1 Jan 2020

ரோஸ் மில்க் குடிக்கிறவங்க ரோஸா இருப்பாங்களோ!



செய்யு - 314

            மாலிக் அய்யாவோட வூட்டுக் காம்பெளண்ட் அஞ்சடிக்கு இருக்கும். காம்பெளண்ட் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே போனாக்கா கொஞ்சம் நடைபாதை இருவது அடி நீளத்துக்கு இருக்கும். நல்ல அகலமான நடைபாதை அது. அதெ நடைபாதைன்னும் சொல்ல முடியாது. காருபாதைன்னுத்தாம் சொல்லணும். ஒரு காரு போற அளவுக்கு இருக்கு அந்தப் பாதை. அதுல நடைபாதைக்கான கல்லு பதிச்சிருப்பாங்கயில்ல அறுகோண வடிவத்துல, அது பதிச்சிருக்கு. நடைபாதையோட ரெண்டுப் பக்கமும் பூச்செடிகளும், குரோட்டன்ஸ் செடிகளுமா இருக்கு. பூச்செடிகள்ன்னா பேரு தெரியாத அளவுக்குப் பலவிதமானப் பூச்செடிங்களா இருக்கு. எங்கெங்கேயோ இருந்தெல்லாம் மாலிக் அய்யா கொண்டாந்திருக்கணும். ஒரு தாவரவியல் பேராசிரியரா இருந்துட்டு பூக்கள் மேல பிரியம் இல்லாம, செடிகள் மேல சிநேகம் இல்லாம அவரால எப்படி இருக்க முடியும்? இந்த விகடு பயலும் அப்படி வர வேண்டியவம்தாம். ஒரு தாவரவியல் ஆராய்ச்சியாளனா அவரு முன்னால வந்து நிக்க வேண்டியவேம் இன்னிக்கு இப்படி வந்து நிக்க வேண்டியதா ஆயிப் போச்சு.
            வூட்டோட போர்டிக்கோ நல்லா பெரிசா இருக்கு. வெளியில ரேழி நல்லா பரந்துபட்டு இருக்கு. ஒரு கல்யாணத்தெ நடத்தி வர்றவங்க எல்லாத்துக்கும் பந்திப் போடலாம் போல அம்மாம் பெரிசா இருக்கு. கூடத்துக் கதவு பூட்டித்தாம் இருக்கு. அது நல்லா கருப்பா பளபளன்னு இருக்கு. அதோட வேலைப்பாடுகள சொன்னாக்கா அதுக்கு நாலு பாரா எழுதியாவணும். நெலையோட வெண்டிலேஷன் அடைச்சி அதுல மரத்திலயே செதுக்குன அரபு எழுத்துகள்ல எழுதிருக்கு. நெலைக்கு மேல மெக்காவோட படம் மாட்டி இருக்கு பெரிசா. இவ்வேன் விகடு வெளில தொங்கிட்டு இருக்குற காலிங் பெல்ல அழுத்துறாம். அடுத்த நொடியே கதவெத் திறந்துட்டு மாலிக் வர்றாரு. அடேங்கப்பா என்னா உருவம்! உசரம் எப்பிடியும் ஆறடிக்குக் கொறையாது. நெறம் ரோஸூத்தாம். முன்னாடி சொட்டைத்தான்னாலும் முகத்துல அந்த தேஜஸ் கொஞ்சமும் கொறையாது. அவர்ர கோட்டு சர்ட்டுல பார்த்தா பாந்தமா அடக்கமா இருக்குறவரு போல தெரியுறவரு, வெள்ளை கைலியிலும், மேலுக்கு முண்டா பனியனிலும் அதுக்கு மேல தேங்காய்ப்பூ டவலோட பாக்குறப்போ ஆஜானுபாகுவா தெரியுறாரு அப்பிடியே அய்யனாரு சாமியாட்டம்.
            விகடுவெ பாத்ததும் முகத்துல அவருக்கு ஒரு சிரிப்பு. "வாம்ய்யா வா! இதாங் வர்ற நேரமா? மணி ஆறே காலு ஆவுது!"ங்றாரு. சொல்லிட்டு இவ்வேம் கையப் பிடிச்சி அழைச்சிக்கிட்டு உள்ளே கூடத்துக்குள்ள போறாரு. உள்ளே போனாக்கா வெளியிலேந்து தெரியுற வூடு உள்ளே ரொம்ப பிரமாண்டமா தெரியுது. மேல சரவிளக்குக ஒவ்வொண்ணும் பெரிசு பெரிசா தொங்குது. கூடத்த மரவேலைல அழகா செஞ்சிருக்கிற தடுப்ப வெச்சி மறைச்சிருக்காரு. இவ்வேன் வூட்டோ பிரமாண்டத்த பாத்தப் பின்னாடித்தாம் அங்க பிரம்பு நாற்காலியில உக்காந்திருக்கிற விநாயகம் வாத்தியாரு, சுப்பு வாத்தியாரு, வெங்குவையெல்லாம் பாக்குறாம். இவுங்க எதுக்கு இங்க மாலிக் அய்யாவோட வூட்ட கண்டுபிடிச்சி வந்து உக்காந்திருக்காங்கன்னு இப்போ விகடுவுக்குக் கொழப்பமா போவுது. ஒரு வேகத்துல ஆபிஸ ஆரம்பிச்சிட்டு வூட்டுல வந்து நின்னுப்புடுவான்னு நெனைச்சிக்கிட்டு அதுக்கு மின்னாடியே வந்து நிப்பாட்டிப் புடலாமோன்னு வந்திருக்காங்களோன்னு நினைச்சிக்கிறாம் விகடு. அவங்களோட முகத்தப் பாக்குறப்ப அப்பிடித்தாம் தோணுது. யாரு முகத்துலயும் ஒரு சிரிப்பக் காணும். முகமெல்லாம் சும்மா உம்முன்னுத்தாம் இருக்கு.
            மாலிக் ஒரு பெரம்பு நாற்காலியில உக்காந்தவரு அவருக்கு எதுத்தாப்புல இருக்குற பெரம்பு நாற்காலியக் காட்டி, "அஞ்ஞ அப்பிடி உக்காருய்யா!"ங்றாரு. அந்த பெரம்பு நாற்காலியில உக்கார வசதியா ஒரு குஷனும் போட்டிருக்கு. அந்தக் குஷன்லயும் அழகழகான தையலு வேலைபாடுங்க செஞ்சிருக்கு. இவ்வேம் தயங்குனாப்புல உக்காந்திருக்காம். இவுங்க ரெண்டு பேருக்கும் இடையுல போட்டு இருக்குற பெரிய பெரம்பு சோபாவுலத்தாம் வெங்குவும், சுப்பு வாத்தியாரும் உக்காந்திருக்காங்க. பக்கத்துல இருக்குற இன்னொரு பெரம்பு நாற்காலியில விநாயகம் வாத்தியாரு உக்காந்திருக்காரு.
            எதுத்தாப்புல இருக்கற டீப்பாயில நாலு கிளாஸ் கப்புங்க இருக்கு. அந்தக் கப்புங்களும் வேலைப்பாடான கப்புங்கத்தாம். அந்தக் கப்புல ஏதோ குடிச்சிருக்காங்க. அது இப்போ காலியா இருக்கு. காலியா இருக்குற அந்தக் கப்புகளயும் பாத்துக்கிட்டே இருக்கலாம் போல. அவ்வளவு அழகா இருக்கு அந்தக் கப்புங்க. "சித்தே யிரு! வந்துடறேம்!"ன்னு சொல்லிட்டு உள்ளார போறாரு மாலிக் அய்யா. "ஏம் பெளஜி இன்னொரு ரோஸ் மில்க் வாணும்!"ங்றாரு. கொஞ்ச நேரத்துல கையில அதே மாதிரியான கிளாஸ் கப்புல ரோஸ் மில்க்கோட வர்றாரு. அதெ விகடுகிட்ட கொடுக்குறாரு. இவ்வேம் எழுந்திரிச்சி அதெ வாங்கிக்கிறாம்.
            "குடி!"ன்னு சொல்லிட்டு கண்ணாலயும் ஒரு சிமுட்டு சிமுட்டுறாரு மாலிக்.
            விகடு பாதி கப்பு குடிச்சிருப்பாம். அப்படியே அதெ டீப்பாயில வைக்கிறாம்.
            மாலிக் சிரிக்கிறாரு. "அதெ ஒரு கலக்கு கலக்கிக் குடிம்யா! மேட்டரே கீழேத்தாம் இருக்கு. அத்தனையும் கன்டென்ட்டு. ஒடம்புக்கு ஒரம்யா!"ங்றாரு. விகடு அவரு சொன்னபடியே குடிச்சிட்டு கப்பைக் காலி பண்ணி இப்போ டீப்பாயில வைக்கிறாம். அந்த ரோஸ் மில்க்கோட சுவை அப்பிடியே நாக்கு, பல்லு, தொண்டையில அப்பிடியே ஒட்டிக்கிட்டு மாதிரி இருக்கு. இன்னொரு கப்பு வாங்கிக் குடிக்கலாம்னு தோணுது. அந்த ருசியில மயங்கிப் போய்ட்டாம் விகடு. மயங்குனவனுக்கு ஒரு யோசனெ வருது பாருங்க, இந்த ரோஸ் மில்க்க குடிக்கிறதாலத்தாம் மாலிக் இப்பிடி ரோஸூ கலர்ல தக தகன்ன இருக்கிறாரோன்னு. இந்த நெனைப்பு வந்ததும், அடச்சீ எந்த வெசயத்துக்கு வந்து, ‍அதெ சுத்தமா மறந்துப்புட்டு எதெ நெனைச்சிக்கிட்டு இருக்கிறேம்னு தனக்குத் தானே ஒரு கடியலும் கடிஞ்சிக்கிறம்.
            இவ்வேம் குடிச்சி முடிச்ச பின்னாடியும் அங்க எந்தப் பேச்சம் இல்லாம ரெண்டு நிமிஷத்துக்கு ஒரு அமைதி அங்கே நீடிக்குது. யாருக்கும் என்னா பேசுறதுன்னு புரியல. மாலிக் அய்யாவே பேச ஆரம்பிக்கிறாரு. "இத்து நம்ம வூடு! இந்த வூட்டுக்கு அந்தாண்ட, இந்தாண்ட உள்ள ரண்டும் நம்ம மகருகளுக்காக வாங்கிப் போட்டது. ஒமக்கு ஆபீஸூக்கு வலது பக்கமா உள்ள வூட்டத்தாம் தரலாம்னு பாத்தேம். அது ரொம்பவே வசதியான வூடு. எடது பக்கம் உள்ளது கொஞ்சம் வசதி கம்மித்தாம். வேணும்னா தேவையான வசதியெ செஞ்சித் தந்துப்புடுவேம். ஒம்மட வூட்டு ஆளுங்கத்தாம் வசதி கம்மியா இருந்தாலும் பரவாயில்லன்னு எடது பக்கம் உள்ள வூடே போதும்ன்னுட்டாங்க."ன்னு சொல்லி நிறுத்துறாரு மாலிக்.

            விகடு ஒண்ணும் புரியாம முழிக்கிறான். இப்பத்தாம் விநாயகம் வாத்தியாரு பேச ஆரம்பிக்கிறாரு. "ஆபீஸூ விசயமா எல்லாம் பேசியாச்சி வெகடு. இந்தப் பக்கம் உள்ள வூடே ஒமக்குப் போதும். அந்தப் பக்கம் உள்ளது மாளிகைக் கணக்கா இருக்கு. அம்மாம் பெரிசு தேவையில்ல. ரெண்டு வூட்டையும் புரபஸரு சாரு அழைச்சிட்டுப் போயிக் காட்டுனாரு. மித்த வெசயத்தையும் பேசியாச்சி."ங்றாரு விநாயகம் வாத்தியாரு.
            "ஏம்யா விகடு பாய்! உங்க ஆளுங்ககிட்டே சொல்லிட்டேம் ச்சும்மா கெடக்குற வூட்டுக்கு எதுக்கு முன்பணம், வாடகென்னு? கேக்க மாட்டேங்குறாங்க. இத்தனி நேரமும் அதெயே பேசி வேற வழியில்லாம அதெ கொடுத்துதான்னு ஆவ்வேம்னு பிடிவாதமா நின்னுப்புட்டாங்க. ஆனாலும் இம்மாம் பிடிவாதம் ஆவாதுய்யா ஒம்மட ஆளுகளுக்கு! நமக்கும் வேற வழி புரியல. சரின்னு அய்யாயிரத்த முன்பணமா கொடுங்க. வாடகெ ஐநூத்தக் கொடுங்கன்னேம். அவுங்க பத்தாயிரத்த முன்பணமா கொடுத்து, வாடகெ ஆயிரம்னு சொல்லிப்புட்டாங்க. நாம்ம சொல்றதெ கேக்குறாப்புல இல்லெ. அதாம்யா வேற வழியில்லாம ஒத்துக்கிறாப்புல ஆயிப் போச்சு. அப்டியே ஒரு அக்ரிமெண்டும் போட்டுப்புடணும்னு சொல்லிப்புட்டாங்க. அதுவுஞ் சரித்தாம். ஒரு பிசினஸ்னு வார்றப்ப அப்பிடித்தாம் இருக்கணும்னு இவுங்க சொல்லிப்புட்டாங்க. நமக்கு ன்னா பண்றதுன்னு புரியல. சரின்னுட்டேம்!"ன்னு சொல்லிட்டுச் சிரிக்கிறாரு.
            இப்பிடி ஒரு திடீர்மாற்றத்த எதிர்பார்க்காததால அப்பிடியே அடிச்சிப் போட்ட ஆளு போல அப்படியே சந்தோஷத்துல ஒடைஞ்சிப் போயி உக்காந்திருக்காம் விகடு.
            "இந்தாரும்யா! நமக்கு இந்த நல்ல நாளு, கெட்ட நாளு, நல்ல நேரம், கெட்ட நேரம் இதுலல்லாம் நம்பிக்கெ கெடையாது. அதுக்காக ஒங்க ஆளுககிட்டேயும் அப்பிடி நடந்துக்க முடியா. நீயி அவுகளுக்கிட்ட கலந்துக்கிட்டு ஒரு நல்ல நாள்ல ஆபீஸெப் போட்டுடு. அந்த வூடு ச்சுத்தமாத்தாம் இருக்கு. இருந்தாலும் நாம்ம நாளைக்கே ஆளுகள சிலதெ வரச் சொல்லி அந்த வூட்டெ சுத்தம் பண்ணிப் போட்டுடுறேம். இத்துச் சம்பந்தமா ஒம்மட ஹெட் ஆபீஸோட பேச வேண்டியதெ எல்லாத்தியும் பேசி வெச்சிருப்பேன்னு நெனைக்கிறேம். நாம்ம நம்ம ஆளுககிட்ட சொல்லிப்புடறேம். எடையில ஒரு நாளைக்குப் போன்ல சொல்லிட்டு வந்தீன்னா எல்லாத்தியும் வரச் சொல்லிப்புடுவேம். அவுககிட்டே நீயி கொஞ்சம் பேசிட்டேன்னா மித்த மித்ததையெல்லாம் முடிச்சிப்புடலாம்!"ங்றாரு மாலிக்.
            "ரொம்ப சந்தோஷம்! பயல ஒங்க பயலா நெனைச்சி நீஞ்ஞத்தாம் நல்லா பாத்துக்கணும். ரொம்ப ஆசெப்படறாம். அதாங் ஒண்ணுஞ் சொல்ல முடியாம ஆரம்பிக்கிறாப்புல இருக்கு!"ன்னு இப்பத்தாம் சுப்பு வாத்தியாரு வாயத் தொறந்துப் பேசுறாரு.
            "இந்தாருங்க! நமக்கு பாட்டனிலத்தாம் வெசயங்கப் புரியும். அதெ பத்திக் கேட்டாக்கா எதெ வாணாலும் சொல்லுவேம். இதுல நமக்கு ஒண்ணுந் புரியா. ஒங்க மவ்வேம்தாம் இதுல எல்லாம் நமக்கு. அவ்வேம் சொல்றதுதாம் இதுல எல்லாமும். இதுல அவ்வேம்தானம் நமக்குப் புரபஸர். இறைவன் மிகப் பெரியவேம். யாரு யாருக்கு ன்னா செய்யணுமோ அதெச் செய்வாம். நீஞ்ஞ ஒண்ணும் கவலெப்பட வேண்டியதில்ல. நமக்கும் ஒரு பய இல்ல. ரண்டும் மகருங்கத்தாம். இவ்வேம் நமக்கு ஒரு பயலா இருந்துட்டுப் போறாம். நல்லா வருவாம் இறைவனோட கருணையில!" அப்பிடிங்கிறாரு மாலிக்.
            மாலிக் இப்பிடிச் சொன்னதும் வெங்குவுக்குக் கண்ணுல தண்ணிக் கட்டிக்கிது. "நீஞ்ஞத்தாம் அவனெப் பாத்துக்கணும். எஞ்ஞ வூட்டுக்காருக்கும் அவ்வேம் சொல்ற விசயமெல்லாம் புரியலிங்கோ. ஆளாளுக்கு சொல்லிப் பாத்தாச்சி. பிடிவாதமா நிக்குறாம். ஒங்கள நம்பித்தாம் புள்ளிய ஒப்படைக்கிறோம்!"ங்குது வெங்கு சேலைத் தலைப்பால கண்ணைக் தொடைச்சிக்கிட்டு.
            "கலக்கமே வாணாம். நல்லா வருவாம் அவ்வேன். அவ்வேம் எத்தினி ஆளுக வேணும்னு கேக்குறானோ அத்தனெ ஆளுகளப் பிடிச்சி விடுறது நம்ம வேல. எல்லாத்தியும் பெருங்கையிகளாவே பிடிச்சி விடுறேம். போதும்ல!"ன்னு சொல்லி புன்சிரிப்பு சிரிக்கிறாரு மாலிக்.
            "செரி! பெறவு நாஞ்ஞ கெளம்புறோம்! பாத்துக்குங்க!"ன்னு சொல்லி எழுந்திருக்கிறாரு விநாயகம் வாத்தியாரு. அவரு அப்பிடிச் சொல்லி எழுந்திரிச்சதும் சுப்பு வாத்தியாரு, விகடு, வெங்கு எல்லாரும் எழுந்திரிச்சிக் கெளம்புறாங்க. மாலிக்கும் எழுந்திரிக்கிறாரு. இவுங்க கூடவே வெளியில வர்றாரு. கேட்டு வரைக்கும் வந்து வழியனுப்பப் பாக்குறாரு.
            "நீஞ்ஞத்தாம் பாத்துக்கணும் பயல!" அப்பிடிங்கிறாரு இப்போ சுப்பு வாத்தியாரு மறுபடியும். மாலிக் தலையைச் சிரிச்சபடியே ஆட்டுறாரு.
            "வெகடு! சைக்கிள இஞ்ஞ வுட்டுட்டு வண்டியில வா போவலாம்!"ங்றாரு விநாயகம் வாத்தியாரு. "சைக்கிள்லயே வர்றேம்!"ங்றான் விகடு.
            "அதான சைக்கிள வுடும்யா! இன்னிக்கு வண்டியில போ. பெறவு வந்து எடுத்துக்கலாம்யா! கூடிய சீக்கிரமே ஒமக்கு ஒரு வண்டிய வாங்கித் தர்றேம்!"ங்றாரு மாலிக்.
            "இருக்கட்டுகங்கய்யா! நமக்கு அஞ்ஞ இஞ்ஞ போக கொள்ள சைக்கிளு வேணுங்கய்யா! நாம்ம சைக்கிள்லயே கெளம்புறேம்!"ங்றான் விகடு.
            "ரொம்ப பிடிவாதக் காரப் பயெ! செரி!"ங்றாரு மாலிக்.
            "செரி வாத்தியாரே! நீஞ்ஞ வண்டிய கெளப்பிக்கிட்டு அவுங்கள அழைச்சிட்டுக் கெளம்புங்க. நாம்ம இவ்வேம் சைக்கிளோட மொல்லமா வார்றேம்!"ங்றாரு விநாயகம் வாத்தியாரு. சரிதான்னு டிவியெஸ் பிப்டியை ஸ்டார்ட் பண்ணிட்டு அதுல வெங்குவை ஏத்திக்கிட்டுக் கெளம்புறாரு சுப்பு வாத்தியாரு.
*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...