மாணிக்கம் ஐயாவுக்கு காலையில் எழுந்ததும்
இளநீர் குடிக்க வேண்டும். அதை ஒரு பழக்கமாக நீண்ட காலமாக வைத்திருக்கிறார். மாணிக்கம்
ஐயா கவிஞர் அல்லவா! ஆதலால் அடிக்கடி சமூகக் கொடுமைகளை, சமூக அவலங்களை, சமூகப் பிரச்சனைகளை,
சமூகத் துயரங்களை... இன்னும் என்னென்ன சமூக இத்தியாதிகள் இருக்கிறதோ அத்தனையையும்
எண்ணியெண்ணி சூடாகிறார். மனதின் சூடு உடலுக்கு ஏறும். இந்தத் தத்துவம் உங்களுக்குப்
புரிய வேண்டும் என்றால் நீங்கள் திபெத்திய ஹீட் யோகா பற்றிக் கேள்விப்பட்டிருக்க வேண்டும்.
திபெத்தின் உறைபனியில் நிற்கும் யோகி
ஒருவர் ஹீட் யோகாவைப் பயன்படுத்தி உடலை வியர்க்க - வியர்வையை விதிர்விதிர்க்கச் செய்வார்
என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். கவிஞர்கள் அரைகுறை யோகிகள் என்பதால் அவர்கள் திபெத்திய
ஹீட் யோகாவைப் பயன்படுத்தாமலே சமூகப் பிரச்சனைகளை மனதுக்குக் கொண்டு வந்து உடலைச்
சூடாக்கி ரணகளமாக்கி விடுவார்கள். அந்தச் சூட்டை மாணிக்கம் ஐயா உணர்ந்திருந்ததால் என்னவோ
காலையில் எழுந்ததும் இளநீர் குடிக்கும் பழக்கத்தை வைத்திருக்கிறார்.
இந்த இளநீர் குடிக்கும் பழக்கத்தைக் குறித்து
நீங்கள் அவரிடம் கேட்டால் கத்தை கத்தையாய் காகிதம் நிறையும் அளவுக்கு இளநீரின் மருத்துவப்
பயன்களைப் பிரசங்கம் ஆற்ற தொடங்கி விடுகிறார். மற்றும் 'இளநீரின் இனிய சிறப்புகள்'
என்ற தலைப்பில் அவர் ஒரு கவிதை எழுதி வைத்திருப்பதாகவும் கேள்வி. அந்தக் கவிதையை இதை
எழுதும் நாவலாசிரியர் கேட்டிராததால் அதை இங்கே பதிவு செய்ய முடியாததற்கு வாசகர்கள்
மன்னிக்க வேண்டும்.
கிராமத்தில் இளநீருக்குப் பஞ்சமில்லை.
தென்னை மரத்தில் இடுப்பில் கயிற்றைக் கட்டிக் கொண்டு ஆள் ஏறினால் இளநீர்க் குலையைப்
பறித்து அதைக் கயிற்றில் கட்டி புதுப்பெண்
அடி மேல் அடி வைத்து நடப்பது போல மேலிருந்து கீழே இறக்குவார் பாருங்கள்! அதைப் பார்க்க
கண்கள் கோடி வேண்டும். கொஞ்சம் கரணம் தப்பினாலும் இளநீர்க் குலை விழுந்து உடைந்தால்...
காரியம் கெட்டது. புதுவீடு கட்டி வீட்டுக்கு முன் உடைத்த பூசணிக்காயைப் போலாகி விடும்.
கீழே இறக்கிய இளநீர்க் குலையை ஒவ்வொரு
காயாக காம்பை வெட்டி ஒரு ஆனைக்கால் குவளைக்குள் தண்ணீரை நிரப்பி அதில் போட்டு வைத்துக்
கொண்டால் ஒரு வாரம் வரைக்கும் பாதகம் இல்லாமல் இளநீர் குடிக்கலாம். அடுத்த வாரம் பிறந்து
விட்டால் மறுபடியும் ஆளைக் கூப்பிட்டு இடுப்பில் கயிற்றைக் கட்டி விட்டு மரத்தில் ஏற்றி
விட வேண்டும். எப்படிப் பார்த்தாலும் கிராமத்தில் காலையில் எழுந்ததும் காபியோ டீயோ
குடிப்பது போல இளநீர்க் குடிப்பதில் எந்தப் பிரச்சனையும் இருப்பது இல்லை.
மாணிக்கம் ஐயாவுக்கு இதில் பிரச்சனை எப்போது
ஏற்படுகிறது என்றால் எங்கேயாவது வெளியூர் செல்லும் போதுதான். இதற்காகவே காலையில் ஐந்து
மணிக்கெல்லாம் எழுந்து காலைக்கடனை முடித்து விட்டு, பல்லைத் துலக்கி விட்டு தெருத்
தெருவாக அலைய ஆரம்பித்து விடுகிறார். அரிதாக ஒரு சில ஊர்களைத் தவிர அதிகாலையில் இளநீர்க்
கிடைப்பது ஒரு சவால்தாம். அதற்காக எல்லாம் அலுத்துக் கொள்ள மாட்டார் மாணிக்கம் ஐயா.
செருப்பு தேய்ந்து பாதம் தேயும் வரை அலையோ அலை என்று அலைந்து குடித்து விட்டுத்தாம்
மறுவேலை பார்க்கிறார். ஒரு கவிஞர் - இரவு எவ்வளவு நேரம் சமூக அவலங்களை எண்ணியெண்ணி
உடல் சூடானாரோ? அதைத் தணிக்க வேண்டும் அல்லவா!
மாணிக்கம் ஐயா ஒரு கலை இலக்கிய விழாவுக்கு
உன்மத்தராயபுரம் சென்ற போது முந்தை நாள் இரவு வாசித்த சமூக அவலக் கவிதையில் சூடாகி
அதிகாலையில் நிரம்பவே சிரமப்பட்டுப் போகிறார். சிறுநீர் வாட்டர் ஹீட்டரிலிருந்து ஊற்றும்
கொதிநீராய் ஊற்றத் தொடங்கி விடுகிறது.
உன்மத்தராயபுரம் கடற்பரப்பிலிருந்து சுமார்
1200 மீட்டர்களுக்கு உயரே இருக்கும் மலைப்பகுதி. வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸிலிருந்து
18 டிகிரி செல்சியஸிற்குள் ஏதோ ஒரு எண்ணில் இருக்கும். அந்த வெப்பநிலைக்கு சிறுநீர்
உறைந்து சிறுநீர்ப் பைக்குள் பனிக்கட்டிகளாக ஆகியிருக்க வேண்டும். மாணிக்கம் ஐயாவின்
நிலைமை மாறாக இருந்ததால் இளநீரைத் தேடும் கட்டாய நிலைக்கு ஆளாகி விடுகிறார் கவிஞர்.
கொண்டை ஊசி வளைவு வழியாக மேலே ஏற வைத்த
மலைப்பகுதி மண்டை காய வைக்கும் அளவுக்கு இளநீரைத் தேட வைக்கிறதே! மாணிக்கக் கவிஞனை
மலைமுழுவதும் ஓட வைக்கிறதே! ஓடித் தேடிப் பார்த்தும் கிடைக்காமல் இப்படி வாட வைக்கிறதே!
எங்கே இளநீர்? எங்கே இளநீர்? என்று நாட வைக்கிறதே! என்று மனதுக்குள் ஒரு டீயார் கவிதை
எழுதிக் கொண்டு அலையாத குறையாக கவிஞர் அலைந்திருக்கிறார்.
*****
No comments:
Post a Comment