு அசத்தால இருந்த மாலிக்தாம் மொதல்ல பேச ஆரம்பிச்சாரு.
            "நாம்ம முதலீடு பண்றதப் பத்தி நம்ம தொண்டாமுத்தூரு கேப்பிட்டலு மேனேஜரு விகடு நம்மகிட்ட பேசணும்னு விரும்புறாப்புல. அவ்வேன் நம்மளோட ஸ்டூடண்ட்த்தாம். இந்தக் கூட்டத்தெ மின்னாடியே போட்டிருக்கணும். ஒரு வருஷம் ஆன பிற்பாடும் இப்பத்தாம் இதெ போட நேரம் வந்திருக்குன்னு சொல்லணும். பரவாயில்ல. இப்பயாச்சும் இந்தக் கூட்டம் நடக்குதுன்னு நாம்ம சந்தோஷப்படணும். இன்னும் சில மாசங்கள்ல நம்ம ஆபீஸூ ஆரம்பிச்ச ரண்டாவது வருஷம் வரப் போவுது. அன்னிக்கு இதெ வுட பிரமாண்டமா இன்னொரு கூட்டத்தெப் போட்டு இவங்க ஆபீஸோட மொதலாளி, டேரக்டரு எல்லாத்தையும் வர வைப்போம். அதெ நம்ம செலவுல நாம்ம செஞ்சிக் கொடுத்து மருவாதி பண்ண வேண்டியது நம்மோட கடமென்னு நெனைக்கிறேம். இப்போ விகடு பேசறதுக்கு மின்னாடி விகடுவப் பத்தி நம்மள்ல சில பேரு பேசுனா சிறப்பா இருக்கும்னு நெனைக்கிறேம்!" அப்பிடிங்கிறாரு.
            மாலிக் அப்பிடிச் சொன்னதும் வரிசையா நான் முன்னே, நீ முன்னேன்னு விகடுவப் புகழ்ந்து பேச ஆரம்பிச்சாங்க. அவுங்கப் பேசப் பேச இவனுக்கு உதறல் எடுக்க ஆரம்பிச்சிடுச்சு. அவ்ளோ புகழ்ச்சிக்கு நாம்ம தகுதியானவனாங்ற பயம் வேற அவனுக்கு வந்துப் போச்சு.
            அதே நேரத்துல பணத்தைச் சம்பாதிச்சுக் கொடுக்குற மனுஷன் எப்படியெல்லாம் புகழப்படுவாங்றதுக்கு அந்தக் கூட்டத்தைத்தாம் உதாரணம் சொல்லணும். அதெ ஒவ்வொண்ணாச் சொல்லி இதெ படிக்கிற ஒங்கள சோதிக்க விரும்புல. நேரடியா அவுங்கல்லாம் பேசி முடிச்சப் பின்னாடி விகடு என்னத்தெ பேசுனாங்ற விசயத்துக்கு வந்துடலாம்.
*****


No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...