3 Dec 2019

திடல்ல நின்ன பொண்ணு!


செய்யு - 287

            விகடபிரசண்டரோட மில்லுகாரரு பேசிட்டு இருக்கிறப்ப வைத்தி ஆச்சாரியோட தோஸ்த்தா இருக்குறதப் பத்தி எதேச்சையா பேச்சு வந்திருக்கு. "மனுஷனுக்கு ஆறு பொண்ணுங்க, ரண்டு பிள்ளைங்கன்னாலும் எதப் பத்தியும் நெனைச்சிக் கலங்கிக்க மாட்டாரு. ரண்டு பொண்ணுங்களுக்குக் கல்யாணத்த முடிச்சிட்டாரு. இன்னும் நாலு பொண்ணுங்க இருக்கேன்னு கேட்டாக்கா அதது ஆவ வேண்டிய காலத்துல, நடக்க வேண்டிய நேரத்துல ‍ஜோக்கா நடக்கும்பாரு. அலட்டிக்காத மனுஷன். தானுண்டு, வேலையுண்டுன்னு இருக்குற அசாமி!" அப்பிடின்னு சொல்லிருக்காரு.
            இதெல்லாம் விகடபிரசண்டரு மனசுல ஞாபவத்துக்கு வந்துப் போவுது. ஒண்ணுக்கு நாலு பொண்ணா வைத்தி ஆச்சாரி வூட்டுல இருக்குறதால, இந்நேரத்துக்கு ஒண்ணு கல்யாணம் ஆயிப் போயிருந்தாலும் மிச்சம் மூணு பொண்ணுங்க இருக்கும்ங்க. நாலுல ஒண்ணோ, இல்ல மூணுல ஒண்ணோ சுப்பு வாத்தியாருக்குன்னு அதுல ஒரு பொண்ணு இருக்காமலா போயிடும்? வடவாதி போனாக்கா சுப்பு வாத்தியாருக்குப் பொண்ணப் பிடிச்சிடலாம்னு வில்லியாண்டவர் கோயில்ல நின்னு சுப்பு வாத்தியாரோட பேசிட்டு இருக்கிறப்பவே கணக்குப் போடுறாரு விகடபிரசண்டரு.
            "நமக்குத் தெரிஞ்ச வகையில ஒரு குடும்பத்தப் பத்தின சங்கதி நம்மகிட்ட இருக்குடாப்பா. நாம்ம வெசாரிச்சுப்புட்டு யண்ணன், யண்ணிக்குச் சொல்றேம். அவுங்கப் போயி பாத்துட்டு முடிவு பண்ணட்டுமா?"ங்றாரு விகடபிரசண்டரு சுப்பு வாத்தியார்ட்ட.
            ஒரு நிமிஷம் யோசிச்சுப் பாக்குற சுப்பு வாத்தியாரு, "அவுங்க இப்போ நிக்குற நெலையில எந்தப் பொண்ணப் போயி பாக்கச் சொன்னாலும், அந்தப் பொண்ணையேப் பிடிச்சிக் கட்டி வெச்சிடுவாங்கய்யா. நமக்காக எவ்ளவோ பண்ணிருக்கீங்க! ஒண்ணு ரண்டுன்னு கணக்குச் சொல்ல முடியா. இந்த வெசயத்தையும் நீங்களே பாத்துப் பண்ணிப்புட்டா நல்லதா இருக்கும்னு தோணுதுங்கய்யா!" அப்பிடிங்கிறாரு சுப்பு வாத்தியாரு.
            "யப்பாடி யப்பாடா! நீயி சொல்றது நமக்கு வெளங்கலையே!"ங்றாரு விகடபிரசண்டரு.
            "நீங்களே போயிப் பாத்தீங்கன்னா பொண்ணு சரிபட்டு வருமா? ன்னாங்றத முடிவு பண்ணிப்புடலாம். ஒங்களோட ராசித்தாம்யா நமக்கு ஒத்து வரும். செரமமா நெனைக்கலைன்னா நீஞ்ஞளே போயிப் பாத்துச் சொன்னீங்கன்னா புண்ணியமா போவும்!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            விகடபிரசண்டரு சிரிக்கிறாரு. "இத்து என்னடாப்பா! ஒங்க குடும்பத்துல பெரிய மனுஷங்க இருக்கிறப்போ நாம்ம போயிப் பாத்தா, அவுங்க ன்னா நெனைச்சிப்பாங்க?"ங்றாரு.
            "நீஞ்ஞ போயி பாத்துட்டு வந்துச் சொல்றதப் பத்தி யாரு ன்னா சொல்ல முடியுங்கய்யா? நம்ம குடும்பத்துக்கு நீஞ்ஞத்தாம் மூத்தவங்க போல. நீஞ்ஞத்தாம் மனசு வைக்கோணும்!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "செரி! செரி! நமக்கும் அஞ்ஞ சங்கத்து வேலை சம்பந்தமா போவ வேண்டிய சோலி இருக்குது. அலைச்சல யோஜனைப் பண்ணிட்டு வேற ஆளுங்கள போவச் சொல்லலாம்னு நெனைச்சிட்டு இருந்தேம். போறதுதாம் போறேம். ஒரு அலைச்சல்ல ரண்டு வேலை முடியுற மாரி தோணுறதால்ல போயிட்டு வர்றேம். போயிட்டு ஒமக்கு ஒரு கடுதாசிப் போடுறேம். ஒனக்குத் தோதுபடும்னு தோணுனா நீயி ஒரு கடுதாசிய நமக்குப் போடு. பெறவு ஒங்க யண்ணன் யண்ணிக்கிட்ட சொல்லிப் போயி பாக்கச் சொல்றேம். செரிதாம்ல?"ங்றாரு விகடபிரசண்டரு.
            சுப்பு வாத்தியாருக்கு இப்போ திருப்தியாப் போவுது. ஒண்ணுஞ் சொல்லாம தலையாட்டுறாரு.
            "எப்பா தெய்வமே! மலெ போல நெனைச்சிட்டு வந்த காரியம் நல்ல வெதமா முடிஞ்சிடுச்சி!"ன்னு சாமிக்கு ஒரு கும்பிட போட்டுட்டுக் கிளம்புறாரு விகடபிரசண்டரு. சுப்பு வாத்தியாரும் அவருமா ரெண்டு பேரும் கிளம்பி வூட்டுப் பக்கம் வர்றாங்க.
            "ஒங்க சிஷ்யப் புள்ள ன்னா சொல்லுது? கலியாணத் தோத பண்ணிப்புடலாமா? பொண்ண வேத்துல பாக்கலாமா? யில்ல அத்தாங்காரனோடததாம் கட்டிக்கும்மா?" அப்பிடிங்கிது பத்மா பெரிம்மா ஒரு நக்கலு சிரிப்போட.
            "ஒங்களுக்குத் தெரிஞ்ச வகையில நீஞ்ஞ விசாரிங்க. நமக்குத் தெரிஞ்ச வகையில நாமளும் விசாரிச்சி வைக்கிறேம். நல்ல எடம்னு ‍தோதுபட்டா போயிப் பாத்துப் பேசி முடிச்சிடலாம்!"ங்றாரு விகடபிரசண்டரு.

            "அப்பிடிப் போடுங்க அரிவாள! நீஞ்ஞ வந்துப் பேசுனா சங்கதி ஆயிடும்ங்றது தெரியும். ஒங்களக் கொண்டு வர்லேன்னா காரியம் ஆவுமா? நல்ல நேரத்துல வந்து நல்லது பண்ணீங்க! ஒங்களுக்குக் கோடி புண்ணியமா போவும்! நம்மட யம்பீய அந்த நாயீப் பயெ குடும்பத்துல வுழாம காபந்துப் பண்ணிப்புட்டீங்க!" அப்பிடிங்குது செயராமு பெரிப்பா.
            "நமக்கும் தெரிஞ்ச வகையில நாமளும் விசாரிச்சி வைக்கிறேம். நீஞ்ஞலும் ஒங்களுக்குத் தெரிஞ்ச வகையில விசாரிப்புப் பண்ணுங்க. யாரு பாக்குற பொண்ணு அமையுமோ கட்டி வெச்சிப்புடலாம்."ங்குது யம்மாக்கெழவி.
            "அதாஞ் செரி! ஒண்ணுக்கு நாலா நாலு தெசையிலயும் பாப்பேம். யம்பீக்கு எஞ்ஞ பொண்ணு ஒளிஞ்சிருக்கோ, அஞ்ஞயிருந்தே கொண்டாந்துப்புடுவோம்!"ன்னு பத்மா பெரிம்மாவும் சொல்லிட்டுச் சிரிக்கிது.
            இப்படி ராத்திரிப் பூரா சிரிப்பும் வேடிக்கையுமா பேசிட்டுக் கெடந்தவங்க, காலையில பொழுது விடிஞ்சதும் மொத வேலையா டீத்தண்ணிய போடச் சொல்லிக் குடிச்சுப்புட்டு, அவங்கவங்களுக்குச் சோலி இருக்கிறதா சொல்லிப்புட்டு மொத பஸ்ஸப் பிடிச்சிக் கெளம்பிட்டாங்க. பெரும்பாலும் அவங்க பயணங்கள் எல்லாமும் அப்படித்தாம் இருக்கும்.‍ பெரும்பாலும் வேலைகள முடிச்சிட்டு ராத்திரி நேரத்துக்கு வருவாங்க. ராத்திரி தூங்குற நேரம்னு பாக்காம விடிய விடிய உக்காந்துப் பேசிப்புட்டு விடியக்காலையில மொத பஸ்ஸுக்குக் கெளம்பிப் போயிடுவாங்க. சுப்பு வாத்தியாருக்கு வேலங்குடி பெரியவரோட பொண்ணு அமைஞ்சிடக் கூடாதுன்னுத்தான் இந்த ஒண்ணுக்கு மட்டும் பகல் நேரமுன்னு கூட பாக்காம வேலை சோலியையெல்லாம் போட்டுப்புட்டு பெரிம்மாவும், பெரிப்பாவும் விகடபிரசண்டரு வாத்தியார்ர கெஞ்சிக் கூத்தாடி காலங்காத்தாலயே கெளப்பிக்கிட்டு வந்தது. இப்பத்தாம் சோலி ஆயிடுச்சேன்னு கருக்கல்லயே காலாங்காத்தாலேயே கெளம்ப்பிட்டாங்க. ஒரு வேளை காரியம் அவங்க நெனைச்ச மாதிரிக்கு ஆவலேன்னா இன்னொரு பகலு ராத்திரி தங்கி பேசிட்டுத்தாம் போயிருப்பாங்க.
            ராத்திரி அவுங்கப் பேசுற பேச்ச கேக்க கேக்க விடிய விடிய நாடகம் பாக்குற மாதிரித்தாம் இருக்கும். நவரசங்களையும் கொட்டித்தாம் பேசுவாங்க. திடீர்னு கொஞ்ச நேரத்துக்குக் கோவமா பேசிட்டு இருப்பாங்க. திடீர்னு சிரிப்பு எப்படித்தாம் வருமுன்னே தெரியாது. கிண்டலும் கேலியும் பண்ணிட்டுச் சிரிச்சிட்டுப் பேசிட்டு இருப்பாங்க. திடீர்னு சோகமான மனநிலைக்கு வந்து மூஞ்சைச் சுருக்கிட்டு பேசுவாங்க. திடீர்ன்னு எப்போ உற்சாகம் வருமுன்னு தெரியாது. கலகலப்பா பேச ஆரம்பிச்சிடுவாங்க. மனசுல உள்ளதையெல்லாம் கொட்டித் தீக்குறதுக்கு அவங்களுக்கு ராத்திரி நேரத்துப் பேச்சுத்தாம் உதவியா இருந்துச்சு. ராத்திரி வாரப்பா இருக்குற கலவரமான முகம், விடியக்காலையில கெளம்புறப்ப அம்புட்டுத் தெளிவா இருக்கும். அப்படியும் இப்படியுமா பலவிதமாப் பேசி காலையில ஒரு தெளிவுக்கு வந்துப்புடுவாங்க. விடியாத ராத்திரின்னு ஒரு ராத்திரி ஒலகத்துல எங்க இருக்கறதுங்றது அவங்களப் பொருத்த மட்டுல உண்மைத்தாம். அதே நேரத்துல அவங்க அப்படி எல்லா வெதமாவும் பேசித் தெளிவுக்கு வந்துப்புடுவாங்க, ஆனா இதெ வெளியில இருந்து கேக்குற ஒரு ஆளு மண்டக் கொழம்பிப் போயிடுவாம்.
            அந்த வாரத்துலயே ஒரு நாள்ல விகடபிரசண்டரு வாத்தியாரு வடவாதிக்கு பயணத்தக் கெளப்பிட்டாரு. கெளம்பி வந்தவரு மில்லுகாரர்ட்ட மொதலியாரு சங்கத்துக்காக ஒரு பரஸ்பர சகாய நிதி லிமிடெட் ஆரம்பிக்கணுங்றதப் பத்திப் பேசிட்டு, அது சம்பந்தமா சர்க்கரை ஆலை மொதலியாரு மொதலாளியையும் ஒரு மரியாதைக்குக் கலந்துகிட்டு, அங்க வேலைப் பாத்துட்டு இருந்த வைத்தி தாத்தாவையும் கெளப்பிக்கிட்டு, மூணு பேருமா சேர்ந்து வைத்தி தாத்தா வூட்டுக்கு வந்திருக்காருக்காங்க.
            இவங்க வந்த நேரத்துக்கு மாடு மேய்க்கிறதுக்குப் போன வெங்கு மாடுகள மெய்ச்சிக்கிட்டு அங்க சவுக்கண்டித் தெடல்ல கெடந்திருக்கு. சேதி தெரிஞ்சு ஒடனே சாமியாத்தா, "அவளெ ஏம்டி இன்னிக்கு அனுப்பித் தொலைஞ்சீங்க?"ன்னு வூட்டுல இருந்த பொண்டுகள நாலு திட்டுத் திட்டிப்புட்டு, "குறுக்கால போயி கடையில வெல்லமும், காபித்தூளு பாக்கெட்டும், கல்ல மாவும் வாங்கியாந்து காபியைும், பஜ்ஜியைும் போட்டு வையுங்கடி. நாம்ம போயி அவளெ கெளப்பிட்டு வந்திடறே!"ம்னு தேன்காடு சித்திய கையோடக் கூட்டிட்டுக் கெளம்புது. அதுங்க ரண்டு பேருமா வேக ‍வேகமாப் போயி சவுக்கண்டித் தெடல்ல நின்னுட்டு இருந்த வெங்குவ பிடிக்குறதுக்குள்ள மேலு மூச்சு, கீழு மூச்சுமா வாங்குது.
            நின்னு பேசுறதுக்கு நேரமில்லாம, சாமியாத்தா வெங்குவ கெளப்பிக்கிட்டு ஓடிக்கிட்டே, தேன்காடு சித்திட்ட, "நீயி இஞ்ஞயே மாடுகளப் பாத்துட்டு நில்லு. நாம்ம இவளெ ஒரு ஓட்டமா போயி அஞ்ஞ விட்டுப்புட்டு காரியம் ஆனவுடனே வந்துப்புடறேம். மாடுக பத்திரம்டி. அஞ்ஞ இஞ்ஞ வேடிக்கைப் பாத்துப்புட்டு மாடுகள எவ்வெம் வயல்லயாவ எறங்க விட்டுப்புட்டீன்னா வெச்சுக்கா தோல உரிச்சி கையில கொடுத்துப்புடுவேம் பாத்துக்க! சூதானமா பாத்துக்கோணும்! ஆமா சொல்லிப்புட்டேம் சொல்லிப்புட்டேம்! போன ஒடனேயே இன்னொருத்தி எவளாச்சியும் அனுப்பி வுடறேம். அது வரைக்கும் பத்ரம் பத்ரம்!"ன்னு சொல்லிட்டுக் கிளம்புது.
            வெங்குவ அழைச்சிக்கிட்டு ஓட்டமும் நடையுமா ஓடியாருது சாமியாத்தா. வூட்டுக்கு வந்ததும் வேக வேகமா மூஞ்சை அலம்பி, தலையை முடிஞ்சி வுட்டு, இருக்குற பொடவையில ஒரு நல்ல பொடவையா கட்டிவுட்டு வெங்குவ கொண்டாந்து நிறுத்துனா அதுக்குள்ள முக்காலு மணி நேரத்துக்கு மேல ஆயிடுச்சி. போயி அழைச்சி வர்றதுக்குத்தாம் நேரமானுச்சே தவிர, பொண்ண சிங்காரிச்சிக் கொண்டாந்து நிறுத்துறதுக்கு ரண்டு நிமிஷங் கூட ஆயிருக்காது. ரொம்ப நேரமாயிப் போனதால காப்பித் தண்ணிய, பஜ்ஜிய எல்லாம் இவங்க வந்து சேர்றதுக்குள்ள கொடுத்து முடிச்சாச்சி. அதெ சாப்பிட்டுட்டு நல்லா ஏப்பம் வுட்டுப்புட்டு திண்ணையில உக்காந்திருக்காங்க மூணு பேரும்.
            பொண்ண ஒரு நிமிஷம் கொண்டாந்து நடுக்கூடத்துல நிப்பாட்டி, அவங்கள உள்ளார வரச்சொல்லி பாக்க வெச்சுப்புட்டு ஒடனே வெளியில அழைச்சிட்டுப் போயிட்டாரு வைத்தி தாத்தா. சாமியாத்தாவும் வெங்குவ திரும்ப அழைச்சிக்கிட்டு சமையலுகட்டுப் பக்கமா போயிடுச்சி.
            இப்பிடி ஒத்த நிமிஷ நேரத்துக்கு நிக்க வைக்குறதுக்கா உசுர போற வேகத்துல ஓட வுட்டு அழைச்சி வந்துச்சு யம்மான்னு தேமேன்னுப் போவுது வெங்குவுக்கு.
*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...