19 Dec 2019

22.2



            உன்மத்தராயபுரம் -

            கீழே அதாவது மலைப்பகுதிக்குக் கீழிருந்து கொண்டை ஊசி வளைவைச் சுற்றிச் சுற்றி ஏறி மேலே போயி நிமிர்ந்தால் எட்டு கிலோ மீட்டர்களை விழுங்கி விடும். மேலே கொண்டை ஊசி வளைவைச் சுற்றிச் சுற்றி தம் கட்டி ஏறுவதற்கென்றே பிரத்யேக ஜீப்புகள் இருக்கின்றன. அந்த ஜீப் ஒன்றில் ஏறித்தாம் மாணிக்கம் ஐயா மூச்சு முட்ட மலை உச்சிக் கிராமமான உன்மத்தராயபுரத்தை அடைகிறார். மேல் கிராமத்திலிருந்து கீழே பார்த்தால் எங்கணும் காடுகள். காட்டுக்குள் காட்டு விலங்குகள். ஆங்காங்கே சிற்றோடைகள் ஓடுகின்றன. பூச்சிகளின் சத்தம் காதை அறுத்து எறிகிறது. காடுகளோ, காட்டு விலங்குகளோ, பூச்சிகளோ, பூச்சிகளின் ஒலிகளோ, ஆங்காங்கே ஓடும் சிற்றோடைகளோ, அதில் கிடக்கும் பாம்புகளோ என்று எந்தக் கவலையும் இல்லாமல் பாதி பாதையின் வழியாகவும், மீதி பாதையற்ற பாதையின் வழியாகவும் ஒரு ஜென் மனநிலையில் கீழே குதிப்பதற்கு மாணிக்கம் ஐயா மனதளவில் தயாராகி விடுகிறார்.
            ஏறும் போது ஜீப்பில் ஏறிய கவிஞர் இளநீருக்காக சக்கரங்களைக் கால்களில் கட்டி எட்டு கிலோ மீட்டரை எட்டு வைத்து, எட்டு வைத்து கடந்து கீழே வந்திருக்கிறார். கீழே இறங்கி வந்தால் வந்தால் மன்மத்தனூர். கிராமத்துக்கும் நகரத்துக்கு இடைப்பட்ட கிராமநகரமோ, நகரகிராமமோ? ஏதோ ஒன்று. அங்கே வரிசையாக இளநீர் கடைகள். நம் ஊர்களில் டீக்கடைகள், காப்பி கடைகள் இருக்குமே அப்படி அங்கே இளநீர்க் கடைகள். தேடிப் பார்த்தால் மன்மத்தனூரில் டீக்கடையோ, காப்பி கடையோ எதுவும் இல்லை. விசாரித்த வகையில் மன்மத்தனூருக்கு டீ, காப்பி என்பதெல்லாம் இளநீர் என்றுதான் தெரிய வருகிறது.
            இளநீரைச் சீவி அதற்குள் பொடி செய்து வைத்திருக்கும் ஏலக்காயைப் போட்டு ஒரு குலுக்கு குலுக்கிக் கொடுக்கிறார்கள்.  குடித்தால் ஏலக்காய் பொடியின் வாசனைக்கு கும்மென்று இருக்கிறது. ஆசை தீர ஒன்றுக்கு நான்காக வாங்கிப் பருகுகிறார் மாணிக்கம் ஐயா. பருகி முடித்ததும் ஐயாவுக்கு அங்கு நிற்கும் மனிதர்களின் முகங்களைப் பார்க்க பார்க்க மலைப்புத் தட்டுகிறது. மலையிலிருந்து இறங்கி வந்த மலைப்பா அது என கண்களைக் கசக்கி விட்டுப் பார்க்கிறார். அப்படிப் பார்த்தும் அதே மலைப்பு கூடுதலாக வருகிறதே தவிர குறைவாகவில்லை.
            ஆண்களின் முகங்களைப் பார்த்தால் பெண்களின் முகம் போலவும், பெண்களின் முகங்களைப் பார்த்தால் ஆண்களின் முகம் போலவும் இருக்கிறது. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், ஆணுக்குப் புடவை கட்டி விட்டால் எப்படி இருக்கும் அப்படித்தான் இருக்கிறது பெண்களின் முகம். பெண்களுக்கு ஜிப்பா சட்டையும் வேட்டியும் கட்டி விட்டால் எப்படி இருக்கும் அப்படித்தான் இருக்கிறது ஆண்களின் முகம்.
            மாணிக்கம் ஐயா கையைக் கிள்ளிப் பார்க்கிறார். வலிக்கிறது. மலையிலிருந்து இறங்கியது, கீழே இளநீர்க் கடைகளாகப் பார்த்தது எல்லாம் ஐயாவுக்கு கனவாக ஒரு மாயத்தோற்றம் தட்டுகிறது. அது நிஜத் தோற்றம் என்று உணர்வதற்குள் மாணிக்கம் ஐயா படாதபாடு படுகிறார்.
            மாணிக்கம் ஐயா மன்மத்தனூர் ஆட்களை அதிசயமாகப் பார்ப்பது போல, மன்மத்தனூர் ஆட்கள் மாணிக்கம் ஐயாவை அதிசயமாகப் பார்த்து அழகான அந்த நகரகிராமத்தின் அரண்மனைக்குள் அழைத்துச் செல்கிறார்கள். உயிரைப் பிழிந்து செத்து விழச் செய்யும் கானத்தை அங்கே கேட்கிறார் மாணிக்கம் ஐயா.
            அத்தியாயம் 22.0 இல் நீங்கள் பார்த்த அழகான அரண்மனையும், கேட்ட உன்மத்தம் கொள்ளச் செய்யும் கானமும் மன்மத்தனூர் நகரகிராமத்திற்குச் சொந்தமானது. அதில் நீங்கள் பார்த்த, கேட்ட சங்கதிகள் அனைத்தும் மாணிக்கம் ஐயா மூலமாக அறிய வந்தவை.
            மன்மத்தனூர்வாசிகளின் முகத்தோற்றத்தைப் பற்றி மாணிக்கம் ஐயா விசாரித்த போது அவருக்கு மன்மத்தனூர் சம்பிரதாய சடங்குகளைப் பற்றி விளக்குகிறார்கள் அவ்வூர்வாசிகள். அதைக் கேள்விப்பட்ட மாணிக்கம் ஐயா அரண்மனைக்குள் வைத்து தன்னையும் அப்படி ஏதாவது செய்து விடுவார்களோ என்று குலை நடுங்கிப் போகிறார். அந்த வேளையில் வாழ்க்கையில் இனியெந்த பொழுதிலும் இளநீரே குடிக்கக் கூடாது என்ற முடிவை எடுக்கிறார். அப்போது அவரது உடல்சூடு பல டிகிரி செல்சியஸ்கள் எகிறுகிறது.
            நல்லவேளையாக அவர்களின் கூட்டத்தில் இல்லாத ஆட்களை அப்படியெல்லாம் செய்து உருமாற்றமோ, திடீர்மாற்றமோ செய்வதில்லை என்று சொல்லி மாணிக்கம் ஐயாவின் மனதுக்குள் பாலை வார்க்கிறார்கள் மன்மத்தனூர்வாசிகள்.அந்தச் சந்தோஷச் செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் மேலும் நான்கு ஏலக்காய் பொடி கலந்த இளநீர்களை வாங்கிக் குடிக்கிறார் மாணிக்கம் ஐயா. ஏறிய சூடு இறங்குகிறது.
*****


No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...