செய்யு - 291
அண்ணங்காரரு நடந்துகிட்ட மொறையப் பார்த்து
விருத்தியூரு போக வேணாங்ற முடிவுக்கு வந்துட்டாரு சுப்பு வாத்தியாரு. வடவாதிப் பக்கமா
மாமனாரு வூட்டுப் பக்கமா போயிடலாமாங்ற யோசனை வந்ததுமே வெங்குகிட்ட ஒரு வார்த்தைக்
கேக்குறாரு சுப்பு வாத்தியாரு. அண்ணங்காரருக்கு கேட்டபடி கையெழுத்துப் போட்டுக் கொடுத்ததுல
கோவமா இருக்குற வெங்குவ சமாதானம் பண்ணுறதுக்கும் இது ஒரு வாய்ப்பா போவுமேன்னு அதுகிட்ட
கேட்டாக்கா, "இந்த ஊரு நல்லத்தானே இருக்கு. இதுக்கென்ன கொறைச்சலு? அஞ்ஞ எங்கப்பா
யாரயும் அண்ட வுட மாட்டாரு. அஞ்ஞ போயி என்னத்துக்கு ஆவப் போவுது? இஞ்ஞயே இருந்துடலாமே!"ங்குது
வெங்கு.
"சொந்த பந்தமுன்னு யாருமில்லயே!
ஒரு தேவ திங்கன்னு அஞ்ஞ இஞ்ஞ ஓடிட்டேல்லே கெடக்க வேண்டியதாக் கெடக்கு. பயலுக்கும் வேறல்ல
ஒடம்பு சரியில்லாம போயிட்டுக் கெடக்குது. சனங்க நாலு பேரு வந்து கிந்து பாக்குற தோதுல
இருந்தா தேவலன்னு படுது. ஒரு யோஜனெ சொல்றதுக்கு, அப்பிடி இப்பிடி இருன்னு சொல்றதுக்கு
யாரு இருக்கா நமக்கு?" அப்பிடிங்கிறாரு சுப்பு வாத்தியாரு.
"நீஞ்ஞ பாடஞ் சொல்லிக் கொடுக்குற
புள்ளையோளோட பெத்தவங்க நல்ல விதமா சனங்களாத்தான இருக்காங்க. ஒங்க பெரிய வாத்தியாரு
ஒரு தேவைன்னா லாரியோடல்ல வந்து நிக்குறாரு. யம்மாக்கெழவி நம்மள பெறத்தியாவா நெனைக்குது?
பெறவென்ன கொறைச்சலு இஞ்ஞ இருக்க? பயெ ஒடம்புத்தாம் கொஞ்சம் வயசானா சரியாப் போயிடும்னு
சொல்றாங்களே டாக்கடருங்க!" அப்பிடிங்கிது வெங்கு. சரின்னு அப்போ அந்தப் பேச்ச
தூக்கி அந்தாண்டப் போட்டுட்டாங்க சுப்பு வாத்தியாரும், வெங்குவும்.
விகடுவுக்கு ரெண்டு வயசு ஆனதுமே சுப்பு
வாத்தியாரு அவனெ தூக்கிட்டுப் பள்ளியோடத்துக்குப் போக ஆரம்பிச்சாரு. அவனுக்கும் அப்பங்காரர்ன்னா
ரொம்ப உசுரு. அப்பங்காரரோடயே இருக்க ஆரம்பிச்சான். அந்தான்டா இந்தான்டா போனா அப்பங்காரரு
கூடயே ஒட்டிக்கிட்டு அவரு கூடவே இருக்க ஆரம்பிச்சான். இவன விட்டுப்புட்டு சுப்பு வாத்தியாரு
எங்கயும் போவ முடியாத அளவுக்கு நெலைமை ஆக ஆரம்பிச்சிடுச்சி. ஒழுகச்சேரி பள்ளியோடத்துக்கு
இவனெ தூக்கிட்டுப் போனாலும் அங்க யாரும் இவனெ தூக்கிட முடியாது. யாராச்சிம் தூக்க
ஆரம்பிச்ச அழ ஆரம்பிச்சிடுவான். அவனெ தூக்கி ஓரமா உக்கார வெச்சா அவ்வேம் பாட்டுக்குப்
பிடிச்ச வெச்ச பிள்ளையாரு கணக்கா உக்காந்திருப்பான். பக்கத்துல அவனோட அப்பங்காரரு
இருக்கணும் அவ்வளவுதாம். அவரு பாட்டுப்பாடி, கதைச் சொல்லி நடத்துற பாடத்தை அம்புட்டு
ஆசையா கேட்டுக்கிட்டு உக்காந்திருப்பான். இப்பிடியே கொஞ்ச காலம் ஓடிச்சி சுப்பு வாத்தியாருக்கும்
வெங்குவுக்கும். அவங்களுக்கு வடவாதிப் பக்கமா ஓகையூருக்கு ஜாகையா வர்றதுக்கான வாய்ப்பு
சிப்பூரு சாந்தா சித்தி கலியாணத்துக்கு வந்தப்போ அமைஞ்சிச்சி.
வைத்தித் தாத்தாவுக்கு வெங்குவுக்குப்
பிற்பாடு நாலாவதா பொறந்த பொண்ணு சாந்தா சித்தி. கருப்புன்னா கருப்பு அப்பிடி ஒரு
கருப்பு சாந்தா சித்தி. வேலைன்னு ஆரம்பிச்சிட்டா அப்பிடி வேலை பார்க்கும். அதெ கருப்பு
வேலையழகின்னுத்தாம் சொல்லணும். மாடுகளுக்குப் புல்லுக்கட்ட அறுத்துத் தூக்குனா ஒரு
வைக்கப்போரு அளவுக்கு அறுத்துக் கட்டி ஆம்பள ஆளு கணக்கா தூக்கிட்டு வரும். சாணியள்ளி,
கொட்டகையைக் கூட்டி, பாத்திரம் வெலக்கிப் போடுறதுன்னா நிமிஷ நேரத்துல சட்டுப்புட்டுன்னு
வேலையப் பாத்துட்டு அடுத்த வேல என்னான்னு நிமுந்து நிக்கும். நாலு மூட்டை நெல்லை அவிச்சிப்
போட்டு காய வெச்சு ஆவாட்டி வையுன்னாலும் அசால்ட்டா பண்ணிப்புடும். அடுப்பெரிக்க கருவ
வெறகுகள போயி பொரம்போக்கு நெலத்துல இருக்குற குத்துல வெட்டிட்டு வான்னாலும் அலம்பைகளைக்
கழிச்சிப் போட்டு சமையக்கட்டுக்குப் பக்கத்துல அது பாட்டுக்குக் கொண்டாந்து நாலு
வாரத்துக்குத் தேவையான அளவுக்கு அடுக்கிப்புடும். அது நாத்து நடுற வேகம், களை பறிக்கிற
வேகம், களத்து மேட்டுல அடிச்சுப் போட்ட நெல்லத் தூத்துற வேகம்னு எல்லாம் அசந்துப்
போகுற அளவுக்கு இருக்கும். அத்தோட மூட்டையா கட்டுன நெல்லைத் தூக்கி தலையில வெச்சாலும்
ஆம்பள ஆளுங்களுக்குச் சமமா அது பாட்டுக்கு அலுங்காமா கொள்ளாம நடந்து வந்து மூட்டைகள
எங்க கொண்டாந்துப் போடணுமோ அங்க கொண்டாந்து போடும்.
சாந்தா சித்தி அப்பிடி வேலை பாக்குற அளவுக்கு
அப்பிடிச் சாப்பிடும். சாப்பாட்ட வடிச்சி மொதச் சாப்பாட்ட அதுக்குப் போட்டாக்க மித்தப்
பேருக்குச் சாப்பாடு இல்லாம போயிடும்னு கடைசிச் சாப்பாட்டாத்தாம் அதுக்குச் சாப்பாடு
போடுவாங்க வூட்டுல. கடைசிச் சாப்பாடுன்னா மிச்ச இருக்குற அத்தனையையும் வழிச்சி அதுகிட்ட
வெச்சிட வேண்டியதுதாம். அவ்வளவையுச் சாப்பிட்டுப்புட்டும் பத்தலையேங்ற மாதிரித்தாம்
அது பார்வைப் பார்க்கும். சோறுதாம் அதுக்குத் தேவை. எவ்வளவு வடிச்சிப் போட்டுச் சாப்பிடச்
சொன்னாலும் கொஞ்சம் உப்பைப் போட்டு, தண்ணிய ஊத்துனா போதும் அது பாட்டுக்குச் சாப்பிடும்.
பெரிசா வெஞ்சனத்தயெல்லாம் எதிர்பார்க்காது. இட்டிலிச் சுட்டுட்டா கணக்கு வழக்கு இல்லாம
உள்ள போட்டுக்கிட்டு முழுங்கும். இட்டிலிக்கு தொட்டுக்கிறதுக்கு கூட அதுக்கு ஒண்ணும்
தேவைப்படாது. பெரும்பாலும் சாமியாத்தா வூட்டுல இட்டிலி சுட வுடாது. எத்தனைச் சுட்டாலும்
பத்தாம போயிடும்ங்றதால இட்டிலி சுடுறதுக்கு மாவரைக்கிறதுக்கு ஒரு தடைச்சட்டத்தையே
போட்டு வெச்சிருந்துச்சு சாமியாத்தா. ஏதோ ஒரு விஷேசம்னாக்கா மட்டுந்தாம் அரை மனசும்,
கொறை மனசுமா இட்டிலிக்கு மாவரைக்க விடும்.
அப்படித்தாம் ஒரு நாளு சோத்த வடிச்ச ஒடனே,
வடிச்ச கஞ்சிய ஊத்தி மொத ஆளா சாந்தா சித்தி சாப்பிட ஆரம்பிச்சிது. சாமியாத்தா குடும்பம்
டிக்கெட்டுக நிறைய உள்ள குடும்பங்றதால பெரிய மண்பானையில போட்டுத்தாம் சோத்தப் பொங்குவாங்க.
அப்பிடிப் போட்டு பொங்குறப்ப கவனமா பாத்துப் பொங்கணும். சமயத்துல மண்பானை இருக்கே,
அது சூட்டுல ரெண்டா பொளந்து பொங்குன சொறு அடுப்புலயே கொட்டிப் போறதும் உண்டு.
இப்பிடி மண்பானையில பொங்கிக்கிட்டு புள்ளைங்கோ செருமப்படுதேன்னு சாமியாத்தா, வைத்தி
தாத்தாகிட்ட அலுமினியக் குண்டானோ, இல்ல எவர்சில்வரு குண்டானோ வாங்கிக் கேட்டு ரொம்ப
நாளாயிடுச்சி. "அலுமினியக் குண்டான்ல சாப்புடுறது அத்தனையும் ஒடம்புக்குக் கேடு,
எவரு சில்வரு குண்டான்ங்றது எழவு சில்வரு குண்டானாக்கும்!"ன்னு சொல்லிச் சொல்லியே
வைத்தி தாத்தாவும் வாங்கிக் கொடுக்காமலே வுட்டுப்புட்டாரு.
கொஞ்சம் கவனமா வடிக்கணுமேங்ற கஷ்டத்தத்
தவிர, மண்பானையிலப் போட்டுப் பொங்குற அந்தச் சோறு இருக்கே அது சாப்புடுறதுக்கு அம்புட்டு
ருசியா இருக்கும். மண்பானையில சோத்த வடிச்சி ஒரு சித்தி எறக்குறதுக்குள்ள, இன்னொரு
சித்தி மாங்கு மாங்குன்னு அம்மியில போட்டு கொழம்புக்குச் சாந்தை அரைச்சி, மண் சட்டியில
கொழம்பு வெச்சிருக்கணும். பெரும்பாலும் கருவாட்டுக் கொழம்புத்தாம். கருவாட்டுக் கொழம்ப
வெச்ச சோத்தப் போட்டுட்டா வைத்தி தாத்தாட்டேயிருந்து எந்த முணுமுணுப்பும் வாராது.
இல்லேன்னா நல்லா சோத்தையும் தின்னுப்புட்டு முணுமுணுத்துட்டுப் போவாரு, "ன்னா
பொண்டுவ்வோ சோத்த வடிக்குறாளுவோன்னு?" அந்தக் கருவாட்ட வாங்கறதுக்கும் வைத்தி
தாத்தா காசைக் கொடுக்க மாட்டாங்கிறது வேற சங்கதி.
சாமியாத்தாத்தாம் அதுவும் பொண்ணுகளுமா
சேந்துகிட்டு மாடுகள வெச்சி பாலு கறந்து வித்து, தயிராக்கி வித்து, சாணியைத் தட்டிப்
போட்டு வறட்டியாக்கி வித்து காச தோது பண்ணிக்கணும். இது பத்தாதுன்னு மத்தியானம் சோறு
திங்க வக்கில்லாம டீத்தண்ணியோ, காப்பித் தண்ணியோ குடிச்சுப்புட்டு சும்மா படுத்துக்
கெடக்கக் கூடாதுன்னு வடவாதியில இருக்கற பூக்கடையில எல்லாம் போயி பூ கட்டுறதுக்கு பூக்கள
வாங்கிட்டு வந்து, பொண்ணுங்கள வெச்சிக் கட்டிக் கொடுக்கச் சொல்லி, கட்டிக் கொடுத்த
பூக்களக் கொண்டுப் போயி கடையிலப் போட்டுட்டு அன்னன்னிக்குக் காச வாங்கிட்டு வரும்
சாமியாத்தா. இப்பிடிப் பொழங்குற காசுலத்தாம் அது அன்னன்னைய பொழுத ஓட்டியாகணும். சில
நாட்கள்ல பசியும் பட்டினியுமாவும் போவும். அதெயும் சமாளிச்சிக்கிட்டு வைத்தித் தாத்தாவுக்கு
மட்டும் சாப்பாட்டுக்கு எதாச்சிம் ஏற்பாடு பண்ணிக் கொடுத்தாவணும். "வேலைக்குப்
போற மனுஷன்ல! அவரு வேலப் பாத்துச் சம்பாதிச்சிப் போட்டாத்தான்ன நாமெல்லாம் சாப்புடலாம்!"
அப்பிடின்னு அதுக்கு ஒரு விளக்கத்தச் சொல்லும் சாமியாத்தா. ஆனா அவரு எங்க சாப்பாட்டுச்
சமையலுக்குப் பைசா காசிய கொடுக்குறாரு?
நாம்ம இப்பிடி வைத்தித் தாத்தாவப் பத்திப்
பேசிக்கிட்டுச் சாப்பாட்டுச் சங்கதிய விட்டுப்புடக் கூடாது பாருங்க! அந்த மண்பானைச்
சோத்துக்கும் மண்சட்டியில வைக்குற கருவாட்டுக் கொழம்புக்கும் இருக்குற ருசிக்கு மாங்கு
மாங்குன்னு வேலைப் பார்க்காத ஆளே நாலு சட்டிச் சோறு திம்பாம்ன்னா, சாந்தா சித்திய
பத்திச் சொல்லவே வேணாம். இது வேலைன்னு வந்தா அசுரன் கணக்கால்ல வேலயப் பாக்கும். கொழம்பு
இல்லாமலே நாலஞ்சு தட்டு சோத்த தின்னுற சாந்தா சித்தி அன்னிக்கின்னுப் பாத்துக் கருவாட்டுக்
கொழம்பு வாசத்துல வடிச்ச வெச்சிருந்த சோத்த முழுசையும் மொத ஆளா முந்திக்கிட்டுத்
தின்னுப்புட்டு.
அந்த நேரத்துல வைத்தித் தாத்தா வூட்டுல
மூணு வேளைச் சாப்பாடெல்லாம் கெடையாது. காலையில சாப்புட்டா, அடுத்தச் சாப்பாடு சாயுங்காலத்துக்கும்
ராத்திரிக்கும் இடையில ஒரு பொழுது சாப்புடுவாங்க. அந்த ரெண்டு வேளைச் சாப்பாடுதாம்.
மத்தியான நேரத்துல டீத்தண்ணியோ, காப்பித் தண்ணியோ குடிக்கிறதுதாம். அதுதாம் மத்தியானச்
சாப்பாடு. கொஞ்சம் காசிருந்தா கடையிலேந்து வறுக்கியை வாங்கியாந்து அதுல நனைச்சுச்
சாப்பிடுறதுதாம். வைத்தித் தாத்தாவும் காலையில சாப்புட்டுப் போனார்ன்னா சாயுங்காலமா
அஞ்சு அல்லது அஞ்சரை மணிக்கு வேலையை முடிச்சிட்டு வந்துத்தாம் சாப்புடுவாரு. அன்னைக்குன்னுப்
பாத்து அஞ்சு மணி வாக்குலேயே ஆலையிலேர்ந்து வந்துட்டாரு வைத்தித் தாத்தா. அவரு வந்து
கையக் கால அலம்பி திண்ணையில போட்டுருக்குற கட்டிலுக்கு வர்ற நேரத்துக்கு தட்டுல சாப்பாடு
இருந்தாவணும். இல்லேன்னாக்க மனுஷனுக்குக் கெட்ட கோவம் வந்துடும். கொஞ்சம் தாமசமானலும்
சாப்பாட்டு தட்டு பறக்கும் தட்டா மாறி எந்தக் கெரகத்துக்குப் பறந்து போவும்னு யாருக்கும்
தெரியாது.
வைத்தி தாத்தா ஆலையிலேர்ந்து வர்றப்பவே
வாசல்ல சைக்கிளு பெல்லைக் கிணிங் கிணிங்னு ஒரு சத்தத்தோட கொடுப்பாரு. அதுதாம் அவரு
வர்றாங்றதுக்கான 'ராஜாதி ராஜா ராஜா கம்பீர வைத்தி வர்றார்'ங்றதுக்கான கட்டியம். ஒடனே
சாமியாத்தா அங்ஙன இங்ஙன ஓடிச் சாப்பாட்டுத் தட்டோடயும், ஒரு லோட்டா தண்ணியோடயும்
திண்ணையில போயி வெச்சிக்கிட்டு நின்னாவணும். அன்னிக்குன்னுத்தாம் இருந்தச் சோத்தையெல்லாம்
சாந்தா சித்தி தின்னுத் தொலைச்சுப்புட்டா, சோத்துப் பானையத் தொறந்து பார்த்தா சுத்தமா
தொடைச்சி வெச்ச மாரி இருக்கு. சாமியாத்தாவுக்கு என்னா பண்றதுன்னே புரியல.
சாமியாத்தாவுக்குச் சாந்தா சித்தியப் பார்த்ததும்
எல்லாமும் புரிஞ்சிப் போச்சி. சரி இந்தச் சங்கதிய பெறவு வெச்சிப்போம்னு அது குண்டு
குண்டுன்னு கொல்லைப் பக்கமா வைத்தி தாத்தாவோட கண்ணுக்குச் சிக்காம, கோனாரு வூட்டுக்கு
ஓடிப் போயி அங்க ஆக்கி வெச்சிருந்த சோத்த கொஞ்சம் தட்டுலயும் போட்டுக்கிட்டு, கொஞ்சம்
குண்டான்லயும் மறுசோறு போட எடுத்துக்கிட்டு, கொழம்பையும் ஊத்திக்கிட்டு, திரும்ப
அதே மாதிரியே யாரு கண்ணுக்கும் சிக்காம கொல்லப் பக்கமா வந்து வூட்டுக்குள்ள போயி
சோத்துத் தட்டோட திண்ணையில இருக்கற கட்டில்ல வெச்சிக்கிட்டு நின்னுப்புட்டு எப்படியோ
தப்பிச்சிடுச்சி அன்னிக்கு. வைத்தித் தாத்தா சாப்புட்டுப்புட்டு புளித்தண்ணிய இப்டி
கரைச்சி வெச்சா அதெ எப்டிச் சாப்புடுறதுன்னு சொல்லிப்புட்டே தட்டு நெறைய சோத்த மூணு
தட்டுத் தின்னுப்புட்டு முணுமுணுத்துக்கிட்டாரு.
வைத்தித் தாத்தாவோட சாப்பாட்ட முடிச்சிட்டு
வந்த சாமியாத்தாவுக்குக் கோவம்ன்னா கோவம் வெளியில சொல்ல முடியாத கோவம். அதுக்கு
வந்த கோவத்துல அன்னிக்கு சாந்தா சித்தி செமத்தியா அடி வாங்கும்னுத்தாம் கலா சித்தியும்,
வள்ளி சித்தியும் நெனைச்சிருக்குங்க. சாமியாத்தா வந்தது, அரிசியைக் களைஞ்சி ரெண்டு
பானையில போட்டு உலைய வெச்சிருக்கு. பொண்ணுங்க ஆளான பிற்பாடு அது பெரும்பாலும் சமைக்கிறதில்ல.
பொண்ணுங்கத்தாம் சமைக்கும்ங்க. இன்னிக்குத்தான் அது ரொம்ப நாளைக்குப் பிற்பாடு அடுப்புப்
பக்கத்துல உக்காந்து உலையப் போட்டிருக்கு.
"என்னம்மா பண்றே?"ன்னு வள்ளிச்
சித்திக் கேட்டதுக்கு அது ஒண்ணுஞ் சொல்லாம, மொறைச்சிக்கிட்டே சோத்த வடிக்கிறதுலயே
மும்மரமா இருந்திருக்கு. ரெண்டு பானயைில சோத்த வடிச்சி முடிச்சதும் ஒரு பானையில இருந்த சோத்துல பாதிய வழிச்சிப் பித்தளைத் தாம்பாளத்துல
போட்டு, "தின்னுடி சோத்துக்குளி! தின்னுடி!"ன்னு சாந்தா சித்தியைப் பாத்துச்
சொல்லிருக்கு சாமியாத்தா. அதோட நெனைப்பு சாந்தா சித்தி அந்தச் சோத்தைத் திங்காது,
அன்னிலேந்து புத்தி வந்து அளவா சாப்புட ஆரம்பிக்கும்னு. சாந்தா சித்தி எதையும் யோசன
பண்ணமா உக்காந்து திங்க ஆரம்பிச்சிச்சு. அப்பிடி உக்காந்து திங்க ஆரம்பிச்சதை மொறைச்சுக்கிட்டே
பாத்திருக்கு சாமியாத்தா. அதையெல்லாம் பெரிசா கண்டுக்கிடாம, அரைப் பானைச் சோத்தை அஞ்சே
நிமிஷத்துல தின்னுப்புட்டு அவ்வளவுதானாங்ற மாதிரி அது பாத்திருக்கு சாந்தா சித்தி.
சரி நீயி எம்புட்டுச் சோத்த தின்னுறேன்னு
இன்னிக்குப் பாத்துப்புடறேன்னு சாமியாத்தா மிச்சம் இருந்த மறுபாதிப் பானைச் சோத்தை
வழிச்சிப் போட்டிருக்கு. அதையும் தின்னுப்புட்டு அவ்வளவுதான்னாங்ற மாதிரி பார்வையப்
பாத்திருக்கு சாந்தா சித்தி. சரின்னு ரெண்டாவது பானையில வடிச்சச் சோத்தையும் பாதி
வழிச்சிப் போட்டு தின்னுப் பாப்பேம்ங்ற ரீதியில போட்டுருக்குச் சாமியாத்தா. அதெ அடுத்த
அஞ்சே நிமிஷத்துல ஸ்வாகா பண்ணிப்புட்டு, இன்னும் கொஞ்சம் சோறு இருந்தா போடுங்ற மாரி
பாத்திருக்கு சாந்தா சித்தி. மிச்ச மீதி இருக்குற சோத்தையும் போட்டுப் பார்ப்போம்,
அப்படியாவது அவ்வே திங்குறதுக்கு ஒரு முடிவு வருதான்னு பார்ப்போம்னு எல்லாத்தையும்
வழிச்சிப் போட்டிருக்கு சாமியாத்தா. அதையும் ஒரு பருக்கை வுடாம வழிச்சிச் சாப்புட்டு
முடிச்சிட்டு ஒரு ஏப்பத்தை விட்டுப்புட்டு, இன்னுங் கொஞ்சம் இருந்தா போடுறதுன்னு
பாத்திருக்கு சாந்தா சித்தி. மொத்தத்துல இப்போ ரெண்டு பானை, முன்னாடி ஒரு பானைன்கு
மூணு பானைச் சோத்த காலி பண்ணிருக்குச் சாந்தா சித்தி.
சாமியாத்தாவுக்கு அதுக்கு மேல முடியல.
சிரிக்க ஆரம்பிச்சது, சிரிப்பை நிறுத்த முடியாம அன்னிக்கு முழுக்க சிரிச்சிக்கிட்டே
கெடந்திருக்கு. "ஏம்டி இப்பிடி தின்னா ஒன்னய கட்டிக்கப் போறவேம், ஒனக்குச் சோத்த
வடிச்சுக் கொட்டுறதுக்கு சம்பாதிச்சே நொந்துப் போயிடுவாம்டி! இஞ்ஞ இருக்குற வரைக்கும்
இப்பிடிச் சாப்பிட்டுத் தொலையுறதோட நிறுத்திக்கோடி! குடித்தனம் பண்ணப் போற எடத்துல
அடக்க ஒடுக்கமா சாப்புட்டுத் தொலையிடி! அவ்வேம் வூடு வூடா பிச்சையெடுத்துதாம் ஒனக்குச்
சோத்தப் போடணும் பாத்துக்கோ!" அப்பிடின்னுருக்கு சாமியாத்தா.
அன்னிக்கு ராத்திரித்தாம் சிப்பூர்ல கட்டிக்
கொடுத்திருக்குற குணவதி பெரிம்மாவோட வூட்டுக்காரரு சிப்பூரு பெரிப்பா, சாந்தா சித்தியை
தன்னோட தம்பிக்குக் கட்டிக் கொடுங்கன்னு பொண்ண கேட்டுக்கிட்டு வந்தாரு.
*****
No comments:
Post a Comment