செய்யு - 306
நாலு வருஷமா அப்பப்போ நடக்குற டிரேடர்ஸ்
இன்வெஸ்டர்ஸ் மீட்ல விகடு ஒண்ணும் பேசலங்றது ஒரு கொறையா போயிடுதுங்றதாலயும், அத்தனை
இன்வெஸ்டர் மீட்லயும் வர்றவங்கள வாங்க வாங்கன்னு கூப்பிட்டுகிட்டும், சாப்பாட்டு ஐட்டங்களுக்குப்
பக்கத்துல நின்னுகிட்டு இதெ சாப்பிடுங்க, அதெ சாப்புடுங்க, இது நல்லா இருக்கும், அது
நல்லா இருக்கும்னு சொல்லியே ஓட்டிப்புட்டாங்றதாலயும் இந்தக் கூட்டத்துல கட்டாயமா விகடு
பேசி ஆவணும்னு லெனின் ரொம்ப கட்டாயப்படுத்திட்டாரு. அவன் பேச வேண்டிய நிலைமெ உண்டாயிப்
போயி பேசுறான்.
"கூடி இருக்கிற அனைவருக்கும் வணக்கங்கய்யா!
நான் இப்போ தினசரி வர்த்தகம் பண்றத பத்திப் பேசல. முதலீடு பண்றதப் பத்தி பேச விரும்புறேன்.
இதெயும் ஏன் பேசுறேன்னா எந்த மீட்லயும் நான் எதுவும் பேசலன்னு எங்க மேனேஜர் ஐயா ரொம்ப
கோபத்துல இருக்கார். அவர்ர கோபப்பட விட்டுட்டு அவர்கிட்ட எப்படி வேலை பார்க்க முடியுங்ற
தர்மசங்கடமான சூழ்நிலை உண்டாயிப் போயிட்டாதால இன்றைக்கு நான் பேச வேண்டியதா போயிடுச்சு.
இதுல ஏதும் தப்பு தவறு இருந்தா பொறுத்த வேணும்னு முன்கூட்டியே கேட்டுக்கிறேன்.
முதலீடு பண்றதப் பத்தித்தாம் அதைப் பத்தி
மட்டும்தாம் பேசலாம்னு நினைக்கிறேன். இந்த முதலீடே தினசரி வர்த்தகமாகவோ, குறுகிய கால
வர்த்தகமாகவோ அல்லது நீண்ட கால முதலீடாவோ அமையலாம். இப்படிச் சொல்றது நான் உங்களைக்
குழப்புகிற மாதிரி உங்களுக்குத் தோணலாம்.
நான்கு வருஷங்களாக பங்குச் சந்தையைக் கூர்ந்து
அவதானிச்சதுல எப்படி இருந்தா இதுல நிலைக்கலாம், எப்படி இருந்தா இதுல நிலைக்க முடியாதுங்ற
யோசனை எனக்குள்ளே எப்போதும் ஓடிக்கிட்டே இருக்கு. இத்தனைக்கும் இந்தச் சந்தையில நான்
பைசா காசை முதலீடு பண்ணல.
திருவாரூர்ல இருக்குற பங்குச்சந்தை தரகு
நிறுவனங்கள்ல ஒண்ணான தொண்டாமுத்தூர் கேப்பிட்டல்ல பல பேருக்கு நான் ஆர்டர் போட்டிருக்கிறேன்.
அந்த ஆர்டர்கள்ல லாபமும், நஷ்டமும் மாறி மாறி வருவதை நான் கவனிச்சிக்கிறேன். அந்த அனுபவத்துலத்தான்
நான் இதைச் சொல்றேன்ங்றது இங்க இருக்கிறவங்க புரிஞ்சிக்கணும்.
நான் இப்போ சொல்லப் போறது ஒரு நல்ல
முறையா உங்களுக்குப் பட்டா நீங்க இதைப் பயன்படுத்திக்கலாம்.
அப்படி இல்லைன்னா இதை விட்டுடலாம். பங்குச் சந்தைங்றது நஷ்டம் பண்றதுக்கான இடம் இல்லை,
லாபம் பண்ணுறதுக்கான இடம்னு நீங்க நினைத்தால் நான் சொல்லப் போற இந்த முறை உங்களுக்கு
நிச்சயம் பயன்படும்.
அனுபவப்பட்டவங்க பல பேருக்கு தெரிஞ்ச எளிய
முறைதான் நான் இப்போ சொல்லப் போறது. இதுல புதுமையோ புதுசோ இல்ல. ஆனா இந்த எளிமையான
முறையைத்தான் நான் கடைபிடிக்க தவறுகிறோமோன்னு நான் நினைக்கிறேன்.
பங்குச் சந்தையைப் பொருத்த மட்டுல முதல்
விதியும், கடைசி விதியும் நஷ்டம் பண்ணக் கூடாதுங்றதுதான். அப்போ முதல் விதியும் கடைசி
விதியும் ஆக எல்லா விதியும் பங்குச்சந்தைன்னா லாபம் மட்டும்தான் பண்ணணுங்றதுதான்.
இப்போ நான் நினைக்கிற அந்த முறைக்கு வர்ரேன்.
பங்குச் சந்தையில நஷ்டம் பண்ணக் கூடாதுங்றது உங்களோட லட்சியம்னா நீங்கப் பங்குச் சந்தையில
முதலீடு பண்றதுக்கு முன்னாடி ஒரு மூணு மாசம் வரைக்கும் பங்குச் சந்தையைக் கவனிக்க மட்டுமே
செய்யணும்.
கவனிச்சிக்கிட்டு இருக்குற உங்களால ஒரு
பத்து நாளுக்கு மேல பணத்தைக் கையில வெச்சுக்கிட்டு முதலீடு பண்ணாம இருக்க முடியாதில்ல.
அதாம் தப்பு. அந்த மனசைத்தான் முதல்ல சரி பண்ணணும்.
ஒரு மூணு மாசம் வரை கவனிப்பு. பிறகுதான்
முதலீடு. அந்த மூணு மாசம் கவனிக்கிறதுல்ல உங்களுக்கு எந்தெந்த துறையோட பங்குகள் நல்ல
நிலையில போயிக்கிட்டு இருக்கு, எந்தெந்த துறையோட பங்குகள் மோசமான நிலைக்குப் போய்ட்டு
இருக்குதுங்றது நல்லாவே தெரிஞ்சிடும்.
நல்லா போயிட்டு இருக்குறதுல மூணு அல்லது
அஞ்சு துறைகள மட்டும் தேர்ந்தெடுத்துக்கலாம். உதாரணத்துக்கு இப்போ பாருங்க ஆட்டோ
மொபைல் செக்டார், பினான்சியஸ் செக்டார், மெட்டல் செக்டார், எப்.எம்.ஜி. செக்டார்,
இன்ப்ராஸ்ட்ரக்சர் செக்டார் இதெல்லாம் கொஞ்சம் நல்லா போயிட்டு இருக்குறதா நான் நினைக்கிறேன்.
இதுல ஒண்ணு அல்லது ரெண்டு நல்லா போய்ட்டு
இருக்குற பங்குகள தேர்ந்தெடுத்துக்கிட்டு அதுல நம்மகிட்ட இருக்குற பணத்துல கால் பங்க
மட்டும் முதலீடு பண்ணணும்.
அதாவது நூறு ரூபாய் இருக்குதுன்னா இருபத்து
அஞ்சு ரூபாயா மட்டும் முதலீடு பண்ணணும். அதுக்கு எத்தனைப் பங்குக வாங்க முடியுமோ அவ்வளவு
மட்டும்தாம் வாங்கணும். அந்தப் பங்குகள வாங்குன உடனேயே அதாவது வாங்குன அன்னிக்கு பத்து
பெர்சென்டேஜ் ஏறுனா யோசனைப் பண்ணாதீங்க ஏறுன அந்த பத்து பர்சென்டேஜூக்கு எத்தனை பங்குகள்
வருமோ அதை மட்டும் வைத்துக் கொண்டு மீதியை வித்து எடுத்துடுங்க. இதைத்தாம் முதலீடு
டே டிரேட் ஆவுறதா நான் சொல்ல வந்தேன்.
ஆனா இந்த டே டிரேட் பண்றதுக்காக முதலீடு
பண்ணிடாதீங்க. இந்த மாதிரி சூழ்நிலை அத்திப் பூத்தாப்புல அபூர்வமாத்தாம் நடக்கும்னு
உங்களுக்குத் தெரியும். நம்ம முறையில இதுக்கான சாத்தியப்பாடு கொஞ்சம்தான். ஏன் இப்படின்னா...
அதாவது போட்ட காசை எடுத்திடுறீங்க. உங்க கைகாசு கைக்கு வந்திடுது. லாபம் வந்த காசுல
இருக்குற ஸ்டாக் அப்படியே இருக்கட்டும்.
அது இருபது பர்சென்டேஜ் லாபம் கொடுக்குறப்ப
அதுல கால்வாசிய வித்துடுங்க. மிச்சம் இருக்கற பங்குக அம்பது பர்சென்டேஜ் லாபம் கொடுக்குறப்ப
அதுல பாதிய வித்துடுங்க. நூறு பர்சென்டேஜ் லாபம் கொடுக்குறப்ப எல்லாத்தையும் வித்துட்டு
வெளியில வந்துடுங்க.
ரொம்ப லாபம்னு எதிர்பார்த்து வாங்குன
விலையை விட விலை இறங்க விட்டுடாதீங்க. எனக்குத் தெரிஞ்சி அப்படி உள்ளதும் போச்சே நொள்ளக்கண்ணான்னு
விட்டுட்டு நிக்குற நிறையப் பேரைப் பாக்குறேன். போட்ட காசு பத்து மடங்கு, நூறு மடங்கு
ஆவணும்ங்ற மனநிலைக்கு ஒரு கடிவாளத்தப் போட்டுக்கிறது நல்லது.
நீங்க ஒண்ணு பார்க்கணும், ஒரு பத்து ரூபாயைச்
சம்பாதிக்கிறதுக்கு நம்ம சமுதாயத்துல எவ்வளவு மணி நேரம் கஷ்டப்பட்டு, உடம்பு வருத்தி
உழைக்கிறாங்கன்னு. அந்த பத்து ரூபாய் அந்த அளவுக்கு கஷ்டப்படாம உடம்பு நோகாம வருதுன்னா
அதெ முதல்ல காபந்து பண்ணிக்கணும்ங்றத்தாம் பங்குச்சந்தையில இருக்குறவங்களுக்கு முக்கியமா
சொல்ல விரும்புறேன்.
நீங்க வாங்குன பங்குக பத்து பர்சென்டேஜ்
லாபத்தை உடனேயே கொடுக்கலையா! அது அந்த லாபத்தைக் கொடுக்கற வரைக்கும் மீனுக்காக காத்திக்கிட்டு
இருக்குற கொக்கு போல காத்துகிட்டுத்தாம் நீங்க இருக்கணும். அதுக்கு எவ்வளவு காலம்
ஆனாலும் காத்துகிட்டு இருங்க.
அதே நேரத்துல நீங்க தேர்வு பண்ண ஸ்டாக்
ஏறுறதுக்குப் பதிலா இறங்குதுன்னு வெச்சுக்குங்க அது இருவது பர்சென்டேஜ் இறங்கிறப்போ
நீங்க முதல்ல எத்தனை ஸ்டாக் வாங்குனீங்களோ அதுல பாதி எண்ணிக்கையில அதே ஸ்டாக்கை வாங்கிப்
போடுங்க. மறுபடியும் அம்பது பர்சென்டேஜ்க்கு கீழே இறங்குனா இன்னொரு பாதிய வாங்கிப்
போடுங்க.
அதுக்கு மேல நூறு பர்சென்டேஜ்க்கு மேல
இறங்குனா நீங்க தேர்வு பண்ண ஸ்டாக் சரியான ஸ்டாக் இல்லங்றது புரிஞ்சிக்கிட்டு அதுலேந்து
வெளியில வந்துடுங்க. இப்போ உங்களுக்கு நஷ்டம் ஆயிடும் இல்லையா! அதுக்காகத்தாம் ஒரே
ஒரு பங்குல நம்பி முதலீடு பண்ணாம, நீங்க மூணு பங்குலேந்து அஞ்சு பங்கு வரைக்கும் நல்ல
பங்குகளா ஒரு மாசம் கவனிச்சுப் பார்த்து வாங்கணும்.
ஒண்ணு அப்படி நஷ்டத்து உண்டு பண்ணாலும்
மத்த ஸ்டாக்குங்க காப்பாத்தி விடும். அதே நேரத்துல நாம்ம இப்போ கையில இருக்குற பணத்துல
கால் பங்குக்குத்தாம் முதலீடு பண்ணிருக்கிறோம். மீதி முக்கால் பங்கு பணம் கையில இருக்கு.
பங்குகள் விலை ஏறுனா நாம்ம சொன்ன முறையில
விக்கிறோம். இறங்குனா நாம்ம சொன்ன முறையில வாங்குறோம். இப்படி விலை இறங்கி இறங்கி
முதலீடு பண்றப்ப நம்ம கையில இருக்கற முதலீட்டுப் பணம் முக்கால் பங்குக்கு மேல முதலீடு
பண்ணியும் நஷ்டம் ஆயிட்டே இருக்குதுன்னா அதுக்கு மேல இருக்குற கால் பங்கு பணத்தை முதலீடு
பண்ணாம அது லாபம் தர்ற வரைக்கும் பொறுமையா காத்திருக்கணும்.
அவசரப்பட்டு கையில இருக்குற எல்லா பணத்தையும
முதலீடு பண்ணிடக் கூடாது. எப்போதும் நம்ம கையில கால் பங்கு பணம் இருக்க வேணும். நம்ம
கையில இருக்குற பணம் காலியாகிறப்பத்தாம் சில நல்ல பங்குக ரொம்ப விலை குறைஞ்சு அந்த
இடத்துல வாங்குனா நிச்சயம் லாபம் தரும்ங்ற நிலைக்கு வரும்.
அப்போ அது மாதிரியான பங்குகள வாங்க கையில
பணம் இருக்கணும் இல்லையா. அதுக்குத்தாம் எப்பவும் நம்ம கையில பணம் இருந்துகிட்டே இருக்கணும்.
எல்லா பணத்தையும் முதலீடு பண்ணிடக் கூடாது.
நாம்ம முதலீடு பண்ற பங்குக ரொம்ப ரொம்ப
நல்ல பங்கா இருக்கணும். எவ்வளவு அடிச்சாலும் தாங்குற பங்குகளா இருக்கணும். அது மாதிரியான
பங்குகள உங்களுக்குத் தேர்ந்தெடுக்குற கஷ்டமா இருந்தா கவர்மெண்ட் செக்டார் பேங்கிங்
பங்கு மட்டும் கூட போதும். அதுல அதுங்க விலை குறையுறப்ப நீங்க பாட்டுக்கு முதலீடு
பண்ணிக்கிட்டே இருக்கலாம்.
என்னோட கணிப்பு சரியா இருக்கும்னா நீங்க
பார்மா பங்குல சன் பார்மா, வோக்கார்ட், பினான்சியல் செக்டார்ல இண்டியா இன்போ, ஐ.பி.செக்.,
ஆட்டோமொபைல்ல அசோக்லெய்லண்ட், அட்வர்டைசிங்ச் செக்டார்ல டாடா எல்க்ஸி இதெல்லாம் நல்லா போவும்ணு எதிர்பார்க்கிறேன். இருந்தாலும்
நீங்க உங்களோட சுய முடிவுலத்தாம் இதையெல்லாம் வாங்கணுங்றத ஒரு வேண்டுகோளாவே கேட்டுக்கிறேன்.
எப்பவும் ரொம்ப லாபம் கிடைக்கணும்னு வாங்குன
பங்குகள விற்காமலே விட்டுட வேண்டாம். நீங்க போட்ட பணத்தை எடுத்துட்டு வேணும்னா இருக்கற
லாபத்துக்கு உள்ள பங்குகள நீங்க எவ்ளோ காலம் வேணாலும் வெச்சுக்குங்க.
அம்பது பர்சன்டேஜ்க்கு மேல லாபம் வந்தா
போட்ட பணத்தை எடுத்துட்டு லாபத்துல உங்க பங்குகள மட்டும் வெச்சுக்குங்க. அதுவும் நூறு
பர்சென்டுக்கு மேல லாபம் போறப்ப கணிசமா வித்து கொஞ்சம் பணத்தை எடுத்து வெச்சுக்குங்க.
வேற நல்ல பங்குல முதலீடு பண்றதுக்கு வெளியில எடுத்த அந்தப் பணம் ரொம்ப உபயோகமா இருக்கும்.
எப்போதும் பங்குச் சந்தையில ரொம்ப லாபம்
சம்பாதிக்கணும்னு ஆசைப்படாதீங்க. அந்த ஆசைத்தாம் எல்லாரையும் முழுங்கிடுது. நாம்ம எவ்வளவு
விலை குறைச்சலா ஒரு பங்கை வாங்கணும்னு நெனைக்கிறோமோ, அதே போலத்தாம் நாம்ம வாங்குன
பங்கு லாபத்துல இருக்குறப்ப அதை விக்குறப்ப அதை வாங்குறவரும் நினைப்பாரு இல்லையா! அதனால
நம்மகிட்டேயிருந்து வாங்குறவருக்குக் கொஞ்சமாவது லாபம் வர்ற அளவுக்கு உச்சபட்ச விலையில
விற்க நினைக்காம இருக்குறது கூட ஒரு வித தர்மமாத்தாம் நான் நினைக்கிறேன்.
நாம்ம யார்கிட்டேயிருந்தோ வாங்கித்தாம்
ஒரு பங்குல லாபம் பார்க்கிறோம். அது போல நம்மகிட்டேயிருந்து வாங்குறவரும் ஒரு ரூபாயாவது
லாபம் பார்க்குற விலைக்கு விற்குறது ஒரு வித மனோதர்மம்தான். இந்தத் தர்மம் நமக்கு
உதவும். ரொம்ப லாபத்துக்கு ஆசைப்பட்டு காத்திருந்து உள்ளதும் போச்சேன்னு விட்டுடாம
ஓரளவுக்கு நமக்குத் தேவையான லாபம் வந்ததும், நம்மகிட்டேயிருந்து வாங்குறவரும் லாபம்
பார்க்கட்டும்னு விற்குறதுக்கான மனநிலையை உண்டு பண்ணிடும்னு நினைக்கிறேன்.
எனக்குத் தெரிந்த வரையில இங்க இன்னும்
லாபம் வரும் வரும்னு ரெண்டு மடங்கு மூணு மடங்கு லாபம் வந்த பங்குகளை விற்காமலே வெச்சிருந்து
அது பிற்பாடு வாங்குன விலையை விட விலை குறைஞ்சுப் போயி விற்காம விட்டுட்டோமோன்னு
ஏமாந்துப் போனவங்கள நிறையப் பேரைப் பாத்திருக்கிறேன்.
நான் திரும்ப திரும்ப இதையே சொல்றேன்னு
நினைக்காதீங்க. பங்குச்சந்தை எவ்வளவு மோசமா முதலீடு பண்றவருக்கு கொஞ்சமாவது லாபத்தைக்
கொடுக்கத்தாம் செய்யுது. அந்த லாபத்தை அவங்க ரொம்ப பேராசைப்பட்டு எடுக்காம விட்டுறாங்க.
அப்படித்தான் நிறைய பேரை பார்க்குறேன். அப்படி ஒரு நிலை வராம இருக்குறதுக்கு மனோதர்ம
மனநிலை முறை உதவும்னு நினைக்கிறேன்.
பங்குச் சந்தையைப் பொருத்த வரையில மனநிலையைத்தான்
நான் முக்கியமா நினைக்கிறேன். நல்ல பங்கு விலை எறங்கி வர்றப்ப பயப்படாம தைரியமா வாங்குறதும்,
அதே நல்ல பங்கு நல்ல விலையேறி லாபம் கொடுக்குறப்போ பேராசைப்படாம மனகட்டுபாடோட விக்குறதும்தாம்
முக்கியம்.
எனக்குத் தெரிந்த வரையில நாலு வருஷ அனுபவத்துல
பங்குச் சந்தை யாரையும் ஏமாத்தல. எல்லாருக்கும் கொட்டிக் கொடுக்க அது தயாராவே இருக்குது.
நாம்ம நம்ம அளவுக்கு அதுலேந்து எவ்வளவு எடுத்துக்கலாம்னு முடிவு பண்ணிட்டா அது உங்களுக்கு
நீங்க எதிர்பார்க்கிறத விட அளவுக்கு அதிகமாக அள்ளிக் கொடுக்கவே தயாரா இருக்குது.
மொத்த பங்குச் சந்தையையும் லாபத்துல சுருட்டணும்னு
நினைக்கிறவங்கத்தாம் இங்க மொத்தமா சுருண்டு போயிடுறாங்க. பங்குச் சந்தையில பொருத்த
மட்டுல லாபத்துல மிதப்போ, நஷ்டத்துல தளர்வோ தேவையில்ல. சரியாத்தாம் நாம்ம முதலீடு
பண்ணி இருக்கிறோம்னா தைரியமா காத்திருக்கலாம். நாம்ம தேர்வு பண்ணி முதலீடு பண்ணிருக்கிற
அஞ்சுல ரெண்டு சரிஞ்சாலும் மிச்சம் மூணு அந்தச் சரிவையும் சரிகட்டி லாபத்தை நிச்சயம்
அள்ளிக் கொடுக்கும்.
பங்குத் தேர்வுல உங்களுக்கு குழப்பம் இருந்தா
தைரியமா பேங்கிங்ல ஒண்ணு, பார்மாவுல ஒண்ணு, ஆட்டோமொபைல்ல ஒண்ணுன்னு மட்டும் தேர்வு
பண்ணுனா கூட போதும்.
கடைசியா லாபத்தை வெளியில எடுக்க மறக்க
வேணாம். மொத்த பணத்தையும் முதலீடு பண்ண வேணாம். முக்கியமா கடன் வாங்கியெல்லாம் முதலீடு
பண்ணவே வேணாம். கையில இருக்குறதுல குடும்பச் செலவெல்லாம் போக மிச்சமா இருக்குற உபரியான
பணத்தை மட்டும் முதலீடு பண்ணா நிச்சயம் இதுலேந்து லாபம் பார்க்க முடியும்னுத்தாம் நினைக்கிறேன்.
பையில பத்து ரூவாய வெச்சுகிட்டு செலவு
பண்ணா எவ்வளவு காசு செலவாகுது, செலவு போக பையில எவ்வளவு வருதுங்றது எல்லாம் தெரியும்.
சந்தையில அப்பிடி இல்ல. எல்லாம் டிஜிட்டல் மணியாவுல போவுது வருது.
பையில பணம் இருக்குறப்ப இருக்குற கவனமும்,
விழிப்பும் அதாவது அந்த கான்ஷியஸ் இதுல இருக்காதுன்னுத்தாம் நினைக்கிறேன். இங்க இருக்குறவங்கள
வெச்சு இதைச் சொல்றேன். கையில காசைப் பார்த்தாத்தாம் அது பத்தின கான்ஷியஸ் வர்றதுங்றதால
சந்தையிலயே காசை விட்டு வைக்காம அதை அப்பைக்கப்போ செக் போட்டு பணத்தைக் கையில வாங்கிப்
பாருங்க. அதை உங்களுக்கு, குடும்பத்துக்குச் செலவு பண்ணுங்க.
இங்க லட்ச ரூபாய் லாஸ் ஆனாலும் உங்க டீமேட்
அக்கெளண்ட்லேந்து ஆட்டோமேடிக்கா டெபிட் ஆகுது. கோடிக்கணக்குல லாபம் வந்தாலும் அது
ஆட்டோமேடிக்கா கிரெடிட் ஆவுது. பணம் கையில இருக்குறப்ப இருக்குற கான்ஷியஸூம், இப்படி
கணக்குல வந்து போயி, போயி வர்றப்ப இருக்குற கான்ஸூசயஸூம் நிச்சயம் வேறத்தான்னு நினைக்கிறேன்.
அதுவே உங்க கையால பணமா கொடுத்து வாங்குனா அது தர்ற கான்ஷியஸே தனித்தாம்.
உங்களுக்கு இந்தத் தகவல்கள் ரொம்ப உபயோகமா
இருக்கும்னு நினைக்கிறேன். இந்த வாய்ப்பை எனக்கு அளித்த எங்க ஆபீஸ் நிர்வாகத்துக்கும்,
என்னை எப்படியோ பேச வெச்சிட்ட மேனேஜர் லெனினுக்கும் இந்த நேரத்துல நன்றி தெரிவித்து
விடைபெத்துகிறேன். நன்றி!" ன்னு விகடு பேசி முடிச்சதும் இவ்வளவு நேரமெல்லாம் நீ
பேசுவியாங்ற மாதிரி பாக்க ஆரம்பிச்சிட்டாங்க தொண்டாமுத்தூர் வாடிக்கையாளருங்களோட,
லெனின், கோபி, சுபா எல்லாரும். பேசிட்டு இருந்த மைக்கை விட்டு இந்தாண்டா வந்தா எல்லாரும்
விகடுவை ஆச்சரியமா பாக்குறாங்களா, வேடிக்கையா பாக்குறாங்களான்னு தெரியல.
"ன்னா தல போற போக்கைப் பாத்தா நம்மகிட்டேருந்து
பிரிஞ்சிப் போயி தனியா ஆபீஸே போட்டுடுவீங்க போலருக்கே! பொளந்து கட்டிப்புட்டீங்க
தல!" அப்பிடிங்கிறாரு லெனின்.
"நாலு வருஷமா மார்கெட்டுல இருந்துகிட்டு
இது கூட பேசலன்னா எப்பிடி?" அப்பிடிங்றான் விகடு.
"அதாங் எப்பிடிங்றேம்?" அப்பிடின்னு
கலாய்க்கிறார் கோபி.
"சிம்ப்ளி சூப்பர்ப் விகடு. நீயி
இவ்ளவுல்லாம் பேசுவீயா? ஒண்டர்புல்!" அப்பிடிங்கிது சுபா.
"இப்டில்லாம் கலாய்ப்பீங்கன்னு தெரிஞ்சா
மைக்கைப் பிடிச்சிருக்கவே மாட்டேன்!" அப்பிடிங்கிறான் விகடு. இவுங்க இப்படி பேசிக்கிட்டு
இருக்கிறப்பவே கிளையண்ட்ஸ் கூட்டத்திலேர்ந்து எழுந்து வந்து,
"ஹல்லோ மிஸ்டர் மை விகடு பாய்! எங்க
இருக்கீங்க? எப்படி இருக்கீங்க? உங்கள எங்கல்லாம் தேடுறது? எங்கெங்கேயோ போயி கடைசியில
உங்கள இங்க பார்ப்பேன்னு நான் எதிர்பாக்கல!" என்று சொல்லிக் கொண்டே கையை நீட்டுகிறார்
புரபஸர் மாலிக் சார்.
*****
No comments:
Post a Comment