26 Dec 2019

கஷ்டமா இருக்குறப்போ மசாலா பாலு குடிப்பாங்க!


செய்யு - 310

            "கஷ்டம்னா ன்னா தெர்யுமா? சாக்கடையில எறங்கிச் சுத்தம் பண்றாம் பாரு அது கஷ்டம். செரமம்னா ன்னா தெர்யுமா? செப்டிங் டேங்குல எறங்கி அதெ சரி பண்றாம் பாரு அதாம் செரமம். நடுநாள்ல பன்னெண்டு மணியில உச்சி வெயிலு சுட்டெரிக்கிறப்போ உருகுற தார்ல நின்னு ஒடம்பு அப்டியே உருகிப் போறாப்புல தாரு ரோடு போடுறாம் பாரு அது கஷ்டம். அதாங் செரமம். ஒரு வெதத்துல பார்த்தா நாமெல்லாம் சுகமாத்தாம் இருக்கோம். வேணும்னா சம்பளம் கொஞ்சம் கம்மின்னு சொல்லலாம். இந்தச் சம்பளமும் கெடைக்காம இதுக்கும் கம்மியா சம்பாதிக்கிறதுக்குக் கூட உசுரு போற அளவுக்குக் கஷ்டப்பட்டு ஒழைக்கிறவங்க எத்தனைப் பேரு இருக்காங்க தெர்யுமா?
            இந்த வேலைக்கு வர்றதுக்கு மின்னாடி நாம்ம மின்சார வாரியத்துல ஒப்பந்த ஆளா வேல பாத்துட்டு இருந்தேம். போஸ்ட் கொண்டு போயி அதெ நிமுத்தி லைனை இழுத்துக் கட்டுறதுதாம் வேல. எம்மாம் கஷ்டமா இருக்கும் தெர்யுமா? செரமம்னா செரமம் அதாங் செரமம். கஷ்டம்னா கஷ்டம் அதாங் கஷ்டம். காடு, பொட்டலு, வயலு, குப்ப மேடுன்னு போஸ்ட்டு போடுற எடத்துக்கு கணக்கு வழக்குல்லாம் இல்ல. எங்க போஸ்ட்ட கொண்டுப் போயிப் போடச் சொல்றாங்களோ டிரக் இழுக்குற டிராக்டரு வண்டியில தூக்கிப் போட்டுக்கிட்டு அதுலயே ஏறிப் போய்ட்டே இருப்பேம். அதெ தூக்கி டிரக்குக்குள்ள ஏத்துறது இருக்கே. உசுரு போயி உசுரு வந்துப்புடும். பெறவு கொண்டு போயி அதெ எறக்குறதுக்குள்ள மறுபடியும் அதே உசுரு போயி உசுரு வர்ற சமாச்சாரம்தாம்.
            போஸ்ட் போடுற எடம் பொட்டக் காடுன்னா கதெ முடிஞ்சிடுச்சி. தவிச்சு தாகம் எடுத்தா தண்ணிக் கேட்டுக் குடிக்கிறதுக்குக் கூட பக்கத்துல ஒரு குடிச வூடு கூட இருக்காது. மத்தியானச் சாப்பாட்டுக்கும் வழியிருக்காது. கெளம்புறப்போ டீத்தண்ணியும் பன்னும்தான் உள்ளார போயிருக்கும். போஸ்ட்ட நட்டு நிமுத்துனாத்தாம் பரோட்டாவையும், சால்னாவையும் கண்ணுல கொண்டாந்து காட்டுவானுக. அதுக்குள்ள கெண்டைப் பெரண்டு வவுறு மரத்துப் போயிடும். குழியப் போட்டு போஸ்ட்ட நிப்பாட்டி கயித்த கட்டி நிமுத்துறது இருக்கே நம்ம நரம்ப யாரோ இழுக்குறாப்புல இருக்கும்.
            போஸ்ட்ட கயித்தக் கட்டி நிமுத்துனா மண்ணைப் போட்டு அதெ சரி பண்ற வரைக்கும் சமயத்துல அது அந்தாண்ட இந்தாண்ட சாஞ்சிடுமோன்னு போஸ்ட்ல போட்ட கயித்த வயித்துல கட்டிட்டு நிப்போம் பாரு. சில சமயம் என்னாவுமுன்னா போஸ்ட்டு கொஞ்சம் சாயும். அப்போ நம்ம வயித்துல கட்டிருக்குற கயிறு இறுவும் பாரு. யப்பா வலியில உயிரு போயிடும். அப்பிடில்லாம் வேல பாத்திருக்கேம் தெர்யுமா? அதாங் கஷ்டம். ராத்திரி அந்த வேலையப் பாத்துப்புட்டு வந்து படுத்தீன்னா ஒடம்பு வலி இருக்கே அது அப்டியே ஒடம்பப் போட்டு முறிச்சி எடுத்துப்புடும். பெறவு அஞ்ஞ இஞ்ஞன்னு எலெக்ட்ரீஷியனா போயி, பையன் இப்பிடிக் கஷ்டப்படுறான்னே எங்கப்பங்காரு சிபாரிசுல அங்க இங்க வேலப் பாத்து அப்பிடி இப்பிடின்னு இஞ்ஞ எப்பிடியோ வந்தாச்சு!"ங்றாரு லெனின்.
            "யோவ் லெனினு! நெனைச்சேம்ய்யா! நீயி இந்த மாரி எதாச்சிம் அவுத்து வுடப் போறீன்னு? நெனைச்ச மாதிரியே நெஞ்ச நக்க வெச்சிட்டேய்யா! ப்ளோரு நனைஞ்சுப் போற மாரி பண்ணிட்டேய்யா!"ங்றாரு கோபி சிரிச்சாப்புல.
            "இதாங் கோபி ஒங்கிட்ட பிடிக்க மாட்டேங்குது. ஏம் கோபி? ஒய் கோபி ஒய்?"ங்குது சுபா.
            "அத்து என்னான்னு தெரியுல. ஏன்னு தெரியல. சின்ன வயசுலேந்து இப்பிடித்தாம். கஷ்டம் கஷ்டம்னு அழுது ன்னாவப் போவுது? யில்ல செரமம் செரமம்னு சொல்லி பினாத்துறதுல ன்னாவப் போவுது? டோன்ட் பீல்! பீ ஹேப்பிம்மா! கவலைப்படுறதால காரியம் நடக்கும்ணு சொல்லு கவலைப்படறேம்! அழுதா வேல ஆவும்னு சொல்லு. அழுவுறேம். நீயி கவலைப்பட்டீன்னா ஒலகம் சிரிக்கும். நீயி அழுதீன்னா ஒலகம் பரிகாசம் பண்ணும். கவலைப்பட்டா இன்னும் நெலம மோசமாத்தாம் போவும். அதுக்குப் பேயாம சிரிச்சிக்கிட்டே எல்லாத்தியும் சமாளிச்சிட்டுப் போயிடலாம். வாழ்க்கை எப்பயுமா கஷ்டத்துலயே போவப் போவுது? சந்தோஷமா சிரிச்சிக்கிட்டுப் போய்ட்டே இருக்கணும். கஷ்டம், செரமம், கவலை எல்லாமே லைப்ல ஒரு பார்ட். அந்த ஒரு பார்ட்ட எடுத்துக்கிட்டு அதையே லைப் முழுக்க ஆக்கிடக் கூடாது. அது பாட்டுக்கு வரும், அது பாட்டுக்குப் போவும். நாம்ம பேயாம இருந்துக்கணும். அது நம்மள கண்டுக்கிடாது. நாம்ம அதெ கண்டுகிட்டாத்தாம் அது நம்மள கண்டுக்கிடும். அதெ நாம்ம கண்டுக்கிடலன்னா வெச்சுக்க அதுவும் நம்மள கண்டுக்கிடாது! இதுக்குல்லாம் அட்வைஸ் அது இதுன்னுக்கிட்டு"ங்றாரு கோபி.
            "இந்தாரு கோபி அட்வைஸங்றதால ஒண்ணும் புடுங்கிட முடியாது. அது எனக்கும் தெரியும். ஆனா அது மோசமா போற சுட்சுவேஷனை ரொம்ப மோசமா போவாம பண்ணும். சமயத்துல அது மிராக்கிள் கூட பண்ணும்."ங்றாரு இதெ கேட்டுட்டு லெனின்.
            "மேனேஜரு சொன்னா கேட்டுக்கிட்டுத்தாம்பா ஆவணும். நாளைக்கு நீயி பாட்டுக்கு ஒண்ணு கெடக்க ஒண்ணு நம்பளப் பத்தி ஹெட் ஆபீஸ்க்கு எழுதிப் போட்டுட்டீன்னா... பயமா இருக்குப்பா லெனின்! அதெ விட நீயி பேசுற தத்துவம் இருக்கேப்பா ரொம்ப பயமா இருக்குப்பா!"ங்றாரு கோபி.
            "ஆளாளுக்கு ஒங்கக் கதெய பேசிட்டு இருந்தா எப்பிடி? வெகடுவுக்கு ஒரு வழியச் சொல்லுங்க! நீஞ்ஞ ரண்டு பேரும் அடிச்சிக்கிற அடியில வெகடு பாட்டுக்குப் பேசாம ஒக்காந்துட்டாப்புல!"ங்குது சுபா.
            "நெலமை புரியாமப் போறப்ப ப்ரே பண்ணணும். ஜீசஸ் வில் சால்வ் ஆல் த ப்ராப்ளம்ஸ்! அதாங் நமக்குத் தெரிஞ்ச வழி இப்போதைக்கு!"ங்றாரு லெனின்.
            "நானும் அப்படித்தாம்பா! கோயிலுக்குப் போயி கம்முன்னு உக்காந்துப்புடுவேம். நம்ம கவலையெல்லாம் வாங்கிக்கிறதுக்கு ஒரு ஆளு இருக்காருங்றப்ப நாம்ம எதுக்கு வீணா, அநாவசியமா கவலைப்பட்டுக்கிட்டு? அவரு தலையில எல்லாத்தையும் கட்டிக்கிட்டு நாம்ம பாட்டுக்கு ஜாலியா இருக்க வேண்டியதுத்தாம்!"ங்றாரு கோபி.
            "இத்து கிண்டலா? யில்ல டேக் கேரா?"ங்குது சுபா.
            "யம்மா தாயே! ஆளெ வுடு. நல்லது சொன்னாலும் சந்தேகப்படுறே? சிரிச்சாப்புல சொன்னாலும் கோப்படுறே? லேடீஸே இப்பிடித்தாம்பா!" என்று சொல்லிவிட்டு அதற்கு ஒரு சிரிப்புச் சிரிக்கிறாரு கோபி.
            "நீயேம்பா ஒண்ணும் பேயாமலே உக்காந்திருக்கே?"ங்குது சுபா விகடுவைப் பார்த்து.

            "கொஞ்சம் கொழப்பமாத்தாம் இருக்கு! பேசாம இப்டியே வேல பாத்துட்டு இருந்துடலாம்னு ஒரு மனசு சொல்லுது. ஆபீஸப் போடு வர்ற வாய்ப்ப விடாதேன்னு இன்னொரு மனசு சொல்லுது. நேத்திலேந்து இந்த ரெண்டு மனசுக்கும் அடிதடி போராட்டமா இருக்குது. நாம்ம ஒரு ஆளுதானே. இந்த மனசு மட்டும் எப்டி ரெண்டாவுதுன்னு புரியல."ங்றான் விகடு.
            "பொறுமையா இரு. எல்லா பிராப்ளம்ஸூம் சால்வாகும். வாழ்க்கையில எப்போ நம்மால பிரச்சனைய சால்வ் பண்ண முடியாத சூழ்நெல ஏற்படுதோ, அப்போ அதெ அப்பிடியே விட்டுப்புடணும். அதுவா சால்வாகி அதுவே ஒரு முடிவுக்கு வந்துடும். முடிஞ்சதெ சால்வ் பண்ணு. முடியாதத சால்வ் பண்ணணும்னு நெனைச்சிப் போட்டு வருத்திக்காதே. இதுக்குன்னுத்தாம் ஜீசஸ் மேல இருக்காரு. ப்ரே பண்ணு. நிச்சயம் ஒரு மாத்தம் நடக்கும்!"ங்றாரு லெனின்.
            "யோவ் லெனின்! மறுபடியும் மறுபடியும் வுட மாட்டீயா நீயி? வெகடுத்தாம் பெரியாரிஸ்ட்னு தெரியும்ல ஒனக்கு. சாமி கும்புட மாட்டாப்புல."ங்றாரு கோபி சிரிப்பை வுடாம.
            "இந்த ஒரு நெலமையில மட்டும் ப்ரே பண்ணிட்டு பெறவு வுட்டுப்புடலாம். ஜீசஸ் எல்லாத்தையும் மன்னிச்சிடுவாரு. ப்ரே பண்ணுறவங்க, பண்ணாதவங்க எல்லாரும் அவருக்க ஒண்ணுத்தாம்!"ங்றாரு லெனின்.
            "ன்னா வெகடு லெனின் கூட போயி ப்ரே பண்ணுறீயா?"ங்றாரு இப்போ கோபி.
            "நாம்ம பொழுதுக்கு மின்னாடி சைக்கிளக் கெளப்பிக்கிட்டு வூட்டுக்குப் போவலாம்னு இருக்கேம்!"ங்றான் விகடு.
            "அப்போ இன்னிக்குப் பார்ட்டி?"ங்றாரு கோபி.
            "அதாம் முடிவே ஆகலயே! அதுக்குள்ள ன்னா அவசரம் கோபி ஒனக்கு?" அப்பிடிங்கிது சுபா.
            "அதெப்படி வாக்குக் கொடுத்தா கொடுத்ததுதாம். நாம்ம வேற இன்னிக்குப் பார்ட்டி இருக்கும்னு காலையில வூட்டுலேந்து கெளம்புனதிலேந்து இருக்கேம்!"ங்றாரு கோபி.
            "எஸ்.ஆர்.ஆர். கபேயில ஒரு மசாலா பால் அடிப்பேம்!"ங்றான் விகடு.
            "இதென்ன ராயல் பார்க் தேய்ச்சி கபே ஆயிடுச்சா?"ன்னு சிரிக்கிறாரு கோபி அதுக்கும்.
            "இந்தாரு வெகடு! நீயும் குடிக்கிறாப்புல இருந்தா சொல்லு வர்றேம். இல்லேன்னா கெளம்புவோம் அவங்கவங்க வழியப் பாத்துக்கிட்டு!" அப்பிடிங்குது சுபா.
            "குடிக்கலாம் வாங்க!" ங்றான் விகடு.
            "யப்பா! இப்பத்தாம் நெலமெ கொஞ்சம் மாறியிருக்கு. இது வேற மாரி மாறுறதுக்குள்ள வாஞ்ஞ கபேக்குப் போயி மசாலாப் பால அடிப்பேம்!"ங்றாரு லெனின்.
            "யோவ் லெனினு! நீயி இதுக்குக் கணக்குப் போட்டுத்தானய்யா கதெ அளந்தே?"ங்றாரு கோபி.
            "கோபி! நீயி ச்சும்மா இருக்க மாட்டீயா?" அப்பிடிங்கிது சுபா.
            "ஒனக்கென்னமா நீயி இருக்குற ஒடம்புக்கு ஒனக்கெல்லாம் பச்சத் தண்ணியே போதும். நாமெல்லாம் அப்பிடியா நாலு நாளைக்கு ஒரு நாளு இப்படி எதாச்சிம் சத்தா குடிச்சாத்தாம் உக்காந்திருக்கவே ஒடம்புல தெம்பு இருக்குது! கவலையாவும் கஷ்டமாவும் இருக்குற நேரத்துல மசாலா பாலு குடிக்கணும்னு எங்க ஆயா சொல்லுவாங்க! அவுங்க சின்ன பிள்ளையா இருக்குறப்ப கஷ்டத்துலயும் கவலையிலயும் அதைத்தாம் கொடுத்தாங்களாம். நாம்ம சின்ன புள்ளையா இருக்குறப்பவும் கஷ்டத்துலயும் நஷ்டத்துலயும் அதைத்தாம் கொடுத்தாங்களாம்! உங்களுக்கு எல்லாம் கொடுக்கலையா சின்ன புள்ளையா இருக்குறப்போ?"ங்றாரு கோபி.
            இப்போ நாலு பேருக்குமே இதெ கேட்டுச் சிரிப்பு வந்துடுது. எல்லாரும் சிரிக்கிறதப் பாத்துட்டு, "இத இதெத்தாம் எதிர்பார்க்கிறேம் நாம்ம. யோய் யப்பா! இதெ கொண்டாறதுக்குள்ள நாம்ம படுற பாடு இருக்கே? கவலைப்பட்டு என்னாய்யா ஆவப் போவுது? அநாவசியமா கவலைப்பட்டுக்கிட்டு? பேயாம போங்கய்யா! அது பாட்டுக்கு நடக்குறது நடக்கும்? நீஞ்ஞ செய்யுறத செய்யுங்க. அதெ வுட்டுப்புட்டு பெரிய பருப்பு மாரில்ல உக்காந்து கவலெப்படுறீங்க? அதுக்கு தகுந்தாப்புல அட்வைஸ் பண்றதுக்குன்னே இந்த ஆபீஸ்ல ரண்டு வந்து வாச்சிருக்கு!"ன்னு சொல்லி அதுக்கும் சேர்த்து சிரிக்கிறாரு கோபி.
            "செரி! இதெ தூக்கி அந்தாண்ட வையுங்க இப்போ! ரிலாக்ஸா பீல் பண்ணுங்க. பாத்துக்கலாம்!"ன்னு லெனின் சொன்னதும் நாலு பேருமாகக் கெளம்பி ஆபீஸைப் பூட்டி விட்டு மசாலா பாலை அடித்து விட்டு அவங்கவங்க வூட்டைப் பாக்க கெளம்புறாங்க.
            விகடு பாட்டுக்குச் சைக்கிளக் கெளப்பிக்கிட்டு வேக வேகமா மிதிச்சுக்கிட்டு ராத்திரி ஒரு ஏழு மணி வாக்குல வூட்டுப்பக்கம் வந்தா வாசல்ல விநாயகம் வாத்தியாரோட மேக்ஸ் ஹண்ட்ரட் ஆர் கெடக்குறது தெரியுது. வீட்டுக்குள்ளார உக்காந்து அவரு பேசிக்கிட்டு இருக்காரு. விகடு சைக்கிள ஸ்டாண்டுப் போட்டுக்கிட்டு உள்ளார நொழையுறான். "வா வெகடு! வா வா! ஒன்னத்தாம் எதிர்பாத்துட்டு இருக்கேம்!" அப்பிடிங்கிறாரு விநாயகம் வாத்தியாரு.
*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...