சந்தர்பாயின் பேச்சிற்குப் பின் பெருத்த
மெளனம் நிலவுகிறது. யாருக்கும் என்ன பேசுவதென்று புரியாமல் போகிறது. உண்மை என்பது
உலகில் நாம் கேள்விப்படும் கதைகளை விட விசித்திரமாக இருக்கிறது.
உலகம் வேண்டுமேன்றே இப்படி புனைவு கொள்கிறதா?
அல்லது இப்படி புனைவு கொள்வதற்காகவே உலகில் பல்வேறு விசித்திரங்கள் நடைபெறுகிறதா?
"இரு சமூக ஒப்புமுறை என்பது இன்னொரு
சமூகத்தை மட்டம் தட்டுவதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒவ்வொரு சமூகத்திலும் உள்ள
சிறந்த கூறை ஏற்றுக் கொள்வதும், தேவையற்ற கூறை விலக்கிக் கொள்வதும் சமூக ஒப்புமுறையின்
பயனாக அமைந்திருக்கிறது. பாரம்பரியமாகப் பின்பற்றி வரும் சில சமூகக் கூறுகளை ஒரு சமூகம்
விலக்கிக் கொள்ள அவ்வளவு லேசில் சம்மதிக்காது என்பதையும் நாங்கள் அறிவோம். ஏதோ ஒரு
காரணத்துக்காக நம் முன்னோர்கள் அந்தக் கூறை உண்டாக்கி அது வழிவழியாகப் பழக்கத்திற்கு
வந்து அது ஒரு சமூக இயல்பாகி விடும் போது அதை மாற்றுவது பெரும் சவாலானது. அக்கூறு
நம் சமூகத்தை மடமையையும், அறியாமையையும் நோக்கித் தள்ளுமானால் அதற்கு எதிரான சமூகப்
போராட்டம் என்பது தேவையானது என்பதை மறுக்க முடியாது. இது குறித்துச் சம்பந்தப்பட்ட
சமூகத்தினர் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். திணித்தல், அதிகாரத் தோரணையைப் பயன்படுத்துதல்
என்பதாக அன்றி சமூக விழிப்புணர்வு மூலம் சமூக மாற்றம் விளைவிக்கப்பட வேண்டும். எப்போதும்
சமூகம் தேவையான மாற்றங்களுக்குத் தயாராக வேண்டும். அது தவிர்க்க முடியாது. பழையன கழிதலும்,
புதியன புகுதலும் என்கிறானே பவணந்தி!" என்கிறார் தமிழய்யா.
அதைத் தொடர்ந்து தன் கல்விச் சிந்தனைகள்
தொடர்பான உரையை ஆற்றுகிறார்.
"காலத்தைச் சொல்வது வரலாறு.
ஒன்றின் தோற்றம், வளர்ச்சி, பின்னடைவு,
தற்போதைய நிலை என ஆதாரங்களின் அடிப்படையில் அலசுவது வரலாறு.
மனிதருக்கு மட்டுமில்லை, உயிரினங்கள் ஒவ்வொன்றிற்கும்
வரலாறு இருக்கிறது. மண்ணுக்கு, கல்லுக்கு, மலைக்கு, அருவிக்கு, ஆறுக்கு வரலாறு இருக்கிறது.
பூமிக்கு வரலாறு இருக்கிறது. சூரியனுக்கு வரலாறு இருக்கிறது. கோள்கள் ஒவ்வொன்றிற்கும்
வரலாறு இருக்கிறது. பிரபஞ்சத்துக்கும் வரலாறு இருக்கிறது.
டார்வினின் பரிணாமக் கொள்ளை என்பது உயிரினங்களின்
தோற்றம் குறித்த ஒரு வரலாறு.
தனிமனிதர், சமூகம், விஞ்ஞானம், இலக்கியம்,
ஆட்சி முறை என எதற்கு வரலாறு இல்லை சொல்லுங்கள்!
மொழி, எழுத்து, ஓவியம், சிற்பம், இசை,
இன்னபிற நுண்கலைகள் எல்லாவற்றிற்கும் வரலாறு இருக்கிறது.
புயல், வெள்ளம், நிலநடுக்கம், கடற்கோள்,
எரிமலை என்பனவற்றுக்கும் வரலாறு இருக்கிறது.
ஒவ்வொன்றுக்கும் தோற்றம், போக்கு, வளர்ச்சி,
இணைவு, விலக்கம் என வரலாற்றின் தன்மை இருக்கச் செய்கிறது.
ஏற்ற இறக்கம் வரலாற்றில் இயற்கையானது.
வெற்றி - தோல்வி, இன்பம் - துன்பம், புதுமை
- பழமை, மேடு - பள்ளம், பகை - நட்பு, உறவு - வெறுப்பு, பிறப்பு - இறப்பு, உருவாக்கம்
- அழித்தொழிப்பு, ஏழ்மை - வளமை, நேர்மை - சூழ்ச்சி, தர்மம் - தந்திரம் என இருமைப்
பண்புகள் அனைத்தும் மொத்தமாக எல்லாம் வரலாற்றோடு தொடர்பு கொண்டிருக்கிறது.
இன்றைய நிகழ்வு நாளைய வரலாறாகிறது. நாளை
என ஒன்று இருக்கிறதா என்பது யாரும் அறிய முடியாத ரகசியம் என்றால் நேற்றைய நிகழ்வு இன்றைய
வரலாறு எனலாம்...."
*****
No comments:
Post a Comment