6 Dec 2019

19.2



            வில்சன் அண்ணன் கதையைச் சொல்லி முடித்ததும் கித்தாஸ் பண்டாரம் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமலும், சம்பந்தம் சம்பந்தமில்லாமல் பேசத் தொடங்கி விடுகிறார். அவரது பேச்சை நிறுத்துவதோ, அவரை அமர வைப்பதோ மிகப் பெரும் சவலாகிப் போயி விடுகிறது. கித்தாஸ் பேசியதை நீங்களே கேளுங்கள். அதிலிருந்து ஏதாவது ஒரு முடிவுக்கு வர முடிகிறதா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

            "வாழ்க்கை நம்மை காக்க வைத்து, காக்க வைத்துக் கொல்லுகிறது. ஏதோ ஒரு வேகத்துக்கு நம்மைப் பழக்கி விடுகிறது. பிறகு அந்த வேகத்தைக் கொடுக்காமல் நம்மைப் பழி வாங்குகிறது. வேகத்துக்குப் பழகுவது ஆபத்து.
            கோபம் ஒரு ராட்சசன் / ராட்சசி / ராட்சசர். மனித குணத்தை உறிஞ்சிக் குடித்து விடுகிறான் / விடுகிறாள் / விடுகிறார்.
            எல்லா குணத்தையும் ஒருங்கே செயலிழக்க வைக்கும் ஒரு குணம் உண்டென்றால் அது கோபம்.
            குடித்து வீசப்படும் தண்ணீர் பாட்டில்களிலும், குளிர்பான பாட்டில்களிலும் பால் கொண்டு வரப்படுவது அவ்வளவு கோபம் ஏற்படுத்துமா என்ன?
            முதல் நாள் அது சாதாரணமாகத்தான் தெரிந்தது. குடித்து பின் கசக்கி வீசப்பட வேண்டிய பாட்டில்களில் மறுநாளும் கொண்டு வரப்பட்ட போது மிகுந்த கோபத்துக்கு உள்ளானேன். அந்த பாட்டில்கள் அல்லாத வேறு பாத்திரங்களில் கொண்டு வா என்றால் காரியம் முடிந்து விட்டது. பால் கொண்டு வருபவர்கள் அதை ஏற்றுக் கொள்வதில்லை. வேறு பாத்திரத்திற்கு எங்கு போவது என்று எதிர்கேள்வி கேட்கிறார்கள். வீட்டிலிருந்து பாலுக்கு ஒரு பாத்திரத்தைக் கொடுத்து வைக்கலாம் என்றால் தயங்குகிறார்கள். பாத்திரம் போனால் திரும்ப வராது என்கிறார்கள். என்னதான் செய்வது?
            வந்தக் கோபத்தில் அன்று பாலும் குடிக்கவில்லை. சோற்றுக்கு மோரோ, தயிரோ இட்டுக் கொள்ளவில்லை. விசயம் அத்தோடு முடிந்து விடவில்லை. இனி எப்போதும் பாலோ, மோரோ, தயிரோ குடிப்பதில்லை என்று ஆகி விட்டது விசயம். இந்த அனுபவமும்தான் எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறது. பால் குடிக்காத அன்று காலை பத்து மணிக்கெல்லாம் வழக்கமாக வரக் கூடிய சிறுநீர் வரவில்லை. பனிரெண்டு மணிக்கு வர வேண்டிய சிறுநீரும் வரவில்லை. வழக்கமாக வர வேண்டிய சிறுநீர் வரவில்லையே தவிர கோபம் அதிகமாக வந்து கொண்டிருந்தது. உடல் பலவீனப்பட்டுக் கிடந்திருக்கிறது. பலவீனத்தின் மற்றொரு வடிவம் அல்லவா கோபம். அது ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தது.
            கோபத்துக்கு அது மட்டுமே காரணம் இல்லை. இன்னும் பற்பல காரணங்கள் இருந்தன.
            வாழைக் கன்றுகளை வாங்கிப் போட்டு எவ்வளவு நாட்கள் ஆகின்றன தெரியுமா? அது நடப்படவில்லை. அதை நடுவதற்குள் அங்கே நடக்கூடாது? இங்கே நடக்கூடாது? என்று ஆயிரெத்தெட்டுக் குழப்பக் கூத்தடிப்புகள். இப்படி தெரிந்திருந்தால் அதை வாங்கியிருக்கவே மாட்டேன். வாங்கும்படி ஆகி விட்டது. வாங்கியதை சாகும்படி விட்டு விடக் கூடாது என்று கடைசியில் களத்தில் நானே இறங்கி நட்டேன். இரவு தொட்டுக் கொண்டிருந்தது. இருவின் கரிய நிறத்திற்குள் நடப்பட்ட கன்றுகளை ஒப்புவித்து விட்டு வந்து போது இரவு மணி ஏழு ஆகியிருந்தது.
            இவர்களிடம் எதையும் சொல்லக் கூடாது. அப்படி‍யே நேருக்கு மாறாக செய்கிறார்கள் மற்றும் சிந்திக்கிறார்கள். அப்படித் தெரிந்தும் நான் ஏன் சொல்கிறேன்? ஏதோ இந்த ஒரு விசயத்திலாவது மாறி எதையாவது செய்து விட மாட்டார்களா என்ற நம்பிக்கைதான். அந்த நம்பிக்கை என்னை அடியோடு சாய்த்து விடுகிறது. ஏனென்றால் இவர்கள் எதையும் செய்ய மாட்டார்கள். எதைச் செய்வது என்றாலும் அதைப் போட்டுக் குழப்பி, செய்யாமல் அடித்து விடுவார்கள். இவர்களுக்கு எதையும் செய்யாமல் இருப்பதில்தான் ஆர்வம். இவர்களிடம் போய் இதைச் செய்யலாம், அதைச் செய்யலாம் என்று முயற்சிகள் எடுத்தால் முயற்சிகள் எடுத்தவன் பைத்தியம் பிடித்து அலைய வேண்டியதுதான்.
            இதை விட மென்மையாக வேறு எப்படி உங்களிடம் குரல் கொடுக்க வா என்ற அழைப்பது. அவ்வளவு மென்மையாக நாசுக்காக அழைத்துப் பார்த்து விட்டேன். வரவில்லை. கிட்டத்தட்ட அந்த அழைப்பு என்பது கெஞ்சுதலுக்கு நிகரானதே. எனது கெஞ்சுதல் எடுபடவில்லை. அழைப்புக்கு வர இயலாமையும் கண்டுகொள்ளப்படவில்லை. ஒரு சின்ன sorry. வரமுடியலைப்பா என்ற வார்த்தை என்று எதுவும் இல்லை. பிறகு ஏன் நான் இனிமேல் கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டும். எனக்குத் தெரிந்தது என்னவோ, அதைச் செய்து கொண்டு போய்க் கொண்டிருக்க வேண்டும். அதில் எந்தப் பிரச்சனையில் இல்லை பார். முடிந்தால் செய்கிறேன். முடியாவிட்டால் போகிறேன். அது என்னுடைய கட்டுபாட்டில் இருக்கிறது. மற்றவர்களை நம்ப வேண்டியதில்லை. அவர்கள் செய்து கொடுப்பார்களா? மாட்டார்களா? என்ற கலங்கிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.
            பாழாய்ப் போன ஒரு பரதேசி என்னை பயிற்சி கொடுக்க வேண்டும் என்று அணுகுகிறான். அவன் நான் மதிக்கும் ஓர் அதிகாரியின் பெயரைச் சொன்னதும் நானும் மரியாதைக்காகச் சம்மதித்து விட்டேன். நான் சில கேள்விகளைக் கேட்டிருக்க வேண்டும். அதைக் கேட்காமல் ஒப்புக் கொண்டது என் தவறு. அதன் விளைவைத்தான் பின்னர் அனுபவித்தேன். அந்தப் பரதேசி சொன்ன பயிற்சிக்காக ரெண்டு நாட்களை வீணடித்துப் பயிற்சிக் கட்டகங்களைத் தயாரித்தேன். பயிற்சி நாளன்று காலையில் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு விட்டது. மதியத்துக்கு மேல்தான் சென்றேன். என்னை அப்படியே உட்கார வைத்து விட்டான். எனக்கு அந்த அரைநாள் வீணானது. மொத்தத்தில் எனது இரண்டரை நாள் வீணானதுதான் மிச்சம். எனக்கு இருக்கின்ற வேலைகளைப் பார்க்க முடியவில்லை.
            இதில் தேவையில்லாத வேலைகளை வேறு இழுத்துப் போட்டுக் கொண்டு அதில் போய் அவமானப்பட வேண்டும் என்று தலையிலா எழுதியிருக்கிறது. அதற்கு நான்தான் காரணம். சரியான முடிவுகளைச் சரியான நேரத்தில் எடுக்காதது காரணம். எல்லாவற்றுக்கும் ஒரே முடிவு முடியாது என்பதுதான். பிறகு அவர்கள் கெஞ்சிக் கொண்டு நிற்பதைப் பார்த்து அதை செய்யலாமா? வேண்டாமா? என்று முடிவு செய்து கொள்ளலாம். இச்சம்பவம் எனக்குள் ஏற்படுத்திய கோபம் இருக்கிறதே! அது இன்று வரை கனன்று கொண்டிருக்கிறது. இந்த மயிரான்களுக்குத் தண்டத்துக்கு மாரடிக்கத்தான் என் தலையில் எழுதியிருக்கிறதா என்ன?
            அவன் எவ்வளவு பெரிய அயோக்கியப் பயல் என்று தெரியாமல் அவன் பேச்சைக் கேட்டுக் கொண்டு ஏமாந்து விட்டேன். அவனுங்களுக்குள் யார் அதிகம் புகழ் பெறுவது என்பது குறித்த ஒரு பனிப்போர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதற்கு நல்லதொரு பகடைக் காயாக அந்த அயோக்கியப் பயல் என்னைப் பயன்படுத்திக் கொண்டான். என்னவோ அந்த அயோக்கியப் பயல் நியாயத் தராசின் முன் நின்று கேள்வி கேட்கச் சொல்வதாக நினைத்துக் கொண்டு நானும் அவன் கேட்டபடி அவனுக்கு சவாலாக உள்ள இன்னொருவனைக் கேள்வி கேட்டு விட்டேன்.
            உண்மையில் எனக்கு இந்த இரண்டு பயல்களாலும் எந்தப் பயனுமில்லை. அப்படியிருக்க இந்த இரண்டில் ஒருத்தனைப் பகைத்துக் கொள்ள எந்தக் காரணமுமில்லை. ஆனால் கிரகம் இருக்கிறதே? அது விட வேண்டுமே! அந்த அயோக்கியப் பயல் சொன்னான் என்பதற்காக கேட்டு விட்டேன். விளைவு, இன்று வரை ஒருத்தனைப் பகைத்து, யாருக்காக அந்த ஒருத்தனைப் பகைத்துக் கொண்டேனோ, அந்த ஒருவனால் எந்தப் பயனுமில்லாமல் அல்லாடுகிறேன். எந்தப் பக்கமும் சாராமல் நடுநிலையில் இருப்பது முக்கியமல்லவா! அதிலிருந்து நான் தவறி விட்டேன். இவன்கள் பேருக்காகவும், புகழுக்காகவும் ஒருத்தனை ஒருத்தன் தின்று கொள்கின்ற மிருகப் பிறவிகள்.
            எல்லாம் ஒரு வகையில் நன்மைக்கே. எல்லாவற்றிலும் ஒரு பாடம் இருக்கிறது. எல்லாவற்றிலிருந்தும் தெரிந்து கொள்ள ஒரு செய்தி இருக்கின்றது. அது தரும் பாடம் விலை உயர்ந்ததாக இருக்கிறது. எவ்வளவு செலவு செய்தாலும் அந்தப் பாடத்தை அனுபவம் கற்றுத் தருவதைப் போல வேறு எதுவும் கற்றுத் தராது.
            நாம் என்ன நினைத்தாலும் அதை காலம் மாற்றிப் போடும் பாருங்கள். அதுதான் அபத்தமாக இருக்கும். நாம் யாரையும் பழிவாங்க வேண்டியதில்லை. அப்படி காலம் பழி வாங்கும். பழி வாங்குவதற்கான நம் முயற்சிகளால் நம் சக்தியை நாம் விரயமாக்கிக் கொள்ள வேண்டியதில்லை. காலமே அதைப் பார்த்துக் கொள்ளும். எல்லாவற்றையும் காலமே மாற்றி வைக்கும். நாம் எதையும் மாற்றி வைக்க வேண்டியதில்லை. நாம்தான் இதை மாற்றி வைக்க வேண்டும் என்று கர்வத்தோடு, ஆணவத்தோடு சிந்திக்க வேண்டியதில்லை. காலம் அதைப் புரட்டிப் போடும் என்ற எச்சரிக்கை எப்போதும் இருக்க வேண்டும். காலத்திற்கு முன் நான் என்ற ஆணவம் அபத்தமானது மற்றும் ஆபத்தானது. அது தேவையில்லை. காலம் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளலாம். நாம் வெறுமனே காலத்தின் மடியில் கண்ணுறங்கி நம்மால் இயன்றதைச் செய்து விட்டு, இயலாததைக் காலத்தின் கைப்பிடியில் ஒப்படைத்து விட்டு நிம்மதியாக கண்ணுறங்கலாம்.
            நான் எனக்குத் தெரிந்து வகையில் செய்கிறேன். இதற்கு மேல் செய்வதற்கு எதுவுமில்லை. அப்படி இதற்கு மேல் இதில் செய்வதற்கு எதாவது இருப்பதாக நினைத்தால் நீங்கள் தாரளமாக செய்து கொள்ளுங்கள். தயவுசெய்து அதை என்னைச் செய்ய சொல்லி வற்புறுத்தாதீர்கள். அது என்னால் முடியாது. நீங்கள் எதைச் சொல்கிறீர்களோ அது உங்களால்தான் முடியும். என்னால் முடிவதை நான் சொல்வதில்லை. அதை செய்து விடுகிறேன்.
            என்னைப் பற்றி இங்கு பேசிக் கொள்வதே என்னை என்னிலிருந்து விடுவிக்கிறது. வேறு வழியென்ன இருக்கிறது? என்னை என் இறுக்கமான மனதிலிருந்து காப்பாற்றிக் கொள்ள அதை விட வேறென்ன வழியிருக்கிறது? அந்த வழியைத்தான் நான் தேர்ந்து கொள்கிறேன். என் பேச்சின் பின்னணி இதுதான். ஆகையால் இதை மற்றவர்கள் கேட்க வேண்டும் என்றெல்லாம் நான் எதிர்பார்க்கவில்லை. கேட்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கேட்கலாம். அதை நான் தடுக்கப் போவதில்லை. காலத்தின் ஓரத்தில் இது இருக்கும். தேவையென நினைப்பவர்கள் கேட்பார்கள். தேவை இல்லாதவர்கள் இதைச் சீண்டக்கூட மாட்டார்கள். தேவையில்லாதவர்களிடம் போய் இதைப் கேளுங்கள் என்று நானும் விளம்பரம் செய்ய முடியாது."
            கித்தாஸ் பண்டாரத்தைப் பிடித்து உட்கார வைப்பதற்குள் போதும் போதுமென்று ஆகி விடுகிறது.
*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...