10 Dec 2019

20.1



            கதைகள் எந்தப் புள்ளியில் திசைமாறும் என்று சொல்வதற்கில்லை. திசை மாறாத வரை அது கதையில்லை. அந்தக் கதை கேட்கப்படுவதோ அல்லது சொல்லப்படுவதோ அந்த திசைமாறலுக்காகத்தான்.

            நம்பினால் நம்புங்கள்! நம்பாமல் இருப்பதும் உங்களது விருப்பமே! ஒருவரின் வாழ்வில் நடக்கும் திசைமாறலை நாம் குரூரமாக ரசிக்கிறோம். அக்கறை என்பது எவ்வளவு பெரிய நடிப்பு தெரியுமா? அந்த அக்கறையைக் காட்டித்தான் அந்த திசைமாறாலை அக்குவேறு ஆணிவேராக கறக்கிறோம்.
            மனதில் இருப்பவைகளைக் கொட்டி விட்டால் எந்தப் பிரச்சனையும் இல்லை. மனதைக் கொட்டுவதுதான் பிரச்சனை. யாரும் மனதைக் கொட்டுவதற்கு விரும்புவதில்லை. அதை ஒரு பொக்கிஷம் போல நினைக்கிறார்கள். அதைக் கொட்டி விட்டால், அதன் பின் ஏற்படும் நிலை அதை விட பயங்கரமாக இருக்குமோ என்று நினைத்துக் கொள்கிறார்கள்.
            மனதைப் புரிந்து கொள்வதற்கு மனதைக் கொட்டுவதைத் தவிர என்ன வழியிருக்கிறது?
            மனதை ஒரு சொத்து போல சேகரித்த யாருக்கும் அதைக் கொட்டும் துணிச்சல் வராது. மிகவும் பயப்படுவார்கள். தாங்கள் தூய்மையாக வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவர்களிடம் இருக்கும். அதுவும் ஒரு மனக்குப்பையைப் போல அவர்களின் மனதில் சேர்ந்து இருக்கும்.
            அது குப்பைதான். பலநாள் மனதில் தங்கி, தேங்கி முடைநாற்றம் அடிக்கும் குப்பைதான். அந்தக் குப்பையின் துர்நாற்றம் பழகிப் பழகிப் பிறகு அப்படி ஒரு நாற்றம் இல்லாமல் இருக்க முடியாது என்று அவர்களே நினைத்துக் கொள்வார்கள்.
            தங்களின் குப்பைகளில் கூட தங்களின் பொக்கிஷம் இருக்கிறது என்று நினைப்பவர்களை நாம் என்ன செய்ய முடியும்? அவர்கள் தங்கள் குப்பைகளைக் கொட்டாமல் இருப்பதற்கு நான் என்ன வருத்தப்பட முடியும்?
            கித்தாஸ் மனக்குப்பைகளை விகடுவிடம் அதன் ஒரு எச்சம் விடாம் கொட்டுகிறார். அதன் வீச்சம் எப்படியோ! கித்தாஸ் பாரம் இறங்கிய காற்றுப் போன பலூன் போல இப்போது நிற்கிறார். காற்றுக்கு எடை உண்டு. காற்றின் எடை இழந்து மிதப்பதைப் போல கித்தாஸ் மிதப்பதாகப் படுகிறது விகடுவுக்கு. அதே நேரத்தில் விகடு பாரம் ஏறி தடம் புரண்ட சரக்குந்தைப் போல சரிந்து கிடப்பதாக உணர்கிறான்.
*****


No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...