11 Jan 2020

27.2



            அகல் கலை இலக்கியக் கூடலில் முதலில் வெளியேற்றப்பட்ட பிரதியும் பிரஜையும் எஸ்.கே.தான். அவரைப் பிரதியும் பிரஜையும் எனச் சொல்வதற்குக் காரணம் அவர் தன்னை அப்படித்தாம் குறிப்பிட விரும்புகிறார்.

            எஸ்.கே. தன்னை மனிதர் எனக் குறிப்பிடுவதை விரும்ப மறுக்கிறார். தன்னை மிருகப் பண்புகளின் கலவை என்கிறார். மிருகக் கூட்டங்களில் ஒன்றான மனிதரை மனிதர் என்று தனித்தப் பெயர் செல்லி அழைப்பதில் அவருக்கு விருப்பமில்லை.
            அவர் கேட்கிறார், "மிருகத்தை விட மனிதன் எந்த அளவில் உயர்ந்து விட்டான்?" என்று. மனிதர்கள் மிருகப் பண்புகளோட வாழ அனுமதிக்க முடியாதது மாபெரும் வன்முறை என்றும் அவர் கூடுதலாகச் சொல்கிறார்.
            மனிதரால் மனிதர்கள் நிர்ணயித்துள்ளப் பண்புகளின்படி வாழ்வதெல்லாம் முடியாதும் என்பதும், மனிதர்கள் மனிதத் தன்மையற்ற பண்புகளில் வாழ்வதையே அதிகம் விரும்புவார்கள் என்பதும் அவரது பிரதான கருத்துகளாக இருக்கின்றன.
            அவரது தற்போதையத் தொழிலைக் குறித்துச் சுட்டிக்காட்டி, அவரை அவ்வண்ணம் இவர் ஒரு இலக்கியவாதி, பிரசங்கி என்று சொல்வதற்கும் அவரது அனுமதி கிடைத்தபாடில்லை. அது தனக்கான பிழைப்பு என்கிறார். நாயும் நத்திப் பிழைக்கும் பிழைப்பை தனக்கான தொழில் என்று சொல்லும் அகந்தை மனிதர் கூட்டத்திற்கே இருக்கிறது என்று அதை கேலி செய்கிறார் எஸ்.கே.
            அன்றைய அகல் கூடலில் கலந்து கொண்டவர்கள் மிகவும் வெளிப்படையாக எஸ்.கே.வின் கருத்துகளை ஏற்க முடியாது என்பதைச் சொல்கிறார்கள். அவரது கருத்துகள் அபாயகரமானவை என்றும் எச்சரிக்கை செய்கிறார்கள்.
            தொடர்ந்து நிலவிய கூச்சலையும், கரைச்சலையும் எஸ்.கே. விரும்பவில்லை. "நான் என்ன செய்யட்டும்?" என்கிறார்.
            "வெளியே போய் விடுங்கள்!" என்று காட்டமாகச் சொல்கிறார் கவிஞர் மாணிக்கம்.
            "மிகவும் நேர்மையான பதில். இந்தப் பதிலை மதிக்கிறேன். இதே போன்ற ஒரு பதிலை இது போன்ற இலக்கியக் கூட்டத்தில் மட்டும் சொல்லாதீர்கள். அரசியல் கூட்டத்திலும் சொல்லுங்கள். அப்போதுதாம் உங்கள் அரசியல் உருப்படும். உங்களது வாழ்க்கை உருப்படும். அங்கே மட்டும் பயந்து கொண்டும், பம்மிக் கொண்டும் உட்கார்ந்து இருக்கிறீர்கள். உங்கள் உணர்வுகள் நாசமாகப் போவதாக! உங்கள் எண்ணங்களும் வாழ்க்கையும் குந்தாங் கூறாகப் போவதாக! என்னதான் உங்களது ரசனை? என்னதான் உங்களது வாழ்க்கை? என்னதான் உங்களது முடிவோ? நீங்கள் சிந்தனையின் ஆழத்துக்கு எந்த நாளிலும் வர மாட்டீர்கள். உங்களிடம் என் நேரத்தை வீணாக்கியதற்காக அந்த நேரத்தை நான் சபிக்கிறேன். நீங்கள் என்ன என்னை வெளியேற்றுவது? நானே என்னை வெளியேற்றுகிறேன்!" என்றபடி கூட்டத்திலிருந்து வெளியேறுகிறார் எஸ்.கே.
*****


No comments:

Post a Comment

நீங்கள் நீங்களாக இருக்கும் போது…

நீங்கள் நீங்களாக இருக்கும் போது… நீங்கள் அவராக இருப்பது அவருக்குப்பிடிக்கும் நீங்கள் அவர்களாக இருப்பது அவர்களுக்குப் பிடிக்கும் நீ...