செய்யு - 292
வைத்தி தாத்தாவோட ரெண்டாவது பொண்ணு குணவதி
பெரிம்மா. வெங்குவோட ரெண்டாவது அக்கா. அதெ சிப்பூர்ல துரை பெரிப்பாவுக்குக் கட்டிக்
கொடுத்திருந்தாங்க. அப்படிக் கூட சொல்ல முடியாது. கட்டிட்டுப் போனாங்கன்னுத்தாம்
சொல்லணும். துரை பெரிப்பாவோட குடும்பம் ஒரு வகையில திருத்துறைப்பூண்டிக்காரரான வைத்தி
தாத்தாவுக்கு உறவு. அந்த வகையில சம்பந்தம் கேட்டு வந்தவங்கத்தான் துரை பெரிப்பாவோட
குடும்பம்.
துரை பெரிப்பா கொல்லு வேலைக்காரரு. மரவேலையையும்
கலந்து செய்வாரு. அவரு எப்போ கொல்லு ஆச்சாரியா இருப்பாரு, எப்போ தச்சு ஆச்சாரியா
இருப்பாருங்றது அவருக்கே வெளிச்சம். இந்த வகையறாவுல இப்பிடி இருக்குற ஒரே ஆளு அநேகமா
அவருத்தாம். ஏன்னா கொல்லு வேலை பண்றவங்க தச்சு வேலையில எறங்க மாட்டாங்க. தச்சு வேலை
பண்றவங்க கொல்லு வேலையில எறங்க மாட்டாங்க. பலபட்டறையா இருக்கக் கூடாதுங்றதுல தெளிவா
இருப்பாங்க. "யம்பீ! இன்னிக்குக் கொல்லு வேலைடா! போடுங்கடா பட்டறைய!"ம்பாரு.
பட்டறைய பத்த வெச்சார்ன்னா அரிவா, மம்புட்டி, கோடரி, பாரைத் தட்டுறதுன்னு அவரு பாட்டுக்கு
அடிச்சித் தள்ளிப்புடுவாரு. "யம்பீ! இன்னிக்கு தச்சு வேலடா!" அப்பிடின்னு
ஆரம்பிச்சார்ன்னா அன்னிக்கு நாலைஞ்சு முக்காலிங்க, ரெண்டு மூணு நாற்காலிங்கன்னு செஞ்சு
போட்டுப்புடுவாரு. வேலைய நிதானமாவெல்லாம் அவருக்குச் செய்யத் தெரியாது. அசுர வேகத்துல
செஞ்சு முடிச்சிப்புட்டு அடுத்து என்ன வேல இருக்குன்னு பாத்துப்புட்டு இருப்பாரு. எந்த
வேலையா இருந்தாலும் யோசிக்காம செய்வாரு.
சிப்பூரு தண்ணிக்குக் கஷ்டப்படுற ஊரு.
ஊரு பூரா குளம் குட்டைங்கள வெட்டி வெச்சிருப்பாங்க. குளிக்கிறது, பொழங்குறது எல்லாம்
அந்தத் தண்ணியிலத்தாம். குடிக்கிறதுக்கான தண்ணிய பிடிச்சிட்டு வர்ற குடத்தைத் தூக்கிக்கிட்டு
நாலு ஊரு சுத்தி வரணும்.
சிப்பூர்ல கோடை வந்துட்டா போதும் இருக்குற
கொளத்துல எல்லாம் மீனைப் பிடிக்க ஆரம்பிச்சிடுவாங்க. அப்போ மீன் பிடிக்கிற ஆளாவும்
மாறிடுவாரு சிப்பூரு பெரிப்பா. அந்த மீனுங்கள ஒரு கூடையில போட்டு வித்துட்டு வான்னாலும்
தலையில சுமந்துக்கிட்டு மீனு யேவாரியா மாறிடுவாரு. அவர்ர பொருத்த வரைக்கும் இதாங்
வேலைன்னு கணக்கில்ல. எந்த வேலையையும் செய்வாரு. நொடி நேரத்துக்குச் சும்மா இருக்க
அவரால முடியாது. முத்துப்பேட்ட வரைக்கும் தொணைக்கு வாப்பா, ரெண்டு தவுட்டு மூட்டைய
பஸ்ல தூக்கிப் போட்டுட்டுக் கொண்டாந்திடுவோம்னு யாராவது கூப்ட்டாலும் கெளம்பிப்
போயிடுவாரு. எங்காச்சிம் ஊருக்குப் போறப்ப அங்க எதாச்சிம் வேலை இருக்குதுன்னு சொன்னா
போதும் அங்கயே தங்கி அது எந்த வேலையா இருந்தாலும் அந்த வேலையைப் பாத்து முடிச்சிட்டுத்தாம்
போவாரு. டீக்கடைக்கு டீத்தண்ணிய குடிக்கப் போறவர்கிட்ட, ஒரு நாலு குடம் தண்ணி எடுத்தாந்து
ஊத்திட்டுப் போங்கன்னு சொன்னாலும் தயக்கமில்லாம, யோசனைப் பண்ணாம அந்த வேலையைச் செஞ்சிட்டுக்
காச வாங்கிட்டு வந்திடுவாரு. "யோவ் தொர! வாய்யா ஒரு சாவுக் கூத்து இருக்கு!
பட்டயப் போட்டுட்டு ஆட ஆளில்ல!"ன்னு கூப்புட்டாலும், பட்டச் சாராயத்தப் போட்டுட்டு
செரியான ஆட்டத்தப் போட்டுட்டு காசிய கையில வாங்கிட்டு வந்துடுவாரு.
எந்நேரத்துக்கும் எதாச்சிம் வேலையப் பாத்துக்கிட்டே
இருக்கணும் அவருக்கு. சம்பாத்தியத்துல ரொம்பவே கெட்டின்னு அவர்ரப் பத்திப் பேசிப்பாங்க.
அவரு பையிலயும் நோட்டுப் பணம் கத்தை கத்தையாத்தாம் இருக்கும். எங்க போனாலும் அங்க
எந்த வேலை கெடைச்சாலும் அதெ செஞ்சிக் காசு பார்த்தா பையி அப்பிடித்தான இருக்கும். எந்நேரத்துக்கும்
வேல ஞாபவம்தான் அவருக்குள்ள ஓடிட்டு இருக்கும். ஒரு எடத்துல அவரோட சூத்த உக்கார வைக்க
முடியாதுன்னு சொந்தக்கார சனங்க அவர்ர பத்திப் பேசிக்கும். தட்டுல சோத்தப் போட்டு
வெச்சாலும் அதெ குந்தித் திங்குறதுக்கு நாலு நிமிஷம், அஞ்சு நிமிஷத்துக்கு மேல எடுத்துக்க
மாட்டாரு. லபக் லபக்குன்னு அள்ளிப் போட்டுக்கிட்டு கைய அலம்பிக்கிட்டு ஆளு பஞ்சா பறந்து
போயிட்டே இருப்பாரு.
வேலை வேலைன்னு ஊர்ர சுத்தி உலகத்த சுத்தி
வந்திடுவாரு. எந்தெந்த ஊருல மரத்தோட வெல கொறைச்சலுங்றத தெரிஞ்சி வெச்சிக்கிட்டு அங்க
மரத்த வாங்கி, நல்ல வெல போற ஊருல விக்குற மர யேவாரியாவும் சமயத்துல ஆயிடுவாரு. அநேகமா
தஞ்சாவூரு ஜில்லாவுல அப்படி மரத்து வெலைக்காக அலைஞ்சி அவரு காலு படாத எடமே இருக்காதுன்னா
பாத்துக்கோங்களேன். அப்படிக் காலுல்ல சக்கரத்தக் கட்டிட்டு அலையுற ஆளு. பல ஊரு தண்ணியக்
குடிச்ச ஆள. பல ஊரு ஆளுங்களப் பாத்த ஆளு.
யார்ர பாத்தாலும் சரித்தாம் அவர்ராவே போயி,
"எப்டிண்ணே இருக்கீங்க? யண்ணன எங்கயோ பாத்திருக்கேனே! செளரியங்களா? நம்ம ஊருல
மழை தண்ணில்லாம் எப்டி இருக்கு? வேல வெட்டிகள்லாம் எப்டிப் போகுது? மர வெலையெல்லாம்
எப்டிப் போவுது? அருவா, மம்புட்டிக்கு நம்ம ஊருல கிராக்கி எப்டிப் போவுது?"ன்னு
ஒட்டிப்பாரு. அவருக்கு உலகத்துல எங்க இருந்தாலும் சரித்தாம், காலங்காத்தாலேயே அஞ்சு
மணிக்கெல்லாம் எழுந்திரிச்சி வேலையைத் தேடி வெச்சுக்கணும்.
துரை பெரிப்பாவுக்கு மூணு தம்பிங்க. அதுல
மொத தம்பிக்குக் கல்யாணம் ஆயிடுச்சு. ரெண்டாவது தம்பி மதிக்குத்தாம் சாந்தா சித்தியைப்
பொண்ணு கேட்டு வந்தாரு. "செரி ஆவட்டும்! முடிச்சிப்புடலாம்!"ன்னு சொன்ன
வைத்தி தாத்தா சிப்பூரு பெரிப்பாவ கேட்ட அடுத்த கேள்வியே, "இப்போ கெளம்புறீயா?
இல்ல காலங்காத்தால காலையில விடியக் கருக்கல்லயே கெளம்புறீயா?"ன்னுதான். அதாங்
வைத்தி தாத்தாவோட சுபாவம். எல்லாரையும் கலந்து பேசிப்புட்டுக் கெளம்புலாம்னு இருந்த
சிப்பூரு பெரிப்பா, "காத்தால மொத கார்ர பிடிச்சிக் கெளம்புடறேம்!"ன்னுட்டாரு.
"செரி! அப்பிடின்னா பக்கத்துல இருக்குற கொட்டாயில போயி படுத்துக்கோ!"ன்னுட்டாரு
வைத்தி தாத்தா. அங்கப் போயி படுத்தவரு, அடுக்கியிருந்த மரச் சட்டத்தப் பாத்துப்புட்டு,
"மாமோவ்! இத்து எஞ்ஞ வாங்குனீயே? ன்னா வெலைக்கு வாங்குனீயே?"ன்னு சத்தத்த
வுடுறாரு. "எல்லாம் இஞ்ஞ வாங்குனதுத்தாம். வெல ஒனக்கு தோதுபட்டு வராது. பேயாம
படுறா காலயில பாத்துக்கலாம்!"ன்னு அதுக்கு பதிலு சத்தத்த வுட்டாரு வைத்தி தாத்தா.
சாந்தா சித்தியைப் பொண்ணு கேட்டு வந்தச்
சேதி தெரிஞ்சதும் ரொம்ப சந்தோஷப்பட்டது சாமியாத்தாத்தாம். கருப்பா வந்து பொறந்துட்ட
சாந்தா சித்தியை எப்படிக் கல்யாணம் பண்ணிக் கொடுக்குறதுன்னு அது ரொம்ப பயந்துகிட்டே
இருந்துச்சு சாமியாத்தா. ஆறு பொண்ணுங்கள பெத்து வெச்ச வராத பயம், கருப்பா பொறந்த
சாந்தா சித்தியைப் பாத்து அதுக்கு வந்திருக்கு. அதெ கல்யாணம் பண்ணியே கொடுக்க முடியாதுன்னே
அது நெனைச்சுக்கிட்டு இருந்துச்சி. சாந்தா சித்தியைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டா
மித்தப் பொண்ணுங்களையும் தேடி வந்து கட்டிட்டுப் போயிடுவானுங்கன்னு ஒரு நெனைப்பு
இருந்துச்சி அதுக்கு. அதோட நெனைப்பு மாறிப் போயி நடந்துச்சுங்கறதெ இதெ படிச்சிட்டு
வர்ற ஒங்களுக்குத் தெரியும். மொத நாலு பொண்ணுங்களத்தான் மாப்பிள்ளைங்க தேடி வந்துட்டுக்
கட்டிட்டுப் போனாங்க. நாலு பொண்ணுங்களும் கரை சேர்ந்த பிற்பாடு மித்தவைகள எப்டியும்
கரை சேத்துப்புடலாம்னு ஒரு தெம்பு அதுக்கு வந்துடுச்சி. ஆனா மித்த ரெண்டு பொண்ணுங்களுக்கும்
மாப்பிள்ளையப் பிடிக்க அலையோ அலைன்னு அலைய வேண்டிருந்துச்சி. மனுஷ நெனைப்புல மண்ணை
அள்ளிப் போட்டுட்டு ஒண்ணுந் தெரியாதது போல நடந்து போறதுதான காலங்றது.
சிப்பூரு பெரிப்பா வந்து பேசிட்டுப் போன
மூணு மாசத்துல சாந்தா சித்திக்கும், மதி சித்தப்பாவுக்கும் கலியாணம் நடந்திச்சி. சிப்பூர்ல
இருக்குற ராமரு கோயில்ல வெச்சிக் கல்யாணத்தப் பண்ணி வுட்டாங்க. சிப்பூரு தொர பெரிப்பா,
குணவதி பெரிம்மாவோட கல்யாணமும் அங்கத்தாம் வெச்சி நடந்திச்சி. அப்போ எல்லா கல்யாணங்களும்
பொதுவா கோயில்ல வெச்சியோ, வூட்டுல வெச்சியோ, ஊரு சத்திரத்துல வெச்சித்தாம் நடந்திச்சிங்க.
சொந்த பந்தங்க எல்லா ஒரு மாசத்துக்கு மின்னாடியே கூடி கல்யாண வேலைகளப் பாத்து வெச்சித்தாம்
கலியாணம் நடந்துச்சுது.
கலியாணம்னு சேதி தெரிஞ்சா போதும் நெல்லவிச்சி
ஆவாட்டிப் போட, அரிசி அரைச்சுப் போட, பலகாரத்த சுட்டுப் போட, சேதி சொல்ல, சில்லுண்டி
வேலைகளப் பார்க்க, கல்யாண காரியத்த பார்க்கன்னு முன்கூட்டியே ஆளுங்க வந்து கூடி வேலையைப்
பாத்து வெச்சி ரொம்ப செலவில்லாம சிக்கனமா கலியாணத்த முடிச்சு வெச்சிப்புடும்ங்க. அந்த
வருஷம் பூராவும் அந்தக் கல்யாணத்தப் பத்தின பேச்சாவே ஓடிட்டுக் கெடக்கும். இப்போ மாரியா
ஒரு நாளைக்கே நாலு கலியாணங்க அப்போ நடந்துச்சு? வருஷத்துக்கு நாலு கலியாணம் நடந்தாலே
பெரிய விசயமுல்ல. அப்படி நடந்தா அதெ பத்தித்தான பேச்சா கெடக்கும். அந்தக் கல்யாணத்துல
நாம்ம அதெ பாத்தேம், நீயி இதெப் பாத்தே, நம்மாளத்தான்னே கலியாணமே நடந்துச்சுன்னு அதெ
பேசிப் பேசி மாள்றதுல சனங்களுக்கு ஒரு சந்தோஷம்.
சிப்பூரு சாந்தா சித்தியோட கலியாணப் பேச்சு
நடந்துட்டு இருந்தப்பத்தாம் சுப்பு வாத்தியாரு வைத்தி தாத்தாவுக்கு அநேக நமஸ்காரங்களோட
ஒரு கடுதாசியப் போட்டு வடவாதிப் பக்கமா மாத்தல வாங்கிக்கிட்டு குடி வந்திடலாமோன்னு
யோசனெ ஓடிட்டு இருக்கிறதெப் பத்தியும், வயலுங்க விளைச்சல்லாம் எப்பிடி இருக்குங்கிறதப்
பத்தியும், வூட்டுல இருக்கறவங்களோட செளக்கியங்களப் பத்தியும் விசாரிச்சிருந்தாரு.
வழக்கமா மாசத்துக்கு ஒரு கடுதாசிய சுப்பு வாத்தியாரு தட்டி வுடுறதும், அதுக்குப் பதிலு
கடுதாசிய வைத்தித் தாத்தாவும் தட்டி வுடுறதும் வழக்கந்தாம். இப்பிடிக் கடுதாசிய தட்டு
வுடுறதோட அந்தக் கடுதாசியில வந்த சங்கதியப் பத்தி மறுகடுதாசி வர்ற வரைக்கும் பேசிட்டு
இருக்குறதும் அப்போ வழக்கமா இருந்திருக்கு.
இப்போன்னா போன்ல பேசிட்டு அத்தோட மறந்துடலாம்.
அப்போ பேசிக்கிட்டு இருக்குறதுக்கு அது மாதிரி சில சங்கதிங்கத்தானே இருந்திருக்கு.
அதால மாய்ஞ்சி மாய்ஞ்சி அதெப் பத்திப் பேசிப்பாங்க. அப்படிப் பேசிட்டு இருக்குறப்பத்தாம்
வைத்தி தாத்தா லாலு மாமாகிட்ட சொல்லிருக்கிறாரு, "வாத்தியாரு மருமவ்வேம் இருக்கார்லடா
லாலு! அவரு இந்தப் பக்கம்மா வரலாமா வேணாமான்னு யோஜனையில இருக்குறாப்புல தெரியிது.
நீந்தாம் வாத்தியார்ரே இருக்கீயே. அதுல ஏத்தோ சங்கம் அது இதுன்னு அலஞ்சிட்டு இருக்குதீயே.
நம்மட மருமவனுக்கு இஞ்ஞ ஒரு எடத்த பாத்து வைக்கிறது?" அப்பிடின்னுருக்காரு.
"இப்போ இஞ்ஞ ஒண்ணும் எடமில்லத்தாம்!
யாராச்சிம் மாத்தல் ஆயிப் போயி இஞ்ஞ எடம் காலியாச்சுன்னா, இஞ்ஞ கொண்டாந்து வெச்சிப்புடலாம்
அத்தாம்!" அப்பிடின்னுருக்கு லாலு மாமா.
"எலே! நீந்தாம்டா அதெப் பாத்து ஜோக்கா
முடிக்கணும்டா!" அப்பிடின்னுருக்காரு வைத்தி தாத்தா. ஒரு வகையில லாலு மாமா வைத்தி
தாத்தாவோட ரெண்டாவது மருமவனா ஆவ வேண்டியவரு. குணவதி பெரிம்மாவ லாலு மாமாவ கட்டிக்கச்
சொல்லித்தாம் எல்லாரும் கேட்டுப் பாத்தாங்க. சாமியாத்தாவுக்கு அதுல ரொம்ப ஏகத்துக்கும்
இஷ்டம். தம்பிக்காரன மருமவனா கொண்டாந்துப் பாத்துப்புடணும்னு அதுவும் காலு தேய முருகு
மாமா வூட்டுக்கு அலைஞ்சிப் பாத்திச்சி. ஆனா லாலு மாமா கட்டுன்னாக்கா வாத்திச்சிப் பொண்ணத்தாம்
கட்டுவேன்னு ஒத்தக் கால்ல நின்னு கட்டிக்காம மறுத்துச்சி. அப்போ கூட சாமியாத்தா வைத்தி
தாத்தாகிட்ட, "ஏஞ்ஞ நீஞ்ஞ ஒரு வார்த்தெ சொன்னீங்கன்னா கட்டிப்பாம்ங்க! போயி
ஒரு வார்த்தெ பேசிட்டு வாங்களேம்!"ன்னு அப்பிடின்னு சொல்லியிருக்கு. அதுக்கு
வைத்தி தாத்தா சொல்லிருக்காரு, "அவனுக்குப் பிடிச்சிருந்தா வந்து கல்யாணம் பண்ணிக்கச்
சொல்லு! நாமெல்லாம் போயி நின்னு கேக்க மாட்டேம்! அவனுக்கு ன்னா அம்மாம் கொழுப்பு!"
அப்பிடின்னு பேசிருக்காரு. அவருக்கு மாப்பிள்ளைய தேடிட்டுப் போற வேலையெல்லாம் அறவே
பிடிக்காது. அவரு பெத்தப் பொண்ணுக்காக மாப்பிள்ளைங்க தேடி வந்தாங்க, அப்பிடி இல்லன்னா
சுத்தி இருந்தவங்கத்தாம் மாப்பிள்ளைகள தேடி அலைஞ்சாங்க. ஆறு பொண்ணுங்களப் பெத்து ஆறையும்
அசால்ட்டா கல்யாணம் பண்ணிக் கொடுத்தவர்ன்னா அநேகமா இந்த ஊரு ஒலகத்துல அவரு ஒருத்தராத்தாம்
இருக்கணும். ஆறு பொண்ணு, ஒரு புள்ளைன்னு கல்யாணத்தப் பண்ணி வெச்சிப் பாத்தவரு, கடைக்குட்டிக்குப்
பயலுக்கு கல்யாணத்தப் பண்ணி வெச்சிப் பாக்கக் கூடாதுன்னே போயிச் சேந்தது ஒரு தினுசான
விஷய சோகம்.
"ஒரு வேள அவரு போயி பேசியிருந்தா
லாலுவுக்கும் அவ்வே சிப்பூருகாரிக்கும் கலியாணம் ஆயிருக்கும்தான். அப்படி ஆயிருந்தா
அவருக்கு ரெண்டாவது மருமவனே வாத்தியார்ரு மருமவன்னா ஆயிருப்பாம். ஆவல. ஆனா அவருக்கு
ஒரு வாத்தியார்ரு மருமவ்வேம் வரணும்னு இருந்துருக்கு. அதுவும் தேடிட்டு வாரணும்னு இருந்திருக்கு.
மூணாவது வெங்குவுக்கு அப்டி வந்துச்சு!" அப்பிடின்னு இதெப் பத்தி அங்கலாய்ச்சுக்கிட்டே
சாமியாத்தா சொல்லும்.
*****
No comments:
Post a Comment