எஸ்.கே.வின் வெளியேற்றத்துக்குப் பின்
தமிழய்யா, 'ஆதியில் கற்றல்' என்ற தலைப்பில் பேசத் தொடங்குகிறார்.
"கற்க கசடற... கற்றிலனாயினும் கேட்க...
இதுவன்றோ வள்ளுவர் வாய்மொழி. அதைச் சொல்வதன்றோ நம் தாய்மொழி.
கேட்டுக்கற்றல், பார்த்துக் கற்றல், செய்து
கற்றல், உணர்ந்து கற்றல், பழகிக் கற்றல், தட்டு தடுமாறிக் கற்றல், படித்துக் கற்றல்,
புரிந்து கற்றல், புரியாமல் கற்றல், போலச் செய்து கற்றல் என்று பல வழிக் கற்றல்கள்
இருக்கின்றன.
மொழி என ஒன்று உருவாகாத காலத்திலும் கற்றல்
நடந்திருக்கிறது. செய்கை வழி, புரியாத குரல் வழி ஏதோ கற்றல் நடந்திருக்க வேண்டும்.
கற்றல் என்பது மனிதருக்கு மட்டுமா சொந்தம்?
அது உலக உயிர்கள் அனைத்திற்கும் சொந்தம். கற்காத உயிர்கள் என்று உலகில் எதுவும் இல்லை.
ஆறறிவுடைய மனிதருக்கு கற்றல் என்பது அதிகமாக உணர்திறனில் அதிமேம்பாடு உடையதாக இருக்கிறது.
காய்களை, கனிகளை, கிழங்குகளைத் தின்ற மனிதர்
நீரைக் குடிக்க கற்கிறார். உண்ணும் முறை, குடிக்கும் முறை என்ற அவன் கற்றுக் கொண்டது
அநேகம். உண்ணுதலிலே தின்னுதல், நக்குதல், மெல்லுதல், விழுங்குதல், உறிஞ்சுதல், சப்புதல்
என்று எத்தனையோ முறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு உணவைுயும் உண்ணுவதற்கு ஒரு முறை.
பொதுவாக தேனை உள்ளங்கையில் இட்டு நுனி
நாக்கால் நக்கிச் சுவைக்க வேண்டும். அப்போதுதான் தேனின் சுவையை, அந்த இனிப்பை முழுமையாக
உணர முடியும். முறைப்படி உண்ணும் போது உண்ணும் பொருளின் சுவை அலாதியாகும்.
இந்த உண்ணும் முறையை மனிதர் தன்னிசையாக
கற்றிருக்க முடியாது. பூச்சிகள், மிருகங்கள், பறவைகள் என பல உயிரினங்கள் உண்ணும் முறைகளை
எல்லாம் உற்றுப் பார்த்து ஒவ்வொன்றிலிருந்தும் நிறைய கற்றிருக்கக் கூடும்.
ஒவ்வொன்றும் மனிதர்க்குக் கற்றல் சாதனங்களாக
இருக்கின்றன. எழுத்துடன் கூடிய பேச்சு மொழியை உருவாக்கும் காலம் வரை மனிதருக்குச்
செய்கை மொழியே மொழியாக இருந்திருக்கும். அதற்கு விலங்குகள், பறவைகள், பூச்சிகளின்
பலவித செய்கைகள் மனிதர்க்கு உதவியாக இருந்திருக்கும். அதற்குப் பின்புதாம் மனிதர்கள்
ஒலிக்குறிப்புகளை உருவாக்கியிருக்கக் கூடும். ஒலிக்குறிப்புகள் தோன்றி பல நூறு ஆண்டுகள்
கழித்துதாம் பொதுஒலி நிலை உண்டாயிருக்கக் கூடும்.
ஒலிக்குறிப்புகள் படிப்படியாக பரிணாம வளர்ச்சியை
எட்டி வரி வடிவத்துக்கு வந்திருக்கலாம். மண்ணில் கோடுகளாய், மரத்தின் பட்டைகளில் அடையாளக்
குறிகளாய், உருவ மாதிரிகளாய், வடிவ அமைப்புகளாய் அது பல விதங்களில் வளர்ந்திருக்கலாம்.
கற்காலம், உலோகக் காலம் என்று காலத்தோடு
காலமாக கற்றல் திறன் வளர வளர எழுத்துகளுக்கான வடிவம் உரு பெற்றிருக்கக் கூடும்.
எழுத்தின் வடிவம் என்பது கற்றலின் மாபெரும்
சாதனை. வரலாற்றைக் காலம் காலமாய் கடத்த உதவியது எழுத்துகளே. எழுத்துகளின் வழித்தாம்
இன்று உலகம் ஆளப்படுகிறது ஆணைகள் என்ற பெயரில். எழுத்துகளின் வழித்தாம் இன்று உலகம்
ஒரு புள்ளியில் சுருங்குகிறது தகவல் தொடர்பு என்ற பெயரில். உலகை இணைப்பதாகச் சொல்லப்படும்
இணையமும் கணினிமொழி எனும் எழுத்துகளைக் கொண்டே இயங்குகிறது. எழுத்து உலகை இயக்குகிறது,
உலகை ஆளுகிறது."
*****
No comments:
Post a Comment