10 Jan 2020

பொய்யைச் சொல்லி நடத்துற பொழைப்பு!



செய்யு - 323

            மனசு நெறையாத ஒண்ணு. அதுவும் யேவாரத்துல இருக்குற மனசு ஒரு போதும் நெறையறது கெடையாது. யேவாரத்துல இருக்குற யாரும் போதுங்ற மனசெ அடையவே முடியாது. போதுங்ற மனசெ அடைஞ்சவங்க யேவாரத்தைப் பண்ண முடியாது. இன்னும் இன்னும் ஓடிகிட்டே இருக்குறதுதாம் யேவாரத்துக்கான மனசு. அப்படி ஒரு மனசு இருக்கிறவங்கத்தாம் யேவாரத்தைப் பண்ணிக்கிட்டும், லாபத்தைச் சம்பாதிச்சுக்கிட்டும் இருக்க முடியும். ஒரு கட்டத்துக்கு மேல பணத்தைக் கத்தைக் கத்தையா சம்பாதிச்சு என்ன பண்ணப் போறோம்னு தோணும். அப்படிச் சம்பாதிச்சுகிட்டே இருந்தாத்தாம் யேவாரத்தைப் பண்ண முடியும்னு யேவாரத்தைப் பண்ற மனசு சொல்லும்.
            மனுஷங்றவன் மனசு சொல்றதெ கேக்குற பிராணி இல்லையா! அதால மனசு சொல்றபடியே கேட்டுகிட்டு தெனம் தெனம் பணத்தைக் கத்தைக் கத்தையா எண்ணுனாத்தாம் யேவாரம் பண்ற மனசுக்கு அடிமையான ஒரு மனுஷன் நிம்மதியா ராத்திரி தூங்க முடியும். அப்படித் தூங்குறப்ப அவனுக்கு வர்ற கனவு கூட ஒரே மாதிரியா பணத்தை எண்ணு மாதிரியாத்தாம் வரும். அப்படி ஒரே மாதிரியா கனவு வர்ற மனுஷங்களா மாறிட்டா மனசு இறுகிப் போயிட்டதா அர்த்தம். அந்த இறுகிப் போன மனசுக்கு அப்படியே அது சொல்றபடியே நடந்துகிட்டே இருந்தாத்தாம் புத்திப் பேதலிக்காம இருக்கும். இல்லாட்டிப் போனா புத்திப் பேதலிச்சுத்தாம் போயிடும். பேதலிச்சுப் போன புத்தியில உள்ள மனுஷன் என்னத்த வேணும்னாலும் பேசுவான். அவனுக்கு மனுஷத்தன்மைன்னா என்னான்னே தெரியாது. அவன் பேசுறதையே பேசிட்டு இருப்பானே தவிர எதுத்தாப்புல பேசுறவங்களோட வார்த்தைகள காது கொடுத்துக் கேக்கவே மாட்டான். பொழுது விடிஞ்சா வெளிச்சம் வர்றாப்புல யேவாரத்தை ஆரம்பிச்சா அவனுக்கு பணம் வந்து கொட்டிட்டே இருக்கணும். அப்படி இருந்தாத்தாம் அவனால நிம்மதியா இருக்க முடியும். இல்லாட்டிப் போனா பேதலிச்சுப் போன மனசால என்ன பேசுறோம்னு தெரியாமலே பேசிட்டே இருப்பான். பணம் வந்து கொட்டுற வரைக்கும் கீறலு விழுந்துப் போன இசைத்தட்டு ஒரு மாதிரியே பாடுங்றதைப் போல பேசுறதையே பேசுவானே தவிர வேறு ஒண்ணுத்தையும் பேச மாட்டான்.
            குஞ்சு கவுண்டருக்குக் காசு பணத்துக்கு ஒண்ணும் கொறைச்சலு இல்ல. பல வழியிலும் அவருக்கு பணம் வந்து கொட்டிக்கிட்டுத்தாம் இருக்கு. எவ்வளவு வந்து கொட்டுனாலும் அவருக்குப் போதுறதாயில்ல. நாலு வெதமான யேவாரம் பண்றப்போ மூணுல லாபம் பிய்ச்சிட்டுப் போனாக்கா, ஒண்ணுல ஒண்ணும் இல்லாமத்தாம் போவும். குஞ்சு கவுண்டருக்கு அது ஒத்துக்காது. நாலுல்லயும் பணம் கொட்டிக்கிட்டுத்தாம் இருக்கணும். எதுல பணம் கொட்டலையோ அதுல ஏம் பணம் கொட்டலேன்னு ஆராய்ச்சியில எறங்கி அதுல பணத்தெ கொட்ட வெச்சிட்டுத்தாம் மறுவேல பாப்பாரு. அப்படிப்பட்டவருக்கு தொண்டாமுத்தூர் கேப்பிட்டலோடு நூத்தி எட்டாவது பிராஞ்சிலேந்து அவரு மனசு போட்டு வெச்சிருக்கிற கணக்குக்குப் பணம் கொட்டலைன்னா எத்தனை மாசத்துக்குச் சும்மா இருக்க முடியும். அப்பைக்கப்போ போனைப் போட்டுப் பேசிகிட்டு இருந்தவரு அடிக்கடிப் போனைப் போட்டு பேச ஆரம்பிச்சாரு. எப்பயாச்சும் ஒரு மனுஷன் கெட்ட வெதமா பேசுறதைச் சகிச்சிக்கலாம். எப்பப் பாத்தாலும் அப்படியே பேசுற மனுஷனை எப்படிச் சகிச்சிக்கிறது?
            குஞ்சுக் கவுண்டரோட வாயை அடைக்காம ஆபீஸ நடத்துறதும் ஒண்ணுத்தாம், இழுத்து மூடுறதும் ஒண்ணுத்தாம்ங்ற முடிவுக்கு வந்துட்டான் விகடு. எல்லாருக்கும் பாத்து அவன் வாங்கி வெச்ச பங்குகள் எல்லாமும் இருவது சதவீதம், முப்பது சதவீதம்னு லாபத்துல இருந்துச்சு. அதுக்கு ஏத்த மாதிரி அப்போ டாப்புல போன மருந்துக் கம்பெனிகளோட பங்குக, அரசாங்கத்தோட பொதுத்துறைப் பங்குக, நிதிநிறுவனங்கள் சார்ந்த பங்குகள்ல மட்டுந்தாம் அவன் முதலீடு பண்ணி வெச்சிருந்தான்.
            காய்க்குற மரத்தை நல்ல காய்க்க விட்டு அறுவடைப் பண்ணணும். வெளையுற பயிரையும் அது போல நல்லா வெளைய விட்டுத்தாம் அறுவடைப் பண்ணணும். சூழ்நிலை அப்படி இல்லையேன்னு கொஞ்சம் யோசிச்சுத் தயங்கித்தாம் பாத்தாம் விகடு. ரொம்ப தயங்குனா ஆபீஸோட பிரான்சைஸ்ஸ காலி பண்ணிட்டு குஞ்சுக் கவுண்டரு ஆபீஸை எடுத்துட்டார்ன்னா நிச்சயம் கூத்தாநல்லூர்ல இருக்குற வாடிக்கையாளருங்க அத்தனைப் பேரையும் டிரேடர்ஸ்ஸா மாத்திப்புடுவாரு. டிரேடர்ஸ்ஸா இருந்து லாபம் பண்றதுன்னா அது சாமானியப்பட்ட வேலை இல்ல. டிரேட் பண்ற எல்லாத்துக்கும் மொதல்ல லாபமாத்தாம் வரும். அந்த லாபத்தைப் பாத்துட்டு ஆசெ அதிகமாயி இன்னும் இன்னும் டிரேட் பண்ணுவோம்னு ஆரம்பிப்பாங்க.
            நூறு பங்குகள வாங்குறப்ப வர்ற லாபம் மனசைப் போட்டு அரிச்சி ஆயிரம் பங்குகளா வாங்கி இன்னும் லாபத்தை அதிகமாக்குனா என்னான்னு கேக்க வைக்கும். நூறு நூறு ரூவாயச் சம்பாதிக்கிற லாபம் பிடிக்காம, ஆயிரமாயிரமா சம்பாதிக்கிற லாபமும் பிடிக்காம, லட்சம் லட்சமா சம்பாதிக்கிற லாபமும் பிடிக்காம, ஒரே நாள்ல கோடி கோடியா சம்பாதிக்கணும்ங்ற ஆசையில கொண்டாந்து விட்டுப்புடும் அந்த மனநெலை. ஒரே நாள்ல பில் கேட்ஸையும், வாரன் பப்பெட்டையும் முந்திட்டுப் போறாப்புல லாபத்தைச் சம்பாதிச்சுப் புடணும்னு தோணு வெச்சிடும்.

            பங்குச் சந்தையில ஒரு விதி மட்டும் இன்னும் மாறாமத்தாம் செயல்பட்டு இருக்கு. லாபம்னு வர்றப்போ துக்குனோண்டு கையில நக்க முடியாத அளவுக்கு வர்றது, நட்டம்னு வர்றப்போ ஆளையே அடிச்சிச் சுருட்டிட்டுப் போற சுனாமியப் போல வரும். இது அனுபவப்பட்டவங்களுத்தாம் புரியும். சின்ன மீனப் போட்டு எந்த அளவுக்கு மீனைப் பிடிக்க முடியுமோ அந்த அளவுக்குக்கான மீனைப் பிடிக்கணும்னு ஆசைப்பட்டா தப்பில்ல. திமிங்கிலத்தையே பிடிக்கணும்னு ஆசைபட்டா என்னாவும்? தூண்டிலுக்குத் தூண்டிலும் போயி, அந்தத் தூண்டிலப் பிடிச்சிட்டு இருக்குற மனுஷப் பயலும் திமிங்கிலத்தோட வாயில போறது போலல்ல நெலைமை ஆயிடும்.
            பங்குச் சந்தைய நெருங்குறவங்களுக்கு எல்லாம் ஆரம்பத்துல வீசுற காத்துல்லாம் அதிர்ஷ்ட காத்துதாம். போவப் போவத்தாம் அந்த அதிர்ஷ்டக் காத்து ஏன் வீசுனுச்சுன்னு கேக்குற அளவுக்குத் துரதிர்ஷ்டக் காத்தா அடிக்கும். அந்தக் காத்துலயும் தாக்குப் பிடிக்கிறவங்கத்தாம் சந்தையில நிக்க முடியும். அதுக்கான மனசுங்றது வேற. அதாலத்தாம் பங்குச் சந்தையில நெலையா இருக்குறவங்க கம்மியா இருப்பாங்க. வந்துட்டும் போயிட்டும் இருக்குறவங்க நெறையப் பேருங்க இருப்பாங்க. நெலையா இருக்குறவங்க எதுக்கும் அலட்டிக்காத ஒரு ஞானியோட மனநிலையிலத்தாம் இருப்பாங்க. எதுக்கும் கலங்காம அசங்காம நிதானமாத்தாம் இருப்பாங்க.
            வந்துட்டும் போயிட்டும் இருக்காங்க இல்லையா அவங்களோட நெலமைய நெனைச்சாத்தாம் பாவமா இருக்கும். மொதல்ல லாபத்தைப் பாத்தவங்க, பின்னாடி நட்டத்தைப் பாக்குறவங்க சரிதாம் போ நட்டமாச்சேன்னு சந்தைய விட்டு கெளம்புறதுக்கு அவங்களோட மனசு எடம் கொடுக்காது. விட்ட காசை விட்ட எடத்துலயேப் பிடிக்கிறேம் பாருன்னு மேலுக்கு மேல யேவாரத்தைப் பண்ணி நட்டப்பட்டுகிட்டே போவாங்க. அவங்களால சமாளிக்கவே முடியாத நெலைய அடையுற வரைக்கும் நட்டப்பட்டு போயிட்டே இருப்பாங்க. சுத்தமா சமாளிக்கவே முடியாத நெலைமையிலத்தாம் சந்தையை விட்டுப்புட்டுப் போவாங்க. அப்படிப் போனவங்க கொஞ்சம் கையில காசு வந்தா போதும் மறுபடியும் தலைதெறிக்க விட்ட காசைப் பிடிச்சுக் காட்டுறேம் பாருன்னு மறுபடியும் சந்தைக்கு வந்துடுவாங்க. இதுல டிரேடர்ஸ் பணத்தைச் சம்பாதிக்கிறதெ விட வுட்டுகிட்டே நட்டப்பட்டுக்கிட்டே இருக்குறது அதிமா இருக்கும். அவுங்கள வெச்சி பொழைச்சுக்கிட்டு இருக்குற புரோக்கிங் ஆபீஸப் போட்டவங்களுக்கு அவுங்கள வெச்சி சம்பாதிக்கிறது மட்டும் மாறாம நெலையா இருக்கும். விவசாயம் பண்றவன் தற்கொலை பண்ணிக்குவான், ஆனா அவனுக்கு பூச்சி மருந்தை வித்தவன் செழிப்பா இருப்பாங்ற மாதிரித்தான், புரோக்கிங் ஆபீஸ்ல டிரேட் பண்றவனோட நெலைமையும், அவனெ வெச்சி ஆபீஸப் போடுறவனோட நெலைமையும் இருக்கும்.
            அப்படி ஒரு நெலமை தன்னோட ஆபீஸ்ல இருக்குற வாடிக்கைப் பண்றவங்களுக்கு வந்துப்புட கூடாதுன்னு நெனைச்சதுல எல்லாத்தையும் கூட்டி வெச்சி ஒரு கூட்டத்தைப் போட்டு ஒரு பொய்யை அவித்து விட்டான் விகடு. பொன் முட்டை இடுற வாத்தை வயித்தெ அறுத்து அந்த பொன் முட்டைய அறுக்குறாப்புல ஒரு வேலைத்தாம் அது.
            அவுங்க எல்லாத்துக்கும் முன்னாடி விகடு பேசுனான், "நாம்ம வாங்கிப் போட்டுருக்குற பங்குக எல்லாமும் நல்ல லாபத்துல இருக்கு. கொறைச்சலா இருபது பர்சன்ட்லேந்து அதிகபட்சமா முப்பதஞ்சு பர்சனட் வரைக்கும் இருக்கு. இதுக்கு மேல அது மேல ஏறுமான்னு கொஞ்சம் சந்தேகமா இருக்கு. இந்த நெலையில வித்துப்புட்டு ஒரு நல்ல நெலையில வாங்குலாமுன்னு நெனைக்கிறேம். ஏன்னா இந்த நெலையில விக்காமப் போயி வெலை எறங்கிப் போச்சுன்னா உள்ளதும் போச்சே நொள்ளக் கண்ணான்னு நிக்கணும். இன்னும் நெறைய லாபம் வேணும்னு நெனைச்சிக்கிட்டு வர்ற லாபத்தை விட்டுப்புடக் கூடாது பாருங்க. ஒரு என்ட்ரி லெவல் கொடுத்தோம். ஒரு எக்ஸிட் லெவல் கொடுத்துட்டா நல்லா இருக்கும். பெறவு வெலை கொறைஞ்சி வந்தா வாங்கிக்கலாம்!" அப்பிடின்னு ஒரு போடுபோட்டான்.
            மாலிக்தாம் மொதல்ல பேசுனாரு, "பேங்குல போட்டா கூட எட்டு பெர்சென்ட் ஒம்போது பர்சென்ட்தாம் கொடுக்குறாம். அதுவும் வருஷத்துக்கு. நாம்ம மொதலீடு பண்ணி அஞ்சு மாசம் இருக்குமா? ஆறு மாசம் இருக்குமா? அதுக்குள்ள இருவது பர்செண்டுக்கு மேலன்னா அது ரொம்ப அதிகம்தாம். நாளைக்கு வர்ற பலாக்காய வுட கையில இருக்குற களாக்காயி முக்கியம். அதால இப்போ இருக்குறதுல லாபத்தை மட்டும் எடுத்து அக்கெளண்ட் பண்ணி விடுடாப்பா. மொதல்ன்னு போட்ட காசி அப்பிடியே இருக்கட்டும். அதெ எப்போ மொதலு பண்ணி வுடணுமோ அதெயும் பாத்து நீயே பண்ணிவுடு!"ன்னு சொல்றாரு மாலிக்.
            "அடேங்கப்பா இருவது பர்செண்ட் லாவமா? போதும் போதும்ப்பா! அதெ எடுத்து மொதல்ல கொடுப்பா! இம்மாம் பண்ணி வுட்டுருக்கே! பையாவெ நல்ல கவனிச்சி வுடணும்!" அப்பிடிங்கிறாரு கூட்டத்துலேந்து ஒருத்தரு. ஆக மொத்தத்துல கூட்டத்துல இருந்த எல்லாத்துக்கும் வித்துக் கொடுத்துப்புடலாம்ங்ற மனநெலைய உருவாக்கி விட்டுப்புட்டான் விகடு. ஆனா அவன் வாங்கிப் போட்டு வெச்சிருந்த பங்குக அனைத்தும் புதையலு மாதிரியான பங்குக. சந்தையில அதை மல்டிபேக்கர்ஸ் பங்குன்னு சொல்லுவாங்க. அதை விக்காம வெச்சிருக்கிறதுலத்தாம் லாபம்ங்ற நெலையில அந்தப் பங்குக எல்லாமும் சேர்ந்து பதினைஞ்சு லட்ச ரூவாய்க்கு வந்திருச்சு. அத்தனையையும் சேர்த்து அடுத்த அஞ்சு நிமிஷத்துல விக்குறதுக்கு ஆர்டரைப் போட்டு வித்து முடிச்சான். அஞ்சே நிமிஷத்துல ஏழாயிரத்து ஐநூத்துக்கான கமிஷன் வந்துப் போச்சு. ஹெட் ஆபீசுக்கான கமிஷன் ஆயிரத்து ஐநூறு போக மிச்சம் விகடுவோட கணக்குக்கு வந்துப்புடும்.
            லாபமா வந்த மூணு லட்சத்தெ மட்டும் அவங்கவங்க கணக்குக்கு அவுங்கவங்க மொதலீடு பண்ணபடி மாத்தி வுட்டாம். அதுல அந்த ஆளுங்க எல்லாம் குஷியாயி ஆளுக்குக் கொஞ்சம் பணத்தெ போட்டு இவன் கையில மாலிக்கை வுட்டு பத்தாயிரத்தைக் கொடுக்க வெச்சாங்க. அதாவது இவ்வேன் கமிஷனா சம்பாதிச்சதெ வுட அவுங்க லாபம் சம்பாதிச்சுக் கொடுத்ததுக்காக சந்தோஷப்பட்டு கொடுத்த பணம் அதிகமா இருந்திச்சு.
            இதுக்கு இடையில ஆபீஸூ கைய வுட்டுப் போயிடக் கூடாதுங்றதுக்காக இன்னொரு வேலையையும் பண்ணான் விகடு.
*****


No comments:

Post a Comment

இருக்கும் போதும்… இல்லாத போதும்…

இருக்கும் போதும்… இல்லாத போதும்… சம்பாதிக்கும் காலத்தில் ஆயிரம் ரெண்டாயிரம் என்று கடன் கொடுக்க ஆயிரம் பேர் ஐயா கடன் வேண்டுமா என்று அ...