ஒரு கூட்டத்தைக் கூட்டுவது எவ்வளவு சிரமம்
தெரியுமா? தலைக்கு ஐநூறும், பிரியாணிப் பொட்டலமும் கொடுத்து அல்லல்படும் கூட்டத்தைக்
கேட்டால் அந்தச் சிரமம் புரியும். கித்தாஸ் கூடியிருந்த கூட்டத்தைக் கலைத்து விடுவார்
போல தோன்றுகிறது. அவருடைய பேச்சு எல்லாருக்கும் தர்ம சங்கடமாகப் போய் விடுகிறது.
அதை விட தர்ம சங்கடமான ஒரு வாழ்க்கையை அவர் வாழ்ந்திருக்கிறார். அந்தத் தர்ம சங்கடம்
அவர் பேச்சில் கொப்புளிக்கிறது.
கூடியிருந்த கூட்டத்தை இழக்கக் கூடாது
என்கிற மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை போன்ற கூட்டாசையில் விகடு கித்தாஸைத் தள்ளிக்
கொண்டு ஓர் ஓரத்திற்குப் போகிறான். கித்தாஸ் சிறு குழந்தையொன்று கையைப் பிடித்துக்
கொண்டு வருவது போல விகடுவின் கைகளைப் பிடித்துக் கொண்டு வருகிறார். ஓரம் என்றால்
விளிம்பு. அந்த விளிம்புக்கு வந்ததும் விளிம்பு நிலை மனிதர் போல உணர்வதாகச் சொல்கிறார்
கித்தாஸ்.
ஓரத்தை முழுவதுமாக நெருங்கியதும் விகடுவின்
ரெண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு அழ ஆரம்பிக்கிறார். விகடுவின் கைகள் ரெண்டையும்
கித்தாஸின் கண்ணீர் கரைத்து விடும் போலிருக்கிறது.
"ஏங் கதெயெச் சொல்லணும். எங் கதெயெ
யாருட்டயாவது சொல்லணும்! ஒங்கிட்ட சொல்வா?" என்கிறார் கித்தாஸ். ஏற்கனவே கித்தாஸ்
சொல்ல, கேட்ட கதைகள் தந்த அச்சத்திலிருந்து மீளாத விகடு சங்கடத்தோடு தலையை ஆட்டுகிறான்.
"அழகுன்னா அழகு! அப்படி ஒரு அழகு!
அப்படி ஒரு அழகான, ஒரு பொண்ண நீங்க பாத்திருக்கீங்களா?" என்கிறார் கித்தாஸ்.
பதில் சொல்ல வாயைத் திறக்கிறான் விகடு.
அவன் வாயைப் பொத்துகிறார் கித்தாஸ். "நான் பேசிட்டே கேள்வி கேட்பேன். வாயைத்
தொறக்கக் கூடாது. அந்தக் கேள்விக்கான பதிலையும் நானேத்தாம் சொல்வேன்!" என்கிறார்
கித்தாஸ். அவர் முதலில் பேசிய ஸ்லாங்கிற்கும், இப்போது பேசும் ஸ்லாங்கிற்கும், கூட்டத்தில்
பேசிய ஸ்லாங்கிற்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கிறதே என்று யோசிக்கிறான் விகடு. எப்படியோ
கித்தாஸ் இங்கே பேசி, அங்கே கூட்டம் நடந்தால் சரிதான் என்று நினைத்துக் கொள்ளும் விகடு
அவர் எந்த ஸ்லாங்கில் வேண்டுமானாலும் பேசிக் கொள்ளட்டும் என்று நினைக்கிறான்.
"நீ அந்த அளவுக்கு அழகான பொண்ணைப்
பாத்திருக்க மாட்டே! நோ சான்ஸ்! நான் பாத்திருக்கேன். நான் மட்டும் பாத்திருக்கேன்.
அவதான் my wife! only one lady wife! ஏன் இப்படி நான் சொல்றேன்னா... actually நான்
ஒரு அர்த்தநாரீஸ்வரன். sometime a male husband. sometime a female wife! I Play
the two roles as a man and a woman. Ary you confusing?" என்கிறார் கித்தாஸ்
பண்டாரம். இதற்கு இரண்டாவது கூட்டத்தில் வினையாற்றி, வினை விதைத்த மா.கா.பா.சோ.வே
பரவாயில்லை என்று நினைக்கிறான் விகடு. விகடுவுக்கு இங்கிலீஷ் எப்போதும் பிரச்சனை என்றால்,
இப்போது அதில் கித்தாஸ் பேசும் விசயமும் பிரச்சனையாக இருக்கிறதே என்று ஒரு நெளி நெளிகிறான்
விகடு.
"ஒரு பொண்ணு ஒரு ஆம்பளையக் கட்டிக்கிட்டு
படாத பாடு பட்டா my beautiful wife. Yes, I am a killer. I am a thriller. You
know, Who am I?" என்கிறார் கித்தாஸ். அவர்தான் முன்கூட்டியே எந்தக் கேள்விக்கும்
எந்தப் பதிலையும் சொல்லக் கூடாது என்று வாயைப் பொத்தியிருக்கிறாரே. இப்போது பதிலைச்
சொல்ல முடியாத வேதனையில் மென்று முழுங்கி நின்று கொண்டிருக்கிறான் விகடு.
*****
No comments:
Post a Comment