18 Dec 2019

ஓட்டு மாடி வூடு



செய்யு - 302
            கூரையில இருக்குற வீட்டை கூரை வீடுன்னும், ஓடுல இருக்குற வீட்டை ஓட்டு வீடுன்னும், காங்கிரிட்டுல இருக்குற வீட்டை மாடி வீடுன்னும் சொல்லலாம். சுப்பு வாத்தியாரு திட்டையில மனைக்கெட்டை வாங்கிக் கொஞ்சம் அப்படி இப்பிடி இருந்த வீட்டை மாத்தி கட்டிக்கிட்ட வூடு கூரை வூடுன்னா, அந்த கூரை வூட்டை இடிச்சிட்டு அவரு கட்டுன வீட்‍டை எந்த வூடுங்ற வகையில சேர்க்கிறதுன்னு நீங்கத்தான் சொல்லணும். அந்த வூடு முன்னாடி பார்த்தா மாடி வூடு. கொஞ்சம் பின்னாடி பார்த்தா ஓட்டு வூடு. அதுக்கும் பின்னாடி பார்த்தா கூரை வூடு. அந்த வூட்டை மாடி வூடுன்னு சொல்தா? ஓட்டு வூடுன்னு சொல்றதா? கூரை வூடுன்னு சொல்றதா? இல்ல மாடி - ஓடு - கூரை வூடுன்னு சொல்றதா?

            அப்பங்காரரு வூட்டைக் கட்டுறார்ன்னா அதுக்குக் காரணம் பிள்ளைங்கத்தாம்! அந்தப் புள்ளைங்களுக்குத்தாம் அப்பங்காரரு வூட்டைக் கட்டுறாரு. அப்படிக் கட்டுற வூட்டுல புள்ளையும், மருமவளும் குடித்தனம் பண்றதையும், பேரப் புள்ளைங்க விளையாடுறதையும் பாக்கறப்பத்தாம் ஒரு சம்சாரியோட வாழ்க்கை நிறைவாகுது. மனைவி, மக்கள், வீடுங்றது ஒரு சம்சாரியோட பிரிக்க முடியாத பந்தம். சம்சாரியோட வாழ்க்கைத் சுழற்சியே அதுதாம். ஒவ்வொரு அப்பங்காரரும் தன்னோட காலத்துல தன்னோட புள்ளைக்கு ஒரு வூட்டைக் கட்டி வெச்சிப்புடணுங்றதுலயும், புள்ளைங்களோட வருமானத்துக்கு வயல்கள வாங்கிப் போடணுங்றதுல ரொம்ப பிடிவாதமா இருப்பாங்க. அதைத்தாங் அவுங்க புள்ளைங்களுக்குச் செய்யுற மகத்தான கடமையா நெனைப்பாங்க. சுப்பு வாத்தியாரு விசயத்துலயும் அவரு கூரை வூட்டை இடிச்சிப்புட்டு மாடி வூட்டைக் கட்டுறதுக்குக் காரணம் அவரோட சீமந்த புத்திரன் விகடுதாங்றது சொல்லித் தெரிய வேண்டிய விசயமில்ல. உங்களுக்கு நல்லாவே தெரிஞ்சதுதாம் அது.
            கதை கேட்குறதுல ஊஞ்சலாடிட்டுக் கதை கேக்குறது இருக்கே. அது ரொம்ப சுவாரசியமா இருக்கும். நாம்ம இப்படித்தாம் இந்தக் கதையில போய்ட்டு இருக்கோம். அதுக்காக எங்க ஊஞ்சல்னு கேட்காதீங்க. காலம்தான் அந்த ஊஞ்சல். அந்த ஊஞ்சல்ல இருவது முப்பது நாப்பது வருஷத்துக்கு முன்னாடி போன நாம்ம இப்போ அப்படியே நாப்பது முப்பது இருவது வருஷத்துக்குப் பின்னாடி வந்தா நம்ம கால ஊஞ்சல் நிக்குற எடம் சுப்பு வாத்தியாரு கூரை வூட்டுலேந்து மாடி வூடு கட்டி அதுக்குப் பூச்சு கூட பூசாம குடி வந்த எடம்தான். கொஞ்சம் வேகமாக கால ஊஞ்சல ஒரு ஆட்டம் ஆட்டி விட்டுட்டு இப்போ இருக்குற எடத்துக்கு வரணும்னா... சுப்பு வாத்தியாரு பத்தாயத்தை பண்ணி வெச்ச பின்னும் அவரு வூட்டுல எலித் தொல்லையும், பெருச்சாளித் தொல்லையும் தாங்கல. அவுங்க அந்த வூட்டுல இருந்த வரைக்கும் அடக்கி வாசிச்ச எலிகளும், பெருச்சாளிகளும் விகடுவோட படிப்புக்காக குடும்பத்தைத் திட்டையிலேர்ந்து நரிவலத்துக்குக் கொண்டு போயி, அவனோட படிப்பு முடிஞ்சதும் குடும்பத்தை நரிவலத்திலேந்து திட்டைக் கொண்டு வந்தப்போ வூடு வூடா இல்லாத அளவுக்கு ஒவ்வொரு எலியும், பெருச்சாளியும் 'எலி வளையானாலும் தனி வளை வேணுங்'ற மனுஷனோட பழமொழியை எங்கே கேட்டுச்சோ, எப்படிக் கேட்டுச்சோ தெரியல, வூட்டை ஏகத்துக்குப் போட்டு கொடைஞ்சு வலையும், புழுக்கையுமா ஆக்கி வெச்சிடுச்சிங்க.
            மனுஷங்க இருக்குற வரைக்கும் அதெ மனுஷங்களோட வூடா நெனைச்சி ஒட்டுக்குடித்தனம் பண்ண எலிகளும், பெருச்சாளிகளும் மனுஷங்க இல்லன்னு தெரிஞ்சிப்புட்டா அந்த வூட்டுல ஒண்டிக்குடித்தனம் பண்ண ஆரம்பிச்சிடுதுங்க. அத்தோட வூட்டோ சுவத்துல ஏறுன கறையானுங்க கூரை வரைக்கும் ஏறி வைகுந்தம் போற அளவுக்கு போயி கும்மாளம் போட ஆரம்பிச்சிட்டுங்க. இனுமே அந்த வூட்டுல இருக்க முடியாதுங்ற நெலையில அந்த வூட்டை இடிச்சிட்டு, மாடி வூட்டைக் கட்டி அந்த வூட்டை ஏம்டா கட்டுனோம்ங்ற அளவுக்குச் சுப்பு வாத்தியாரு செரமப்பட்ட கதையும் ஒங்களுக்குத் தெரிஞ்சதுதாம்.
            அந்த வூட்டை ரொம்ப நாளு பூச்சு பூச முடியாம காசு பணத்துக்குத் தட்டா போயி அப்படியே போட்டு வெச்சிருந்தாரு சுப்பு வாத்தியாருங்றதும், அவரோட மவ்வேன் விகடு தொண்டாமுத்தூரு கேப்பிடலுக்கு வேலைக்குப் போன பிற்பாடு காசு பணம் பொரள ஆரம்பிச்சி ஒவ்வொரு மாசத்துக்கும் ஒவ்வொரு பக்கத்து சுவர்ரா பூச்ச பூசிட்டு வந்தவரு வூட்டுக்குப் பூச்சை முடிச்சதும், வெள்ளையடிச்சு முடிச்சி வூட்டை ஒரு வழியா மாடி வூடா நெறைவு பண்ணாருங்றதும் கூட கொஞ்சம் முன்னாடிப் போயி படிச்சீங்கன்னா ஒங்களுக்குத் தெரியக் கூடிய விசயங்கத்தாம்.
            பொதுவா பாடுற மனுஷனுக்கு பாடுற வாயி சும்மா இருக்காது. ஆடுற மனுஷனுக்கு கை, காலு சும்மா இருக்காது. எல்லாத்திலயும் கணக்குப் போடுற மனுஷனுக்கு மனசு சும்மா இருக்காது. வூடு கட்டுற மனுஷனுக்கு அந்தப் பழக்கதோஷம் சும்மா இருக்காது. அதுலயும் சுப்பு வாத்தியாரு கூரை வூட்டையே ரயிலு வண்டிக் கணக்கா இழுத்துக் கட்டிக்கிட்டு கெடந்த பழக்கதோஷக்காரரு. ஒரு மாடி வூடு ஆயிடுச்சேன்னு அத்தோட அவரு சும்மா இருந்தாலும், வூட்டை வளத்துக் கட்டிப் பழக்கப்பட்ட அவரோட பழக்கததோஷம் சும்மா இருக்குமா?
            அதெப் பத்தி கொஞ்சம் விலாவாரியா சொல்லணும்னா... குடி போயி, அதுக்குப் பின்னாடி பூச்சு பூசி முடிஞ்சி, வெள்ளையடிச்சிக் கட்டி முடிஞ்ச மாடி வூட்டுக்குப் பின்னாடி ரயிலு ஓடு போட்டு வூட்டைக் கொஞ்சம் வளக்கணும்ங்ற வேலையில எறங்கிப்புட்டாரு. "இப்பத்தாம் கொஞ்சம் நெலமை சரியா வந்திருக்கு. அதுக்குள்ள வூட்டை இழுக்குறீரே?"ன்னு அப்பத்தாம் வெங்குவுக்கு அவரு பண்றது பிடிக்காம ஒரு கேள்வியக் கேட்குது.

            "நீயி ச்சும்மா கெட! ஒனக்கு ஒண்ணும் தெரியா!"ன்னு சொல்லி வேலைய ஆரம்பிக்கிறதுல மும்மரமா இருக்குறாரு சுப்பு வாத்தியாரு.
            வெங்குவுக்கு சுப்பு வாத்தியாரு பண்ற இந்த வேலை அறவே பிடிக்கல. அத்தோட அந்த வேலைக்கு அவரு பதிலு சொன்ன வெதம் சுத்தமாவே பிடிக்கல. அது இது வேலையத்த வேலைன்னு சொல்லிப் பாத்தது, "குடியிருக்கிறதுக்கு வூடு இருந்தா போதும். வூட்டை இழுத்துக் கட்டிக் கட்டியெல்லாம் குடியிருக்க வாணாம். ஊர்லயே சிறுகக் கட்டித்தாம் பெருக வாழ்ன்னுத்தாம் சொல்லுவாங்களே தவுர, பெருகக் கட்டி பெருக வாழ்ன்னு சொல்ல மாட்டாங்க. இந்த வேலை வேணாம்யா!"ங்குது.
            "ச்சும்மா கெடங்க ஒங்களுக்கு ன்னா தெரியும்? கேஸ் அடுப்பக் கொண்டாந்து மச்சு வூட்டுல வெச்சி சமைக்குறீங்களே? அப்பிடிச் செய்யலாமா? நானும் பாத்துக்கிட்டுத்தாம் இருக்கேம்!" அப்பிடிங்கிறாரு சுப்பு வாத்தியாரு.
            "ஆமா பெறவு ஊர்ல கேஸ் அடுப்ப மாடி வூட்டுல வெச்சு சமைக்காம அதுக்குன்னு தனியா வூடு கட்டி வெச்சா சமைக்குறாங்க? வூடுன்னா மனுஷம் படுக்குறதுக்கு ஒண்ணு, உக்கார்றதுக்கு ஒண்ணு, நடக்குறதுக்கு ஒண்ணு, சமைக்கிறதுக்கு ஒண்ணு, அதெ வெச்சித் திங்குறதுக்கு ஒண்ணுன்னா கட்ட முடியும்? கட்டுன வூட்டுல இருக்குற எடத்துக்குத் தக்கப்படி பொழங்கிக்க வேண்டியத்துதாம்! நீஞ்ஞ இப்பிடி வூட்டை இழுத்துக்கிட்டே போனீயேள்னா அதெ குனிஞ்சி நிமுந்து கூட்டுறதுக்கே நம்மோட தெம்பு முழுசும் போயிடும்யா!" அப்பிடிங்கிது வெங்கு.
            "ந்தாரு அதில்ல வெசயம். கேஸ்ஸூ அடுப்பா இருக்குல்ல. ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயி வெடிச்சிப்புட்டா பெறவு ஆச்சா போச்சான்னா வந்துப்புடுமா?"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "அதுக்கு?" அப்பிடின்னு கேள்வியக் கேட்டு நிறுத்துது வெங்கு.
            "அதுக்குத்தாம் ரயிலு ஓட்டைப் போட்டு வூட்டைக் கொஞ்சம் பின்னாடி இழுக்குறேம்!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "அதெ இழுத்து..."அப்பிடின்னு இழுக்குது வெங்குவும்.
            "அஞ்ஞ கேஸூ அடுப்ப வெச்சி சமையலு கட்டா மாத்திக்க வேண்டித்தாம்!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "ஏம் அஞ்ஞ வெடிச்சி ஓடெல்லாம் ஒடைஞ்சி எம் தலையில வுழுவுறதுக்கா?"ங்குது வெங்கு.
            "அதுக்குத்தாம் ரயிலு ஓட்டைப் போட்டு மாடி வூட்டுக்குப் பின்னாடி கட்டுறேம். ஒரு வேள கேஸூ கசிஞ்சாலும் அது அந்த ஓடுகளோட ஓட்டைங்க வழியா வெளியில போயிடுமாம் தெரியும்ல. கசியுற கேஸூக்கு வெளியில போக வழியில்லாம போவுறப்பத்தாம் கசிஞ்ச கேஸூ பத்திக்கிட்டு வெடிக்கிறதெல்லாம். பாதுகாப்பு முக்கியமில்லயா! அதாங் வேற வழியில்ல. இத்த கட்ட வாணாம்னா இந்த கேஸ்ல சமைக்கிறத வுட்டுப்புட்டு வெறவு அடுப்புக்கு மாறிக்குறதுன்னா சொல்லு, நாமளும் இத்தெ கட்டுறத வுட்டுப்புடறேம்." அப்பிடிங்கிறாரு சுப்பு வாத்தியாரு.
            "இந்தப் பயெ காலையில ஏழரைக்கே ஆபீஸ் போறேன்னு கெளம்பி ஏழரைய ஆரம்பிச்சிடுவாம். செய்யு அவ்வே எட்டு மணிக்குலாம் காலேஜி கெளம்பணும்னு நிப்பா. நாம்ம வெறவு அடுப்புல சமைச்சா எல்லாம் பட்டினியா போவ வேண்டியத்துதாம். நாமளா கேட்டேம் கேஸ் அடுப்ப? ஊருல எல்லா சனமும் வாங்கி வெச்சிட்டுன்னு அதெ வாங்கியாந்தது யாரு? வாங்கியாந்துப்புட்டு இப்போ வெறவு அடுப்புல சமைன்னா ன்னா அர்த்தம்? ஒண்ணு கெடக்க ஒண்ணு மாத்திப் பேசிட்டுத் திரியக் கூடாது. இன்னிக்கு ஒண்ணு பேசுறது, நேத்திக்கு ஒண்ணு பேசுறது, நாளைக்கு ஒண்ணு பேசுறது. என்னாது இதெல்லாம்?" அப்பிடிங்கிது வெங்கு.
            "ஒன்னய யாரு கேஸ் அடுப்புல சமைக்க வாணாம்னு சொல்றது? இஞ்ஞ ஓடு போட்ட சமையலுகட்ட கட்டித் தர்றேம். அதுல வெச்சி பாதுகாப்பா சமையுன்னுத்தாம் சொல்றேம்!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "அவ்வேம் வேற சம்பாதிக்கிறாம். கையில காசி பணம் பொழங்க ஆரம்பிச்சிடுச்சி. கடங்கப்பிக வேற இப்பத்தாம் கொறைஞ்சிடுச்சி. ச்சும்மா இருக்க முடியாதுல்ல. ரயிலு பொட்டிக் கணக்கா வூட்டுக்குப் பின்னாடி இழுத்துக்கிட்டுப் போவலன்னா ச்சும்மா இருக்க முடியுமா? எலி ஏம் கோவணம் கட்டிட்டு அலையுதுன்னு இப்பத்தாம் தெரியுது!" அப்பிடிங்கிது வெங்கு.
            "பேயாம போ! எல்லாம் நமக்குத் தெரியும்!" அப்பிடிங்கிறாரு சுப்பு வாத்தியாரு.
            "இவருக்கு வூட்டை இழுக்குறதுக்கு ஒரு காரணம் வேணும். அதுக்கு இப்போ கேஸூ அடுப்பும், சமையக்கட்டும் கெடைச்சிடுச்சி. அதெ முடிச்சிப்புட்டு அதுக்குப் பின்னாடி வூட்டை இழுக்குறதுக்கு ன்னா காரணம் கெடைக்கப் போவுதோ? இந்த எடத்தோட தலையெழுத்து அப்பிடி எழுதிருக்கோ வூடு வளந்துக்கிட்டே கெடக்கணும்னு? யில்ல, அவரோட தலையெழுத்து அப்படி எழுதியிருக்கோ வூட்டை இழுத்து கட்டிக்கிட்டுக் கெடக்கணும்னு? ஏம் ஐயனாரப்பா ஒமக்குத்தாம்யா தெரியும் எத்து என்னா நெசம்னு? இந்தாளு அடங்க மாட்டாரு! ஏம்டா எனக்குன்னு வந்து பொறந்திருக்கீயே? ஏலே வெகடு நீந்தாம் ஒரு வார்த்தைய இதெ கேட்டாக்கா ன்னான்னா அந்தப் பயெ இந்த ஆளோட பேசுறதும் இல்ல, மொகத்தைப் பாக்கறதும் இல்ல. ஒரு வூட்டுக்குள்ள இப்படி ஒரு கதெ. இத்தெல்லாம் நாம்ம எஞ்ஞப் போயி சொல்றது? இதுக்கு நாம்ம எஞ்ஞப் போயி முட்டிக்கிறது?"ன்னு வெங்கு ஆரம்பிச்சது முடிவில்லாம் பேசிக்கிட்டே கிடக்கு.
            யாரு பாட்டுக்கு என்ன வேணாலும் பேசிக்கிட்டுக் கெடக்கட்டும்னு சுப்பு வாத்தியாரு அவரு பாட்டுக்கு மாடி வூட்டுக்குப் பின்னாடி ஓட்டு வூட்டைக் கட்டுற வேலையில எறங்கிட்டாரு. ஒருச்சாரியா சாய்ப்பாத்தாம் பின்னாடி ரயிலு ஒடு போடுற மாதிரி வேலை பாக்குறாருன்னு நெனைச்சா, சுவத்தை எழுப்பி ஒருச்சாரியால்லாம் ஓட்டைப் போட முடியாது ஏ டைப்புலத்தாம் ரெண்டு பக்கமும் சாய்ப்பா ஓட்டைப் போடுவேன்னு அதுக்கு ஒரு நல்ல தென்னை மரமா பாத்து வாங்கி ரீப்பரு தயாரு பண்ணி, நல்ல கேரளா ஓடுகளா பாத்து வாங்கி அதெ போட்டு முடிச்சாரு. மாடி வூடுங்றதால அதெ ஒட்டி ஒருச்சாரியா ஓட்டைப் போட்டே அந்த சமையலுகட்டைக் கட்டியிருக்கலாம். அப்படி போடுறதுக்கு செலவு ஒரு பங்குன்னா, ஏ டைப்புல ரெண்டு பக்கமும் சாய்ப்பா போடுறதுக்கு செலவு ரெண்டு பங்கு ஆவும். செலவென்ன செலவு ஒருச்சாரியா போட்டா அம்சமா இருக்காதுன்னு ஏ டைப்புல ரெண்டு பக்கமும் சாய்ப்பா போட்டாத்தாம் அம்சமா இருக்கும்ணு அப்படியே போட்டு முடிச்சாரு சுப்பு வாத்தியாரு.
            இப்படியா மாடி வூடா இருந்த வூட்டை மாடி வூடும், ஓட்டு வூடும் கலந்த கலப்பு வூடா மாத்துனாரு சுப்பு வாத்தியாரு.
*****


No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...