19 Dec 2019

மாடி ஓட்டு மாடி வூடு!



செய்யு - 303

            கிராமத்துல ஒரு வழக்கம் இருக்கு. அழகா வூட்டைக் கட்டுவாங்களே தவிர வூட்டுக்குப் பக்கத்துல ஒரு கழிவறைய கட்ட மாட்டாங்க. கொல்லைக் கடைசியில கொண்டு போயிக் கட்டுவாங்க. வூட்டுக்குப் பக்கத்துலயே கழிவறையக் கட்டுறத அசிங்கம் பிடிச்ச சமாச்சாரமா பேசிப்பாங்க. அப்படிப் பேசிக்கிறதோட வுடாம டவுனுல எப்பிடித்தாம் வூட்டுக்குள்ளாரயே கழிவறையக் கட்டி வெச்சிக்கிட்டுப் பக்கத்தாலயே உக்காந்து சாப்புடுறாங்க, பொழங்குறாங்கன்னு உவ்வே காட்டுவாங்க. அங்கல்லாம் மனுஷம் போயி இருக்க முடியுமான்னு வேற மூஞ்சை அஷ்டகோணலா ஆக்கிப்பாங்க. அதால கிராமங்கள்ல அதிசயமா யாராவது கழிவறைக் கட்டுனாக்கா எப்பவும் வூடு ஒரு திக்கால இருக்கும், கழிவறை ஒரு திக்கால இருக்கும். அந்த ரெண்டுக்கும் இடையில ரெண்டு வூட்டையே கட்டிப் போடலாங்ற அளவுக்கு இடைவெளி கெடக்கும். அந்தக் கழிவறையிலயும் ஆடிக்கொரு தரம், அமாவாசைக்கொரு தரம்னு கட்டிப்போட்டுட்டேம்னு பேருக்குப் போவாங்களே தவிர பெரும்பாலும் பொறம்போக்கு எடத்தைத் தேடித்தாம் ஓடுவாங்க. அதால காலப்போக்குல அங்க போற வர்ற பாதையில செடியும் கொடியும் மண்டிப் புதரு போல ஆயி கழிவறை ஒரு தீவு போல வூட்ட ஒட்டு ஒதுங்கிப் போயிடும். பெறவு அங்கப் போயி என்னத்த செய்யுறதுன்னு அதை வுட தூரமா ஊருக்கு வழக்கமா போறாப்புல ஒதுக்குப்புறமாவே போவ ஆரம்பிச்சிடுவாங்க.
            கிராமத்துல எடத்துக்கா பஞ்சம்? திட்டைக்கு வடக்காலயும், தெக்காலயும் எங்க வேணாலும் கிராமத்தை விட்டு வெளியில வந்தா பொரம்போக்குத்தாம். அதாவது புறம்போக்குன்னு சொல்லுவாங்களே அதுதாம். புறம்போக்குன்னா அது என்னான்னா... மனுஷன் பாட்டுக்கு அவம் போக்குக்கு இருக்குற எடத்தையெல்லாம் வூடுகளக் கட்டி, கொல்லைகளாக மாத்திப்புட்டா மனுஷனுக்குப் புறத்தால உள்ள பறவைங்க, நரிங்க, காட்டுப்பூனைங்க, கீரிப்புள்ளைங்க, உடும்புங்க, பாம்புங்கன்னு மித்தமித்த ஜீவராசிங்க என்ன பண்ணும்? அதுங்களுக்கு எடம் வேண்டியதில்லையா? அவனவனும் இருக்குற எடத்தை எல்லாம் வயலுகளா ஆக்கிப்புட்டா ஊருல ஆடு, மாடுகள வெள்ளாமை விளையுற வயல்லயா கொண்டு போயி எறக்குறது? அப்போ அதை மேய்க்கிறதுக்கு வேற எடம் வேணுமில்லையா? அப்படி உள்ள மனுஷனுக்குப் புறத்தால உள்ள ஜீவராசிகளுக்காக ஊருக்கு ஒதுக்குப்புறத்துல இருக்கற எடங்கத்தாம் புறம்போக்கு. அது அந்த ஜீவராசிகளுக்கு மட்டும் புறம்போக்கு இல்ல. மனுஷங்களுக்கு வர்ற இயற்கை உபாதைய கழிக்கிறதுக்கும் அதுதாம் புறம்போக்கு.
            அத்தோட அந்த பொறம்போக்குலத்தாம் கிராமத்து சனங்க அவங்கவங்க மனசுல ஒட்டிக்கிட்டு இருந்த பேயிகளுக்கும் பிசாசுகளுக்கும், காட்டேரிகளுக்கும் எடத்தைக் கொடுத்து வெச்சிருந்தாங்க. அதால அந்த மாதிரி எடத்துக்கு உருமினி நேரத்துல போகக் கூடாதுன்னு சின்ன புள்ளைங்கள பயமுறுத்தி வைப்பாங்க. பொதுவா பொறம்போக்குங்றது மனுஷங்க நடமாட்டம் அதிகமா இல்லாத இயற்கை உபாதைக்காக மட்டும் போவுற எடமாப் போயிடுதுல்ல. அங்க சின்னபுள்ளைங்க தெரியாம கொள்ளாம போயி ஏதாச்சிம் ஆபத்துல சிக்கிக்கிட்டா என்னாவறதுங்றதுக்காக பண்ண ஏற்பாடாத்தாம் அது இருக்கணும்.  
            என்னத்தான் டாய்லெட்டுங்குற கழிவறைய வூட்டுக்கு வெளியில கட்டி வெச்சாலும் சரிதாம், வூட்டுக்குள்ளயே கட்டி வெச்சாலும் சரிதாம் பொறம்போக்குல சொதந்திரமா போயிட்டு வர்ற மாதிரி ஆவுமான்னு அதெ ஒரு பழக்கமாத்தாம் ஆக்கி வெச்சிருக்காங்க கிராமத்துக்காரங்க. அதெ வுட வூட்டுக்குப் பக்கத்துலயா கட்டி வெச்சி கழிஞ்கிட்டுக் கெடப்பாங்க அசிங்கப் பிடிச்சத்தனமான்னு கழிவறையப் பத்தி முகத்த வேற சுளிச்சுப்பாங்க. கிராமத்துல மண்டிக் கெடக்குற கருவக்காடும், பொறம்போக்கு எடங்களும்தாம் கிராமத்துக்கே கழிவறை. அப்படி ஒரு வசதி இருக்குறதால கழிவறையக் கட்டுறதப் பத்தியெல்லாம் இங்க யாரும் பெரிசா யோசிக்கல. ஆனா  கால ஓட்டம் அப்படியேவா போயிக்கிட்டு இருக்கு?

            திட்டைக்கு வடக்கே வெண்ணாத்துக்கு அந்தாண்ட இருந்த அக்கரையில ஒரு காலத்துல இலுப்பை மரங்க அப்படி மண்டிக் காடா கெடந்துச்சு. வெண்ணாத்தாங்கரையிலயும் நாவல் மரம், விளா மரம், இலந்தை மரம், ஆல மரம், அரச மரம், வாதா மரம்னு மரங்களுக்கு எந்தக் கொறைச்சலும் இருக்காது. எழுவத்தெட்டுல அடிச்ச புயலுல்ல அத்தனையும் சாஞ்சிப் போனதுதாம் மிச்சம். அதுக்குப் பிற்பாடு அங்க இப்போ பார்க்கறப்போ கருவக்காடுகளா மண்டிக் கெடக்குதுங்க. அந்த எடத்தையும் அவங்கவங்களும் வளைச்சுப் போட்டு கொல்லையா மாத்தி வேலியைக் கட்டிக்கிட்டு இருக்கிறாங்க. தெக்கால இருந்த கருவக்காட்டையும் ஒழிச்சுக்கட்டி அங்க விவசாய ஆளுங்களுக்கு பட்டா போட்டு கொடுத்துட்டாங்க. கொஞ்சம் கூட கொறைச்ச கெடந்த திடல்கள எல்லாத்தையும் ஊர்ல பெரும்புள்ளின்னு சொல்லிக்கிட்டு திரிஞ்ச அரசியல்வாதி அசாமிங்க வளைச்சுப் போட்டுட்டுங்க.
            இப்போதைய நெலமைக்கு பொறம்போக்கு எடம் எங்க இருக்குன்னு பூதக்கண்ணாடிய வெச்சு ‍தேடுனாலும் கண்டுபிடிக்க முடியாது. அப்படி ஆளாளுக்கு வளைச்சுப் போட்டதுல பரியாரிக் கொளம், பொட்டையன் கொளம், வண்ணாங் கொளம்னு திடல்களுக்கு இடையுலயும், வயலுகளுக்கு இடையுலயும் திட்டையில இருந்ததெல்லாம் எங்க காணாம போச்சுன்னே தெரியல. இந்தத் திடலுங்களும், கொளங்களும் இருந்த வரைக்கும் வடக்காலயும், தெக்காலயும் எங்க வேணாலும் போயி இயற்கை உபாதையைக் கழிச்சிட்டுச் சொகமா காலு அலம்பிட்டு வர முடிஞ்சிது. அதெல்லாம் அடைபட்டு காணாம போன பிற்பாடு சனங்க இப்போ பொழுது மசங்குற நேரத்திலயும், பொழுது விடியுற நேரத்துலயும் இருட்டோட இருட்டா ரோட்டோரமாவே இயற்கை உபாதைங்கள முடிச்சுக்கிதுங்க. இதுக்குத் தொந்தரவா அங்கங்க இருக்குற தெரு விளக்குகளையும் கப்பிக்கல்ல மேல தூக்கிப் போட்டு உடைச்சிடுதுங்க. பெறவு அந்த விளக்குக எரிஞ்சா ராப்பொழுதுல வெளிச்சத்துலயா இயற்கை உபாதைய கழிக்க முடியும்னு அந்த வேலையைப் பாத்துப்புடுதுங்க. நீங்க திட்டைக்கு வந்தா அப்படி அடிச்சி முறிஞ்சு தொங்குற வாழைத்தண்டாட்டம் உடைஞ்சித் தொங்குற தெருவிளக்கு டியூப்லைட்டுகள நெறைய பார்க்கலாம்.
            இயற்கை உபாதைங்றது இன்ன நேரத்துலத்தாம் வருவேன்னு சொல்லிட்டா வருது. அது எந்த நேரத்துலயும் எப்போ வேணாலும்ல வருது. பொறம்போக்குத் திடலுங்க இருந்த வரைக்கும் எந்த நேரத்துல இயற்கை உபாதை வந்தா என்னா? போயிக் காரியத்தை முடிச்சிட்டு வந்திடலாம். இப்போ பொறம்போக்கே மனுஷனோட உபாதையில காணாம மறைஞ்சுப் போச்சுங்குறதால இயற்கை உபாதைங்றது பொழுது மசங்குற நேரத்துக்கு முன்னாடியோ, பொழுது விடிஞ்ச நேரத்துக்குப் பின்னாடியோ வந்தா அது செரமா போவ ஆரம்பிச்சிது. கிராமத்துச் சனங்க ஒவ்வொண்ணும் கழிவறையக் கட்டுறதுன்னு ரொம்ப மனசு கஷ்டப்பட்டு, நொம்பலப்பட்டு ஒரு முடிவுக்கு வந்தது அப்போத்தாம். அதுவும் குறிப்பா வயசுக்கு வந்த பொம்பளைப் புள்ளைங்கள வெச்சிருக்கிற கிராமத்துச் சனங்க வேற வழியில்லாம அந்த முடிவுக்கு வந்துச்சுங்க. வூட்டுக்குத் தூரமா முன்னாடி மாரில்லாம் கழிவறையக் கட்டிப்புட்டு வடக்காலயும், தெக்காலயும் ஓடிக்கிட்டு கெடக்க முடியாதுன்னு வூட்டுக்குப் பக்கத்துலயே கழிவறைய கட்டுறதுன்னு கிராமத்து சனங்க முன்னேத்தமாகி அப்படியே படிப்படியா வூட்டை ஒட்டியே கழிவறையக் கட்டிக்க ஆரம்பிச்சதுங்க.
            மச்சு வூட்டுக்குப் பின்னாடி ஓட்டு வீட்டைக் கட்டி ரெண்டு மூணு வருஷம் ஆயி வூட்டுல எதையும் புதுசா கட்டவும் முடியலையே, எதுவும் பண்ண முடியலையேன்னு மனஅரிப்பு பிடிச்சுட்டுக் கெடந்த சுப்பு வாத்தியாருக்கு அந்த நேரத்துலத்தாம் அவரோட மூளை பிரகாசமா வேலை செய்ய ஆரம்பிச்சிது. இந்த ரெண்டு மூணு வருஷத்துல வூட்டுல எதையும் புதுசா பண்ணாம, எதையும் கட்டாம அவரு மனசு ஒடிஞ்சிப் போயிருந்திச்சி. டக்குன்னு பிடிச்சாரு பாருங்க ஒரு பாய்ண்டை.
            பயலும் காலங்காத்தாலேயே ஏழரைக்கெல்லாம் வேலைக்குக் கெளம்பிடுறாம், பொண்ணு வேற வயசுக்கு வந்து காலேஜூக்குப் போயி படிக்க ஆரம்பிச்சிட்டான்னு சுப்பு வாத்தியாரு ஓட்டுக் கட்டுக்குப் பின்னாடி இருந்த எடத்துல டாய்லெட்டையும், பாத்ரூமையும் கட்டப் போறேன்னு ஆரம்பிச்சிட்டாரு வேலய. டாய்லெட்டும், பாத்ரூமையும் கட்டுறதா சாக்கா வெச்சி கெழக்கால டாய்லெட்டையும், பாத்ரூமையும் சேர்த்துக் கட்டி, அதுக்கு எதுத்தாப்புல மேக்கால ஒரு பெரும் ரூமையும் போட்டுக் கட்டிப்புட்டாரு.
            இப்போ வூட்டைப் பாக்குறப்போ முன்னாடி மச்சுவீடும், அதை ஒட்டி ஓட்டு வீடும், அந்த ஓட்டு வூட்டை ஒட்டி மச்சு வீடும் சேர்ந்திருக்கிற மாதிரி வூடு ஆயிப் போச்சுது. இப்படி டாய்லெட்டையும், பாத்ரூமையும் கட்டப்போறேன்னு சொல்லிப்புட்டு வூட்டை இப்படி இழுப்பார்னு வூட்டுல யாரும் எதிர்பார்க்கல. இப்போ இருக்குற காலகட்டத்துக்கு டாய்லெட்டும், பாத்ரூமும் இல்லாம என்ன பண்றதுன்னு நெனைச்சுத்தாம் சுப்பு வாத்தியாரு அதைக் கட்டப்போறேன்னு சொன்னதும் சந்தோஷமா வூட்டுல இருந்த எல்லாரும் தலையை ஆட்டுனாங்க. அவரு அதுக்குப் பின்னாடி இப்படி ஒரு திட்டைத்தை வெச்சிருக்கிறது கொஞ்சம் கொஞ்சமா அங்க கட்டுமான வேலை வளர ஆரம்பிச்ச பின்னாடித்தாம் தெரிய ஆரம்பிச்சது.
            நடுக்கூடத்துல பத்தாயத்தை வெச்சி அது அடைப்பா இருக்குறதாலத்தாம் பின்னாடி ஒரு ரூமைப் போட்டதா அதுக்கு ஒரு காரணத்தைச் சொன்னாரு சுப்பு வாத்தியாரு. எப்படியோ மறுபடியும் வூட்டை விரிவு பண்ணிக் கட்ட அவருக்கு ஒரு வாய்ப்பு கெடைச்சிப் போச்சி. கட்டுறதுன்னு முடிவாயி அதுக்கான சாமானுங்க வந்து எறங்குன பிற்பாடு என்ன பண்ணுறதுன்ன வூட்டுலயும் அதுக்கு மேல ஒண்ணுஞ் சொல்லாம விட்டுப்புட்டாங்க. வூடு இப்போ மறுபடியும் வளந்துப் போச்சுது. இப்போ சுப்பு வாத்தியாரு வூட்டைப் பார்த்த சனங்க இந்த ரயிலு வண்டி எங்க போயி நிக்குமோ யாருக்குத் தெரியும்?ன்னு பேச ஆரம்பிச்சிட்டுங்க.
*****


No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...