"... ... ... முறைகளோ, சடங்குகளோ,
கலாச்சாரங்களோ ஒரு சமூகத்தைக் காக்காது. ஒரு வகையில் அது அந்தச் சமூகத்தின் அழிவை
அதுவே விரைவுபடுத்தும். முறைகள், சடங்குகள், கலாச்சாரங்கள் எல்லாம் அழிந்து விடுவோமோ
என்ற பயத்தில் உருவாக்கப்பட்டவை. அந்தப் பயத்தைக் காட்டிக் காட்டியே அவை நீண்ட காலமாக
வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்றன.
முறைகள், சடங்குகள், கலாச்சாரங்கள் காலப்போக்கில்
மாறுகின்றன. அதை மாற்ற அனுமதிக்காத சமூகம் தனக்கான அழிவுச் சக்தியை அந்த அடிப்படைவாதம்
மூலமாகே தேர்ந்து கொள்கிறது. நமது அச்சங்களை நாம் வென்று விட்டால் நமக்கு எந்த விதமான
சடங்குகளோ, முறைகளோ, கலாச்சாரங்களோ தேவையில்லை. சாதியும், இனமும், மதமும் கூட அப்படி
உருவாக்கப்பட்டவைகளே. அவை முறைகளுக்கான, சடங்குகளுக்கான, கலாச்சாரங்களுக்கான ஆணிவேராக
இருக்கின்றன. நாட்டில் பல காமுகர்கள், பலாத்காரக்காரர்கள், வன்முறையாளர்கள், வக்கிரம்
பிடித்தவர்கள் உலவுவதற்கு அவை மறைமுகமாகக் காரணமாகின்றன.
மனிதர்கள் நெகிழ்வுத்தன்மையோடு வாழப்
பிறந்தவர்கள். அவர்களின் நெகிழ்வுத்தன்மை பறிக்கப்படும் போது அவர்கள் எப்படி வேண்டுமானாலும்
திடீர்மாற்றமடையலாம், திரிபடையலாம். மனிதருக்குத் தேவை அன்பும் பாசமும். மனிதருக்குத்
தேவை அனுசரணையும், ஏற்றுக்கொள்ளும் தன்மையும். எனக்கென்னவோ உங்கள் பாதுக்காப்பு முறைகள்,
சட்டங்கள், தீர்ப்புகள் எல்லாம் அனுசரணைக்கும், ஏற்றுக் கொள்ளும் தன்மைக்கும் எதிராக
இருப்பதாகத் தோன்றுகிறது.
நீங்கள் முறைகளை நிலைநாட்டுவதாய்ச் சொல்லி
மனிதர்களைக் கடினமாக்குகிறீர்கள் மற்றும் இறுக்கமாக்குகிறீர்கள். ஒரு மனிதர் வாயைத்
திறந்து உண்மையைச் சொல்ல முடியாதபடி உங்கள் முறைகள் அவருக்குத் தண்டனையைத் தரக் காத்துக்
கொண்டிருக்கிறது. நீங்கள் பொய் சொல்லுதல் பாவம் என்ற வாக்கியத்தை அதன் பொருட்டு
உருவாக்கியிருக்கிறீர்கள். நல்லது. ஆனால் அப்படிப் பொய் சொல்லும் பாவக் காரியத்தை
ஏன் மனிதர்களைச் செய்ய வைக்கிறீர்கள்? மனிதர்களை நீங்கள் பொய் சொல்ல தூண்டுகிறீர்கள்.
அவர் உண்மையைச் சொன்னால் தண்டிக்க தண்டக்கோலோடு காத்திருக்கிறீர்கள்.
உண்மையைச் சொன்னால் மனிதர் தண்டிக்கப்பட்டால்
எந்த மனிதர் உண்மையைச் சொல்வார்? உண்மையைச் சொல்லாதது ஒரு நோய். உண்மையைச் சொல்லாமல்
போவது ஒரு வியாதி. உங்கள் சமூகத்துக்கு மருந்தே இல்லை. உண்மையைச் சொல்லாதவர் நோய்வாய்ப்
படுவார். உண்மையைச் சொல்ல முடியாதவர் மனநோயாளி ஆகுவார்.
உங்கள் சமூகத்தின் ரத்தக் கொதிப்பும்,
சர்க்கரையும், கொழுப்பு நோயும், நரம்புத் தளர்ச்சிகளும், வாத நோய்களும் உங்கள் உண்மையைச்
சொல்லாத தன்மையில் இருக்கின்றன. நீங்கள் உண்மையைப் பேசுங்கள். உங்கள் சமூகத்தைப் பீடித்திருக்கும்
அத்தனை நோய்களும் ஓடி விடும். நீங்கள் திறந்திருக்கும் அத்தனை மருத்துவமனைகளும், மருந்தகங்களும்
காற்றடிக்க ஆரம்பித்து விடும். உங்களின் பெரிய மருத்துவ வியாபாரமே படுத்து விடும்.
இவ்வளவு ஆர்வமாக மருத்துவப் படிப்பு படிக்கும் மாணவர்கள் உங்கள் சமூகத்தில் உருவாகவே
மாட்டார்கள். நோயில்லாதச் சமூகத்துக்கு எதற்கு மருத்துவர்கள்?
அது மட்டுமல்ல, உங்கள் காவல் நிலையங்களை
நீங்கள் இழுத்து மூடும்படி ஆகி விடும். நீதிமன்றங்களை நீங்கள் தர்மசாலைகளாக மாற்றுவதைத்
தவிர வேறு வழியிருக்காது. உங்கள் சட்டக்கல்லூரிகள், சட்ட பல்கலைகழங்கள் அனைத்தும் இல்லாமல்
போய் விடும். மிகப்பெரிய பொருளாதார மந்தநிலையை நீங்கள் சந்திக்கும்படி ஆகி விடும்
என்பதால், ஆகவே உங்களுக்குப் பொய்கள் தேவை.
உங்கள் பொய்கள்தான் உங்கள் வியாதிகளை
வளர்க்கும். உங்கள் மருத்துவமனைகளைக் காக்கும். மருத்துவப் படிப்பை உயர்ந்த படிப்பாக்கும்.
உங்களது காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள். சட்ட அமைப்புகள் அனைத்தையும் காக்க உங்களுக்குப்
பொய்கள் தேவை. உண்மையைத் தவிர வேறில்லை என்ற சத்தியம் செய்வதற்கே உங்களுக்குப் பொய்கள்
தேவை என்பது புரிகிறதா?
புதுப்புது பொய்களை உருவாக்கி அதன் மூலம்
குற்றங்களை அதிகப்படுத்தி அது ஒவ்வொன்றையும் கட்டுப்படுத்த ஓர் அமைப்பை உருவாக்கி
அதன் மூலம் வேலை வாய்ப்பை உருவாக்குவதாக நீங்கள் பெருமைப்பட்டுக் கொள்கிறீர்கள்.
எப்படி இறந்தார் என்று உண்மையைச் சொல்ல
ஒருவர் இருந்தால் போதாதா? நீங்கள் ஏன் பிணத்தைக் கூறாய்வு செய்ய வேண்டும் சொல்லுங்கள்.
உங்கள் சமூகம் பொய்களால் நிரம்பினால் அந்தப் பொய்களிலிருந்து உண்மையைக் கண்டுபிடிக்க
பிணக்கூறாய்வு, விசாரணைகள், வழக்குகள், விவாதங்கள், தீர்ப்புகள், தண்டனைகள், சிறைச்சாலைகள்
எல்லாம் தேவைப்படும்.
எங்கள் சமூகத்தில் உண்மையைத் தவிர வேறு
எதுவுமில்லை. எங்கள் சமூகத்தில் தண்டனைகள் எதுவும் கிடையாது. மனஉறுத்தல் மிகப் பெரிய
தண்டனை. அது யாரும் வழங்குவதன்று. இயற்கையான தண்டனை அது. சம்பந்தப்பட்ட மனமே சம்பந்தப்பட்ட
மனிதருக்கு தரும தண்டனை. யாரும் அதை இன்னொருவருக்கு வழங்குவதில்லை. அந்தத் தண்டனைக்குப்
பணிந்தே எல்லாரும் உண்மையைச் சொல்கிறோம். பிடித்தபடி வாழ்கிறோம். பிடிக்காமை எங்கள்
சமூகத்தில் கிடையாது. காதல் வந்தவுடன் காதலிக்கிறோம். காமம் வந்தவுடன் அதைத் தீர்த்துக்
கொள்கிறோம். அதற்குப் பின்பே எங்களுக்குப் பொறுப்புகள் வழங்கப்படுகின்றன. அது குழந்தையை
உண்டாக்கியதற்கான ஒரு பொறுப்பு மட்டுமே. அந்தக் குழந்தைக்காக மட்டுமே பொறுப்புகள்.
திருநம்பி, திருநங்கை இவைகளெல்லாம் என்ன
வார்த்தைகள்? என்னை திருநம்பி என்பீரோ! எம் துணையை திருநங்கை என்பீரோ! யானறியேன்.
நீங்கள் வாழ்க்கையைப் பகுத்து, மனிதர்களைப் பகுத்து வார்த்தைகளை உருவாக்கிக் கொண்டே
போகிறீர்கள். அந்த வார்த்தைகளுக்குக் கவிதைகளை, காப்பியங்களை, கதைகளை, நவீனங்களைப்
படைத்துக் கொண்டே போகிறீர்கள். உங்கள் எழுது காகிதங்கள் தீரப் போவதில்லை. எங்களுக்கு
உயிர் என்ற ஒற்றை வார்த்தைப் போதும். மனிதரும் உயிரே, தாவரமும் உயிரே, விலங்கும் உயிரே,
பூச்சிகளும் உயிரே, பறவையும் உயிரே. பல வார்த்தைகள் எங்களுக்குத் தேவையே இல்லை. எங்கள்
வார்த்தைகள் குறைவு. எங்கள் வாழ்க்கை எளிமை. எல்லாமே குறைவு எங்களுக்கு. சங்கடங்கள்,
பிரச்சனைகளும் குறைவு எங்களுக்கு. ஆனால் எல்லாமே அதிகம் உங்களுக்கு. சங்கடங்கள், பிரச்சனைகளும்
அதனால் அதிகம் உங்களுக்கு.
எங்களுக்கான எளிய வாழ்க்கை மட்டுமே எங்கள்
சமூகத்தில் இருக்கிறது. பெரும்பாலும் நாங்கள் உணவைச் சமைப்பது கிடையாது. எவ்வளவு பச்சையாகச்
சாப்பிட முடியுமோ அவ்வளவு பச்சையாகச் சாப்பிடுகிறோம். எங்கள் சமூகத்தினர் கழிக்கும்
மலத்தில் கூட நாற்றம் கிடையாது. அந்த மலத்தைக் கூட ஒருவர் எடுத்து உண்ணலாம். கிருமிகள்
கிடையாது.
எரித்துச் சமைப்பது கிடையாது என்பதால்
எந்தப் பொருளையும் நாங்கள் எரிப்பது கிடையாது. பழங்கள் அதிகம் எங்கள் உணவில். அது
எங்கள் வாழ்வை கனிந்த வாழ்வு ஆக்குவதாக உணர்கிறோம். பச்சைக் காய்கறிகள் அதிகம் எங்கள்
வாழ்வில். அது எங்கள் வாழ்வைப் பசுமையாக்குவதாக உணர்கிறோம். பழத்தைச் சாறு பிழிந்து சாப்பிடுவதும் கிடையாது. அப்படியேச்
சாப்பிடுகிறோம்.
சமைப்பது என்றால் சூடுபடுத்தாமல் பொருட்களைக்
கலப்பது மட்டுமே. அதுவும் இரண்டு பொருட்களைக் கலப்பதை இயன்றவரை தவிர்ப்போம். ஒரு
உணவுப்பொருளை அப்படியே கலப்பின்றி உண்ணுவதை அதிகம் ஆதரிக்கிறோம். மற்றபடி எரித்தல்
இல்லாத சமையலில் நசுக்குவது, பொடியாக்குவது, நீரில் கலப்பது, அரிதாக சில பொழுதுகளில்
ஒரு சில பொருட்களை கலப்பதும் அதை உண்பதும்தாம்
எங்கள் சமையல் முறையும் உணவுமுறையும். புலால் நாங்கள் உண்பதில்லை. எந்த உயிரையும்
தாவரங்களின்றி எதையும் கொல்வதில்லை. தாவரங்களிலிருந்தும் கொல்லாமல் கொய்வதை அதிகம்
விரும்புகிறோம்.
எங்கள் வாழ்க்கை இயல்பான வாழ்க்கை. இயற்கையான
வாழ்க்கை. தங்கம், வெள்ளி, தாமிரம் இவையன்றி பிறிதொரு உலோகத்தை நாங்கள் பயன்படுத்துவதில்லை.
எந்த உணவுப் பொருளையும் ஒரு வேளைக்கு மட்டுமே உபயோகம் செய்வோம். குளிர்சாதனப் பெட்டியில்
வைத்து பல வேளைகளுக்கு உபயோகம் செய்வது கிடையாது. உண்ணும் அந்த வேளையில் தாவரங்களைப்
பறிப்போம். உண்போம். அரிசி உணவோ, கோதுமை உணவோ நாங்கள் கேள்விப்படாதது. அதற்காக
நிலங்களைக் கைப்பற்றும் கொடுமைகள் எங்கள் சமூகத்தில் இல்லை.
காய்கறிச் சாகுபடிகள், பழமரச் சாகுபடிகள்
மட்டுமே எங்களிடம் உள்ளது. நாங்கள் ஆடுகளையோ, மாடுகளையோ, கோழிகளையோ எதையும் வளர்ப்பதில்லை.
எங்கள் கிராமநகரத்தைச் சுற்றியுள்ள காடுகளில் அவை வசிக்கின்றன. அத்துடன் புலிகள், சிங்கங்கள்,
கரடிகள், யானைகள் என்றும் வசிக்கின்றன. ஒன்றையொன்று உண்கின்றன. ஒன்றுக்கொன்று பலியாகின்றன.
மனிதர்கள் அவற்றை உண்பதுமில்லை. பலியாக்குவதும் இல்லை.
எங்கள் நகரகிராமத்தில் மின்சாரம் இல்லை.
இயற்கை வெளிச்சம் மட்டுமே. சூரியனும், நிலவுமே எங்கள் மின்சாதனங்கள். நரம்புக் கருவிகள்,
ஊது கருவிகள் போன்ற இசைக்கருவிகளை மட்டுமே பயன்கொள்கிறோம். தோலால் செய்யப்படும்
கருவிகள் எங்களிடம் இல்லை.
ஒரே வன்முறை எங்கள் சமூகத்தில் என்றால்
அது குறிகளை வெட்டுவதும், மாற்றுவதும்தாம். அதை நாங்கள் பரம்பரை பரம்பரையாக, தலைமுறை
தலைமுறையாகச் செய்து வருகிறோம். அந்த வலியும், வேதனையும் கூட எங்களுக்கு நூற்று எட்டு
நாட்களுக்கு முன்னதாகவே எந்த மருந்தோ, மருத்துவமோ செய்யாமல் தானாக குணமாகிறது என்றால்
எங்கள் வாழ்க்கை முறையும், உணவு முறையும்தாம் அதற்குக் காரணமாக நாங்கள் நினைக்கிறோம்.
ஒருவிதமாக இரு கலாச்சாரங்கள் ஒன்றாகக்
கலப்பதற்கு இவ்வகையில் துணை புரிந்து என்னை இவ்வளவு தூரம் அழைத்து வந்த மகாகவி மாணிக்கம்
ஐயாவுக்கு இந்நேரத்தில் நன்றி புரிகிறேன்.
கூட்டம் குறைவுதான். பதினோரு பேர்கள்
மட்டுமே உள்ளீர்கள். பரவாயில்லை. புதிய நோக்கில் புதுப்புது சமூகத்தைச் சார்ந்தவர்களைக்
கொணர்ந்து பேச வைக்க வேண்டும் என்ற உங்களது முயற்சிப் போற்றத்தக்கது. அதற்கு வாழ்த்துகள்.
நீங்கள் விரும்பினால் எங்கள் சமூகத்திலும் உங்கள் அகல் கலை இலக்கியக் கூடல் சார்பாக
வந்து பேச்சை நிகழ்த்த வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்து விடைபெறுகிறேன்.
இந்தக் கூட்ட நிகழ்வை என்றும் மறக்க மாட்டான்
இந்த சந்தர்பாய்.
நன்றியும் வணக்கமும் என்றென்றும் உங்களுக்கு!"
*****
No comments:
Post a Comment