4 Dec 2019

18.5



            மன அழுத்தம் மற்றும் மன உளைச்சலுக்கு எதிரான கித்தாஸின் கோட்பாடுகள் :

            போதிய ஓய்வின்மை மனிதர்களுடைய பிரச்சனை. பலூன் ஊத ஊத பொறுத்துக் கொள்ளாது. வெடித்து விடும். வெடித்த பின் பலூனுக்காக அழுது பிரயோசனமில்லை.
            வேலை, தொலைக்காட்சி, இணையம், டாஸ்மாக், புகை, போதை இத்தியாதிகள் நேரத்தை விழுங்குகின்றன. உங்களை ஓய்வற்றவரைப் போல செய்து கொண்டிருக்கின்றன. உங்கள் பெரும்பான்மையான நேரத்தை தின்று ஒழிக்கும் அவற்றை விட்டொழித்து விட்டால் உங்களுக்கான நேரம் கிடைத்து விடும். கிடைக்கும் நேரத்தில் உங்களுக்குப் பிடித்தமானதைச் செய்யுங்கள். அது வேலை ஆகாது. அது உங்கள் வாழ்க்கை.
            ஓய்வுக்குப் பின் மனம் கொஞ்சம் நிம்மதியாக உணர்வீர்கள். உங்கள் மனதை ஓய்வாக விடுங்கள். ஓய்வெடுக்கிறேன் என்று படுத்துக் கொண்டு எதையாவது சிந்தித்துக் கொண்டு இருக்காதீர்கள். உங்களால் மேற்கொண்டு சிந்திக்க முடியாத ஒரு வனாந்திரத்தில் அதை மட்டும் பார்த்துக் கொண்டு, ரசித்துக் கொண்டு நகருங்கள். நீங்கள் உங்களுக்கு மீள கிடைப்பீர்கள்.
            பணத்தைச் சேர்ப்பது, வெட்டி வம்புக்குத் திட்டமிடுவது, குடி கெடுக்க ஆலோசிப்பது, நடக்கும் வழியில் முட்களை வாரியிறைக்க சிந்திப்பது என்பது போன்ற தொடர்பற்ற வேலைகள் வேண்டாம். பிடித்தவரை விடாது பணம். உண்டான வெட்டி வம்பு முடிவுக்கு வராது. குடி கெடுக்கும் குணம் அவ்வளவு லேசில் போகாது. வாரியிறைத்த முட்கள் முளைத்துக் கொண்டே இருக்கும்.
            உங்களின் வாழ்க்கைப் பாடலைப் பாட ஆரம்பித்து விடுங்கள். உண்மையில் பாடலுக்காக நீங்களா? உங்களுக்காக பாடலா? பெரும்பாலான விசயங்களில் நீங்கள் அடுத்தவர்களின் பாடலில் ராகம் பிடித்து தாளம் போடுகிறீர்கள். அந்த விசயங்களுக்காகத்தான் நீங்கள் என்பது போல. அந்த அழுத்தம்தான். அதுதான் உங்கள் பிரச்சனை. நீங்கள் நீங்களாக இருந்தால் அழுத்தமாவது இறுக்கமாவது? இன்னொருவராக மாறி அழுத்தத்தைத் தேடிக் கொள்ள வேண்டாம். நீங்கள் நீங்களாக இருந்து இயல்பாக இருங்கள். அழுத்தம் என்பதும், இறுக்கம் என்பதும் மாயை.
****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...