செய்யு - 288
"அடேங்கப்பா!
ஏம்யா மில்லுகாரரே! ஒங்க ஊரு பொண்ணோட முகத்தப் பாக்கணும்னா திருப்பதி ஏழுமலையான தரிசம்
பண்ணுற கணக்கா காத்திருந்தாத்தாம் கதை ஆவும் போலருக்கே!"ங்றாரு விகடபிரசண்டரு.
"பின்ன
சட்டுன்னு வந்து சட்டுன்னு சோலிய முடிச்சிட்டுப் போயிடலாம்னு பாக்குதீங்களாணும்?
பொண்ணு நல்ல அம்சா மகாலெட்சுமி கணக்கா இருக்காள்ல. பெறவு ஏழுமலையான பாக்குற கணக்கா
காத்திருந்துத்தாம் பாக்கோணும். காக்க முடியலேன்ன ஏம்யா ஒங்க ஊருலயே ஒரு நல்ல பொண்ணா
பாத்து முடிச்சிக்க வேண்டித்தாணுங்காணும்! ஒங்க ஊருல என்னய்யா வெச்சிருக்கீங்காணும்?
இத்து சக்கரை ஆலெ உள்ள ஊரு. மாப்புள்ளகாரனுக்கு ஒண்ணும் வேல தெரியலன்னாலும் ரோட்டுல
எறைஞ்சிக் கெடக்குற கரும்புகள பொறுக்கி வித்துப் பொழைப்பு நடத்தலாங்றேம். பெறவு ன்னா
பேச்சு வேண்டிக் கெடக்கு? இந்த ஊரு பொண்ணுங்களையெல்லாம் காத்து நின்னுத்தாம் கட்டிக்க
வேணுங்காணும்!" அப்பிடிங்கிறாரு மில்லுகாரரு.
"மாப்புள்ள
வேல தெரியாத ஆளுல்லாம் இல்ல. வாத்தியாரு பையேம். ஒங்களுக்கே பாடஞ் சொல்லிக் கொடுக்குற
ஆளு. நம்மட தயாரிப்பு பையேம். அவ்வேங்கிட்ட படிச்சுத்தாம் டாக்கடர்ரா இருந்தாலும் செரி,
இஞ்சினியரா இருந்தாலும் செரி, ஒம்மட ஊரு ஆலெ மொதலாளிய இருந்தாலும் செரி வர்ரோணும்
தெரிஞ்சிக்குங்காணும்!" அப்பிடிங்கிறாரு விகடபிரசண்டரு.
"வெரி
குட்! வெரி குட்! வாத்தியார்ரா? வெரி குட்! ஜோராப் போச்சு!" அப்பிடிங்கிறாரு
வைத்தி தாத்தா.
"செரி!
நமக்குச் சுத்தி வளைச்சி வர்றதெல்லாம் பிடிக்காது. பொண்ணு மூக்கும் முழியுமா லட்சணமா
இருக்குறா. சாதகத்தக் கொடுத்தீங்கன்னா பொருத்தம் இருந்தா பாத்து முடிச்சிப்புடலாம்.
பையே நம்மப் பையே. நம்மட்ட படிச்சப் பையே. இதாங் பொண்ணு. கட்டுறா தாலின்னா கட்டுவாங்ன்னா
பாத்துக்குங்க!" அப்பிடிங்கிறாரு விகடபிரசண்டரு.
"வெரி
குட்! ரொம்ப நல்லதாப் போயிடுச்சு. ஆனா பாருங்க! மூணாவதும் பொண்ணா பொறந்ததால என்னத்த
பொறந்த நேரத்தக் குறிச்சி, சாதவத்த எழுதுறதுன்னு வுட்டுப்புட்டேம். பயலுங்க ரண்டு
பேருக்குத்தாம் நம்ம வூட்டுல சாதவம் இருக்கு. பொருத்தம்னா பேரு பொருத்தம்தாம் பாக்கணும்.
வயசு பத்தோம்பது இருவது இருக்கும். பொறப்பு அறுபத்து ரண்டா மூணான்னு சரியா நெனைப்பு
இல்ல. காமராசரு கடைசியா சியெம்மா இருந்த நேரம். பெறவு பக்வச்சலம் வந்தாரு. அப்போ கொஞ்சம்
மின்னாடி பொறந்தது." அப்பிடிங்கிறாரு வைத்தி தாத்தா.
"மனசுக்குப்
பிடிச்சிருந்தா சாதவம் ன்னா மண்ணாங்கட்டி. நாமல்லாம் அப்டியா பாத்துக் கட்டிக்கிட்டேம்?
இப்போ நல்லாயில்லயா? எல்லாங் குடியும் குடித்தனமா பெத்துப் போட்டுட்டுத்தாமே கெடக்கேம்!"
அப்பிடிங்கிறாரு மில்லுகாரரு.
"வெரிகுட்!
வெரிகுட்! நமக்கும் சாதவமும் பாக்கல. ஒரு மண்ணும் பாக்கல. எட்டுப் புள்ளீகளாச்சு!"
அப்பிடிங்கிறாரு வைத்தி தாத்தா.
"புள்ளீங்கோ
வயசுக்கு வந்துட்டுன்னு விட்டிருப்பீருங்காணும். இல்லேன்னாக்கா இன்னும் நால பெத்துத்தாம்
போட்டிருப்பீரு!"ங்றாரு மில்லுக்காரரு.
வைத்தி தாத்தாவுக்கு
என்ன சொல்வதென்று புரியாமல் பெரிதாக அஹ்ஹ ஹா அஹ்ஹ ஹான்னு பெரிசா சிரிச்சி வைக்கிறாரு.
"செரி
பரவாயில்ல!"ன்னு சொல்லிட்டு, விகடபிரசண்டரு வாத்தியாரு பேசுறாரு, "பையனுக்கு
அப்பா அம்மையில்ல. அதால ஒங்க பொண்ணுக்கு மாமானாரு மாமியாரு தொந்தரவு இல்ல. கொழுந்தனாரு
கொழுந்தித்தாம் இருக்காங்க. அவுங்க ஒரு ஊர்ல ஒரு திக்குல இருக்காங்க. மாப்புள்ளக்கார்ரேம்
வேற ஊர்ல வேறொரு திக்குல இருக்காம். நாத்தனாருங்க எல்லாத்துக்கும் கல்யாணம் ஆயிடுச்சி.
பையேன் ஒருத்தம்தாம் இன்னும் தங்கிக் கெடக்குறாம். குடும்பத்தப் பாத்து உழைச்சிட்டுக்
கெடந்ததுல வயசு எப்டியும் இருபத்து எட்டு, இருபத்து ஒம்போது இருக்கும். வேல கெடைச்சதும்
ரொம்ப தாமசம். இப்போ ஒரு வருஷமாத்தாம் புள்ளையாண்டாம் வேலைக்கிப் போயிட்டுக் கெடக்காம்.
ஒங்க மரவேலையும் பயலுக்கு அத்துப்படி. பீரோவ கோத்து வெச்சான்னாக்கா பயலயும் வேலைக்கு
வேணும்னு பீரோலட சேத்துத் தூக்கிட்டுப் போயிடுவாங்க. வேலைன்னு எறங்கிப்புட்டா ராப்பகலுன்னு
புரியாம கண்ணு மண்ணு தெரியாம வேலை பாப்பாம். ரொம்ப பொறுமயான நெதானமான பைய்யேம். ஒரு
கொறையும் இல்லாம ஒம்மட வூட்டப் பொண்ண பாத்துப்பாப்பம்!"
"ஆஹா!
வெரிகுட்! மில்லுக்காரரு தொணைக்கு கூட வர்றப்பவே தெரியாதா சம்மந்தம் எப்டி இருக்கும்னு?
ஜோரா கல்யாணத்த முடிச்சிப்புடலாம். அது ஒங்க வூட்டுப் பொண்ணு. இன்னிக்கே அழைச்சிட்டுப்
போயி கல்யாணத்த முடிச்சிக்கிறதன்னாலும் முடிச்சிக்குங்க!"ங்றாரு வைத்தி தாத்தா.
இப்படிப் பேசுறாரே வைத்தி தாத்தா? அவரோட மனசுல என்ன இருந்துச்சோ தெரியல. ஒரு பொண்ணோட
கணக்கு முடிஞ்சா அடுத்ததோட கணக்கப் பாக்கலோமுன்னு நெனைச்சிருந்தாரோ என்னவோ! மாப்பிள்ளையப்
பாக்காமலே, கருப்பா செவப்பா, மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும் பொருத்தம் எப்பிடின்னு
யோசிக்காமலே, மாப்பிள்ள வூட்டுக் குடும்பத்தப் பத்தி பெரிசா விசாரிக்காமலே ஆஹா உம்னு
தலைய ஆட்டிப்புட்டாரு.
விகடபிரசண்டரு
வாத்தியாரும் பொண்ண பாத்துப்புட்டு கண்டரமாணிக்கத்துக்கு வந்து சுப்பு வாத்தியாருக்கு
ஒரு கடுதாசியை எழுதிப் போடுறாரு.
அன்புடை சுப்புவுக்கு,
கண்ட்ரமாணிக்கம்,
துன்மதி
வருஷத்து ஆனித் திங்கள், 19.
ஆசிரியன்
விகடப்பிரசண்டன் எழுதிக் கொள்வது. நமஸ்காரம். செளக்கியம். அங்கு செளக்கியத்துக்கும்
குறைவு இருக்காது. உன் மன இஷ்டப்படியே வடவாதி வந்து பெண் பார்க்கப்பட்டது. பெண் நல்ல
அம்சம். லட்சணம். இருவரும் மன்மதன் ரதி போல இருப்பீர்கள். பொருத்தம் ஏகத்துக்கும்
நன்றாக உள்ளதாக அபிப்ராயப்படுகிறேன். உமது அபிப்ராயத்தைத் தெரிவித்தால் அதன் மீது விருத்தியூர்
பயணமாகி மேற்கொண்டு ஆவது குறித்து யோசனை பிடிக்கலாம்.
இப்படிக்கு உமது ஆசிரியன்,
கோ.மா. விகடப்பிரசண்டன்.
இப்படி ஒரு
கடுதாசி வந்ததும் அதெ சுப்பு வாத்தியாரு எத்தன முறை திரும்ப திரும்ப படிச்சுப் பாத்திருப்பாருன்னு
தெரியல. என்னவோ எழுத்துக்கூட்டி வாசிக்கிறவன் மொத முறையா வாசிக்கிறவன் மாதிரி திரும்ப
திரும்ப ஆயிரத்தெட்டு தடவைக்கு மேல வாசிச்சிருக்காரு. அத்தன முறை வாசிச்சுப்புட்டுத்தாம்
வாத்தியாருக்கு பதிலு கடுதாசிய எழுதிப் போட்டுருக்காரு. அதலயும் மன்மதன் - ரதிங்ற
வாசகம் அவர்ர ரொம்ப ஈர்த்திருக்கு. அது பொண்ணுக்கு எப்பிடி இருந்துக்கும்னு யோசிக்காமலே
இவரு பாட்டுக்குக் கற்பனை ஒலகத்துல மெதந்துட்டுக் கெடந்துருக்கிறாரு. பதிலு கடுதாசிய
இப்படி எழுதிப் போட்டாரு சுப்பு வாத்தியாரு.
ஒழுகச்சேரி,
துன்மதி
வருஷத்து ஆனித் திங்கள் 27.
மதிப்புமிகு மரியாதைக்குரிய ஆசிரியனாருக்கு,
தங்கள் மாணவன்
சுப்பு எழுதிக் கொள்வது. அநேக நமஸ்காரங்கள் தங்கள் பாத கமலங்களுக்கு. செளக்கியம்,
செளக்கியமே. மிக்க சந்தோஷம். சிஷ்யனின் வேண்டுகோளை சிரமேற்கொண்டு செய்து கொடுத்தமைக்கு
இஃதை என்றென்றும் மறவேன். தங்கள் அபிப்ராயத்துக்கு என்றைக்கும் மாற்றுக் கருத்துக்
கொண்டவனில்லை தங்கள் மாணவன் என்பதைத் தாங்கள் அறிவீர்கள் என்பதால் மேற்கொண்டு சொல்வதற்கு
என்ன இருக்கிறதென்று அறியேன். தங்கள் சித்தப்படி ஆக வேண்டியதைச் செய்து சேமம் பல உண்டாகச்
செய்யும்படி மிக்கப் பணிவுடனும், தாழ்மையுடனும் வேண்ட கடமைப்பட்டுள்ளவனாக ஆகிறேன்.
மீண்டும்
அநேக நமஸ்காரங்கள்.
இப்படிக்கு,
தங்கள் நல்லாசிகளை வேண்டி நிற்கும்,
பணிவுடை மாணவன்
சா. சுப்பு.
இந்தக் கடுதாசிக்
கிடைச்சதும் விகடபிரசண்டரு வாத்தியாரு விருத்தியூர்ல போயி சங்கதியச் சொல்லியிருக்காரு.
மறுநாளே செயராமு பெரிப்பாவும், பத்மா பெரிம்மாவும் வடவாதிக்குப் போயிப் பொண்ண பாத்திருக்காங்க.
பொண்ணு அவங்களுக்கும் பிடிச்சிப் போயிருக்கு. பிடிக்காம போயிருந்தாலும் அந்தப் பொண்ணத்தாம்
அவசர அவசரமா முடிச்சிருப்பாங்கங்றது வேற சங்கதி.
பாத்துப்புட்டு
பத்மா பெரிம்மா பேசிருக்கு, "இதுக்கு மேல ரண்டுப் பக்கமும் அலைச்சலு வாணாம். முகூர்த்தோல
அது இதுன்னு வெச்சி செலவ பண்ணிட்டுக் கெடக்க வாணாம். நேரா கலியாணத்துக்கு நாளக் குறிச்சிப்புடுவேம்"ன்னு
சொல்லி அந்த வருஷத்து ஆவணி மாசத்துலயே விநாயகர் சதுத்திரி அன்னிக்கு நாள குறிச்சி,
விருத்தியூரு மாரியம்மன் கோயில்ல கலியாணத்த வெச்சிப்புட்டுங்க.
கலியாணத்து
அன்னிக்குத்தாம் தலைய குனிஞ்சுக்கிட்டே மொத மொதலா வெங்கு சுப்பு வாத்தியார்ர பார்த்தது.
பார்த்ததும் அதுக்குத் தாங்க முடியாத அதிர்ச்சியா போச்சுது. ஆளு பாக்குறதுக்கு கட்டையா
கருப்பால்லா இருக்காரு. அவரு போட்டுருக்குற வெள்ளச் சட்டையும், வேள்ள வேட்டியுந்தாம்
வெளுப்பா இருக்குது. இது வெங்கு செவப்புன்னா செவப்பு அப்படி ஒரு சிவப்பு. இப்படி இவரு
கருப்பா இருப்பாருன்னு தெரிஞ்சிருந்தா தனக்கு அடுத்ததா கருப்பா இருக்குற தன்னோட தங்காச்சி
சாந்தவ இவருக்குக் கட்டி வெச்சிருக்காலாமேன்னு அது அந்த நேரத்துல நெனைச்சிருந்திருக்கு.
கருப்புக்கும் கருப்புக்கும் பொருத்தமா போயிருந்திருக்குமேன்னு அதுக்கு ஏக வருத்தமா
போயிடுச்சி. கலியாண மேடை வரைக்கும் வந்த பின்னாடி அதுல என்னத்த மாத்தம் பண்றது? அதுவும்
இல்லாம கலியாணத்துக்கு சிப்பூரு சாந்தா சித்தியையெல்லாம் கூப்புட்டு வரல. குமரு மாமா,
வீயெம் மாமாவோட பாகூரு வள்ளி சித்தியத்தாம் அழைச்சிட்டு வந்திருந்திருக்காங்க. இனுமே
போயி அழைச்சாந்து கல்யாணத்த முடிக்கிறதுன்னா முகூர்த்தம் வேறல்ல போயிடும்னு பேசாம
கழுத்த நீட்டிட்டு உக்காந்துட்டு வெங்கு.
சுப்பு வாத்தியாரும்
அப்பத்தாம் வெங்குவப் பாத்திருக்காரு. நம்ம வாத்தியாரு சொன்ன மாதிரி ரதியாத்தான் இருக்குப்
பொண்ணு, அப்ப நாம்மத்தாம் மன்மதன்ங்ற நெனைப்புல சந்தோஷமா வெங்கு கழுத்துல தாலியக்
கட்டி முடிச்சாச்சிட்டாரு.
*****
No comments:
Post a Comment