26 Dec 2019

பிரபஞ்சனின் 'ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்' - எளிய அறிமுகம்


பிரபஞ்சனின் 'ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்' - எளிய அறிமுகம்
            பிரபஞ்சனின் முதல் சிறுகதைத் தொகுப்பு 'ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்'. பிரபஞ்சன் 1961 லிருந்து கதைகள் எழுதுவதாகச் சொன்னாலும் சிறுகதையின் கட்டான வடிவத்துக்கு வந்தது 1965 லிருந்துதான் என்று சொல்கிறார். ஆக அவரது கணக்கின்படி 1965 லிருந்து பதினைந்து ஆண்டு காலம் அதாவது 1980 வரை அவர் எழுதிய சிறுகதைகள் இத்தொகுப்பில் உள்ளன.

            பொதுவாக கதை கேட்ட வளர்ந்த நாம் தாத்தா பாட்டிகளிடம், "ஒரு ஊர்ல..." என்று கதையைக் கேட்கத் தொடங்குவதைப் போல, பிரபஞ்சனின் முதல் சிறுகதைத் தொகுப்பை, 'ஒரு ஊரில்...ரெண்டு மனிதர்கள்...' என்று படிக்கத் துவங்குவதாகப் பார்க்கிறேன்.
            ஓர் ஊராக இருந்தாலும், ஒரு சமூகமாக இருந்தாலும், ஏன் ஒட்டு மொத்த உலகமாக இருந்தாலும் அங்கு இரண்டு மனிதர்கள்தான் இருக்கிறார்கள் - இரண்டு வகை மனிதர்கள் இருக்கிறார்கள். ஒருவர் கடன் கொடுப்பவர். இன்னொருவர் கடன் வாங்குபவர். அந்த இரு மனிதர்களின் கதையிலிருந்து துவங்குகிறது பிரபஞ்சனின் சிறுகதைத் தொகுப்பு.
            கடன் மனிதர்களுக்கான முக்கிய வஸ்து. அது ஒரு வித்தியாச பிணைப்பை உருவாக்கி வைத்திருக்கிறது. அது மட்டுமா மனிதனுக்கான பிணைப்பு? மனிதம்தான் மனிதருக்கான முக்கிய பிணைப்பு என்பதைச் சொல்கிறது அச்சிறுகதை.
            அக மற்றும் புற அழுக்கைக் கொண்ட சென்னை மாநகரம் தனக்கு அழகான மனிதர்களைச் சந்திக்க வைக்கவும் செய்திருக்கிறது என்கிறார் பிரபஞ்சன். அழகான மனிதர்களை இச்சிறுகதைத் தொகுப்பில் பிரபஞ்சன் பதிவு செய்திருக்கிறார். இத்தொகுப்பில் அவரது 16 சிறுகதைகள் இருக்கிறதென்றால், ஆத்மநாமோடு அவரது ஆத்மார்த்தமான பிணைப்பைச் சொல்லும் முன்னுரையையும் ஓர் அழகான சிறுகதையாகச் சேர்க்காமல் இருக்க முடியாது என்றால் மொத்தம் இத்தொகுப்பில் இருப்பது 17 சிறுகதைகள் எனலாம்.
            இத்தொகுப்பை பிரபஞ்சன் அவரது துணைவர் நினைவுக்குப் சமர்ப்பணம் செய்கிறார். அவரது மனைவியை அவர் துணைவி என்று சொல்லாமல் ஆகப் பெரும் மரியாதையோடு துணைவர் என்றே குறிப்பிடுகிறார். துணைவன் / துணைவி என்ற ஆண்பால், பெண்பால் சொற்களைத் தவிர்த்து துணைவர் என்று பொதுப்பால் சொல்லைப் பயன்படுத்தும் இடத்து அவரது மனிதம் தனித்துத் தெரிகிறது. பிரபஞ்சனின் தனித்த குணம் அது.
            பிரபஞ்சனின் இத்தொகுப்பில் இடம்பெறும் மாந்தர்கள் அறிந்தோ அறியாமலோ அலைச்சலில் இருக்கிறார்கள். ஏதோ ஒரு அலைச்சல் அவர்களுக்கு நேர்கிறது. அநேகமாக அந்த அலைச்சல் என்பது அவரது வாழ்க்கையில் புதுச்சேரிக்கும், சென்னைக்கும் நிகழ்ந்த அலைச்சலாகவோ, அவரது வாலிபப் பிராயத்தில் நிகழ்ந்த அலைச்சலாகவோ இருக்கலாம்.
            இச்சிறுகதைத் தொகுப்பின் சிறுகதைகளில் பிரபஞ்சன் எந்தப் பாத்திரமாக வருகிறார் என்பதை ஆழ்ந்து படித்தால் ஊகித்து விடலாம். அவ்வகையில் இத்தொகுப்பை அவரது சுயசரிதை வரிசையிலும் வைத்து எண்ணிப் பார்க்கலாம். கதையைச் சொல்வது போன்ற உத்தியாக அதைக் கொண்டாலும் வாசித்த எனக்கு அது பிரபஞ்சனாகத் தென்பட்டது ஏனென்று புரியவில்லை. ஒருவேளை அது அப்படியில்லை என்றால் வாசிப்பில் நேர்ந்த மயக்கத்துக்கு நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்பதைத் தவிர வேறு வழியில்லை.
            பிரபஞ்சனின் இச்சிறுகதைகளில் சிகரெட் பிடிப்பவர்கள் அதிகமாக இருக்கிறார். கள்ளுக்கடை, சாராயக்கடைப் பற்றிய விவரணைகள், வாழ்ந்து கெட்ட குடும்பங்கள் அதிகம் இருக்கின்றன. அவர் ஒரு வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் பிரதிநிதியாக இச்சிறுகதைகளை நகர்த்துகிறாரோ என்னவோ என்ற தோற்றம் உண்டாவதைத் தவிர்க்க முடியவில்லை.
            பிரபஞ்சனின் சிறுகதை மாந்தர்கள் யாரும் 100 சதவீத சரியானவர்கள் இல்லை. அவர்களில் சபலபுத்திக்காரர்கள் இருக்கிறார்கள், ஆத்திரக்காரர்கள் இருக்கிறார்கள், இயலாமையில் தவிப்பவர்கள் இருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களிடம் ஒரு பெரிய மனிதத்தனம் இருக்கிறது. என்னதான் வீழ்ந்தாலும் குணம் மாறாதத் தன்மையை அவர்களிடம் காண முடிகிறது.
            ஒரு சிறுகதையில் பிரபஞ்சன் தாயின் பாலியல் தேவையைப் பரிவோடு உணரும் மகனைப் படைக்கிறார். மற்றொரு சிறுகதையில் மனைவியாகி வரப் போகும் பெண்ணின் பாலியல் விருப்பத் தேவையை நிறைவேற்ற முடியாத ஆணின் இயலாமையைக் காட்டுகிறார்.
            இன்னொரு சிறுகதையில் அம்மாவை அடித்த அப்பாவை ஏன் அடித்தீர்கள் என்று மகன் கேள்விக் கேட்கிறான். கோபம் வந்ததால் அடித்ததாகச் சொல்லும் அப்பாவிடம், அம்மாவுக்குத்தானே கோபம் வந்தது, அம்மா ஏன் அடிக்கவில்லை என்று மகன் கேள்வி கேட்கும் இடம் பிரபஞ்சனுக்கே உரிய எழுத்து.
            எனக்கு முகமே கிடையாது என்று ஒரு சிறுகதையில் அலறும் பாத்திரத்தின் மூலம் இந்தச் சமூகத்தில் யாருக்குத்தாம் முகம் இருக்கிறது? சமூகம் கொடுக்கும் முகத்தை அவ்வபோது அணிந்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது என்ற இயலாமையைப் பதிவு செய்யும் இடம் ஒரு தேர்ந்த எழுத்தாளரின் சமூக ஒட்டு நிலையைக் காட்டுகிறது.
            ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள் என்றாலும் இத்தொகுப்பில் பல மனிதர்கள் இருக்கிறார்கள். எல்லாரும் பொதுவாக வறுமையில், செல்வ மிதப்பில் குணம் மாறாதவர்கள். நல்ல குணத்தை சமூகத்துக்குக் கடத்த விழைந்து அக்குணத்திற்கான சாட்சியாக விளங்குபவர்கள்.
            இத்தொகுப்பில் பிரபஞ்சனின் எழுத்து வல்லமையைக் காட்ட அவரது வரிகளையே சான்று காட்டுவதுத்தாம் சரியாக இருக்கும்.
            பள்ளிக்கூட மதிலைச் சுவரேறித் தாண்ட முடியாது. பிறகு ஏன் சிறைச்சாலையைப் பள்ளிக்கூடத்துக்கு மாற்றவில்லை என்று ஒரு சிறுகதையில் கேட்பார் பிரபஞ்சன். அவர் அன்று ஓர் எள்ளல் தொனியோடு கேட்டது இன்றைய ஒரு சில வகைப் பள்ளிக்கூடங்களுக்கு அவ்வளவு கனக்கச்சிதமாகப் பொருந்துவதை என்ன சொல்ல!
            சிவப்பு முக்கோணம் கண்டுபிடிக்காத காரணத்தால் அம்மாவுக்கு ஏழு சகோதரிகள், மூன்று சகோதரர்கள் என்று சொல்லும் இன்னொரு இடத்தை என்ன சொல்வதோ! ஒற்றைக் குழந்தையாய்ப் பிறந்து, ஒற்றை மனிதராய் வாழ்ந்து, ஒன்றுமில்லாமல் இறந்துப் போவதைச் சொல்வதோ? சகோதர, சகோதரிகளற்ற இன்றைய வறட்டுத்தனமாக நிலவும் உறவுகளின் வறட்சி நிலையைச் சொல்வதோ?
            அதே போல, மறக்கவே கூடாது என்று நினைப்பது மறந்து போகிறது, அநாவசியமானது மனதைத் துருத்தி எம்பி வருகிறது என்று இன்னொரு சிறுகதையில் பிரபஞ்சன் குறிப்பிடுவதைப் பற்றி சொல்ல சொல்ல ஆச்சரியம்தான் விஞ்சுகிறது! மனதின் உளவியலை அவ்வளவு அற்புதமாக ஒரு சிறுகதையின் வரிகளில் சித்தரித்த பிரபஞ்சனின் இச்சிறுகதைத் தொகுப்பு அவர் காலத்திய, அவர் சந்தித்த மனிதர்கள் குறித்த பிரதிபலிப்பு அன்றி வேறென்ன? இன்றிலிருந்து சுமார் நாற்பதாண்டு காலத்தையும், அக்காலத்திய மனிதர்களையும் பின்னோக்கி பார்க்க விரும்பினால் பிரபஞ்சனின் இச்சிறுகதைத்தொகுப்பு நம்மை கால எந்திரத்தில் ஏற்றி அந்த இடத்தில் விடுகிறது என்பது சர்வ நிச்சயம்.
*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...