20 Dec 2019

மச்சு ஓட்டு கூரை வூடு!



செய்யு - 304

            வூடுங்றது ஒருபோதும் நெறைவு அடையறது கெடையாது. கட்ட கட்ட அது பாட்டுக்கு விரிவடைஞ்சுகிட்டே போவும். எவ்வளவு கட்டுனாலும் எடம் பத்தலைன்னு தோணுறது அந்த வூட்டுல இருக்குற சம்சாரிகளோட குணம். அந்த வகையில வூடுகளுக்குன்னுப் பொதுவா ஒரு டிசைனப் போட்டாலும் கட்டி முடிச்சப் பெறவு அந்த வூட்ட அங்க இழுத்து, இங்க இழுத்துக் கட்டி ஒவ்வொரு வூட்டையும் பாக்குறப்ப ஒவ்வொரு வூடும் ஒவ்வொரு வகைதாம். ஒலகத்துல ஒருத்தரோட கைரேகை போல இன்னொருத்தரோட கைரேகை இருக்காதுன்னு சொல்றாங்க இல்லையா! அதே போலத்தான் ஒருத்தரோட வூடு போல இன்னொருத்தரோட வூடு இருக்காது. ஒரு ரெண்டு பேருக்கு ஒரே மாதிரியா வூட்டைக் கட்டிக் கொடுத்தாலும் அவுங்க அந்த வூட்டுல அப்பிடி இப்பிடின்னு சில மாத்தங்களைப் பண்ணி ரெண்டு வூட்டையும் ரெண்டு விதமாப் பண்ணிப்புடுவாங்க. அப்படி மறுக்கா மறுக்கா மாறுதல உண்டு பண்ணு வேலையி மறுக்கா மறுக்கா எறங்க ஆரம்பிச்சாரு சுப்பு வாத்தியாரு.
            கேஸ் அடுப்புல சமைக்குறப்ப சமையலு சீக்கிரமா முடிஞ்சிடுது, சமையலும் ரொம்ப எளிமையா போயிடுது. எதுக்கும் மெனக்கெட வேண்டியதோ, காத்திருக்கணும்னோ அவசியமில்லாம போயிடுது. இந்த அடுப்பு வர்றதுக்கு முன்னாடி நெலமை அப்படியில்ல. வெறவுக்காக பொண்டுக அலைஞ்சிருக்கிற அலைச்சலு கொஞ்ச நஞ்சமில்ல. கொஞ்சம் வசதியான குடும்பத்துலத்தாம் அந்த குடும்பத்து ஆம்பளைக சவுக்கை வெறவ வாங்கியாந்து போடுவாக. அப்படி வாங்கியாந்து போடுறதால அதுலேயா சமைச்சிக்கிட்டுக் கெடக்கணும்னு அந்தக் குடும்பத்து பொண்டுகளும் கெடைக்கிற வெறவுகள அங்க இங்கன்னு தேடி வைச்சுக்குங்க.
            இப்போ திட்டைத் தெருவுல எல்லா பொண்டுகளுமே கிட்டதட்ட கேஸ் அடுப்பு சமையலுக்கு மாறிப் போச்சிடுங்க. முன்ன மாதிரி யாரும் கருவ வெறவை வெட்டிக் காயப் போட்டு, காட்டாமணக்கு அலம்பகளை ஒடைச்சி சேகரிச்சு வெச்சோ அடுப்பு எரிக்கிறதில்ல. இருந்தாலும் கொல்லையில வுழுவுற மர மட்டைகள என்னா பண்றது? அதுவும் வூட்டக்கு நாலு தென்னை மரம் இருந்துட்டா போதும் அதுலேந்து விழுவுற மட்டைக, பாளைக, பன்னாடைக இருக்கே. இந்த ஊர்ல எடத்தைச் சும்மா போட்டா கருவக்காடும், சவண்டல் மரமும் அது பாட்டுக்கு உரம் போட்டு வெளைவிச்ச மாதிரில்ல வளரும்! என்னத்தாம் சும்மா போட்ட எடமா இருந்தாலும் வருஷத்துக்கு ஒரு தடவையாவது அதெ சுத்தம் பண்றப்ப அது பாட்டுக்கு மர மட்டைக பெரிய குமுட்டா தேங்க ஆரம்பிச்சிடுது.
            சுப்பு வாத்தியாரு வூட்டுல அப்படி தேங்குன மர மட்டைகள வெச்சி சுப்பு அவரே செங்கல்லை அடுக்கி வெச்சி அடுப்பைப் போட்டு நெல்லை அவிக்கிறதுக்குன்னே வாங்கி வெச்சிருக்கிற பெரிய அலுமினிய குண்டான்ல போட்டு அவிச்சி ஆவாட்டுவாரு. அப்படி மாசத்துக்கு ஒரு முறை அவிச்சி ஆவாட்டுனாலும் அது போக தேங்குன மர மட்டைகளோட குமுட்டு அப்படியேத்தாம் இருந்திச்சி. இப்படி வெறவுக வதையழிஞ்சி வீணாப் போவுதுன்னே வெங்கு அந்த வெறகுகள வெச்சி எரிக்கிறதுக்காக வூட்டுக்குப் பின்னாடி கொஞ்சம் கீத்து அடைப்பை வெச்சி அங்க வெறவு அடுப்பைப் போட்டுக்கிடுச்சி. உள்ளார ஓட்டுக் கட்டுமானத்துல இருக்குற கேஸ் அடுப்புல கொழம்பு, கறிகாய்களைச் சமைச்சிக்கிட்டே வெளியில இருக்குற வெறவு அடுப்புல உலைய கொதிக்க வெச்சி அரிசிய கலைஞ்சிப் போட்டுட்டு வந்துடும். இப்படி சோத்துச் சமையலுக்கு வெளியில இருக்குற வெறவு அடுப்புன்னும், கொழம்பு கறிகாயி சமையலுக்கு உள்ளே இருக்குற கேஸ் அடுப்புன்னும் ஆயிப் போச்சி. இதெ பாத்துட்டு இருந்த சுப்பு வாத்தியாருக்கு அடுத்த வூட்டை விரிவு பண்ணுற யோசனை வராம இருக்குமா? அப்படி வராம இருந்தாத்தானே ஆச்சரியம்!
            சுப்பு வாத்தியாருக்கு வூட்டை விரிவு பண்ற யோசனை வந்துட்டா போதும் நேரா இருக்கிற மூங்கிக்குச்சிகள தோது பண்ணிக்கிட்டு அளவுக்குச்சிகளத் தயாரு பண்ணிக்குவாரு. அவரோட கையை மடக்கி ரெண்டு கையிலயும் இருக்கிற கட்டை வெரலை மட்டும் நீட்டி வெச்சி ஒட்டுனா அது ஒரு அடி கணக்கு. அப்படி ரெண்டு கையையும் வெச்சி அளவெடுத்து ஆறடிக் குச்சியையும், பன்னெண்டு அடிக் குச்சியையும் தயாரு பண்ணிக்குவாரு. அந்த குச்சிகள வெச்சி ஒரு பத்து நாளைக்கு இப்படி அப்படின்னு வூட்டைச் சுத்தி அளந்துகிட்டு இருப்பாரு. ஏன் அளக்கிறாரு எதுக்கு அளக்குறாருங்ற வெசயத்தை எல்லாம் சொல்ல மாட்டாரு. அவரு பாட்டுக்குக் காலையிலயும் சாயுங்காலத்துலயும் ஒரு விஞ்ஞானி ரேஞ்சுக்கு அளந்துக்கிட்டும் யோசனைப் பண்ணிக்கிட்டும் கெடப்பாரு. அப்படி அளக்க ஆரம்பிச்சிட்டார்ன்னா வூட்டுல எதையோ பண்ணப் போறார்னு அர்த்தம். என்ன பண்ணப் போறார்ங்றத ராணுவ ரகசியத்த போல வெளியில சொல்ல மாட்டாரு. அவரு செய்ய ஆரம்பிக்கிறப்பத்தாம் எதுக்காக அளந்தாரு, என்ன பண்ணப் போறார்ங்றது தெரியும்.
            அளவுகுச்சியை வெச்சி அளக்க ஆரம்பிச்ச ரெண்டு வாரத்துல சுப்பு வாத்தியாரு நானூறு தென்னங்கீத்துகளையும், கொஞ்சம் மூங்கிலுகளையும், கயிறு, பாளைகளையும் ஒரு டாட்டா ஏஸ்ல கொண்டாந்து எறக்கிட்டாரு. அதெ பார்த்ததுமே ஊரு சனத்துக்கு விசயம் புரிஞ்சிப் போச்சி வூட்ட விரிவு பண்ற வேலையில எறங்கிட்டாரு சுப்பு வாத்தியாருன்னு.
            "ஏய் யய்யா நீயி கட்டி வெச்சிருக்குற வூட்ட ஒரு நாளைக்கு குனிஞ்சி நிமுந்து கூட்டுறதுக்குள்ள இடுப்பு ஒடிஞ்சிப் போயிடுது. இதுக்கு மேல இன்னும் வூட்டை பெருக்கிட்டுப் போனா கூட்டிப் பெருக்குற வேலையயெல்லாம் யய்யா நீந்தாம்யா பாத்தவுணும். நம்மால முடியா!" அப்பிடினிச்சி இதெ பார்த்த வெங்கு.

            "வெறவு அடுப்ப ஒரு சாய்ப்பா வெச்சிக்கிட்டு ஏஞ் செரமபட்டுக்கிட்டு கெடக்குறே? அங்க ஒரு கீத்துக் கொட்டாய்யா போட்டுக்கிட்டா அங்க உக்கார கொள்ள செளகரியமா இருக்கும் பாரு. ஒரு மழைத்தண்ணி பெய்யுறப்போ எந்த செரமும் இருக்காது பாரு! அதாங் அங்க ஒரு கொட்டாய போடலாம்னு முடிவு பண்ணிட்டேம்!" அப்பிடிங்கிறாரு.
            "யய்யோ எஞ் சாமி! நமக்கு எந்த வரத்தையும் நீயித் தர வாணாம். நாம்ம என்னவெதமான கஷ்டப்பட்டாலும் பரவாயில்ல. நாம்ம அதுலயே சமைச்சிக்கிறேம். கொட்டாயி மட்டும் வாணாம். ஊருல பாக்குறவம்ல்லாம் சிரிக்கிறாம் ஒம்மட வூட்டுக்காரரு பாட்டுக்கு வூட்ட இழுத்துக்கிட்டே போறார்ன்னு. ஏம்யா கட்டுறது நீயி! ஊருல சிரிப்புக்கு ஆளாவுறது நாமளா? என்ன ஆனாலும் செரித்தாம். இந்த வாங்கியாந்த கீத்தும், மூங்கிலும் கறையாம் புடிச்சி வீணாப் போனாலும் சரித்தாம் இனுமே இந்த வூட்டுல எந்தக் கொட்டாயையும் போட வுட மாட்டேம்!" அப்பிடின்னு ஒத்தக்கால்லுல் நின்னுபுடிச்சி வெங்கு. இது போல எத்தனை அழிச்சாட்டியங்கள பாத்தவரு சுப்பு வாத்தியாரு! இதுக்கா கலங்குவாரு அவரு? அவரு பாட்டுக்கு பிலாக்கணத்த எடுத்து விட ஆரம்பிச்சாரு.
            "இந்தாரு பத்தாயத்தெ தூக்கிப் புதுசா கட்டுனா ரூமுக்குள்ள வெச்சா அந்த ரூமுக்குள்ள வேற எதாச்சிம் பொழக்கம் இருக்கா? அத்து ஒண்ணே ரூமை அடைச்சிக்கிட்டு கெடக்கு. இஞ்ஞ கொட்டாயைப் போட்டுக்கிட்டா அதெ தூக்கி இஞ்ஞ வெச்சிப்புடலாம். ரூமு பொழக்கமாப் போயிப்புடும். ஒம் மவ்வேம் ஒரு ரூமை எடுத்துக்கிட்டு அதுல அடைஞ்சிக் கெடக்கறாம். ஒம் பொண்ணு ஒரு ரூம எடுத்துக்கிட்டு அதுல படிச்சிக்கிட்டுக் கெடக்குது. நீயி அந்தப் பத்தாயத்து ரூமை எடுத்துக்கலாம்!"ன்னு தூண்டிலைப் போட்டாரு சுப்பு வாத்தியாரு.
            "இந்தாரும்யா! நமக்கு ஒரு ரூமும் வாணாம். இருக்கற எடத்துல ஒண்டிக்கிட்டு நாம்ம பாட்டுக்குக் கெடந்துப்பேம். பத்தாயத்த வைக்கணும்னு சொல்லித்தாம்யா நீரு அந்த ரூமைக் கட்டுனீரு. இப்ப என்னான்னா அந்த ரூமெ பத்தாயம் அடைக்குதுன்னு சொல்லி பத்தாயத்துக்குக் கொட்டாய்ன்னா ன்னா அர்த்தம்? பெறவு இந்தக் கொட்டாயையும் அத்து அடைக்குதுன்னு மறுக்கா பின்னாடி இன்னொரு கொட்டாயைக் கட்டுவீரோ? இப்படியே சொல்லிச் சொல்லிக் கொட்டாயி மேல கொட்டாயி கட்டிட்டுப் போனாக்கா வூட்டை பாக்க முடியுதா? வூட்டுல இருக்குற பொம்பளைக பாடுத்தாம் பெரும்பாடா இருக்குது. எடம் கொஞ்சமா இருந்தாலும் அதெ சுத்த பத்தமா நறுவிசா வெச்சிக்க வாணாமா? இப்படியா கலியாண மண்டபத்துக் கணக்கா வூட்டை பெருக்கிட்டுப் போனா யாரு சுத்த பத்தம்லாம் பண்ணுறது? அந்தப் பயெ ஆபீஸ் அபீஸ்னு காலையில கெளம்பிப் போனா சாயுங்காலந்தாம் வர்றாம். வூட்டுல குனிஞ்சி நிமுந்து ஒரு வேலைய பாக்குறானா? இந்தக் குட்டி படிக்கிறேம் படிக்கிறேம்னு ஒரு வேலையப் பாக்குறாளா? நீயி பள்ளியோடத்துக்கு ஒழைக்கிறேம் ஒழைக்கிறேம்னு பள்ளியோடத்துல வெச்சி எழுத வேண்டியதை எல்லாத்தையும் வூட்டுல மூட்டைக் கட்டி கொண்டாந்து வெச்சி எழுதுறே! அதுக்கு எடையில கொஞ்சம் நேரம் கெடைச்சா போதும் வூட்டை இப்படி இழுத்துக்கிட்டுப் போறதுல நிக்குறே? ஒத்த பொம்முனாட்டியா இருந்து நாம்ம எத்தனை வேலையப் பாக்குறது? எத்தனைய சமாளிக்கிறது? அலுத்துப் போவுதுய்யா! ஒமக்கு நேரம் இருந்தா இன்னம் நாலு பள்ளியோடத்துலேந்து எதாச்சிம் நோட்டுகள வாங்கி வெச்சி எழுதும்யா! வூட்டை இழுத்துக் கட்டுறதுல நிக்காதேம்யா! நம்மால முடியல! நொம்பலப் படுறதுக்கும் ரோதனைபடுறதுக்கும் ஒடம்புல உசுரத் தவிர ஒரு மண்ணும் இல்ல!" அப்பிடின்னு பொலம்ப ஆரம்பிச்சிடுத்து வெங்கு.
            "இந்தா நாம்ம இன்னும் ரண்டு வருஷத்துக்குள்ள ரிட்டையர்டு ஆவப் போறேம். பெறவு வூட்டை யாரு பாத்துக்கப் போறா? ஒமக்கு ஒரு வேலையும் இல்லாம நாம்மதானே பாத்துக்கப் போறேம்! பெறவு ன்னா கவலை ஒனக்கு? பேயாம இரு. இந்தக் கொட்டையா போட்டாக்காத்தாம் வூடு ந்நல்லா பொழக்கமா இருக்கும். வூடுன்னா இப்பிடியா அடைசலா கெடக்குறது. அஞ்ஞ இஞ்ஞ பாத்தாக்கா தட்டுமுட்டு சாமானுகளா கெடக்குங்க. இந்தக் கொட்டாயப் போட்டாக்கா அத்து எல்லாத்தையும் கொண்டாந்து இதுல போட்டுப்புடலாம். வூடுன்னா விருத்தியாகணும். அதுதாம் வூடு. கட்டுனது அப்படியே இருந்தா அது வூடா ன்னா? கட்டுனதிலேந்து வூடு வளரணும் புரிஞ்சிக்கோ!" அப்பிடிங்கிறாரு சுப்பு வாத்தியாரு.
            "யய்யோ அய்யனாரப்பா இந்த மனுஷனோட கெடந்து ரோதனைப்பட நம்மாள முடியாதுப்பா! சொல்றதத்தாம் சொல்றாரே தவுர ஒரு மனுஷி சொல்றாளேன்னு மருவாதிக் கொடுத்து சரித்தாம்னு சொல்றாரா பாரு! எல்லாந் எந் தலையெழுத்து! எங்கப்பம் ஒரு வாத்திக்குக் கட்டி வெச்சி நாம்ம இப்படிக் கெடந்து சின்னாபின்னாபடணும்னு எந்த தலையுல எழுதி வெச்சிருக்கு! இந்தாரும்யா நீயி ன்னா வேணும்னா பண்ணிக்கோ! எதெ வேணும்னா பண்ணித் தொலைச்சிக்கோ! அந்தப் பயலுக்கும் வயசாயிட்டே போவுது. அவனுக்கு ஒரு கல்யாணத்த பண்ணி வெச்சி ஒரு மருமவள கொண்டாந்து வெச்சிப்புட்டு ன்னா வேணாலும் பண்ணித் தொலைச்சிக்கோ. பெறவு நீயாச்சி ஒம் மருமவளாச்சி. அது பாட்டுக்கு வூட்டைப் பாத்துக்கும். நமக்கு ஒரு தொல்லையும் இருக்காது. இன்னும் ரண்டு வருஷத்துல ரிட்டையர்டு ஆவப் போறேம்னு ஒரு வருத்தம் இருக்கா? ன்னத்த பண்ணி வெச்சிருக்கிறேய்யா நீயி? வூட்டைத்தாம் இழுத்து இழுத்து கட்டி வெச்சிருக்கிறே? மருமவ்வே ஒருத்தி வந்து இப்பிடி வூட்டைக் கட்டி வெச்சி அதுக்கு வேலைக்காரியாத்தாம் என்னயக் கட்டி வெச்சியளான்னு வந்து கேள்விக் கேட்டாத்தாம்யா நீயெல்லாம் அடங்குவே!" அப்பிடிங்கிது வெங்கு.
            "அதாம்! அதுக்குத்தாம் இந்தக் கொட்டாயைப் போடணுங்றேம். அவ்வேம் பயலுக்குக் கல்யாணம் ஆயி ஒரு குடித்தனம் ஆனான்னா பொழக்கம் பத்துமா நீயே சொல்லு? வர்ற ஆயி நமக்குச் சோறு போடுதா ன்னான்னு வேற தெரியல? அத்து போட்டா ன்னா? போடாட்டியும் ன்னா? நாம்ம பாட்டுக்கு இந்தக் கொட்டாயில கெடந்து சமைச்சித் தின்னுப்புட்டுக் கெடந்துக்கலாம்னுத்தாம் இந்தக் கொட்டாயைப் போட்டுப்பேங்றேம்!" அப்பிடிங்கிறாரு சுப்பு வாத்தியாரு.
            "நீயில்லாம் புடிச்ச முயலுக்கு மூணு கால்னு நிக்குற ஆளும்யா! ஒங்கிட்ட பேசி எம்மட வாய்க்கு ஆவுமோ? அஞ்ஞன இஞ்ஞன பேசி எந்த எடத்துக்கு வரணுமோ அந்த எடத்துல வந்துத்தாம்யா நிப்பே! எந்தக் கதியோ போ! எந்தக் குட்டிச்சுவருல்லயோ போம்யா! ஒம்மல்லாம் திருத்த முடியா! ன்னா வேணாலும் பண்ணித் தொலைச்சிக்கோ! இதெப் போயி நாம்ம சொல்ல வந்தேம் பாரு அய்யனாரப்பா! ஒங் காலடியில வந்து முட்டிக்கிட்டாம் நமக்கு நல்ல புத்திக் கெடைக்கும்!" அப்பிடிங்கிது வெங்கு.
            இதுக்கு மேல வெங்கு எதுவும் பேசாதுங்றது சுப்பு வாத்தியாருக்குத் தெரியும். பெறவு என்ன? அவரு பாட்டுக்குக் கொட்டாயைப் போடுற வேலைய ஆளுகள வெச்சி ஜரூரா ஆரம்பிச்சிட்டாரு. செயராமு பெரிப்பா மொத மொதலா கூரை வூட்டக்குப் போட்ட உள்கூடு இருக்குல்ல. அதைத்தாம் அப்படியே தூக்கி மாட்டுக் கொட்டாய்க்கு மாத்தி வெச்சாங்கங்றது ஒங்களுக்கு ஞாபவம் இருக்கும். இப்போ மாடில்லாத அந்தக் கொட்டாயி சும்மாத்தானே கெடக்குது. இப்போ அந்தக் கொட்டாயைத் தட்டி விடலாம்னு முடிவு பண்ணி அந்த கொட்டாயி உள்கூட்ட அப்படியே தூக்கி வீட்டுக்குப் பின்னாடி கட்டப் போற கொட்டாயிக்கு ஒக்கப் பண்ணி அங்க இங்க கொஞ்சம் மூங்கில வெச்சி கட்டி வேல ஆயிடுச்சி. அதுக்கு மேல கீத்தப் போட்டு கொட்டாய ரெண்டே நாள்ல தயாரு பண்ணிப்புட்டாரு சுப்பு வாத்தியாரு.
            இப்போ நீங்க வூட்டைப் பாக்கணுமே! முன்னாடி மச்சு, அதுக்குப் பின்னாடி ஓடு, அதுக்குப் பின்னாடி மச்சு, அதுக்குப் பின்னாடி கூரைன்னு ஒரு வூட்டுலயே மச்சு, ஓடு, கூரைன்னு மூணு விதமா கலந்த கலப்பின வூடா அது தெரியுது.
            பெறவு கொட்டாயி போட்ட அந்த எடத்துக்கு கடவு எடுத்து செங்கல்ல சுவரு நாலடிக்கு வெச்சி, நாலடிக்கு மேல தட்டியை தயாரு பண்ணி வெச்சி, அதுக்கு மேல கூரைக்குத் பலமான தாங்கல் வேணும்னு சுவத்திலேந்து ஜி.ஐ. பைப்புல  கொட்டாயை நிறுத்தி அதெ ஒரு பக்கா வூடு அளவுக்குத் தோது பண்ணிட்டாரு. அந்தக் கொட்டாயோட மேக்கால நின்னு கிழக்கால பாத்தாப்புல பத்தாயம் நிக்குது. பத்தாயத்துக்கு தெக்கால இருக்கற இடைவெளியில தட்டுமுட்டுச் சாமானுங்க கெடக்குதுங்க. பத்தாயத்துக்குக் கெழக்கால நாலு கட்டில போட்டுப் படுக்குற அளவுக்கு எடம் இருக்கு. அந்த எடம் மட்டும் கோடைக்காலத்துல வூடே புழுங்கி அவியிற நேரத்துல ச்சும்மா குளுகுளுன்னு இருக்குது. கூரைக்கொட்டாயோட சிறப்பே அதுதானே. கொடைக்காலத்துல குளுகுளுன்னு இருக்குறது, குளிரு காலத்துல வெதுவெதுப்பாவும் இருக்கும். அந்த எடம் ரொம்ப பிடிச்சிப் போயி அங்கத்தாம் சுப்பு வாத்தியாருக்குப் படுக்கை ஜாகைன்னு ஆயிப் போச்சு. அந்த அவரு படுத்துக் கெடக்குற அதெத் தாண்டித்தாம் கெழக்கால வெறவு அடுப்பு இருக்குது.
*****


No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...