28 Dec 2019

24.2



தமிழய்யா மென்மேலும் தொடர்ந்து பேசுகிறார்,
            "...பறவையைக் கண்ட மனிதர் விமானத்தைப் படைத்தார் என்றும்
            மீனைக் கண்ட மனிதர் கப்பலைப் படைத்தார் என்றும்
            குதிரையைக் கண்ட மனிதர் மோட்டார் வாகனத்தைப் படைத்தார் என்றும்,
            தும்பியைக் கண்ட மனிதர் ஹெலிகாப்டரைப் படைத்தார் என்றும் சொல்லப்படும் வரலாறு நீங்கள் அறிந்தது.

            இயற்கையை உற்றுநோக்கி அதன் மூலம் கண்டுபிடிப்புகளை மனிதர்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள். இயற்கை மனிதர்களின் ஆசானாக இருந்திருக்கிறது. இனப்பெருக்க உருவாக்கம் கூட இதில் அடக்கம். மனிதர் பலவிதமாகப் புணர்வதற்கு இயற்கையை மென்மேலும் உற்றுநோக்கியிருப்பார் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. மனிதர் எதையும் விடவில்லை. எல்லாவற்றிலும் மேம்பட இயற்கையை உற்றுநோக்கி, ஆனால் அதைக் கற்றுக்கொண்ட பின் இயற்கையை விட்டு விலகியிருக்க கற்று துணந்திருக்கிறார்கள் என்பதை வரலாற்றை ஆழப் பார்த்தால் உணரலாம்.
            காற்றில் அசைந்த மரங்கள், மரங்களோடு சேர்ந்து அசைந்த கிளைகள் ஒரு நேரத்தில் உரசி தீப்பற்றியிருக்கலாம். மனிதர்கள் காட்டுத்தீயைக் கண்ட முதல் தருணம் அது. அந்தத் தீ பல உயிர்களை மனிதர்கள் உட்பட பலவற்றை அழித்திருக்கலாம். அந்தத் தீ மனிதரின் மகத்தான பாடம். தீயில் வெந்த காய்களை, மாம்சத்தைப் புசித்து சமையல்கலையைக் கற்றிருப்பார்கள் மனிதர்கள். அத்தீயிலிருந்து காத்துக் கொள்ள முறைகளையும் யோசித்துப் பார்த்து கற்றிருப்பார்கள். எந்தத் தீயிலிருந்து பாதிக்கப்பட்டார்களோ அந்தத் தீயை உருவாக்கும் வித்தையையும் கற்றிருப்பார்கள்.
            இப்படி தீயின் வழி கற்ற பாடத்தை மழை, பெருவெள்ளம், புயல், எரிமலை வெடிப்பு என எல்லாவற்றிற்கும் மரபில் பொதிந்துப் போன அறிவுத் தொடர்ச்சியின் வழியாக மனிதர்கள் சிந்தித்துச் சிந்தித்து அவற்றை எதிர்கொள்ளும் அறிவைப் பெற்றிருப்பார்கள். காட்டுத்தீ மனிதர்களின் முதல் பாடம். காட்டுத்தீ மனிதர்களின் பேரிடருக்கான முதல் அறிவு. அதனாலோ என்னவோ அந்தத் தீயை கோயில் கட்டி, ஆலயம் கட்டி வழிபடும் மரபுக்கு மனித இனம் தள்ளப்பட்டிருக்கும்.
            காலம் மனிதருக்குக் கவனிக்கும் அறிவைத் தருகிறது. உற்றுநோக்கும் தன்மையைத் தருகிறது. பழைய வரலாற்றிலிருந்து அந்த அனுபவத்திலிருந்து தொடர்புபடுத்திச் சிந்திக்கும் அறிவைத் தந்திருக்கிறது. அதன் விளைவு மனிதர்கள் இரவைப் பகலைக் கவனிக்கிறார்கள். பருவகால சுழற்சியைக் கவனிக்கிறார்கள். வருடங்களுக்குப் பெயர் சூட்டிப் பகுத்துப் பார்க்கிறார்கள. கடந்த கால வரலாறு அவர்களுக்கு வருங்காலத்தை ஓரளவு கணிக்க உதவுகிறது. கடந்த கால அறிவிலிருந்து வருங்காலத்தில் தாவிக் குதிக்கலாம் என்ற நம்பிக்கை மனித சமூகத்துக்கு உண்டாகிறது. அந்த அறிவு வட்டம் தரும் வளர்ச்சி மரநிழலை, மரப்பொந்தை, குகையை, காட்டு வாழ்விடத்தை வசதியான வீடுகளாக ஆக்குகிறது. அனைத்துப் பாதுகாப்புகளும் நிறைந்த இடம் காட்டிலிருந்து, மலையிலிருந்து கற்ற மனிதர்களின் வரலாற்று அனுபவத்திலிருந்து உண்டாகிறது.
            காலப்போக்கில் அறிவு வட்டம் விரிவாகிக் கொண்டே போகிறது.
            மேட்‍டிலிருந்து பள்ளம் நோக்கிப் பாயும் நீர், அதில் மிதந்து செல்லும் மரங்கள் அதிலிருந்து மனிதர் படகிற்கான, கப்பலுக்கான அறிவு வட்டத்தை நோக்கி வந்திருக்க வேண்டும். ஒன்றையோன்று வேட்டையாடும் மிருகங்கள் மனிதர்களுக்கு வேட்டையாடலைக் கற்றுத் தந்திருக்க வேண்டும்.
            காடு, மலை என்ற வட்டத்திலிருந்து மிருகங்கள், பறவைகள் என பலவும் மனிதர்களுக்குப் பலவற்றையும் கற்றுத் தந்திருக்க வேண்டும்.
            காக்கை குருவி எங்கள் ஜாதி என்றும்,  மலை, கடல் எங்கள் ஜாதி என்றும் பாரதி சொல்வது அதனால்தான் என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். அவற்றிடமிருந்து நாம் பெற்ற அறிவு வட்டம் மிகப்பெரியது. அப்படிப் பாரதி சொல்வதற்கான மொழி அறிவு வட்டத்தை மனிதர்கள் அப்பறவைகளின், அம்மிருகங்களின் ஒலிக்குறிப்புகளைக் கொண்டே கவனித்து கவனித்து உருவாக்கியதுதான் அல்லவா! மனிதர்கள் தங்களுடைய அனைத்து அறிவு வட்டத்திற்காகவும் தம்மைச் சுற்றியுள்ள இயற்கைக்கும், காட்டுக்கும், மலைக்கும், மிருகங்களுக்கும், பறவைகளுக்கும், பூச்சிகளுக்கும் கடமைப்பட்டு இருக்கிறார்கள்.
            நாம் வேறு காடு வேறல்ல.
            நாம் வேறு மலை வேறல்ல.
            நாம் வேறு மிருகங்கள் வேறல்ல.
            நாம் வேறு பறவைகள் வேறல்ல.
            நாம் வேறு பூச்சியினங்கள், கடல்கள் வேறல்ல.
            அவைகளோ நாம். நாமே அவைகள்.
            அந்த வரலாறே நாம். நாமே அந்த வரலாற்றின் சாட்சியம்!" என்று கூறி இந்தக் கூட்டத்தின் உரையை இந்த அளவோடு நிறைவு செய்கிறேன் என்கிறார் தமிழய்யா.
*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...