செய்யு - 307
எந்தக் கல்லூரியில தாவரவியல் துறைத்தலைவராக
இருந்தாரோ, அதே திருவாரூர் தியாகராச சுவாமி கல்லூரியில் முதல்வராகி ஓய்வு பெற்றிருக்கிறாரு
புரபஸர் அப்துல் மாலிக். விகடுவுக்கு அவர்ர முன்னாள் புரபஸ்ர்ன்னு சொல்றதா, அவருக்கு
விகடுவ முன்னாள் மாணவன்னு சொல்றதாங்ற மாரில்லாம் இல்லாம ரொம்ப பிரெண்ட்லியா பேசுறாரு
மாலிக். அவரு காலேஜ்ல இருந்தப்பயும் அப்படித்தாம். வகுப்பு எடுக்கிறப்ப மட்டுந்தாம்
அவரு ஒரு புரபஸரா தெரிவாரு. மித்த நேரங்கள்ல ஒரு நண்பன் போல தோளுல்ல கையைப் போட்டுக்கிட்டுத்தாம்
பேசுவாரு.
"ஆப்டர் ரிட்டையர்மண்ட் வந்த பணத்துல
கூத்தாநல்லூருல நம்மட ஆளுககிட்ட ஒரு எடத்தை வாங்கிக்கிட்டு செட்டிலாயிட்டேம்டா! அஞ்ஞ
வரணும்னு நம்ம ஆளுககிட்டேயிருந்து ஒரே நச்சரிப்பு. அதாங் போய்ட்டேம். இப்ப அஞ்ஞத்தாம்
இருக்கேம். திருவாரூர்ல ஒரு ப்ளாட் வாங்கிப் போட்டிருக்கிறேம். மியூட்சுவல் பண்ட்லயும் கொஞ்சம் பண்ணிருக்கேம்.
சரியா வெவரம் புரியல பாத்துக்கோ. திடீர்ன்னு அசெட் வேல்யூ ஏறிருக்குங்றாம். திடீர்னு
கேட்டாக்க எறங்கிருக்குங்றாம். வெளங்க மாட்டேங்குது. பொண்ணுங்க ரண்டு பேருக்கும் நிக்காஹ்
ஆயி ஒண்ணு துபாய்ல, இன்னொண்ணு சிங்கப்பூர்ல இருக்குதுங்க. மருமவப் பிள்ளைங்க அங்கயிருந்து
சம்பாதிச்சி பணத்த அனுப்புறாங்க. அவுங்களுக்கும் இஞ்ஞ வந்து செட்டிலாவணும்னு ஆசெ. கொஞ்ச
நாளு அஞ்ஞ இருந்து நல்லா சம்பாதிச்சிட்டு இஞ்ஞ வந்திடறேனுட்டாங்க. அவுங்க அனுப்புன
பணத்துல நாம்ம இருக்குற எடத்துக்குப் பக்கத்துலயே ரண்டு வூட்டையும் வாங்கிப் போட்டாச்சி.
பணம் அது பாட்டுக்கு வர்ருது. அதாம்டா பெரச்சனையா இருக்கு. நகைன்னு பாத்தீன்னு பொண்ணுக
ஒவ்வொருத்தியும் கிலோ கணக்குல வெச்சிருக்காளுக. போதும் பணம். இருந்தாலும் இதுக்கு
மேல என்ன சம்பாதிக்கப் போறாங்களோ! பட் ஒன்திங்! இதுக்கு மேல பணத்தை என்ன பண்றதுன்னு
தெரியல. ஒரு மெண்டல் சாட்டிஸ்பிகேஷனுக்கா எங்கேயாச்சிம் காலேஜ்ல செமினார்னா போறேம்.
மார்க்க வகுப்புன்னு எஞ்ஞ சொன்னாலும் போயிடுறது. முந்தா நேத்திக்கு ஷேர் மார்க்கெட்
மீட்னு லோக்கல் சி.டி.என். சேனல்ல அட்வர்டைஸ் பார்த்தேம். அதாம் வந்து பாப்பேம்னு
வந்தா இஞ்ஞ நீயி இருக்கேடா! நாம்ம எதிர்பார்க்கல. இன்ஷா அல்லாஹ்!" அப்பிடிங்கிறார்
புரபஸர் மாலிக்.
"ஹை ரிஸ்க் பேக்டருங்கய்யா மார்க்கெட்ங்றது.
நீங்க சொல்றத வைத்துப் பார்க்குறப்போ இப்போ நீங்க இருக்குற நிலைமைக்கு சந்தையில
தாராளமா முதலீடு பண்ணலாங்கய்யா! பேங்க் அக்கெளண்ட்
உங்களுக்கு இருக்கும். ஒரு டீமேட் அக்கெளண்ட் பண்ணிட்டு நம்ம புரோக்கிங் ஆபீஸ்லயே
பண்ணிக்கலாம்யா!" அப்பிடிங்கிறான் விகடு.
"இந்த மியூட்சுவல் பண்ட், இன்ஷ்யூரன்ஸ்?"
"எல்லாம் நம்ம ஆபீஸ்லயே இருக்குங்கய்யா!
மெயின் ஷேர் டிரேடிங்தாங்ய்யா!"
"ஷேர் மார்க்கெட்னா கேம்ப்ளிங்னுல்ல
சொல்றாங்களேடா விகடு? அதாம்டா மனசு அப்படியும் இப்படியுமா மனசு அல்லாடுது! மருமவ்வேனுங்க
சம்பாதிக்கிறது. நம்மள நம்புறாங்க. அத்தோட நாமளும் குருவி சேக்குறாப்புல வேல பாத்துச்
சம்பாதிச்சது. ஒரு நேரத்துல இன்வெஸ்ட் பண்ணலாம்னு தோணுது. இன்னொரு நேரத்துல வேண்டாம்னு
தோணுது. என்னால ஒரு டிசிஷனுக்கு வர முடியலேடா!" ங்றார் புரபஸர் மாலிக்.
"ஒண்ணும் பயப்பட வேண்டாங்கய்யா! ஒங்க
அக்கெளண்ட்டுக்கான டிரேட் எல்லாத்தையும் உங்களுக்கு ஒரு நம்பிக்கை வர வரைக்கும் நாமளே
பாத்துக்கிறேம்யா! பர்ஸ்ட் டென் தெளஸண்ட் மட்டும் இன்வெஸ்ட் பண்ணிப் பாருங்க! திருப்தின்னா
பண்ணலாம்! இல்லேன்னா நானே அக்கெளண்ட்ட க்ளோஸ் பண்ணிக் கொடுத்திடுறேங்கய்யா! என்னை
நம்பி ஒரு அக்கெளண்ட் தாரளமாக ஓப்பன் பண்ணலாம்ங்கய்யா! என்னை நீங்க நம்பலாம். பாட்டனி
படிக்கிறேன்னு வந்து ஓடிப் போன மாதிரி ஓடிப் போயிட மாட்டேன். பாட்டு எழுதப் போறேன்னு
அதுல சோபிக்க போன மாதிரி விட்டுட மாட்டேன். நாலு வருஷம். இதுல இருந்து எல்லாத்தையும்
பாத்துட்டேன். மூணு மாசம் போதும் உங்க டென் தெளஸண்ட் தேர்ட்டின் தெளஸண்ட் ஆயிடும்.
நான் நிச்சயமா சொல்றேன்!"ங்றான் விகடு.
"நாட் டென் தெளஸண்ட். தேர்ட்டி லேக்."ங்றார்
மாலிக்.
"முப்பது லட்சமா? அதுக்குத் தனியாவே
ஆபீஸே போடலாங்கய்யா! அவ்வளவு ஹை ரிஸ்க் வேணாங்கய்யா! டென் தெளஸண்ட்ட வேணும்னா தேர்ட்டி
தெளஸண்டா வெச்சிக்கலாம்கய்யா!"ங்றான் விகடு.
"ஹே! அப்படின்னா கூத்தாநல்லூர்ல தனியா
ஆபீஸ் போடுடா. அதாம்டா சொல்ல வர்றேன்! யெஸ்! கூத்தாநல்லூர்ல ஆபீஸ் போடு! நீயும்
பக்கத்துல இருந்தா நமக்குத் தோதுபடும்டா! எங்க ஆளுங்களுக்கு மியூட்சுவல் பண்ட், இன்ஷ்யூரன்ஸ்,
ஷேர் மார்க்கெட் டிரேட்ஸ் எல்லாம் பண்ணிக் கொடுக்கணும். கூத்தாநல்லூரு போனதிலேந்து
நம்ம ஆளுங்க இருவது முப்பது பேருங்க நாமத்தாம் படிச்ச ஆளு, வெவரம் தெரிஞ்ச ஆளுன்னு
எல்லாத்துக்கும் நம்மகிட்டயே வந்து நிக்குறாங்க. நம்மால அம்புட்டு பேத்தையும் சமாளிக்க
முடியல. ஒன்னய மாரி ஆளோட கைடென்ஸ் வேணும்டா நமக்கு. ஒனக்கு என்ன வசதி வேணும்னாலும்
செஞ்சுத் தர்றேன். கூத்தாநல்லூரு கெழக்குக்கோட்டையாரு தெரியும்ல. பெருங்கையி. நமக்குத்
தோஸ்தாயிட்டாரு. ஆபீஸ் போட்டின்னா அவரையும் சேத்து விடுவேம்."ங்றார் மாலிக்.
"ஒரு அக்கெளண்ட் ஒப்பன் பண்ண வெச்சால
ஆபீஸ்ல செமையா கவனிப்பாங்கங்கய்யா! ஒரு பிராஞ்சே ஆரம்பிக்க வெச்சா இன்னும் செமத்தியால்ல
கவனிப்பாங்க!"ன்னு திக்குமுக்காடிப் போறான் விகடு.
"ஆமாம்டா! வெளையாட்டுக்குச் சொல்லல.
இட்ஸ் அன் அர்ஜென்ட் நீட்! எவ்ளோ சீக்கிரமா பண்ண முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பண்ணணும்!"ங்றார்
மாலிக்.
"பிரான்சைஸ் பண்ணிக்கலாம்மாய்யா!
அவுங்களேயே அதாம் ஹெட் ஆபீஸ்லயே அங்க ஆபீஸ் போடச் சொல்லலாமாய்யா!"ங்றான் விகடு.
"புரியுறாப்புல சொல்லுடா?"ங்றார்
மாலிக்.
"பிரான்சைஸ்ன்னா ஆபீஸ் நம்மளோடது
மாதிரி. நாம்மத்தாம் ஆளுங்களப் போட்டுக்கணும். பண்ணுற டிரேடுக்கு பர்ட்டிகுலர் பெர்சென்டேஜ்
மட்டும் அவுங்களுக்கு அதாவது ஹெட் ஆபீஸ்க்குப் போகும். மித்த லாபமெல்லாம் நமக்கு.
ஆபீஸ் போடுற செலவு அத்தனையும் நம்மளோடதுங்கய்யா! அவுங்க ஆபீஸ் போடுறதுன்னா முப்பது
கிளையண்ட்ஸ் இருந்தா போதும். அவுங்க ஹெட் ஆபீஸ்லேந்து ஆபீஸ் போடுவாங்க. நமக்கு எந்தச்
செலவும் கிடையாதுங்கய்யா. அவுங்களே ஆட்களப் போட்டு எல்லாத்தையும் பண்ணிக்குவாங்க.
முப்பது கிளையண்ட்ஸ்க்கு மட்டும் உத்திரவாதம் கொடுக்கணும்."ங்றான் விகடு.
மாலிக் மோவாயைச் சொரியுறாரு. நெற்றியைச்
சுருக்குறாரு. அப்படிப் பண்ணிக்கிட்டே "பிரான்சைஸ் எடுடா பாத்துப்பேம். அப்பத்தாம்
ஒனக்கு நாலு காசி கெடைக்கும். நீயும் ஆபீஸ் நம்மதுன்னு நல்லா கவனிப்பே. அவுங்க ஆபீஸ்
போட்டா அவுங்களுக்கு வேலைப் பாக்குறதா நெனைச்சிக்கிட்டு மாச சம்பளத்த வாங்கிக்கிட்டு
சுமாராத்தாம் வேல பார்ப்பே."ங்றார் மாலிக்.
"அப்டில்லாம் இல்லங்கய்யா! எப்பிடி
இருந்தாலும் என்னோட பெஸ்ட்டை கொடுப்பேங்கய்யா! பிரான்சைஸ் எடுக்கிறதுன்னா அதுக்கு
ஒன் லேக் கட்டணுங்கய்யா. இனிஷியலா அட்லிஸ்ட் ஒன் சிஸ்டம், நெட் பேசிலிட்டிஸ், சாப்ட்வேர்ஸ்க்கு எய்ட்டி தெளஸண்ட் கட்டணுங்கய்யா. ப்ளஸ் ஆபீஸ் வித்
ஏ.சி. நாம்மத்தாம் ஏற்பாடு பண்ணிக்கணும். இவ்ளோ செலவு இருக்குங்கய்யா!"ங்றான்
விகடு.
"தட்ஸ் நாட் எ பிராப்ளம்! ஒம் பேர்லயே
பிரான்சைஸ் எடு பாத்துக்கலாம்!"ங்றார் மாலிக்.
"அய்யோ அய்யா! அவ்வளவுக்கு நம்மகிட்ட
தெம்பு இல்லைங்கய்யா! ஆள விடுங்கய்யா! நாம்ம இந்த அபீஸ்லயே வேலை பாத்துக்கிறேம். நீங்க
இங்கயே ஒரு அக்கெளண்ட் ஓப்பன் பண்ணிக்குங்க."ங்றான் விகடு.
"டேய் ஷிட்! பணம்லாம் நாம்ம தர்றேம்டா!
நீ சொல்ற அமெளண்ட் ஒரு விசயமே இல்லடா! ன்னா சொல்றே?"ங்றார் மாலிக்.
என்ன சொல்வதென்று மலைத்துப் போயி நிக்குறான்
விகடு.
"கூத்தாநல்லூர்ல ஆபீஸ் போடணும்னா
முக்கியமான இடத்துல போடணும். அட்வான்ஸ், ரென்ட்ன்னு நினைக்கிறப்பவே மலைப்பா இருக்குதுங்களேய்யா!"ங்றான்
விகடு.
"நம்மட மருமவ்வேன் வூடு இருக்குல்ல
ரண்டு. அதுல ஒண்ண தர்றேம்டா. ச்சும்மாத்தாம் கெடக்குது. ஏ.சி. வேணும்னா பண்ணித்தர்றேம்.
ஏம்டா எதுக்கெடுத்தாலும் மலைச்சிப் போறே? ஒனக்குப் பைசா காசி செலவில்ல. நீயி வந்து
ஆபீஸ்ல இருந்தா போதும்டா! நீயி பேசுனது நமக்குப் பிடிச்சிப் போச்சி. நீ ன்னா மெத்தேட்ட
சொன்னீயோ அந்த மெத்தேட்லயே பண்ணிக் கொடு. ஒனக்கு கிளையண்ட்ஸ் எப்படியும் இருவதுக்கு
மேல பண்ணிக் கொடுத்திடுறேம் இன்க்ளுடிங் மீ. கொஞ்ச கொஞ்சமா இருவதெ நாப்பதா பண்ணிக்கலாம்.
நமக்கு அஞ்ஞ இப்போ நல்ல செல்வாக்கு. நாம்மச் சொன்ன சேருவாங்க. கிழக்குக்கோட்டையாரையும்
சேத்து விட்டுடுவேம். அதுக்குக் கொஞ்சம் நாளுவும் அவ்வளவுதாம். அவருல்லாம் க்ரோர்ஸ்
பண்ணுவாருடா! மெயின்ல ஆபீஸ் போட்டு கிளையண்ட்ஸ் இல்லன்னா ன்னா பண்ணுவே? நீ நம்ம எடத்துலயே
ஆபீஸ் போடு. கிளையண்ட்ஸ நாம்ம வர வைக்கிறேம். நம்ம ஆளுகளுக்கு நம்பிக்கத்தாம் முக்கியம்.
அதத்தாம் ஒம்மகிட்ட எதிர்பார்க்கிறேம். அது இருந்துச்சுன்னா நீயி எஞ்ஞ ஆபீஸ் போட்டாலும்
அஞ்ஞ வருவாங்க பாத்துக்கோ!"ன்னு மாலிக் சொன்னதும் மயக்கமே அடிச்சி விழுந்துப்புடுவான்
போலருக்கு விகடு.
இந்தத் துறையில வேலை பார்த்த நாலு வருஷத்துல
விகடுவுக்குன்னு கனவு இருக்குது. தனியா ஒரு ஆபீஸ் போடணும், நெறையா சம்பாதிக்கணும்,
ஒரு ஆபீஸை பத்து ஆபீஸா பெருக்கணும், பெறவு தொண்டாமூத்தூர் கேப்பிட்டல் மாதிரி அவனும்
அவ்வேம் ஊரு பேருல திட்டை கேப்பிட்டல்னு என்.எஸ்.இ.ங்ற நேஷனல் ஸ்டாக் எக்ஸேஞ்சுல டேரக்ட்
புரோக்கரா ஆவணும் அப்பிடின்னு. எப்படியும் தனியா ஆபீஸ் போடுறதுக்கு பத்து வருஷத்துக்கு
மேல ஆவும்னு ஒரு கணக்குப் போட்டிருந்தான் விகடு. அது இவ்வளவு சீக்கிரத்துல நிறைவேறும்னு
அவனே எதிர்பார்க்கல. இதே மாதிரி கனவுத்தாம் இங்க வேலை பாக்குற லெனின், கோபி, சுபா
எல்லாருக்கும். இதையெல்லாம் கேட்டுக்கிட்டு நின்ன அவங்க விகடு ஒரு அக்கெளண்ட்டுக்கான
கிளையண்டைப் பிடிக்கிறாங்றதுல எதுவும் குறுக்கிடாம கவனிச்சிக்கிட்டு இருக்காங்க. இது
அவுங்களுக்குள்ள ஒரு கட்டுபாடு, விதின்னு சொல்லலாம். அவங்கள்ல ஒருத்தரு அக்கெளண்ட்
ஓப்பன் பண்ண கிளையெண்டைப் பிடிச்சா மித்தவங்க அதுல போயி தலையிடக் கூடாதுன்னு. கிளையெண்டு
பிடிப்பான்னு பார்த்தா விகடு புதுசா ஆபீஸ் போடுறதுக்கே ஆளைப் பிடிச்சாட்டாங்றதையும்,
அதுவும் பைசா காசி செலவில்லாம அதையும் போட்டுத் தர்றதுக்கு ஆளைப் பிடிச்சிட்டாங்றதையும்
பார்க்க அவுங்களுக்குக் கொஞ்சம் ஆச்சரியுமாவும், பொறாமையாவுத்தாம் இருக்கு.
"ஓ.கே. மை விகடு பாய்! முடிஞ்சா கம்மிங்
தேர்ஸ்டே ஈவ்னிங் பை தேர்ட்டிக்கு மேல வர்றீயா வூட்டுக்கு!"ங்றாரு மாலிக்.
"கண்டிப்பாங்கய்யா! நிச்சயமாங்கய்யா!"ங்றான்
விகடு.
மாலிக் தன் பையில் கையை விட்டு ஒரு விசிட்டிங்
கார்டை எடுத்துக் கொடுக்குறாரு. அதை வாங்கிக்கிறான் விகடு.
"ஓ.கே.டா. நாம்ம கெளம்புறேம்!"
கையைக் குலுக்கி விட்டு கிளம்ப எத்தனிக்கிறாரு மாலிக். அவர் பின்னால போற அவனெ,
"நோ! இஞ்ஞ இருந்து பாரு. இப்ப அதாங் ஒன்னோட வேல. நாம்ம போயிக்கிறேம்!"ன்ன
அவரு கெளம்புறாரு.
மாலிக் போன பிற்பாடு லெனின் விகடுகிட்ட
சொல்றாரு, "யேய் யப்பா வெகடு! பிரான்சைஸ் நாம்ம வாங்கித் தர்றதா இருக்கட்டும்.
நாம்ம ஆபீஸ்ல பேசுறேம்!"ங்றாரு.
"ச்சும்மா இருப்பா லெனின்! மேனேஜர்னுகிட்டு
ஓவரா பண்ணாதே! பிரான்சைஸ் வாங்கித் தந்தா அதுக்கு ஒரு அமெளண்ட் இருக்குல்ல. அதெ நீயி
லவட்டிக்கிட்டு போவலாம்னா நெனைக்கிறீயா? இது வெகடுக்கு வர்ரது." அப்பிடிங்கிறாரு
கோபி.
"கோபி சொல்றதுதாம் கரெக்ட்! மிஸ்டர்
மேனேஜர் சார் இதுல ப்ளீஸ் தலையிடாதீங்க. ஒங்களுக்காக நெறைய ஒழைச்சிருக்காப்புல வெகடு!
இதையாச்சியும் விட்டுக் கொடுங்க!" அப்பிடிங்கிது சுபா.
"பிரான்சைஸ் வாங்கிக் கொடுத்ததா
நம்ம மூணு பேரையுமே கொடுப்போம்!"ங்றான் விகடு.
"ஏய் ச்சும்மா இருப்பா! இத்து ஒனக்கு
வந்தது. வருமானம் வந்தா பாத்துட்டு போவீயா? இதெ பிரிச்சிக் கொடுத்துட்டு..."
அப்பிடிங்கிறாரு கோபி.
"மூணு பேரையுமே கொடுப்போம்! லெனின்
சாரே! நீங்க பார்ம்ஸ், டாக்குமெண்ட்ஸை தயார் பண்ணுங்க! மீட் முடிஞ்சதும் மொதலாளியைப்
பார்த்து ஒரு வார்த்தைச் பேசிடுவோம்!"ங்றான் விகடு.
"ஏய் ஒன்னாலத்தாம்ப்பா திருவாரூர்ல
மட்டும் மழை பெய்யுது போலருக்குப்பா!"ன்னு கலாய்க்குது சுபா.
"அப்போ நாளைக்கு ராயல் பார்க்ல பார்ட்டி!
புல் செலவு வெகடு! ஓ.கே.?"ங்றாரு லெனின்.
"ஒன்! டூ! த்ரி! ட்ரிபிள் ஓ.கே.!"ன்னு
தம்ஸ் அப் காட்டுறாரு கோபி.
*****
No comments:
Post a Comment