20 Dec 2019

23.0



            அகல் இலக்கியக் கூடலின் நான்காவது கூட்டம் வில்சன் அண்ணன் வீட்டுக்கு எதிரே கட்டப்பட்டிருக்கிற பி.என். திருமண மண்டபத்தில் நடக்கிறது. அந்த மண்டபத்தில் நடக்கிற முதல் கூட்டம் அது. கூட்டம் எட்டு மணி வாக்கில் தொடங்குகிறது.
            கூட்டம் நடைபெற்ற காலம் மார்ச் மாதத்தின் ஒரு நாள் 2012 ஆம் ஆண்டு ஆகும்.

            விகடு முதல் பேச்சாளனாக அழைக்கப்படுகிறான். அவன் பேசுகிறான், "இந்தியாவில் அரசியல்வாதிகள் அனைருக்கும் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். முதலில் நம் நாட்டில் எழுத்தறிவு பெற்றவர்களாக மாற்றப்பட வேண்டியவர்கள் அவர்கள்தாம். அவர்களுக்குத் தினம் தினம் வரும் குற்றப்பத்திரிகைகளைப் பார்க்கையில் அவர்கள் எழுத்தறிவு இல்லாமல் இருந்தால் எப்படி அவற்றை வாசிப்பார்கள்?
            இந்த அரசியல் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் உலகத்தைப் பற்றிப் பேசுவோம்! நாம் இந்த உலகத்தை ரொம்பவே‍ வெறுப்பேத்திக் கொண்டிருக்கிறோம். அதாகப் பட்டது சூடேற்றிக் கொண்டிருக்கிறோம். இப்படியே இந்த வெப்பம் அதிகமாகிக் கொண்டே போனால் இந்தப் பூமி இன்னொரு சூரியனாகி விடும். அந்தப் பூமிச் சூரியனுக்கு இன்னொரு பூமி எங்கிருக்கும்?
            இந்தப் பூமிப் பிரச்சனையும் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் நாம் சமகாலத்தின் மின்சாரப் பிரச்சனைக்கு வருவோம். முன்பெல்லாம் மின்சாரத்துக்கு இடையே மின்வெட்டு இருக்கும். இப்போது மின்வெட்டுக்கு இடையேத்தாம் மின்சாரம் இருக்கிறது. தாமஸ் ஆல்வா எடிசன் மிகவும் சிரமப்பட்டு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகள் செய்து மின்சார பல்பைக் கண்டுபிடித்தார். நாமோ எந்த ஆராய்ச்சியையும் பண்ணாமல் மின்வெட்டைக் கண்டுபிடித்திருக்கிறோம். இது என்ன கொடுமையோ ஐயா!
            நான் பெரிய மனித ரீதியில் பெரிய பெரிய பிரச்சனைகளைப் பேசிக் கொண்டிருப்பதாக நினைக்க வேண்டாம். சிறுபிள்ளைத்தனமாக பிரச்சனையைப் பேசுவதாக இருந்தால் காயா? பழமா? பற்றிப் பேச விரும்புகிறேன்.
            சிறு பிராயத்தில் சிநேகிதர்களோடு எந்நேரமும் சண்டைதாம். கொஞ்ச நேரத்தில் மனது மாறி யாரிடம் சண்டை பிடித்தேனோ அவனிடமே அவனை நோக்கி மனது ஓடிக் கொண்டிருக்கும். அவனிடம் அடிக்கடி ஓடிப் போய், 'காயா? பழமா?' என்று மூச்சுக்கு முந்நூறு முறை கேட்டு விடுவதுண்டு. அவன் பழம் விட்டால் மனது தித்திக்கும். காயென்றால் மனசு கசக்கும். தடிப்பய அளவுக்கு வளர்ந்த பிற்பாடும் இப்போதும் அதே பிரச்சனைதாம். சண்டை, மனஸ்தாபம் என்று அதற்கு வேறு பெயர்கள் இட்டுக் கொண்டாலும் சிறுபிள்ளைத்தனத்தின் தொடர்ச்சியாக அது நீண்டு கொண்டிருக்கிறது. இதற்குத் தீர்வே இல்லையா? அது எப்படி இல்லாமல் போகும்? வார்த்தையில் பழம் என்றால் வாழ்க்கையில் ஏன் காய் வரப் போகிறது? வார்த்தையில் காய் என்றால் வாழ்க்கையில் எப்படிப் பழம் வரும்? அதாவது வார்த்தையில் பழம் என்றால் வாழ்க்கையிலும் பழம். இதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே என் தமிழ்ப்பாட்டன் சொல்லியிருக்கிறார் பாருங்கள்,
            'இனிய உளவாக இன்னாத கூறல்
            கனியிருப்பக் காய்கவர்ந் தற்று' என்று" என்று விகடு முடிக்கும் முன்பே ஒருவர் எழுந்து நின்று கைதட்டுகிறார். தன் பேச்சுக்கு முதலில் ஒற்றை ஆளிடமிருந்து தனித்துக் கேட்கும் கைத்தட்டல் என்பதால் பேச்சை நிறுத்தி விட்டு விகடு அது யாரென்று பார்க்கிறான்.
            அவர் சந்தர்பாய்! சந்தர்பாய் யாரென்று தெரிந்து கொள்ள நீங்கள் அத்தியாயம் 22.0 வைப் படிக்க வேண்டும். அங்கே போய் படிக்க விருப்பமில்லை என்றால் மேலதிக விவரங்களைத் தெரிந்து கொள்ளாமல் அவரைச் சந்தர்பாய் என்றே வைத்துக் கொள்ளுங்கள். அவரைப் பற்றிய விவரங்கள் அதிர்ச்சிரகத்தைச் சேர்ந்தவை. ஆகையால் அவரைப் பற்றிய விவரங்களை விட்டு விட்டு அவர் பேசுவதை மட்டும் கூட தெரிந்து கொள்ளலாம். பிழையொன்றுமில்லை. அவர் பேசப் போகும் விவரங்களும் அதிர்ச்சிரகமாக வருங்காலத்தில் அமைகிறதென்றால் அதற்கு நாவலாசிரியர் பொறுப்பில்லை.
*****


No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...