6 Dec 2019

எழுதித் தந்ததை எழுதி வாங்கிட்டாரு!



செய்யு - 290
            இந்தப் பக்கமா? அந்தப் பக்கமா? எந்தப் பக்கம் போறது?ன்னு சுப்பு வாத்தியாரு யோசனைப் பண்ணிட்டு இருந்த ஒரு நாள்ல அவரோட அண்ணங்காரரு செயராமு அரக்கபரக்க அணைக்கட்டுக்கு வராரு. மனுஷன் மனசுக்குள்ள ஒண்ணு நெனைச்சா அதோட தாக்கம் மாதிரி அடுத்தடுத்ததா சில சம்பவங்கள் நடக்கும் பாருங்க. அது ரொம்பவே வாழ்க்கையில வேடிக்கையா இருக்கும். அப்படி சில வேடிக்கைகள்தாம் சுப்பு வாத்தியாரோட நெனைப்புக்குப் பின்னாடி நடந்துச்சு. "குடும்பங் குட்டியோட இருக்கீயளே! ஒங்களையெல்லாம் பாத்து நாளாச்சே! அதாம் பாக்கலாம்னு வந்தேங்"றாரு செயராமு பெரிப்பா. இதெ கேட்டதுமே சுப்பு வாத்தியாருக்குச் சந்தோஷத்துல விருத்தியூரு பக்கமே போயிடலாமுன்னு தோணுது. "பயலுக்குத்தாங் அடிக்கடி ஒடம்புக்கு ஒண்ணு கெடக்க ஒண்ணு பண்ணிட்டு இருக்கு. மித்தபடி எல்லாஞ் சுகமாத்தாம் இருக்கேம்." அப்பிடிங்கிறாரு சுப்பு வாத்தியாரு.

            "நீ பண்ணதுதாம்டா யம்பீ செரி!" அப்பிடின்னு எந்தச் சம்பந்தம் இல்லாம மொட்ட தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சப் போடுறாப்புல ஒரு வாக்கியத்தப் போடுறாரு செயராமு பெரிப்பா.
            "நாம்ம என்னத்த யண்ணே அப்பிடிச் செரியா பண்ணிப்புட்டேம்னு சொன்னாத்தான்னே தெரியும்?" அப்பிடிங்கிறாரு சுப்பு வாத்தியாரு.
            "ஊரு ஒலகத்துல அண்ணந் தம்பிக்காரனுங்க ஒரே குடும்பத்துல,ஒரே ஊர்ல இருக்குறத பெருமையா நெனைச்சுக்கிட்டு இருந்துக்கிட்டு அடிச்சிக்கிட்டு கெடக்குறானுவோ! நாம்ம பரவால்லடா யம்பீ! ஒரே வூட்டுலயோ ஒரே ஊர்லயோ இருந்தா தேவையில்லாத அலம்பு சலம்புத்தாம் வருமேன்னு கல்யாணத்தக் கட்டிக்கிட்டு நீயி ஒரு பக்கம் வந்திட்டே. நாம்ம ஒரு பக்கம் அங்க விருத்தியூர்ல கெடக்கிறேம். காலா காலத்துக்கும் ஒறவு நெலைக்குணும்னா இப்பிடி எட்ட இருந்தாத்தாம்டா யம்பீ கதைக்கு ஆவும்!" அப்பிடிங்கிறாரு செயராமு பெரிப்பா. அவரு இப்பிடிப் பேசுறதெ கேட்டதுமே சுப்பு வாத்தியாருக்கு மனசு ஒடைஞ்சு முறிஞ்சு தொங்குறது போல ஆயிப் போச்சு. இருந்தாலும் அதெ வெளிக்காட்டிக்காம, "ஊரு ஒலகத்துல இருக்குறது போலவா நாம்ம நடந்துக்கப் போறேம்?" அப்பிடிங்கிறாரு சுப்பு வாத்தியாரு.
            "நாம்ம சும்மா இருந்தாலும் வூட்டுல இருக்குற பொண்டுவோ சும்மா இருக்காதுங்கடா யம்பீ! ஒரே கரைச்சலா கெடக்குமுங்க. அதுங்கள சமாதானம் பண்றதா நெனைச்சுக்கிட்டு நமக்குள்ள சண்டெ போட்டுக்குற மாரி ஆயிடும்!" அப்பிடிங்கிது பெரிப்பா சுப்பு வாத்தியாருக்கு மட்டும் கேட்குறாப்புல, குரலைக் கொஞ்சமாய்க் கொறைச்சுக்கிட்டு பக்கத்துல இருக்குற யாருக்கும் கேட்டுடாதபடி. இது வெங்குவோட காதுல விழுந்து அது கோவப்பட்டு பேசிப்புட கூடாது பாருங்க. அது இவங்க ரண்டு பேருக்கும் அடுக்களையில டீத்தண்ணியப் போட்டுக்கிட்டு அதுல மும்மரமா இருக்கு. அதுக்குத்தாம் காதோட காது வெச்சது போல அப்பிடி மொல்லமா பேசுது பெரிப்பா.
            கிராமத்துலயும் நெருங்க நெருங்க பகைதாம் வளரும், விலக விலகத்தான் உறவு உண்டாவும்னு சொல்றதுண்டு. எதையும் கிட்ட நெருங்கிப் பார்த்தா கொறைகளாத்தான் தெரியும், கொஞ்சம் விலகிப் பார்த்தாத்தான் அந்தக் கொறை மறைஞ்சு பாக்குறதோட முழுமை தெரியும்பாங்க. வெட்ட வெட்ட வெரசா வளர்ற மரம் மாதிரி, எட்ட எட்ட இருக்குறப்பத்தாம் உறவு, பாசம்லாம் வளந்துட்டு இருக்குமுன்னும் கிராமத்துல சொல்றதுண்டு. பெரிப்பா பேசுறப்பவே இதையும் அப்படியே மனசுக்குள்ள நெனைச்சுக்கிட்டு மனச கொஞ்சம் ஆறுதலு பண்ணிக்கிறாரு சுப்பு வாத்தியாரு.
            "என்னடாம்பீ! நாம சொல்ல யோஜனெ பலமா இருக்கே?"ங்றாரு பெரிப்பா.
            "ஒண்ணுல்லண்ணே! பயலுக்கு ஒடம்புக்கு முடியாம போயிட்டு இருக்குறதிலேந்து இஞ்ஞ இருக்குறதப் பத்தி ஒரே யோஜனையா இருக்கு!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "ஒம் மாமனாரு ஊருப் பக்கமா போறதுன்னாலும் போ! அதுல ஒண்ணும் தப்புல்ல! ஒனக்கு ஒரு தொணையாவும், ஆறுதலாவும் இருக்கும் பாரு. அத்தோட ஒம்மட வூட்டுக்காரிக்கும் திருப்தியா போயிடும் பாரு."ன்னு சொல்றாரே தவிர பெரிப்பா, விருத்தியூரு பக்கமா வா, நாமெல்லாம் ஒண்ணா ஒருத்தருக்கொருத்தரு தொணையா, ஆறுதலா இருப்போம்ன்னு சொல்ல அவருக்கு மனசில்ல. எங்க ஊருப் பக்கமா வந்தா அம்மிக்கொழவிய தூக்கியாந்த மாதிரி ஏதாச்சிம் ஒரு தேவைன்னா வூட்டுல இருக்குறதெ அவம் பாட்டுக்குத் தூக்கிட்டுப் போயிடுவானோங்ற மாதிரி நெனைப்போ அதுக்கு என்னவோ தெரியல, பெரிப்பா அப்பிடித்தாம் சொன்னிச்சு. இதச் சொல்லிப்புட்டு அடுத்ததா, "நீயி சர்க்காரு உத்தியோகத்துக்குப் போயிட்டே. நாம்மத்தாம் கட்டய அடிச்சிட்டுச் செருமப்பட்டுக்கிட்டு இருக்கேம். எதுத்தாப்புல ஒரு எடம் கெடந்துச்சி. அதுல போட்டுக்கிட்டு வேலையில்லாதப்ப எதாச்சிம் அடிச்சிட்டுக் கெடந்தேம். இப்போ என்னான்னா அதெ ஒம் பேருக்கு எழுதித் தந்தாச்சா... அதால பட்டறைப் போட ஒரு எடம் இல்லாம தவிக்கிறேம்டா யம்பீ! யம்ம நெலமை அஞ்ஞ அப்பிடிக் கெடக்குதுடா யம்பீ!" அப்பிடிங்கிது பெரிப்பா.
            "அந்த எடம் சும்மாத்தானே கெடக்குது. அதுல வேணும்ன்னா நீயி பட்டறைய போட்டுட்டு வேலையப் பாத்துக்க யண்ணே!" அப்பிடிங்கிறாரு சுப்பு வாத்தியாரு.
            "அதில்லடா யம்பீ! நீயி யம்பீ! நாம்ம அண்ணன்! இருந்தாலும் வாயும் வயிறும் வேறதாம்ல! இன்னிக்கு ஒரு மனசுல சொல்லிப்புடுறே. நாளைக்கே வூட்டுல ஒண்ணு சொல்லுதுன்னு சொல்லி பட்டறைய எடுன்னு சொல்றேன்னு வெச்சிப்பேம். அத்துச் சங்கடமா போயிடும்டா யம்பீ! அத்துச் சுத்தப்படாது!" அப்பிடிங்கிது பெரிப்பா.
            "அப்டில்லாம் ஒண்ணும் ஆவாதுண்ணே! நீயி பட்டறையப் போட்டுக்கோ! வேலையப் பாத்துக்கோ! ஆரு ன்னா சொல்றான்னு பாத்துப்புடுவேம்?" அப்பிடிங்கிறாரு சுப்பு வாத்தியாரு.
            "நமக்கு ஒரு யோஜனைடா யம்பீ! அந்த எடத்துல முன்னாடி இருக்குற நாலு குழி எடத்த எழுதிக் கொடுத்தேன்னா வெச்சிக்கோ அதுல நாம்ம பட்டறையப் போட்டுப்பேம். பின்னாலத்தாம் பத்துக் குழிக்கு மேல எடம் கெடக்குதே. அத்து ஒனக்குப் போதும். அந்த எடத்துக்குப் பின்பக்கமாவும்தான் ஒரு தெரு போவுதே. அப்பிடிப் பாக்க வூட்டுக் கட்டிக்கிறதுன்னாலும் நீயி கட்டிக்கலாம். அதாம்டாம்பீ! ஒரு பத்தரத்த வாங்கி இன்னின்ன வெவரம்னு சொல்லி எழுதிட்டு வந்திருக்கேம். நீயி ஒரு கையெழுத்தப் போட்டீன்னா நமக்கு ஒரு சொமை வெலகிடும் பாரு!" அப்பிடின்னு  பெரிப்பா அவரு கொண்டாந்த மஞ்சப் பையிலேந்து அஞ்சு ரூவா பத்திரத்த ஒண்ணு எடுத்து சுப்பு வாத்தியாரு முன்னாடி நீட்டுறாரு. தம்பிக்காரங்கிட்ட இது சம்பந்தமா யோசனைக் கலக்கணும், அதுக்கு அவன் இதுக்குச் சம்மதிக்கணும், பெறவு பத்திரத்த எழுதி கையெழுத்து வாங்கணும்ங்ற எண்ணமெல்லாம் இல்லாம பெரிப்பா நேரா காரியத்துல எறங்கி எல்லாத்தையும் முடிச்சிட்டு வந்திருந்திச்சு.

            இப்பத்தாம் அண்ணங்காரரு ஏன் ஊருப் பக்கமா வர வேணாம், மாமானாரு ஊருப் பக்கமா போன்னு சொல்றதுக்கான காரணம் சுப்பு வாத்தியாருக்கு வெளங்குது. ஒருவேளை விருத்தியூரு பக்கமா வந்து அந்த எடத்துல வூடு கட்டுன்னா, அண்ணங்காரரால முன்னாடி உள்ள எடத்துல பட்டறையப் போட முடியாதில்ல. அதுவும் இல்லாம அந்தத் தெருவுல எல்லா வூட்டுக்கும் முன்னாடி வாசல்ன்னா, அண்ணங்காரரு முன்னாடி பட்டறையப் போட்டு, ஒருவேளை சுப்பு வாத்தியாரு அங்க வூட்டைக் கட்டிக்கிட்டார்ன்னா அதுக்கு மட்டும் தெருவுலயே இல்லாத மாதிரி வாசல்லு பின்னாடில்ல போவும்.           அப்படி வூடு கட்டி தம்பிக்காரன் செருமப்படக் கூடாதுங்ற ரொம்ப ஒசத்தியான நோக்கத்திலயும், தம்பிக்காரனுக்கு எழுதிக் கொடுத்த அந்த எடம் தம்பிக்காரனுக்குப் போவாம தன்னோட பொழக்கத்துலயே இருக்கணுங்ற ரொம்ப ரொம்ப உலக மகா நல்லெண்ணத்துலயும்தாம் அண்ணங்காரரு அப்பிடியெல்லாம் பேசியிருக்கார்னு நெனைக்குறப்போ சுப்பு வாத்தியாருக்கு ச்சீன்னுப் போயிடுது.
            அண்ணங்காரரு நீட்டுன பத்திரத்த வாங்குன சுப்பு வாத்தியாரு ஒண்ணுஞ் சொல்லாம, ஒரு சின்ன மறுப்புக் கூட சொல்லாம, மனசுக்குள்ள இருக்குற துயரத்த வெளிக்காட்டிக்காம, மனசு வெறுத்துப் போயிக் கையெழுத்தைப் போட்டு நீட்டுறாரு.
            அதெ வாங்கி ஒண்ணுக்கு நாலு தடவையா கையெழுத்து இருக்காங்றத பாக்குற செயராமு பெரிப்பா, "இப்பதாம்டாம்பீ! மனசுக்குள்ள இருந்த பாரம் எறங்கியிருக்கு. எஞ்ஞ நீயி கையெழுத்துப் போடாம கொள்ளாம அலும்புப் பண்ணிப்புடுவீயோ? அந்த எடம் பட்டறைப் போடுறதுக்கு இல்லாம போயிடுமோன்னு பயந்துட்டே இருந்தேம்! வேல நல்லவெதமா முடிஞ்சிடுச்சி. நம்ம கொலதெய்வம் உஞ்ஞினி ஐயனாருக்குத்தாம்டாம்பீ கால்ல வுழுந்துக் கும்புட்டு வாரணும்." அப்பிடிங்கிது பெரிப்பா.
            இவங்க இப்பிடிப் பேசிட்டு இருக்குறதெ வேண்டா வெறுப்பா கெட்டுகிட்டே டீத்தண்ணிய போட்டுக்கிட்டு இருந்த வெங்கு ரெண்டு பேருக்குமா சேர்த்து டீத்தண்ணிய நீட்டுது. அதெ வாங்கிக் குடிச்ச பெரிப்பா, "சரிடாம்பீ! நாம்ம கெளம்புறேம். ஊருல போட்ட வேல போட்டபடியே கெடக்கு. இப்ப கெளம்பிப் போனாத்தாம் காரியம் ஆவும்!" அப்பிடிங்கிது.
            "ஒரு வாயிச் சோத்த கூட தின்னாம இப்டி கால்ல வெந்நிய ஊத்துன மாரில்ல கெளம்புறே? இருந்து சோத்த வடிச்சதும் ரவ்வ சோத்தத் தின்னிட்டுப் போலாண்ணே!" அப்பிடிங்கிறாரு சுப்பு வாத்தியாரு.
            "ஊரு ஒலகத்துல சோத்துக்கா கொறைச்சலு! ஊரு போயிப் பாத்துக்கிறேம்டா யம்பீ! பெறவு ஒரு நாளு சோலியில்லாம வந்து நெறைவா சாப்புட்டுப் போறேம்டாம்பீ! இப்பக் கெளம்புறேம்!"ன்னு அதுக்கு மேல தம்பிக்காரனோடப் பேச்சக் கேக்குறதில்லங்ற கணக்கா கெளம்பிப் போவுது. பெரிப்பா கெளம்பிப் போனதும், வெங்கு சுப்பு வாத்தியார்ர பிடிச்சுக்குது. "எப்படி நீஞ்ஞ முன்னாடி இருக்குற எடத்துக்குக் கையெழுத்தப் போட்டுக் கொடுத்தீயே! நமக்குன்னு இருக்குறது அந்த ஒரு எடந்தானே! அதுவும் இல்லன்னா ஒரு துண்டு துணி நெலம் இல்லாம நாம்ம ன்னா பண்றது? ஒஞ்ஞ அண்ணிக்காரி ஒரு அம்மிக்கொழவிய கொடுக்குறதுக்கு ன்னா கணக்குப் பாத்திச்சி? வூட்டுல இருக்குற அம்மிக்கொழவிய ஊருல தூக்கிட்டுப் போயிருக்காங்கன்னு ன்னா புளுவு புளுவுனிச்சி? ஒரு அம்மிக்கொழவிய கொடுக்குறதுக்கு அம்மாம் யோஜனெ பண்ணதே அவருந்தானே பாத்துட்டு இருந்தாரு. இன்னிக்கு அம்மிக்கொழவிய கொடுக்கக் கூட மனசில்லதாவங்க நெலத்த எழுதி வாங்கிட்டுப் போறாங்களே? இவங்கள ஆரு நெலத்த எழுதிக் கேட்டா? எழுதிக் கொடுத்த நெலத்த திரும்ப எழுதி வாங்கிட்டுப் போறாரே மனுஷன்? இதுக்கு எதுக்கு எழுதிக் கொடுக்கணும்? புள்ளயையும் கிள்ளிப்புட்டு தொட்டில ஆட்டி வுடுறதுங்றது இதுதாம். இப்போ புள்ள வேற பொறந்திருக்காம்! அவனுக்கு ஒரு எடம் கூட இல்லன்னா எப்பிடி? எஞ்ஞ வூட்டுலயெல்லாம் புள்ள பொறந்த நேரத்துக்கு எதாச்சிம் வாங்கிப் போடுவாங்க தெரியுமா? நீஞ்ஞ எம் புள்ளைக்கி என்னத்த வாங்கிப் போட்டுருக்கீங்க? இருந்த எடத்தையும் கோட்டைய வுட்டுப்புட்டு நிக்குறீங்களே! நாளைக்கு எம் புள்ள ன்னா பண்ணுவாம்? எம் புள்ளைக்கு நாமளும் அப்பங்காரரு வூட்டுலேந்து ஒண்ணும் கொண்டு வரலீயே! இருந்ததையும் எம்மட வூட்டுக்காரரு வுட்டுப்புட்டு நிக்குறாரே! எம் புள்ள என்னப் பண்ணுவாம்?" அப்பிடின்னு அழுகாச்சிப் புடிக்குது வெங்கு.
            "ஆமாம் போ! இப்போ அழுவுறதெ நிப்பாட்டுறீயா இல்லீயா? நமக்குக் கெட்ட கோவம் வரும் பாரு! எஞ்ஞ யண்ணன் கொடுக்க மனசு இல்லாமத்தாம் எழுதிக் கொடுதுச்சு என்னவோ அத்துச் சொத்த எழுதிக் கொடுக்குற மாரி. ஒருத்தரு மனசில்லாம கொடுக்குறது நமக்கு எதுக்குப் போ! அதுவே வெச்சிக்கிட்டு நல்லபடியா இருந்துகிடட்டும். நமக்கென்ன கொறைச்சலு? சம்பாதிச்சி வாங்கிப்பேம்! சிக்கனமா குடும்பத்த நடத்திப் பாடுபட்டா அத்தப் போல பத்து பங்கு எடத்த வாங்கிப் போடலாம் போ!" அப்பிடிங்கிறாரு சுப்பு வாத்தியாரு.
            "அப்போ நம்ம புள்ளைக்கின்னு சொத்து வாணாமா? பாட்டஞ் சொத்துல அவனுக்குப் பங்கிருக்கில்ல!" அப்பிடிங்கிது கண்ணைத் தொடைச்சிக்கிட்டு வெங்கு.
            "புள்ளைக்கிச் சொத்து வேணும்ன்னா அவனவனும் ஒழைச்சிக் கஷ்டப்பட்டு வாங்கிக்க வேண்டியதுத்தாம். நாம்ம ன்னா இப்போ எஞ்ஞ அப்பங்காரரு சொத்த எதிர்பாத்துட்டா வாழ்ந்துட்டு இருக்கேம்? எஞ்ஞ அப்பங்காரரு சொத்துன்னு எழுதிக் கொடுத்ததையும் எஞ்ஞ அண்ணங்காரரு மறுக்கா எழுதி வாங்கிட்டுப் போயிட்டாரு. இப்போ எனக்கு எஞ்ஞ அப்பங்காரரு சொத்து ன்னா இருக்கு? ஒண்ணுமில்லே! இப்போ நாம்மயில்ல? நாம்ம ஒழைச்சிச் சொத்த நெல புலத்த வாங்கிக்கலாம்னு இத்தோ இல்ல! அப்பிடித்தாம் புள்ளையோளும் இருக்கோணும்!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "இந்தப் பெலாக்கணத்துக்கு ஒண்ணுஞ் கொறைச்சலு இல்ல! எடத்த எழுதிக் கேட்டுக்கிட்டு சாமர்த்தியமா வந்து நிக்குறவர்க்கிட்ட, சாமர்த்தியாம எடமும் இல்ல, மடமும் இல்ல, எடத்தக் காலிப் பண்ணுய்யான்ன சொல்ல வக்கில்லே! நம்மட மேல மேல எரிஞ்சி வுழுந்துக்கிட்டு? ஒங்க ஆம்பளத்தனத்தையல்லாம் நம்மகிட்டத்தானே காட்டுவீங்க! புள்ள பாவம்ல! ஒடம்புக்கும் முடியாம போயிடுதுல்ல! இப்பிடி வர்றவங்களுக்கெல்லாம் வாரிக் கொடுத்தா நாளைக்கு எம் புள்ளைக்கு யாரு கொடுப்பா! எம் புள்ளைக்கு ன்னா இருக்கு?"ன்னு வெங்கு மூக்கை வாரிச் செவத்துல சிந்துது.
            சுப்பு வாத்தியாரு கோவத்துல தெருக்கதவைப் படார்னு அடைச்சிச் சாத்திப்புட்டு திண்ணையில போயி உக்காந்துக்கிறாரு. இவ்வேம் விகடு பயெ விவரம் புரியாத ஒண்ணரை வயசுக் கொந்தை. அதையெல்லாம் பாத்துக்கிட்டு அமைதியா உக்காந்திருக்காம்.
            "வந்தவரு புள்ளைய கொஞ்சம் தூக்கிப் பாத்தாத்தாம் ன்னா? ஒரு ரொட்டிப் பாக்கெட்டு வாங்கியாந்தா ன்னா? பத்திரத்த மட்டும் பத்திரமா பையில போட்டுட்டு வந்துட்டு, காரியம் முடிஞ்சதும் சிட்டால்ல பறந்துப் போறாரு! அந்தப் பாசமெல்லாம் ஒங்க சனங்களுக்கு எஞ்ஞ வந்துடப் போவுது? அதெச் சொன்னாலும் கொறச் சொல்றேன்னு கோவம் முனுக்குன்னு வந்துப்புடும்! எல்லாந் எந் தலையெழுத்து! இப்பிடி ஒரு மனுஷனக் கட்டிட்டு இப்பிடிக் கெடக்கணும்னு கெரகம், விதி. நாம்ம ன்னா பண்றது?" அப்பிடின்னு வெங்குவோடச் சத்தம் வூட்டுக்குள்ளேயிருந்து வருது.
*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...