5 Dec 2019

ஊரு சுத்துற அம்மிக் குழவி!



செய்யு - 289

            நெறத்துல என்ன கருப்பு, செவப்புன்னு? அந்த உடம்புக்குள்ள இருக்குற மனசுக்குள்ளத்தான எல்லாமும் இருக்குங்றத போவப் போக வெங்குப் புரிஞ்சிக்கிட்டாலும் ரொம்ப நாளைக்கு இப்பிடி கருப்பா ஒருத்தர்ர பிடிச்சிக் கல்யாணம் பண்ணி வெச்சிட்டாங்களேங்ற வருத்தம் அதுக்கு இருந்திருக்கு.
            அதெ பத்தி வெங்கு இப்போதும் சொல்லிச் சிரிக்கும், "இப்பிடிக் கருப்பா ஒருத்தர்ர கல்யாணம் பண்ணிக்கிட்டேனே! புள்ளைங்க எப்டிப் பொறக்கப் போவுது? அவர்ர மாரி கருப்பாவா? நம்மள மாரி செவப்பாவான்னு கவலப்பட்டுகிட்டே கெடந்தேம். நல்லவேள புள்ளைங்க ரண்டும் நம்மள மாரி செவப்பா வந்துப் பொறந்திட்டீங்க!" அப்பிடின்னு.
            உண்மையிலயே கருப்பு மாதிரி ஒரு அருமையான நெறம் இந்த உலகத்துலயே கெடையாதும்பாரு சுப்பு வாத்தியாரு. அவரு கருப்பா இருக்குறதால அப்பிடிச் சொல்றாரோன்னு நமக்குச் சந்தேகமாத்தாம் இருக்கும். அதுக்கு அவரு ஒரு விளக்கம் சொல்வாரு பாருங்க, "கருப்பா இருக்குறவேம் கருப்பத்தாம் இருப்பாம். செவப்பா இருக்குறவேம் செவப்பத்தாம் இருப்பாம்னு சொல்ல முடியாது. அவ்வேம் கருத்துப் போவலாம். ஆனா கருப்பா இருக்கிறவேம் மேக்கொண்டு செவப்பால்லாம் போவ மாட்டாம். அவ்வேம் எப்பவும் கருப்பத்தாம் இருப்பாம். இன்னைக்கு ஒரு நெறம், நாளைக்கு ஒரு நெறம்னு நெறம் மாற மாட்டாம். அதுவும் இல்லாம நம்ம மண்ணுக்கேத்த நெறம் கருப்புத்தாம்யா. கருப்பு இருக்குறவங்க ஒடம்புல தெம்பு தெகிரியுமா திட காத்திரமா நோயி எதிர்ப்புச் சக்தியோடயும் இருப்பாங்க!" அப்பிடிம்பாரு. அவரு சொல்றதுதாம் சரித்தாங்ற மாதிரி செவப்பா அவருக்குப் பொறந்து தொலைச்ச விகடு நோயும் நொம்பலமாத்தாம் கெடந்தாம். ஒருவேளை அவன் அவங்க அம்மாக்காரி போல இல்லாம, அப்பாக்காரரு போல கருப்பா பொறந்திருந்தா நோய் நொடியில்லாம இருந்திருப்பானோ என்னவோ!
            சுப்பு வாத்தியாரோட கல்யாண ஏற்பாடுகள்ல மாரிச்சாமி வாத்தியாரோட உதவி ரொம்பவே அதிகம். அவரு லாரியோட வந்து மனுஷ மக்கள இங்கேருந்து அங்கே, அங்கேருந்து இங்கேன்னு கொண்டுட்டுப் போறதுலயும், கல்யாணத்துக்கு வேண்டிய சாமாஞ் செட்டுகள எடுத்துட்டு வரதுலயும் ரொம்பவே உபயோகமா இருந்துருக்காரு. சுப்பு வாத்தியாரு கல்யாணத்துக்கு வேலங்குடியில பெரியவருக்கும், சின்னவருக்கும் பத்திரிகை வைச்சாயிருக்கு. அதுல பெரியவரு அவரோட மூத்தப் பொண்ண கட்டாம வம்படியா வேறொரு பொண்ணப் பாத்துக் கட்டுறாங்கங்ற வேகத்துல கல்யாணத்துக்கு வரல. சின்னவருக்கு வேலங்குடியில பத்மா பெரிம்மா வாங்குன நெலத்த அவருகிட்டக் கொடுக்காம யாரோ ஒருத்தருகிட்ட பாத்து வெவசாயம் பாத்துக்கச் சொன்னதுல ஏக வருத்தமாப் போயிடுச்சி. அந்த வருத்தத்த மனசுல வெச்சிக்கிட்டு கல்யாணத்துக்கு வந்து தலையக் காட்டிட்டுப் போனவருத்தாம், அதுக்குப் பிற்பாடு ஆளெக் காணும்.
            சுப்பு வாத்தியாரு கல்யாணத்துல விருத்தியூரு தெரு சனங்களும், பொண்ணு வூட்டு சனங்களும்தான் அதிகம். அவரு பக்கத்து வூட்டு ஆளுங்க எண்ணிக்கையில கொஞ்சம்தாம். எப்படியோ ஒரு வழியா கலியாணம் முடிஞ்சிது.
            சுப்பு வாத்தியாரு கல்யாணம் ஆயி வெங்குவோட மூணு நாளு விருத்தியூர்ல இருந்தவரு நாலாவது நாளு ஒழுகச்சேரிக்குப் போயிட்டாரு. அங்க யம்மாக்கெழவி சுப்பு வாத்தியாரையும், வெங்குவையும் கவனிச்சு நல்ல விதமா பாத்துக்கிடுச்சி. கல்யாணத்துல வைத்தி தாத்தா வெங்குவுக்கு கழுத்துல ஒண்ணு, காதுல ஒண்ணு, கால்ல ஒரு கொலுசு, கல்யாணத்துக்கு ஒரு பட்டுப் புடவை, ஒரு பெரிய பித்தளை ஆனைக்கால் குவளை, ஒரு எவர்சில்வர் குடம், ஒரு எவர்சில்வர் தவளை, ஒரு பாயி, ரெண்டு தலவாணி, ஒரு கல்லு விளக்குன்னு வாங்கிக் கொடுத்ததுதாம். மத்தபடி குடும்பம் நடத்துறதுக்குத் தேவையான சாமானுங்கன்னு அவங்ககிட்ட பெரிசா எதுவும் இல்ல. ஏதோ இருக்குற சாமானுங்கள வெச்சி கொஞ்ச நாளைக்கு ஓட்டிட்டு இருந்தவங்க, இங்க ஒழுகச்சேரியில அவங்க குடும்பம் நடத்துறதுக்கு வேண்டின சாமாஞ் செட்டுகள ஒவ்வொண்ணா வாங்கிச் சேக்க ஆரம்பிச்சாங்க ரெண்டு பேரும். இட்டிலி தோசைக்கு மாவரைக்கணும்னா அக்கம் பக்கத்துல யாரு வூட்டுல ஆட்டுக்கல்லு சும்மா கெடக்கோ அங்க போயி அரைச்சிக்கிறதுதாம்.
            மித்தமித்த நாள்கள்ல எப்படி வேணாலும் அரைச்சிக்கலாம்னா ஒரு விஷேச நாள்ல அரைக்கிறதுன்னா ஓரே ஒண்ணு கூடி எங்க ஆட்டுக்கல்லு இருக்கோ அங்க கூட்டம் கூடி நிக்கும்ங்றதால கொஞ்சம் நின்னு காத்திருந்ததாம் அரைச்சிட்டு வரணும். ஏன்னாக்கா அப்போ எல்லா வூட்டுலயும் ஆட்டுக்கல்லு, அம்மிக்கல்லுங்றது கெடையாது. இருக்குறவங்க வூட்டுலப் போயித்தாம் ஊரே ஒண்ணு மாத்தி ஒண்ணு அரைச்சிக்கும்ங்க. ஆட்டுக்கல்லு, அம்மில்லாம் பெரிய சாமானுங்க போல இருந்திருக்கு அப்போ. இட்டிலி பானையெல்லாம் ரொம்ப பெரிய வசதியான வூட்டுகாரங்க சாமானுங்களா இருந்திருக்கு. அந்த இட்டிலி பானையையும் இரவல் வாங்கிச் சுட்டுக்கிறதும் உண்டு. இரவல் வாங்க முடியலேன்னா இருக்குற சட்டிப் பானையிலயே குறுக்க குச்சிகள வெச்சி, அது மேல துணியப் போட்டு இட்டிலி மாவை ஊத்தி மேல ஒரு சட்டியைப் போட்டு மூடி அவிச்சி எடுத்துக்கறதும் உண்டு. இட்டிலிப் பானையில சுட்டு எடுக்குற இட்டிலி மாதிரி ஒரு வடிவமா இருக்காது அது. கோணலும் மாணலுமா அப்பிடியும் இப்பிடியுமாத்தாம் இருக்கும் அந்த இட்டிலிங்க. இருந்தாலும் அதெ திங்குறதுக்கு அம்புட்டு ஆசையா இருக்குமாம் அந்த நாட்கள்ல. இட்டிலிக்குப் போடுறதுன்னா அமாவாசைக்கு ஒரு தடவெ,ஏதாச்சிம் விஷேசம்னா அன்னிக்கு ஒரு தடவேன்னு கணக்கு வெச்சித்தாம் போட்டிருக்காங்க. இப்போ இருக்குற மாதிரி கிரைண்டர்ல போட்டு, பட்டனைத் தட்டி விட்டா மாவா வர்ற காலத்துக்கு முந்துன காலம் அது.
            பொதுவா பொண்ணுங்களுக்கு நகை நட்டு வாங்கணும்ங்ற ஆசையோட, வூட்டுக்கு ஆட்டுக்கல்லு, அம்மிக்கல்லு, உரலு, ஒலக்கை இதெல்லாம் வாங்கிப் போட்டு வெச்சிக்கணும்னு அப்போ ஆசை இருந்திருக்கு. ஓர் அம்மிக் கொழவி இருந்தா சட்டினி அரைக்க, தொவைய அரைக்க வசதியா இருக்குமேன்னு வெங்குவுக்கும் ஒரு ஆசெ. இத்தனை நாளும் சட்டினியும், தொவையலும் அரைக்கிறதுன்னா பக்கத்து பக்கத்து வூடுகள்ல போயி அரைச்சிக்கிறதுதான். அப்ப வெங்குவுக்கு ஒரு நெனைப்பு வருது. விருத்தியூர்ல ஒண்ணுக்கு ரெண்டால்ல அம்மிக் கொழவி இருக்கு. அதுல ஒண்ணு வந்தா நல்லா இருக்குமேன்னு சனி, ஞாயிறு வந்துட்டா விருத்தியூருக்கு அம்மிக் கொழவியத் தூக்கிட்டு வந்துடலாமேன்னு சுப்பு வாத்தியார்ர அழைச்சிக்கிட்டுப் போவும். அங்கப் போயிக் கேட்டாக்கா, அதுக்குப் பத்மா பெரிம்மா, அந்த அம்மிக் கொழவி அந்த வூட்டுக்கு மருந்து அரைக்கப் போயிருக்கு, இந்த வூட்டுக்கு மருந்து அரைக்கப் போயிருக்குன்னு சொல்லும். வெங்குவுக்கு ஏமாத்தமாப் போவும்.

            விருத்தியூர்ல ரெண்டு அம்மிக் கொழவிங்க கெடந்தது. ஒண்ணு நல்லா பெரிசா வூட்டுக்கு சட்டினி, தொவையல், கொழம்புக்குச் சாந்து அரைக்கிறதுக்கானது. இன்னொண்ணு உடம்புக்கு யாருக்கும் முடியாம போயிட்டா பச்சிலை, மருந்துச் சாமானுங்களப் போட்டு அரைக்கிறதுக்குன்னு உள்ளது. இது கொஞ்சம் சின்னது. ஒரே வூட்டுக்குள்ள பத்மா பெரிம்மாவும், ரத்தினத்து ஆத்தாவுமா ரெண்டு குடித்தனமா இருந்தப்போ, பத்மா பெரிம்மா குடித்தனத்துக்குப் பெரிய அம்மிய வெச்சிக்கிட்டு. ரத்தினத்து ஆத்தா குடித்தனத்துக்கு சின்ன அம்மிய வெச்சிக்கிட்டுங்க. தையல்நாயகி ஆத்தா இறந்து, ரத்தினத்து ஆத்தாவும் இறந்த பிற்பாடு அந்த அம்மி மருந்து சாமாஞ் செட்டுகள அரைக்கிற அம்மியா மாறிப் பத்மா பெரிம்மாகிட்டயே வந்துப் போயிடுச்சி. அந்த மருந்து அரைக்கிற அம்மிக் கொழவியத்தாம் வெங்குக் கேட்டிச்சி. குடும்பம் நடத்துறதுக்குப் புருஷங்காரம் வூட்டுலேந்து ஒரு சாமானும் வரலேயே. இப்படியாவது ஒரு சாமான் வரட்டும்னு அது நெனைச்சது.
            வெங்கு என்னைக்கு அந்த அம்மிக் கொழவியக் கேட்க ஆரம்பிச்சிச்சோ அன்னிக்கே பத்மா பெரிம்மா அதெ யாருக்கும் தெரியாம ஒரு மூலையில போட்டு அது மேல நாலஞ்சு மூட்டைகளைப் போட்டு மறைச்சி வெச்சிடுச்சி. இந்த விவரம் புரியாம அது மாசத்துக்கு ஒரு தடவெ சனி, ஞாயிறுல விருத்தியூருக்கு சுப்பு வாத்தியார்ர அழைச்சுக்கிட்டுப் போயி அம்மிக் கொழவியக் கேக்குறதெ ஒரு வழக்கமாவே வெச்சிருந்திச்சி. இது இப்படிப் பண்ற கூத்தப் பாத்துட்டு பேசாம நாமளே ஒரு அம்மிக் கொழவியப் பாத்து வாங்கிப்புடுவோம்னு சொல்லிருக்காரு சுப்பு வாத்தியாரு. வெங்கு அதெ கேக்கல. "எம்மட மாமியாரு அரைச்சுப் பொழங்குன அம்மின்னு கேள்விப்பட்டேம். அவங்க ஞாபவார்த்தமா இருக்கட்டுமேன்னுதான் அதெ கேக்குறேம்!" அப்பிடின்னுச்சி.
            ஒரு தடவெ விருத்தியூருக்கு சுப்பு வாத்தியாரும், வெங்குவும் போயிருந்தப்ப, இங்க இருக்குற மூட்டைகள அங்க தூக்கிப் போட்டு, அங்க இருக்குற மூட்டைகள தூக்கிப் போட்டு வூட்ட சுத்தம் பண்ணிட்டு இருந்திருக்காங்க. விருந்தாடியா போன இவங்களும் ஒத்தாசை உதவியா இருக்கட்டு‍மேன்னு சாமாஞ் செட்டுகளத் தூக்கிப் போட்டு வேலை செஞ்சிருக்காங்க. அப்போ மூட்டைகளத் தூக்கி அந்தாண்ட போட்டதுல மூலையில சாக்குப் போட்டு மறைஞ்சிக் கெடந்த அம்மிய வெங்கு பாத்திட்டு. பாத்தது அப்போ பத்மா பெரிம்மாகிட்டப் போயி சின்ன அம்மியும், கொழவியும் எங்கேன்னு கேட்டுப் பாத்திருக்கு. அதுக்குப் பத்மா பெரிம்மா, "பக்கத்துத் தெருவுல கொழந்தைப் பொறந்திருக்கு. மருந்து அரைக்கணும்னு தூக்கிட்டுப் போயிருக்காங்க!" அப்பிடின்னு எதார்த்தமா சொல்ற மாரி சொல்லியிருக்கு.
            உடனே வெங்கு பத்மா பெரிம்மாவ கையப் பிடிச்சி அழைச்சிட்டுக் கொண்டு வந்து மூலையில கெடந்த அம்மிய சாக்கைத் தூக்கிட்டுக் காட்டியிருக்கு. சரி இப்பயாவது அந்த அம்மிக் கொழவிய எடுத்துகோன்னு சொல்லும்னு வெங்குவுக்கு ஒரு நெனைப்பு. அதெ பாத்துட்டுப் பத்மா பெரிம்மா சிரிச்சிக்கிட்டே சொல்லிருக்கு, "ஏம்டியம்மா! இது கொழந்தைங்க, குட்டிங்க உள்ள வூடு. திடீர்னு ஒண்ணுக்கு ஒடம்புக்கு முடியாம போவும். அப்போ நாம்ம போயி எந்த வூட்டுல பச்சிலை, மருந்து அரைக்கிறதுக்கு அம்மி வேணும்னு கேட்டுட்டு நிக்க முடியும்?" அப்பிடின்னு சொல்லி இருக்கு. இது வெங்குவோட மனச ரொம்பவே பாதிச்சுப் போயிடுச்சி. அது அழுதுகிட்டே வந்து சுப்பு வாத்தியார்ட்ட சொல்லியிருக்கு. வெங்குச் சொன்னதைக் கேட்டுக்கிட்ட சுப்பு வாத்தியாரு ஒண்ணுஞ் சொல்ல. ஊருக்குக் கெளம்புறப்போ அம்மிக் கொழவியத் தூக்கிட்டுக் கெளம்பிட்டாரு. அதெ பாத்த பத்மா பெரிம்மா ஒண்ணுஞ் சொல்லல. ஒண்ணும் தெரியாத மாதிரி இருந்துக்கிட்டு. அந்த அம்மிக் கொழவிய பஸ்ல ஏத்தி எறக்கி அணைக்கட்டுக்குக் கொண்டு வர்றதுக்குள்ள அவங்க போதும் போதும்னு ஆயி, படாத பாடு பட்டுட்டாங்க. அதுக்கு பேசாம அவங்க ஒரு அம்மிக் கொழவிய பக்கத்துலயே பாத்து வாங்கியிருந்திருக்கலாம். 
            இந்தச் சம்பவத்தையும் வெங்கு அடிக்கடிச் சொல்லிச் சொல்லிக் காட்டும். "ஒரு அம்மிக் கொழவிய குடித்தனம் பண்றதுக்குக் கொடுக்க மாட்டேனுச்சுக் ஒங்க பெரிய ஆயி!" அப்பிடின்னு விகடுகிட்ட.
            சுப்பு வாத்தியாருக்கும், வெங்குவுக்கும் கல்யாணம் ஆயி ஒன்றரை வருஷம் கழிச்சித்தாம் விகடு பொறந்தான். மொத பிரசவம் தாய் வூட்டுலேங்றதால விகடு பொறந்து மூணு மாசம் வரைக்கும் வடவாதி வைத்தி தாத்தா வூட்டுலத்தாம் தாயும், பிள்ளையுமா இருந்தாங்க. பிறவுத்தாம் அணைக்கட்டுக்கு வந்தாங்க. விகடு கொழந்தையா பாக்குறதுக்குத்தாம் செக்கச் சேவேல்னு கொழு கொழுன்னு இருந்தானே தவிர அவனுக்கு சளிக் கோளாறு இருந்திச்சி. அதுக்காக அவங்க பார்க்காத டாக்கடருங்க இல்லங்ற மாதிரி நெலைமை ஆயிப் போயிடுச்சி. ஒரு நாளைக்கு நல்லா இருந்தா ரண்டு நாளைக்கு நல்லா இருக்க மாட்டான். காய்ச்சல் அடிக்கும். மூச்சுத் திணறலா போயிடும். சுப்பு வாத்தியாருக்கும், வெங்குவுக்கும் வூட்டுக்கும் திருப்பனந்தாளு டாக்கடரு வூட்டுக்குமா அலைஞ்சிட்டுக் கெடக்குற மாரி நெலைமை ஆகிப் போச்சு. திருப்பனந்தாள்ல அவனெ பார்க்காத டாக்கடருங்களே இல்லங்ற அளவுக்கு எல்லா டாக்கடரையும் மாத்தி மாத்தி பாத்திட்டாரு சுப்பு வாத்தியாரு. டாக்கடருங்கப் பாக்குறவங்க அதெ பிரைமரிக் காம்ப்ளெக்ஸ், கணை அது இதுன்னு சொல்லுவாங்க. கொஞ்சம் வளர்ந்தான்னா தானாவே சரியாப் போயிடும்னு சொல்லி மருந்து கொடுத்து அனுப்புவாங்க.
            கோடைக்காலம் வந்திடுச்சுன்னா அவனுக்கு ஒடம்பெம்ல்லாம் வேனல் கட்டிகளா வந்திடும். அது தவிர கால்ல வேற அவனுக்குப் புண்ணுங்க வந்து ரொம்பவே செரமம் கொடுத்திருக்கான். யம்மாக்கெழவி அவனுக்கு வந்த வியாதிகளப் பாத்துட்டு அணைக்கட்டு வில்லியாண்டவரு கோயிலுக்கு வேண்டிக்கிட்டு பாத்துச்சு. அவனுக்கு அடுத்தடுத்த ஒண்ணுக்கெடக்க வந்த நோய்களப் பாத்து அந்த ஆண்டவரே அலுத்துப் போயி இவனையெல்லாம் ஒண்ணும் பண்ண முடியாதுன்னு முடிவுக்கு வந்து, யம்மாக்கெழவியோட கனவுல வந்து, "இப்போ ஒண்ணும் பண்ண முடியாது, பெறவு பாத்துப்போம்" சொல்லியிருந்திருக்கணும். ஆனாலும் யம்மாக்கெழவி வுடாம என்னென்னவோ பச்சிலைகளை அரைச்சிக் கொடுத்துப் பாத்திருக்கு. அதுக்குத் தோதா விருத்தியூர்லேந்து வந்த அந்த அம்மிக் கொழவியும் ரொம்ப உபயோகப்பட்டிருக்கு. அவனும் அரைச்சிக் கொடுத்த எல்லாத்தையும் முழுங்கிக்கிட்டு எந்த வியாதியும் சரியாகாமலே கெடந்திருக்கான். அதே பாத்துப்புட்டு வெங்குவும் அலுத்துப் போயி, "எந்த நேரத்துல இந்த அம்மிக் கொழவிய தூக்கிட்டு வந்தோமோன்னு தெரியலயே. ஒரு சட்டினி, ஒரு தொவையலு அரைச்சி ஒரு நாளாவது சாப்பிட்டிருப்போமா? இந்தப் பயலுக்கு மருந்து அரைச்சிக் கொடுக்கிறதுக்குன்னே இஞ்ஞ வந்துக் கெடக்கு. அதுல அரைச்சி அரைச்சி அதுவும் மாடா ஒழைச்சி ஓடாத் தேய்ஞ்சிப் போயிக் கெடக்கு!" அப்பிடின்னு சொல்லும்.
            நோயும், நொம்பலமுமா கெடந்து படுத்துன விகடுவப் பாத்து அவனோட அப்பன் ஆயி ரெண்டு பேருக்கும் சலிச்சிப் போயிடுச்சி. எத்தனை நாளைக்கு லீவு போட்டுட்டு இவனெ தூக்கிக்கிட்டு வெங்குவோட திருப்பனந்தாளு டாக்கடரு வூட்டுக்கும், அணைக்கட்டுக்கும் அலையுறதுன்னு, சில நாட்கள்ல வெங்குவுக்குத் தொணையா யம்மாக்கெழவிய அனுப்பி விடுவாரு சுப்பு வாத்தியாரு. அதுவும் எத்தனை நாளைக்குத்தாம் போவும். வயசான காலத்துல சில நாட்கள்ல அதாலயும் துணைக்குப் போவ முடியாம செரமமாப் போயிடும். இந்த மாதிரி நெலமையில சொந்தக்காரங்க, உறவுக்காரங்க பக்கத்துல இருக்குறதுதாம் சரின்னு பட்டிருக்கு சுப்பு வாத்தியாருக்கு. அந்த‍  நெனைப்புல எந்தப் பக்கம் போவலாமுன்னு யோசனையில உக்காந்துட்டாரு. அவருக்கு ரெண்டு வாய்ப்புக இருந்திருச்சி. ஒண்ணு அண்ணங்காரரோட விருத்தியூரு பக்கமா போயிடலாம். இன்னொண்ணு மாமனாரு ஊரான வடவாதிப் பக்கமா ஜாகையா போயிடலாமுன்னு.
*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...