செய்யு - 293
சாந்தா சித்தியைக் கட்டிக்கிட்ட சிப்பூரு
மதி சித்தப்பாவும் கருப்புதாம். ஆளு சட்டமா இருப்பாரு. ஒடம்புல ஒட்டுச்சதை கூடுதலா
இருக்காது. உள்ளார கலர் கலரா பனியனும், கலர் கலரா கால் சட்டையும் போட்டுக்கிட்டு வெள்ளைச்
சட்டையும், வெள்ளை வேட்டியுமா இருக்குற பழக்கம் உள்ளவரு அவரு. பொதுவாக வெள்ளை வேட்டி,
வெள்ளைச் சட்டைக்கு வெள்ளை பனியன்தான் பொருத்தமா இருக்கும். இவரு கலர் கலரா போட்டுருக்குற
பனியன் கொஞ்சம் உறுத்தலாத்தாம் தெரியும். அதுலயும் மேல் பட்டனைப் போட மாட்டாரு. அதால
அவரு போட்டுருக்குற பனியன் என்ன கலர்ங்கறது நல்லாவே பாக்குறவங்க கண்ண உறுத்தும். தோளுல்ல
சின்னதான ஒரு தேங்காப்பூ துண்டைப் போட்டுருப்பாரு. இதெல்லாம் வேலைக்குப் போயி, வேலை
செய்யுற எடத்துல இறங்குறதுக்கு முன்னாடி உள்ள நெலைமை. வேலையில எறங்கப் போறார்ன்னா
வெள்ளை வேட்டியையும், வெள்ளைச் சட்டையைும் அவுத்து வைச்சிட்டு அன்ட்ராயரும் பனியனுமாத்தாம்
வேலையை ஆரம்பிப்பாரு. வேலையை முடிச்சி வூடு திரும்புற நேரத்துல திரும்பவும் வெள்ளை
வேட்டியும், வெள்ளைச் சட்டையும் உடம்புல குடியேறிக்கும். சிப்பூரு தொர பெரிப்பா மாரில்லாம்
மதி சித்தப்பா தச்சு வேல, கொல்லு வேலயையெல்லாம் கலந்து செய்யாது. மரவேல மட்டுந்தாம்
பாக்கும்.
சாயுங்காலம் சிப்பூரு சித்தப்பா வேலய முடிச்சித்
திரும்புதுன்னா பட்டச் சாராயத்தைப் போட்டுட்டுத்தாம் வூட்டுக்கு வரும். அது ஒண்ணுத்தாம்
அதுக்கிட்ட இருந்த கொறை. மித்தபடி அநாவசியமா ஒரு வார்த்தைப் பேசாது. ஊர்ல திருவிழா
சங்கதின்னா சிப்புரு சித்தப்பாவ கவனமா பாத்துக்கணும். சாராயத்தப் போட்டுக்கிட்டு அதுல
ஆஜராயிடும். சாமி பொறப்பாடு முடிஞ்சி வந்து கோயில்ல எறங்குற நேரத்துல எப்படியும்
அதுக்கு சாமி வந்திடும். வேட்டி எங்க அவுந்து வுழுவுதுன்னு தெரியாத அளவுக்கு ஒரு கெட்டம்
ஆட்டத்தப் போடும். "எலேய் நமக்குக் கொறை இருக்குடா! கொறைப் பண்ணிப்பூட்டீங்கடா
சண்டாளப் பயலுகளா! நம்ம கொறையா தீக்காம ஒங்களுக்கு நல்ல கெதி இல்லடா!"ன்னு ஒடம்புல
மின்னலு தெறிக்குற மாதிரி அதுக்கு வெட்டி வெட்டி இழுக்கும். நாலு பேரு அதெப் பிடிச்சிக்கிட்டு
அதுகிட்ட என்ன ஏதுன்னு சங்கதியக் கேக்கணும். அதுவும் கெடா வெட்டி பட்டச் சாராயத்த வெச்சிப்
பூசைப் போடுங்கடான்னோ, சாவக் கோழிய அறுத்து கறிப் பண்ணி பட்டச் சாராயத்தை வெச்சிப்
பூசைப் பண்ணுங்கடான்னோ வாயில வந்ததச் சொல்லும். அது சொல்றபடியே பண்ணிப்புடுவோம்னு
சுத்திலும் நிக்குற மனுஷங்க சொல்லிப்புட்டா போதும் அதோட ஒடம்புக்குள்ள வந்த சாமி
வந்த வழியே போயிடும். அது இப்பிடிச் சாமியாடி முடிக்கிறதுக்குள்ள அதோட ஒடம்புல ஊருல
இருக்குற அம்புட்டு மண்ணும் ஒட்டியிருக்கும். வெள்ளைச் சட்டை மண்ணு கலரு சட்டைய மாறியிருக்கும்.
பெறவு எங்கடா வேட்டியைக் காணும்னு இருக்குற ஆளுங்ககிட்ட அது சலம்பல் வுட்டுக்கிட்டு
இருக்கும்.
சிப்பூரு ராமரு கோயில்ல நடந்த சாந்தா
சித்திக் கல்யாணத்துக்கு சுப்பு வாத்தியாரு, வெங்கு, விகடு எல்லாரும் வந்திருந்தாங்க.
விகடுவுக்கு சுப்பு வாத்தியாரு ரோஸ் நிறத்துல ஒரு ஜிப்பா சட்டையைத் தைச்சுப் போட்டுருந்தாரு.
அவன் சின்ன புள்ளையா இருந்த சைஸூக்கு அது ரொம்ப வேடிக்கையா இருந்திருக்கு. பாக்குறவங்க
எல்லாம் ஆசையா தூக்கி வெச்சுக்கிட்டு இருந்திருக்காங்க. அதெ இப்ப வரைக்கும் சாந்தா
சித்தி, "கல்யாணத்துல பொண்ணு மாப்பிள்ளைய பாக்குறதை விட உன்னைத்தாம்டா எல்லா
சனங்களம் பாத்துச்சி. ஆம்மா பொண்ணையும் மாப்பிள்ளையையும் பாக்குறதக்கு ன்னா இருக்கு?
நாமளும் கருப்பு. அவுகளும் கருப்பு. ந்நல்ல சோடிப் பொருத்தம்தாம். கருப்பா இருக்குறவுகள
யாரு பாப்பாக? நீயி செவப்புல்லய்யா. அதுலயும் அந்த ரோஸூ கலர்ரு சிப்பாவுல ரொம்ப நல்லா
வேற இருந்தீயா? எல்லா கண்ணும் உம் மேலத்தாம்டா! ஆனா ஒம் மூக்கு இருக்கே! ஏம்டா அது
அப்பயிலேந்து இப்போ வரைக்கும் வத்தவே வத்தாதாடா? கோடைக்கும் உறியுறே சாமத்துக்கும்
உறியுறே?"அப்பிடிங்கும்.
அந்தக் கல்யாணத்துல லாலு மாமா சுப்பு வாத்தியாரைப்
பாத்து கையைப் பிடிச்சிக்கிட்டுது. "அத்தாம் சொன்னிச்சி. நம்ம ஊரு மாப்ள நீஞ்ஞ!
பெறத்தியா ஊர்ல ஏம் கஷ்டப்பட்டுக்கிட்டு? இஞ்ஞ வடவாதி பக்கத்துல ஓகையூரு. அஞ்ஞத்தாம்
அத்தாம் நெலம், நம்ம நெலம்லாம் இருக்கு. வடவாதிக்கும் அதுக்கும் நாலஞ்சு கிலோ மீட்டருத்தாம்
இருக்கும். அஞ்ஞ ஒரு எடம் இருக்கு. மூணு வாத்தியாருங்க வேல பாக்குற பள்ளியோடம். இப்போ
ரண்டு பேர்தாம் இருக்காங்க. அஞ்ஞ வந்திட்டீங்கன்னாக்கா, கொஞ்ச நாளு வேலை பாத்துட்டு
இருந்தா, வடவாதி பள்ளியோடத்துல மாத்தம் உண்டானாக்கா அஞ்ஞ வந்துப்புடலாம். நாம்ம இப்போ
வடவாதி பள்ளியோடத்துலத்தாம் இருக்கேம். ஒங்களுக்கு விருப்பம்ன்னா சொல்லுங்க பண்ணிப்புடுவேம்."
அப்பிடின்னுச்சி. அதுல லாலு மாமாவுக்கு இருந்த ஒரு விசயம் என்னான்னா வைத்தித் தாத்தாவோட
ரண்டாவது பொண்ணான குணவதி பெரிம்மாவ்வ கட்டிக்க மாட்டேன்னு சொன்னதுல வைத்தித் தாத்தாவுக்கு
ஏதாச்சிம் மனவருத்தம் இருக்கும்முன்னு அதுவா நெனைச்சிக்கிடுச்சி. அப்பிடி ஏதாச்சிம்
இருந்தா சுப்பு வாத்தியார்ர மாத்தல் பண்ணி இங்க கொண்டு வர்ற இந்த காரியம் மூலமா அந்த
வருத்தம் இல்லாம போவட்டும்னு அது நெனைச்சிக்கிடுச்சி. அப்படில்லாம் நெனைச்சி வருத்தத்துல
உக்கார்றவர்ரு இல்ல வைத்தி தாத்தாங்றது வேற விசயம். உண்மையச் சொல்லணும்ன்னா அவரு பொண்ணுங்க
விசயத்தைப் பத்தியெல்லாம் ஒரு நாளும் கவலைப்பட்டது இல்ல. பொண்ணுங்கள பெத்து விட்டாச்சி,
எவனாச்சிம் வந்து கட்டிக்கிட்டு போவ வேண்டியதுதான், அப்பிடின்னுத்தாம் அவரு நெனைச்சிக்கிட்டு
இருந்தாரு.
ஓகையூருக்கு மொதல்ல வந்து சேந்துக்கிட்டு
அப்படியே வடவாதிக்கு மாறிக்கிறதுதாம் சுப்பு வாத்தியாருக்கும் சரியாப் பட்டிருக்கு.
சரின்னு தலையை ஆட்டியிருக்காரு. ஆனா, லாலு மாமா சொன்னபடி ஓகையூருக்கு மாத்திட்டு வர்றது
அவ்வளவு சுலபமா இல்ல. சுப்பு வாத்தியாரு வேலை பாக்குற ஒழுகச்சேரி திருப்பனந்தாளு ஒன்றியத்துல
வர்ற பள்ளியோடம். ஓகையூரு மன்னார்குடி ஒன்றியத்துல வர்ற பள்ளியோடம். கொஞ்சம் செல்வாக்கும்
சிபாரிசும் இருந்தாத்தாம் மாத்த முடியுங்ற நெலமை. இவரு செல்வாக்குக்கும், சிபாரிசுக்கும்
யார்ர போயித் தேடுவாரு. அவரோட பெரிய வாத்தியாரு மாரிச்சாமி வாத்தியாரு முன்னால போயி
நின்னாரு. மாரிச்சாமி வாத்தியாருக்கு சுப்பு வாத்தியாரோட முடிவுல கொஞ்சம் கூட விருப்பமில்ல.
"ஒங்கள வுட்டுப்புட்டா ஒங்கள மாரி
ஆள நாம்ம எப்டிய்யா கண்டுபிடிக்கிறது? ஒங்களுக்கு ன்னா கொறைச்சல்? இஞ்ஞயே சொந்தமா
வூட்டு வாங்கிப்புடலாம். நெலம் புலமும் வாங்கித் தர்றேம். இப்டியெல்லாம் ஊரு, மனுஷங்க,
பள்ளியோடம் அமையாதுங்களே!" அப்பிடின்னுருக்காரு. அதுவும் சரித்தாம். மாரிச்சாமி
வாத்தியாருக்கு ஒத்து ஊதுறது போல இப்படி ஒரு வாத்தியாரு கிடைக்க மாட்டாருத்தாம். அவரு
சரியா பள்ளியோடம் போவாத ஆளுங்குறது ஊரறிஞ்ச ரகசியமா இருந்தாலும், சுப்பு வாத்தியாரு
வந்தப் பெறவு புள்ளைங்க நல்லா படிக்கிறதால அவருக்கு ஊருக்குள்ளயும், டி.ஐ. ஆபிஸூலயும்
நல்ல பேரு உண்டாயிடுச்சு.
சுப்பு வாத்தியாரு டக்குன்னு மாத்தலு ஆகிப்
போனா அடுத்த வாத்தியார்ர போடுறதுக்கு எவ்ளோ நாளு ஆகும்னு வேற தெரியாதுன்னு மண்டையச்
சொரிஞ்சிருக்காரு மாரிச்சாமி வாத்தியாரு. இருந்தாலும் இவ்வளவு நாளு விசுவாசமா வேல
பாத்த மனுஷனுக்கு எதாச்சிம் பண்ணணும்னு மனசுக்குள்ள அவருக்குப் பட்டிருக்கு. அதுக்கு
மேல பேச்ச வளக்காம காரியத்துல எறங்கிட்டாரு. லாரிய வெச்சுக்கிட்டு ஆளுங்களப் பிடிச்சி
அங்க இங்கன்னு சரக்கு அடிக்கிற வேலைகளை அலைஞ்சித் திரிஞ்சி வாங்குற ஆளு இல்லையா அவரு.
காரியம் ஆவணும்ன்னா லாரிய ஓசியில வுட்டுக் காரியம் சாதிக்கிற ஆளு வேற இல்லையா. அதால
சுப்பு வாத்தியாரு சொன்னபடியே அவருக்கு ஓகையூருக்கு மாத்தல வாங்கிக் கொடுக்கிறதுக்கு
யார் யார்ர பாக்கணுமோ அவங்களையெல்லாம் பாத்து காரியத்த கச்சிதமா முடிச்சாரு. இதுல
அவருக்கு மனசுல கொஞ்சம் ஓங்கல் தாங்கல்தான். இருந்தாலும் செஞ்சிக் கொடுத்தாரு.
மாத்தல வாங்கிக் கொடுத்ததோட இல்லாம ஓகையூர்ல
லாலு மாமா பாத்து வைச்ச வூட்டுக்கு லாரியில சாமாஞ் செட்டுகள ஏத்திக்கிட்டு, சுப்பு
வாத்தியாரோட குடும்பத்தையும், யம்மாக்கெழவியையும் ஏத்திக்கிட்டு கொண்டாந்தாரு. இவங்க
அப்படி லாரியில வந்து எறங்கி இருக்குற பத்து பன்னெண்டு சாமானுங்கள எறக்குறதப் பார்த்த
ஓகையூரு சனங்க சுப்பு வாத்தியாரை பெரிய வலுத்த கையின்னு நெனைச்சுப்புட்டாங்க போலருக்கு.
இப்படித்தாம் சுப்பு வாத்தியாரோட ஜாகை அணைக்கட்டுலேந்து ஓகையூருக்கு வந்துச்சு. யம்மாக்கெழவி
ஆன மட்டும் பிரியுறத நெனைச்சு அழுகாச்சி வெச்சிட்டுப் போனுச்சி. மாரிச்சாமி வாத்தியாருக்கும்
கண்ணு கலங்கத்தாம் செஞ்சுச்சு. அடிக்கடி ஊருப்பக்கம் வாங்கன்னு சொல்லித்தாம் மாரிச்சாமி
வாத்தியாரும், யம்மாக்கெழவியும் ரண்டு பேரும் மனசு வலிக்கப் பிரிஞ்சிப் போனாங்க. அப்படிச்
சொன்னதுக்காக ஒரு தடவையோ, ரண்டு தடவையோ சுப்பு வாத்தியாரு போயிப் பாத்துட்டு வந்தாரு.
அதுக்குப் பெறவு போயிட்டு வர்ற மாதிரி சந்தர்ப்பங்க அமையாப் போனாலும் சுப்பு வாத்தியாரும்,
வெங்குவும் நெனைச்சுக்கிட்டா போதும் மாரிச்சாமி வாத்தியார்ர பத்தியும், யம்மாக் கெழவியைப்
பத்தியும் பேசிப் பேசி மாய்வாங்க.
ஓகையூரு கிராமத்தப் பத்தியெல்லாம் விலாவாரியா
நாம்ம பாத்ததுதான். மண்ணு களி கணக்கா இருக்கும். கோடையில எந்தப் பிரச்சனையும் இருக்காது.
மழைப் பேஞ்சுட்டா பூட்ஸ் கால்லத்தாம் போவணும். அதாம் களிமண்ணு அப்புன்ன பூட்ஸ் காலுல்லத்தாம்.
தெருவே களிமண்ணு ஒலையாப் போயிக் கெடக்கும். சேத்துக் காலோட வூட்டுக்குள்ள நொழையறுதுக்கு
முன்னாடி காலை அலம்புறதுக்கே அரை மணி நேரம் ஆயிடும். மத்தபடி ஓகையூரு போல அமைதியான
ஒரு கிராமத்தைப் பாக்க முடியாது. அங்க இருந்த சனங்க எல்லாம் பாட்டாளிங்க. ஒழைப்புன்னா
ஒழைப்பு அப்படி வயக்காட்டுல கெடந்து ஒழைப்பாங்க. ஓகையூர்ல ஒரு வருஷம் வரைக்கும் வாடகை
வூட்டுல சுப்பு வாத்தியாரோட குடும்பம் இருந்துச்சு. வாடகை வூடு அணைக்கட்டுல இருந்தது
போல அதே மாதிரி கூரை வீடுதாம். பக்கத்துல யம்மாக்கெழவியும், யம்மாக்கெழவியோட மச்சு
வீடு இல்லாத கொறைத்தாம். மத்தபடி வேறெந்த
கொறையும் இல்ல.
சுப்பு வாத்தியாருக்கு விகடு மவனாப் பொறந்து
மூணு வருஷம் ஆன பிற்பாடும் ஒரு நெல புலம்னு ஒண்ணும் வாங்கலையேன்னு வெங்கு சாடை மாடைய
வாரத்துக்கு நாலு தடவைன்னு மொறை வெச்சு சத்தம் வுட்டுக்கிட்டு இருந்திச்சு. அந்தச்
சத்தத்தைத் தாங்க முடியாம, அதோட மனக்குறையப் போக்குவோம்னு நெனைச்ச சுப்பு வாத்தியாரு
அது நாளு வரைக்கும் சேத்து வெச்சக் காசுல வைத்தி தாத்தாகிட்டச் சொல்லி ஒரு நெலத்தை
வாங்கிக் கொடுக்கச் சொன்னாரு. வைத்தி தாத்தா இந்த விசயத்தை முருகு மாமாகிட்டேயும்,
லாலு மாமா கிட்டேயும் சொல்லி ஒரு நெலத்தைப் பாக்கச் சொன்னாரு. லாலு மாமாவோட வயலு
இருந்த திசையிலேந்து கிழக்கால ரெண்டு வயலு தள்ளியும், வைத்தி தாத்தாவோட வயலு இருந்த
திசையிலேந்து மேற்கால மூணு நெலம் தள்ளியும் அப்போ ரெண்டரை மா நெலம் வெலைக்கு வந்திருக்கு.
அதைப் பாத்துப் பேசி வெங்கு பேருக்குக் கிரயம் பண்ணி முடிச்சாங்க. அதுதாம் சுப்பு வாத்தியாரு
தன்னோட சம்பாத்தியத்துல வாங்குன மொத சொத்து.
சுப்பு வாத்தியாரை வயல்லயே எறங்க வுடாத
அளவுக்கு ஆளுங்க அந்த நெலத்தோட வெவசாய வேலைகளப் பாத்துக் கொடுத்தாங்க. ரொம்ப விசுவாசமாவும்
இருந்தாங்க. இருந்தாலும் ரண்டு போகம் நெல்லு விவசாயம் முடிஞ்ச பிற்பாடு வயல்ல போடுற
உளுந்து, பயிரை எடுக்குறதுக்கு சுப்பு வாத்தியாரு ஆளுங்கள எறக்க மாட்டாரு. அவரே வெங்குவையும்
அழைச்சுக்கிட்டு, விகடுப் பயல வரப்போராமா சாக்கைப் போட்டு உக்கார வெச்சுக்கிட்டு
காலையியலயும், சாயுங்காலமா எடுத்து வந்து, வூட்டுக் கொல்லையிலப் போட்டு அடிச்சிக்
காசு பாப்பாரு. அது ஒண்ணுதாங் வெவசாய ஆளுங்களுக்குச் சுப்பு வாத்தியார்கிட்ட பிடிக்காத
சங்கதி.
பொதுவா நெல்லு வெவசாயங்கிறது வயல் வெச்சிருக்கிறவங்க
எறங்கி வேலைப் பார்க்காம, ஆளுங்கள வுட்டு வேலை பார்த்தா பண்ற செலவுக்கும், வர்ற காசுக்கும்
சரியா இருக்கும்ங்றது சுப்பு வாத்தியார்ரு சொல்ற சங்கதி. வெவசாயத்துல லாபம்ன்னா அது
உளுந்து பயிறுல கெடைக்குறதுதாம். அதிலயும் ஆளுங்கள வுட்டு எறக்கி வேலை பார்த்தா மிச்சப்படுறதுக்கு
ஒண்ணும் இருக்காதுன்னு சுப்பு வாத்தியாரு அந்த ஒரு விசயத்துல மட்டும் ஆளுங்கள எறக்க
மாட்டாரு. இப்படி அவரு உளுந்து பயிறுல பாடுபட்டு பாத்த காசுல ஆட்டுக்கல்லு வாங்குனாரு,
விகடு பயலுக்கு வெள்ளியில அரைஞாண் கொடி வாங்கிப் போட்டாரு. வெங்குவுக்கு கொலுசு
வாங்கியிருக்காரு. உழுதவன் கணக்குப் பாத்தா உழக்குக் கூட மிஞ்சாதும்பாங்க. இங்க உளுந்துப்
பயிறை உழாமத்தாம் சம்பா, தாளடிக்குப் பெறவு தெளிச்சி விடுவாங்க. உழாம தெளிக்கிறதாலயோ
என்னவோ அதுல நல்ல லாபம் மிஞ்சும். அப்போ உழாம கணக்குப் பாத்தா நெறைய மிஞ்சும் போலருக்கு.
*****
No comments:
Post a Comment