11 Jan 2020

குத்தமுள்ள நெஞ்சுக்கு சந்தோஷம் வேற மாதிரி!



செய்யு - 324

            விதிகளுக்குக் கட்டுபடாம விளையாட முடியாது. விளையாட்டுன்னா சந்தோஷம்னாலும் அதுக்குன்னு இருக்குற விதிகளுக்குக் கட்டுப்பட்டுத்தாம் விளையாடி ஆவணும். அதுலேந்து அவுட்டுன்னா வெளியில போயித்தாம் ஆவணும். அவுட்டாகாம விளையாடிட்டே இருக்கணும்னா அதுக்குன்னு இருக்குற விதிகளுக்கு உட்பட்டு பூந்து விளையாட்டிடே இருக்கணும். யேவாரத்தின் விதிங்றது பணம் கொட்டிக்கிட்டே இருக்கணும். பணத்தைக் கொட்டாத யேவாரத்தை யாரும் செய்ய மாட்டாங்க, செய்யவும் விட மாட்டாங்க. கடைங்றது சும்மா தொறந்து வைக்கிறதுக்கு இல்ல. அதெ தொறந்து வைக்கிறதே காசு பாக்குறதுக்குத்தாம். யேவாரங்றது ஒரு வெளையாட்டுன்னா பணங்றதுதாம் அதோட வெளையாட்டு சாமான், லாபங்றதுதாம் அதோட விதி.
            பங்குச் சந்தையில எப்பவும் ஒரு பங்கு ஏறிகிட்டும் இருக்காது. எறங்கிகிட்டும் இருக்காது. ஏறுற பங்கு ஏறி ஏறி கொஞ்சம் எறங்கும். இறங்குற பங்கு எறங்கி எறங்கி கொஞ்சம் ஏறும். இது எப்படி நடக்கும்னா நல்லா போயிட்டு இருக்குற ஒரு பங்கைத்தாம் எல்லாரும் சேர்ந்து விரும்பி வாங்குவாங்க. எல்லாரும் வாங்க வாங்க அந்த பங்கோட வெலை ஏறும். ஓரளவுக்கு வெலை ஏறுனப்புறம் அந்தப் பங்கோட வெலை உண்மையான மதிப்போட அதிகமா போயிட்டதா நெனைச்சு விக்குறவங்க இருக்காங்க. அதே போல இந்தப் பங்குல வந்த லாபம் போதும், வேற ஒரு பங்குல முதலீடு பண்ணுவோம்னு நெனைச்சி விக்குறவங்களும் இருக்காங்க. அத்தோட தினசரி யேவாரம் பண்றவங்களுக்கும், குறுகுன காலத்துல முதலீடு பண்ணி லாபம் பாக்க நினைக்குறவங்களும் வந்த லாபமே போதும்னு நெனைச்சி விக்குறவங்களா இருப்பாங்க. எல்லாரும் சேர்ந்து வாங்குனதால வெலை ஏறுன பங்கு, இப்போ இவுங்க எல்லாரும் சேர்ந்து விக்குறப்போ வெலை எறங்கும். இதெ சரியா கணிக்கத் தெரிஞ்சா வாங்கி வாங்கி வித்து லாபம் பாக்கலாம். இதெ சரியா கணிக்கிறதுதாம் சந்தையில சவாலான காரியம். ஒரு பங்கோட வெலையை அடிக்கடி கவனிச்சிக்கிட்டே இருந்தா, அதோட வரைபடத்தை ஆராய்ச்சிப் பண்ணா, அந்தப் பங்கோட பத்து நாள் சராசரி வெலை, இருபது நாள் சராசரி வெலை, அம்பது நாளோட சராசரி வெலை, நூறு நாளோட சராசரி வெலைன்னு கணக்கெடுத்து யோசிச்சுப் பாத்தா ஓரளவுக்கு அதெ கணிக்கலாம். ஓரளவுக்குத்தாம் கணிக்கலாம். ரொம்ப துல்லியமால்லாம் கணிச்சிட முடியாது. அப்படிக் கணிச்சாலும் அந்தக் கணிப்புக்குக் கட்டுபட்டுல்லாம் எந்தப் பங்கும் நடந்துக்காது.
            அந்த எடத்தத்தாம் விகடு பிடிச்சான். ஏறிகிட்டு இருக்குற பங்கை எல்லாருக்குமா சேர்த்து வாங்கிப் போடுறது. கொஞ்சம் விலையேறினா அதை வித்துடறது. ஏறுன பங்கு ஏறிகிட்டே இருக்காதுல்ல. கொஞ்சம் விலை எறங்கித்தாம் மறுபடி ஏறும். அப்ப மறுபடியும் வாங்கிப் போடுறது. இந்த ஒரு பக்கத்து வேலையை மட்டும்தாம் அவன் செஞ்சான். மத்தபடி எறங்கிக்கிட்டு இருக்குற எந்த பங்கிலயும் அவன் முதலீடு பண்றதில்ல. இதுல புரோக்கிங் ஆபீஸ் நடத்துறவங்களுக்கு நல்ல லாபம் இருக்கு. அத்தோட பங்குகள வாங்கிப் போட்டு விக்குறவங்களும் நல்ல லாபம் இருக்கு. எந்தப் பங்கையும் வாங்கி அந்தந்த நாளுக்குள்ள விக்கலேன்னா அல்லது வித்து அந்தந்த நாளுக்குள்ள வாங்கலேன்னா அது டெலிவரி வகையறா பங்கா ஆயிடும். அதோட கமிஷன் ரேட்டுங்றது தினசரி யேவாரம் பண்றது போல பத்து மடங்கு. தினசரி யேவாரத்துல பத்து பங்கு பண்ணுனா கெடைக்குற கமிஷன் ரேட்டு டெலிவரி யேவாரத்துல ஒரு பங்கு பண்ணுனாவே போதும் கெடைச்சிடும். தினசரி யேவாரத்துல தப்பா போற கணிப்புக இந்த குறுகிய காலத்து யேவாரத்துல கணிசமா கொறையும்.
            ஒரு வகையில புரோக்கிங் ஆபீஸ நடத்துறவங்களுக்கும் லாபம் இருக்கு, யேவாரம் பண்றவங்களுக்கும் லாபம் இருக்குன்னு சொன்னாலும் இது ஒரு வகையான தப்பாட்டம்தான். நீண்ட காலத்துக்கு நல்லா போவப் போற பங்கை வாங்கி வாங்கி வித்தா யேவாரம் பண்றவங்களுக்கு வர்ற லாபத்தை விட புரோக்கிங் ஆபீஸப் போட்டுருக்கவுங்களுக்கு வர்ற லாபம்தாம் அதிகமா இருக்கும். இப்படி யேவாரம் பண்றவங்களோட மனநிலையும் காலப்போக்குல மாறிப் போயிடும். அவுங்களால எந்தப் பங்கிலயும் நீண்ட காலத்துக்கு முதலீடு பண்ணவே முடியாது. அதுக்கான மனநிலையும் வராது. ஆயிரமோ ஐநூறு லாபமோ போட்டுப் போட்டு எடுத்துக்கிட்டே இருக்கணும்ங்ற எண்ணம்தாம் வரும். அத்தோட எந்த குறிப்பிட்ட ஒரு பங்குலயும் அவங்களோட கவனம் இருக்காது. வாங்கி வாங்கி வித்து வித்து லாபம் பாக்குற ஒவ்வொரு பங்கா தேட ஆரம்பிச்சிடுவாங்க. பங்குச் சந்தையப் பொருத்த மட்டில எவ்வளவுக்கு எவ்வளவு மனசு கம்மியா செயல்படுதோ அந்த அளவுக்கு நல்லது.
            பங்குச் சந்தையில ரொம்ப ஆராய்ச்சிப் பண்றதை விட நல்லா போற பங்குகள வெலை எறங்க எறங்க வாங்கிப் போட்டு ஓரளவுக்கு நல்லா வெலை ஏறுன பிற்பாடு வித்து லாபம் பாக்குறதுதாம் சரியானதா இருக்கும். இங்க எந்தப் பங்கு எந்த வெலை வரைக்கும் எறங்கும்? எந்தப் பங்கு எந்த வெலை வரைக்கும் ஏறும்ங்றதுக்கு எல்லாம் எந்த உத்தரவாதமும் கெடையாது. நல்ல கம்பெனியோட பங்கே அடிமாட்டு வெலைக்கு யேவாரம் ஆவும். அய்யோ நல்ல கம்பெனி பங்குன்னு நெனைச்சி வாங்கி இப்படி ஆயிட்டேன்னு அப்போ கலங்கிப் போயிடக் கூடாது. ஆகா நல்ல கம்பெனியோட பங்கு இப்பிடி ஒரு வெலையில கெடைக்குதுன்னே நெனைச்சி வாங்கிப் போட வேண்டிய நேரம் அது. அதே போல மோசமான கம்பெனியோட பங்கு உச்சாணிக் கொம்புல யேவாரம் ஆவும். அதெப் பாத்து ஆகா இந்தப் பங்க வாங்காம வுட்டுப்புட்டோமே, இப்போ வாங்கி இன்னும் கொஞ்சம் வெலையேறுன பிற்பாடு லாபம் பாப்போம்னு நெனைச்சா அந்தப் பங்க வாங்குன பிற்பாடு அது பாட்டுக்கு வெலை எறங்கிக்கிட்டே போயி வாங்குவனவங்கள குடை சாய்ச்சு விட்டுப்புட்டு போயிக்கிட்டு மடுவுல விழுந்துகிட்டு இருக்கும்.
            சந்தையில வாங்குற பங்குகளப் பத்தி ரெண்டு விசயங்களத்தாம் கவனிக்க வேண்டியிருக்கும். அது நல்ல கம்பெனியோட பங்காங்றது ஒண்ணு. அது வெலை கொறைஞ்சி யேவாரம் ஆவுதாங்றதா இன்னொண்ணு. இதுக்குச் சந்தைய நீண்ட கால அளவுல கவனிச்சிக்கிட்டு இருக்கணும். அவசரப்பட்டு யேவாரம் பண்ணணும்னு நெனைக்கக் கூடாது. அவரசங்றது பங்குச் சந்தையப் பொருத்த வரையில ஆள சாய்ச்சிப் போடுற வியாதி. இதுல முதலீட பண்ணுனா லாபத்தோட வெளியில வரணும். அதுதாங் இதுக்கு அழகு. ஒரு தடவை நட்டம் பண்ணா வுட்ட காசைப் பிடிக்கப் போறேன்னு தப்பு தப்பா யேவாரம் பண்ணி நட்டத்தை அதிகரிச்சிக்கிட்டே போவுற மனநிலைய உண்டு பண்ணுற எடம் இது.

            தொடர்ச்சியா ஆபீஸ ஆரம்பிச்ச ஏழாவது மாசத்திலேந்து பங்குகள எல்லாருக்குமா சேர்த்து வாங்கி கொஞ்சம் லாபம் வந்தா விக்குற வேலையப் பாக்க ஆரம்பிச்சான் விகடு. வாங்கி முதலீடு பண்ணதுல ஐநூறு ரூவா லாபம் வந்தாலும் விக்குறதுன்னு அவன் பண்ண வேலையில கமிஷன் காசு கொட்டோ கொட்டுன்னு கொட்ட ஆரம்பிச்சிது. மூணு மாசம், அஞ்சு மாசம்னு காத்திருந்து ஐயாயிரம், பத்தாயிரம்னு பாக்குற லாபத்த விட நாலு நாளு, ரெண்டு வாரத்துக்குள்ள ஆயிரத்தையும் ஐநூத்தையும் பாக்குறதெ கூத்தாநல்லூரு தொண்டாமுத்தூரு கேப்பிட்டலு ஆட்கள் விரும்ப ஆரம்பிச்சிட்டாங்க. அவுங்களுக்கு மூணு மாசம், நாலு மாசம்னு காத்திருந்து கணிசமா பாக்குற லாபத்தை விட இப்பிடி அடிக்கடி பாக்குற சில நூறு ரூவாயி லாபம்தாம் மனசுக்கு நெறைவா இருக்க ஆரம்பிச்சி. அதால அடிக்கடி ஆபீஸூக்கு வந்து வாங்குன பங்கு லாபத்துல இருக்கா, வித்து லாபம் பாக்கலாமான்னு அவுங்களே கேட்க ஆரம்பிச்சிட்டாங்க.
            ஆகா பணத்தெ கொண்டாந்து கொட்டுனா இப்படி பணமா காய்ச்சித் தள்ளுற ஒரு யேவார முறை இருக்குறது தெரியாம போச்சேன்னு இதெப் பத்தி அவுங்க அக்கம் பக்கத்துல பேசப் பேச அதெ கேட்டுப்புட்டு நெறைய பேருங்க விகடுவோட ஆபீஸ்ல அக்கெளண்டைத் துவங்க ஆரம்பிச்சாங்க. பதினேழு பேரா இருந்தா வாடிக்கை பண்றவங்களோட எண்ணிக்கை ஆபீஸூ போட்டு பத்தாவது மாசத்துல ஐம்பதெ தாண்டுனுச்சி. ஒரு வருஷத்துக்குள்ள அந்த எண்ணிக்கை நூறைத் தாண்டிப் போச்சி. ஒன்றரை வருஷத்துக்குள்ள எரநூத்து அம்பது பேரோட கணக்குல வாடிக்கை யேவாரம் நடக்க ஆரம்பிச்சிச்சு. எல்லாத்துக்கும் சேர்த்து கமிஷன் காசு மாசம் ஆனாக்கா இருபதாயிரம், முப்பதாயிரம்னு கொட்ட ஆரம்பிச்சிது.
            அதே நேரத்துல கமிஷன் காசுக்காக இப்பிடி நாலு நாளுக்குள்ள, ஒரு வாரத்துக்குள்ள வித்து வித்து இன்னும் நல்லா லாபம் தர்ற முதலீடு பண்றவங்களோட பங்குகள காயடிச்சிட்டு இருக்கோமேங்ற உறுத்தலும் விகடுவோட மனசுல உண்டாவ ஆரம்பிச்சிடுச்சி. எந்த விசயத்தப் பண்ணாலும் அது மனசுக்கு உறுத்தக் கூடாது. மனசுக்கு உறுத்துற ஒரு விசயத்தப் பண்ணிட்டு நிம்மதியா தூங்க முடியாது. எந்நேரத்துக்கும் அந்த விசயத்தப் பத்தியே மனசு யோசனைப் பண்ணிப் பண்ணி மனுஷன நிம்மதியா இருக்க விடாம அது செஞ்சிப்புடும். இதுல போற நிம்மதியையும், சந்தோஷத்தையும் வேற வழியில தேடுறாப்புல மனசு கொண்டாந்து மனுஷன நிப்பாட்டிப் புடும். மனசு உறுத்தலோ, குத்தல் உணர்வோ இல்லாம சரியா இருந்தா அதுதாம் சந்தோஷம். அந்த சந்தோஷம் கிடைச்சிப்புட்டுன்னா வேற எதுலயும் மனசு சந்தோஷத்த தேடாது. அந்த சந்தோஷம் கெடைக்காதப்பத்தாம் மனசு புகை வுடுறதுல, சாராயத்த உள்ள அள்ளி ஊத்துறதுல, முறைகேடான உறவுகள்ல ஈடுபடுறதுல சந்தோஷம் கெடைக்குமான்னு எதிர்பார்க்க ஆரம்பிச்சிடும். எப்பவும் மனசுக்கு அடிப்படையான ஒரு நேர்மை அல்லது ஒரு தர்மம் தேவையா இருக்கு. அது குழைஞ்சாலும் சரித்தாம், ‍அதெ மனுஷனா குழைச்சாலும் சரித்தாம் மனசு தவறான வழிகள்லத்தாம் குழைஞ்சிப் போன சந்தோஷத்தைத் தேட ஆரம்பிச்சிடும்.
            ரொம்ப நாளைக்கு இந்த மன உறுத்தலோடயும், குத்தல் உணர்வோடயும் இருக்க முடியாதுங்றது விகடுவுக்குப் புரிஞ்சிப் போயிடுச்சி. எல்லாத்தையும் கூப்புட்டு ஒரு மீட்டைப் போட்டு இன்னின்ன நெலவரம்னு சொல்லிப்புட்டா தேவலாம்னு தோணிச்சி. அப்பிடிச் சொல்லிப்புட்டா மனசுக்கும் ஒரு இதமா இருக்கும்னு பட்டிச்சி. இந்த மீட் போடப் போற சங்கதிய அவ்வேன் குஞ்சு கவுண்டருக்கும், ரித்தேஸூக்கும் போனைப் போட்டு சொன்னா அவுங்க ரெண்டு பேருக்கும் சந்தோஷம் தாங்க முடியல. அவ்வேன் மனசுக்குள்ள நெனைச்சி மீட்டைப் போடச் சொன்னது ஒரு காரணம்னா அவுங்க புரிஞ்சிக்கிட்டது வேற மாதிரியான காரணமா இருந்திச்சி. குஞ்சுக் கவுண்டரு சொல்றாரு, "இப்பதாம்டே நீ யேவாரத்துக்குள்ளயே எட்டிப் பாக்குறாப்புல. ஒம்மட போட்டு அந்த திட்டுத் திட்டோலேன்னு வெச்சுக்கோ இப்பிடி வந்திருப்பீயாக்கும்? இப்பயாச்சிம் புத்தி வந்தததல்லோ. சாமத்தியமா இத்தே மாதிரி பொழைச்சிக்கோணும்! மீட்டைப் போடு எரநூத்து அம்பதுக்கு மேல இருக்குற கிளையண்ட்ஸ ஆயிரமா ஆக்கிப் போடு. மீட்டுக்கு ஆவுற செலவுல பாதிய ஹெட் ஆபீஸூ ஏத்துக்கும்!" அப்பிடிங்கிறாரு.
            ரித்தேஸ், "எக்ஸலெண்ட்! சரியான நேரத்துல எடுக்குற சரியான முடிவு. இப்பத்தாம் இந்த மீட்டைப் போடணும். போட்டு இன்னும் கிளையண்ட்ஸ அதிகம் பண்ணணும். என்னைக்கு மீட்டைப் போடப் போறேன்னு மெயில் பண்ணு. வாய்ப்பு இருந்தா நாமளும் நேர்ல வந்து கலந்துக்கிறேம்டா!" அப்பிடிங்கிறாரு.
            நாம்ம ஒண்ணு நெனைச்சிப் பண்ண நெனைச்சா அது வேற ஒண்ணா நடந்துப் போயி, அதுக்கு ரித்தேஸ், குஞ்சு கவுண்டரெல்லாம் வந்தா காரியம்ல கெட்டுப்புடும்னு நெனைக்கிறான் விகடு. அந்த நெனைப்பு வந்ததுமே,      "இப்போ பார்மலா சிம்பிளான ஒரு மீட்டைப் போட்டு பண்ணிக்கிறேம். ரெண்டு வருஷம் முடியுறப்ப கிராண்ட இன்னொரு மீட்டைப் போட்டு பெரிசாப் பண்ணிப்புடலாம். அதுக்கு எல்லாரும் வரலாம். இப்போ வாணாமே!" அப்பிடின்னு ரித்தேஸ்கிட்ட சொன்னாக்கா, அதுக்கு அவரு சொல்றாரு, "ஏம்டா நாம்ம வந்தா பைசா ஆகுமேன்னு பாக்குறீயாடா வெகடு? நாம்ம ப்ரியா வந்துப் பண்ணித் தர்றேம்டா! நாம்ம கவுண்டர்கிட்ட பேசிக்கிறேம்டா வெகடு!" அப்பிடிங்கிறாரு ரித்தேஸ்.
            "ரெண்டு வருஷ முடிவுல பண்ணுறப்போ ப்ரியா வந்து பண்ணிக் கொடுங்கய்யா! ஒங்ககிட்ட சொல்லாம பண்ணக் கூடாதுங்றதுக்கா சொல்றேம். மித்தபடி தயவுபண்ணி இதுக்கு வந்துட வாணாம். இன்னும் கொஞ்ச நாள்தான இருக்கு. அப்ப பாத்துக்கலாம்." அப்பிடிங்றான் விகடு.
            "பிடிச்சா பிடிவாதம்டா ஒன்னோட மைனஸ்! செரி ஒன் இஷ்டம்!" அப்பிடின்னு அதை அத்தோட நல்ல வேளையா விட்டுட்டாரு ரித்தேஸ்.
*****


No comments:

Post a Comment

நீங்கள் நீங்களாக இருக்கும் போது…

நீங்கள் நீங்களாக இருக்கும் போது… நீங்கள் அவராக இருப்பது அவருக்குப்பிடிக்கும் நீங்கள் அவர்களாக இருப்பது அவர்களுக்குப் பிடிக்கும் நீ...