செய்யு - 301
ஒரு சம்சாரியோட கனவுகள் எப்போதும் நிறைவடையறது
இல்ல. சம்சாரியால தன்னோட இயக்கத்தை நிறுத்திக்க முடியாது. குடும்பங்குற அச்சுல சுழண்டுகிட்டே
இருக்கிறதுக்காக படைக்கப்பட்டவருதாம் சம்சாரிங்றவரு. வானத்துல பறந்துகிட்டு இருக்குற
விமானத்தோட இன்ஜின்கள நிப்பாட்டிப் புட்டா என்னவாகுமோ அதுதாம் ஆகும் சம்சாரி தன்னோட
இயக்கத்தை நிப்பாட்டிப்புட்டா. அந்த இயக்கத்துக்குக் கனவுகள்தான் கச்சாப் பொருளுங்களைப்
போல.
வூடு, பசு மாடு, வயலுங்ற வரிசையில பத்தாயம்
முக்கியம் சம்சாரியோட வூட்டுக்கு. வூட்டுக்குன்னு பசு மாடும், வயலுக்குன்னு பத்தாயமும்
வெச்சிக்கணும் சம்சாரி. வூட்டுல இருக்குற பசு மாட்டோட சாணம் எருவா வயலுக்குப் போவும்.
அதுக்குப் பதிலா வயல்ல வெளையுற நெல்லுமணிக வூட்டுல இருக்குற பத்தாயத்துக்கு வரும்.
சம்சாரியோட வூட்டு எருக்குழியும் சரி, பத்தாயமும் சரி நெறைஞ்சே இருக்கணும்.
சுப்பு வாத்தியாரே நல்லா பத்தாயம் கோக்கக்
கூடிய ஆளுதாம். இருந்தாலும் சம்சாரிகள்ட்ட எல்லாத்துக்கும் சகுனம் பாக்குற கொணமும்,
ராசி பாக்குற கொணமும் மாறாது. அவருக்குத் தெரிஞ்சி பத்தாயம் கோக்குறதுல ராசியான ஆளு
அவரோட அண்ணன் செயராமு பெரிப்பாத்தாம். அவரு செஞ்சு வெச்சா பத்தாயத்துல நெல்லுமணிக
கொறையாதுங்றதும், அள்ள அள்ள வந்துகிட்டே இருக்கும்ங்றது ஒரு நம்பிக்கை.
ஒவ்வொரு வருஷமும் பத்தாயத்துல புதுநெல்லு
கொட்டுறப்ப பத்தாயத்துல போன வருஷம் கொட்டுன பழைய நெல்லு ஒரு மூட்டை, ரெண்டு மூட்டையாவது
இருக்கணும். அதுதாம் ராசியான பத்தாயம். புதுநெல்லு கொட்டுறதுக்கு முன்னாடியே ஒட்ட
தொடைச்சி வெச்ச மாதிரி இருக்குற பத்தாயம் வூட்டுக்கு ஆகாதும்பாங்க. அது சரி அதுக்கும்
பத்தாயத்துக்கும் என்ன சம்பந்தம்? மனுஷன் அதுல நெல்லைக் கொட்டுறப்பவே கூட கொறைச்ச
கொட்டி வெச்சா அதுக்கு ஏத்த மாதிரி நெல்லு கெடக்கப் போவுது. அதுவுமில்லாம ஒரு வருஷம்
பத்தாயத்துல நெல்ல கொட்டுனா மறுவருஷம் அதுல நெறையுற அளவுக்கு வயலுல நெல்லும் வெளைஞ்சு
வரணும். அதுக்கு நேர்மாறா மறுவருஷம் கொட்டுறதுக்கு வயல்ல நெல்லு வெளையாம போச்சுன்னா
அந்தப் பத்தாயத்தையும் வூட்டுக்கு ஆகாதும்பாங்க. இதுல பத்தாயத்தோட கொறை எதுவும் கெடையாதுன்னாலும்
வெவசாயத்துல நெல்லு விளைஞ்சு வூடு வந்தாத்தாம் உண்டு. அது ஒரு விதமான சூதாட்டம் மாதிரித்தாம்.
ஒரு வருஷம் ஓகோன்னு வெளையும். மறுவருஷம் வெள்ளம் தண்ணின்னு அழிஞ்சுப் போவும், இல்லன்னா
தண்ணிக்கு வக்கத்து காய்ஞ்சிப் போயி பயிருங்க கருகிப் போவும். மொத்தத்துல வயல்ல
எது நடந்தாலும் பத்தாயமோ, குதிரோ செஞ்சி வெச்சப் பெறவு அது அதோட ராசியாப் போயிடும்.
அதுக்காக பத்தாயமும் சரி, பீரோவும் சரி, வூட்டுக்கு தாய்நிலை செய்யறதும் சரி ராசியான
ஆளு பாத்துதாம் செய்வாங்க.
பத்தாயம் போலத்தாம் பீரோவும். ராசியான
ஆளு செஞ்சு வெச்சா பணமும், நகையுமா நெறையும்பாங்க. பத்தாயம், பீரோவப் போலத்தான் தாய்நிலை
செய்யறதும். ராசியான ஆளு செஞ்சு வெச்சத்தாம் குடும்பம் விருத்தியாகும்பாங்க. இங்க கிராமத்துப்
பக்கத்துல இப்படி எல்லாமும் நம்பிக்கைத்தாம். அந்த நம்பிக்கையைப் பிடிச்சப்படித்தாம்
வாழ்ந்துக்கிட்டு இருப்பாங்க. அவுங்ககிட்ட ரொம்ப பகுத்தறிவு பேச முடியா. மீறிக்கிட்டுப்
பேசுனா, "ஒனக்கென்னடா தெரியும் குடும்ப வழக்கு?"ம்பாங்க. கேட்டவங்களுக்கு
ஏம்டா கேட்டோம்னு ஆயிப் போயிடும்.
வூட்டுக்குப் பத்தாயம் பண்ணணுங்றதுக்காகவே
சுப்பு வாத்தியாரு விருத்தியூரு போயி செயராமு பெரிப்பாவைக் கொண்டாந்தாரு. செயராமு
பெரிப்பா தம்பிக்காரனான சுப்பு வாத்தியாருக்கு பண உதவி செய்யாட்டியும் இது போல வேலன்னா
ஓடியாந்து செஞ்சுக் கொடுத்துட்டுப் போயிடும். வேலையையும் போட்டு வளத்தாது. கண்ணு
பாக்க பாக்க மூளை வேலை செய்யும். கண்ணால எல்லாத்தையும் அளந்து முடிச்சி கச்சிதமா வேலையைப்
பாக்கும். வேலைக்கு ரொம்ப சாமானுங்கள பயன்படுத்தாது. எவ்வளவுக்கெவ்வளவு சிக்கனமா செஞ்சிக்
கொடுக்க முடியுமோ அம்மாம் சிக்கனமா பண்ணிக் கொடுத்திடும்.
பத்தாயம் செய்யணும்னு தம்பிக்காரன் சொன்னதுமே
செயராமு பெரிப்பா குடவாசல்ல நாலு எடத்துலப் பாத்து நல்ல மாம்பலவையா பாத்து வாங்கிப்புடுச்சி.
சட்டத்துக்கு மட்டும் பூவரசுல பாத்து வாங்கி எல்லா பலவையையும் சட்டத்தையும் ரெண்டு
சைக்கிள்ல ரொம்ப சாமர்த்தியமா கட்டிக் குடவாசல்லேர்ந்து திட்டைக்குக் கொண்டு வந்திடுச்சி.
ஒரு சைக்கிள அது ஓட்ட, இன்னொரு சைக்கிள பெரிப்பாவோட மவ்வேன் பரசு அண்ணன் ஓட்டிக்கிட்டு
வந்திச்சி.
பரசு அண்ணன் ஏழாப்பு படிச்சப்போ
"இதுக்கு மேல நம்மா படிக்க முடியா. படிச்சுப் பாழாப் போறத விட ஆடு மேய்ச்சு ஆளா
போவலாம் போல, மாடு மேய்ச்சி மனுஷனா போவலாம் போல, வேலையைப் பாத்து உருப்படியா போவலாம்
போல. நாமளும் வேலைக்கு வர்றேம்!"ன்னு அன்ட்ராயரைக் கழட்டி அப்பால போட்டுப்புட்டு,
வேட்டியைக் கட்டிக்கிட்டுக் கெளம்பிடுச்சி. பெரிப்பாவுக்கும் அப்போ வேலைக்குத் தொணையா
ஆளு தேவைப்பட்டதால ஒண்ணும் சொல்லாம அழைச்சுக்கிடுச்சி. அன்னைக்கு வேலைக்குக் கெளம்புன
ஆளுதாம். இப்போ ஆறெழு வருஷமா வேலை செஞ்சதுல பெரிப்பா இல்லாமலே தனியா வேலையச் செய்யுற
அளவுக்கு மரவேலையில பெரிய ஆளாயிடுச்சு. பெரிப்பாவ விட ரொம்ப யூகமா வேலைய பாக்குறதா
பேச்சு உண்டாயிடுச்சு.
இப்போ பரசு அண்ணன் தனியா வேலைக்குப் போறதாவும்
பேச்சு. வேலை அதிகமா இருந்தா பெரிப்பாவோட வேலைக்கு பரசைக் கூப்புட்டுக்கிறதும், பரசுவோட
வேலையில அது பெரிப்பாவைக் கூப்புட்டுக்கிறதும் நடக்குது. வூட்டுவேலையில தாய்நிலை கோக்குறதுலயும்,
பத்தாயம் கோக்கறதுலயும் பரசு அண்ணன் பெரிப்பாவை வெச்சுத்தாம் ஆரம்பிச்சுக்கும். வூட்டுக்காரங்களும்
அந்த விசயத்துல தெளிவா சொல்லிடுவாங்க, "வூட்டுவேல முழுசையும் நீயே எடுத்து பண்ணுய்யா
பரசு. ஆனா வேலய மட்டும் ஒங்க அப்பங்காரர வெச்சு ஆரம்பிச்சுக்கோ!"ன்னு. பெரிப்பாவும்
அதுக்காக ஒரு ரண்டு நாளைக்கு பரசுவோட வேலைக்குப் போய்ட்டுப் பெறவு தனியா பிரிஞ்சுக்கும்.
வேலை இல்லாத நாளுல்ல ரண்டு பேருமா வூட்டுக்கு எதுத்தாப்புல சுப்பு வாத்தியாருக்குன்னு
கொடுத்த எடத்துல அதுல அஞ்சு குழிய பட்டறைப் போடுறதுக்காக எடுத்துக்கிட்டாங்க இல்லையா
அந்தப் பட்டறையில பீரோலுகளக் கோத்துப் போடும்ங்க.
தம்பிக்காரனுக்குப் பத்தாயம் கோத்துக்
கொடுக்கணுமேன்னு செயராமு பெரிப்பாவும், சித்தப்பாவுக்குப் பத்தாயத்தக் கோத்துக் கொடுக்கணும்னு
பரசு அண்ணனும் ரெண்டு பேருமா பலவையையும், சட்டத்தையும் சைக்கிள்ல கட்டிட்டு வர்றதப்
பார்க்க சர்க்கஸ் வண்டியில வர்றாப்புல இருந்துச்சி. ஊரே அதெ வேடிக்கைப் பாத்து மூக்குல
வெரல வெச்சுப்புடுச்சி.
"இப்பிடியா ரோட்டுல ஒருத்தரும் வர்ற
முடியாத அளவுக்கு பலவயைக் கட்டிக்கிட்டு வரணும்? ஒரு மாட்டு வண்டிய புடிச்சிப் போட்டுக்
கொண்டாந்தா ன்னா?"ன்ன வூட்டுல வந்து எறங்குன ரெண்டு பேரையும் கேட்டாரு சுப்பு
வாத்தியாரு.
"அது ஏம்டாம்பீ! வண்டிக்காரன் வண்டிச்சத்தம்
நூறு நூத்து அம்பதுன்னு கேப்பாம். அது ரண்டு நாளு கூலியாவுது பாரு. எதுக்கு அம்மாம்
காசிய செலவு பண்ணிக்கிட்டு? நீயே எஞ்ஞ கடங்கப்பிய வாங்கி பலவை வாங்கிட்டு வான்னு பணத்தைக்
கொடுத்துட்டுப் போனீயோ யாருக்குடாம்பீ தெரியும்? பலவை சட்டத்தையும் கொடவாசல்ல நாலு
எடத்துல நல்லா அலைஞ்சி சீப்பு ரேட்டுக்குத் தட்டிப்புட்டேம்டாம்பீ!" அப்பிடிங்குது.
"ஆமாஞ் சித்தாப்பா! பலவையெல்லாம்
நல்ல ஒருப்பான பலவைங்க. பலவையுல கூட்டு வெச்சி தைக்க வேண்டியதில்லாம் இல்ல. ஒரே பலவையா
வெச்சே அடிச்சிப்புடலாம் சித்தப்பா!" அப்பிடினுச்சு பரசு அண்ணன்.
எல்லாருமா சேர்ந்து பலவைகள பாத்துப் பக்குவமா
கொண்டு போயி கொல்லையில அடுக்கிட்டு மறுநாளே வேலைய ஆரம்பிச்சிட்டாங்க. மூணு நாளு
பலவைங்களுக்கு நல்ல இழைப்பப் போட்டு முடிச்சி நாலாம் நாளுதாம் பலவையைத் துண்டு போட
ஆரம்பிச்சாங்க. அஞ்சாவது நாளு மத்தியானத்துக்குல வேலை முடிஞ்சி பத்தாயம் எழும்பி நிக்குது.
பலவையை எல்லாம் பலவையோடு கோத்து குறுக்கு வெச்சு இரும்பு ஆணியில அடிச்சதுதாம். மூலைக்கு
மூலை எல் ஆங்கிளோ எதுவும் வெச்சி அடிக்கல. நெல்லைக் கொட்ட கொட்ட பத்தாயம் உப்பிக்குமோன்னு
குறுக்கே கம்பிக் கொடுத்தும் வைக்கல.
"இது என்னடாம்பீ! இப்பிடிக் கொத்து
இருக்கீங்களே! பத்தாயத்துல நெல்லக் கொட்டி பிதுக்கிட்டு வந்தா ன்னா பண்றது? பத்தாயம்
ஒருப்பா இருக்குமாடா? இந்த மாதிரி ஒண்ணும் நாம்ம பாத்ததில்லையடாம்பீ!"ன்னு வெங்கு
பரசு அண்ணன்கிட்டக் கேக்குது. இது செயராமு பெரிப்பா காதுல கேட்டுப்புடுச்சி.
"ஏ ஆயி! இந்தாரு! ஒரு ஆனையைக் கொண்டாந்து
இந்தப் பத்தாயத்தை ஒதைக்க வுடு. பத்தாயம் அந்தாண்ட இந்தாண்ட நவுறுதா, ஒடையுதான்னு பாரு.
பத்தாயத்துக்கு எதுவுஞ் சேதராம்ன்னா உளியையும் சுத்தியலையும் தூக்கி அந்தாண்ட வெச்சிட்டு
இன்னியோட வேல செய்யுறதை நிப்பாட்டிப்புடறேம்." அப்பிடினுச்சி செயராமு பெரிப்பா.
வெங்கு அப்பிடிக் கேட்டதுலயும், பெரிப்பா
அப்படி பதிலு சொன்னதிலயும் எந்தக் குத்தமில்லங்றது அப்போ பத்தாயத்தைப் பாத்தப்பயும்
சரி, இப்போ பத்தாயத்தைப் பாக்கறப்பயும் புரியுது. வேலைன்னு பார்த்தா அதெ ரப் அடியில
சிம்பிளா செய்யுற வேலைன்னு சொல்லுவாங்க. ஆனா ரொம்ப பலமான ஒரு பத்தாயத்தக் கோக்கறதுக்கு
எவ்வளவு வேலை பண்றமோ அத்தனை வேலையையும் அநாவசியமான எந்தச் சாமானுங்களயும் போடாமலே
செயராமு பெரிப்பா யூகமா பண்ணிப்புடும். வேலைக்குச் சரியான பலவைச் சட்டத்தைத் தோது
பண்ணிப்புட்டா அதுக்கு வேறெந்த சாமானுங்களும் தேவையில்லங்றது பெரிப்பாவோட கணக்கு.
சரியில்லாத பலவைச் சட்டத்துக்குத்தாம் ஆயிரத்தெட்டு சப்போட்டுக் கொடுக்கணும்னு அது
சொல்லும். அதுவும் சரித்தாம். அப்படி அது பண்ணிக் கொடுத்த பத்தாயங்க ஒவ்வொண்ணும்
இன்னிய தேதிக்கும் வளையாம நெளியமா உப்பாம சுருங்காம கட்டுக்குழையாத குமரிப் பொண்ணு
மாதிரித்தாம் இன்னும் நின்னுக்கிட்டு இருக்குங்க ச்சும்மா பளபளன்னு. அது என்னா பளபளன்னு
கேட்டாக்க அந்த அளவுக்கு இழைப்பைப் போட்டுட்டுத்தாம் மரவேலையில கோத்து தச்சு பண்ணுற
வேலையைப் பாக்கும் பெரிப்பா. வேலையை முடிச்சிட்டு அன்னிக்கு மத்தியானமே "ஊருக்குப்
போனா நாலு வேலையப் பிடிக்கலாம்டாம்பீ! இஞ்ஞ ச்சும்மா கெடந்துக்கிட்டுக் காரியம் ஒண்ணும்
ஆவப் போறதுல்ல. கெளம்புறேம்!"ன்னு நின்னுடுச்சி பெரிப்பா.
அப்பத்தாம் சுப்பு வாத்தியாரு கவனிக்கிறாரு
செயராமு பெரிப்பா வாங்கியாந்த பலவையில மூணு நாளு பலவைங்களும், கொஞ்சம் சட்டங்களும்
மிச்சப்பட்டுக் கெடக்குறத. அதெப் பாத்துப்புட்டுச் சுப்பு வாத்தியாரு சொல்றாரு,
"இந்தப் பலவைங்க இஞ்ஞ கெடந்து ச்சும்மா வீணாத்தாம் போவும். இதெயும் கட்டிக்கிட்டு
போயிடு யண்ணே!" அப்பிடின்னு.
"யே யப்பாடி! வர்றப்பவே முடியலடாம்பீ!
பலவையக் கட்டிட்டு பாதியில வர்றப்பவே எறங்கக் கூடாது காரியத்துல எறங்கிப்புட்டேம்னு
புரிஞ்சிப் போச்சிடாம்பீ. இதெ மறுபடியும் கட்டிக்கிட்டுல்லாம் கொண்டுட்டுப் போவ
முடியாதுடாம்பீ! அது கெடக்கட்டும் போடு. எதுக்காச்சிம் ஒனக்கு ஒபயோகப்படும்!"ங்குது
பெரிப்பா.
இதெ கேட்டுப்புட்டு "ச்சும்மா கெடந்து
வீணாப் போவுறதுக்கு உக்கார்றதுக்குத் தோதா பெஞ்சா அடிச்சிப் போட்டா நல்லாருக்கும்ல!"ங்குது
வெங்கு.
பத்தாயம் வேலைதாம் முடிஞ்சிப் போயிடுச்சுன்னு
பெரிப்பா சாமானுங்களையெல்லாம் எடுத்துக் கட்டி வைக்கச் சொல்லிடுச்சி. கடைசீ நேரத்துல
வெங்கு இப்படிச் சொன்னதால, "அது ஏம்டாம்பீ ஒரு கொற? ஏய் பரசு! கட்டை ஒடைடா!
ஒரு சோபா பெஞ்சா கோத்துப் போட்டுப்புடுவேம்!"ன்னு சொன்னதுதாம் அடுத்த ஒரு
மணி நேரத்துல சோபா பெஞ்சா அதெ கோத்துப் போட்டு வேலையை முடிச்சிடுச்சி. ஏற்கனவே பலவையையெல்லாம்
இழைப்புப் போட்டு வெச்சிருந்ததால வேலைய ரப் அடி அடிச்சி இரும்பு ஆணியைப் போட்டு கோத்து
முடிச்சிபுடுச்சி. பெரிப்பாவோட வேலை எப்பவும் அப்படித்தாம். சாதாரணமா ஒரு ஆச்சாரி
அஞ்சு நாள்ல செய்யுற வேலைய மூணே நாள்ல முடிச்சிப்புடும். மரவேலையில அலங்கார வேலை செய்யுறதெல்லாம்
அதுக்குப் பிடிக்காது. சுத்தமா பலவையையும், சட்டத்தையும் இழைச்சோமோ, அதைத் தச்சுக்
கோத்தோமான்னு வேலையை முடிச்சிட்டுக் கெளம்பிடும். "வேலைன்னா எப்பயும் பழமைக்குப்
பழமையா, புதுமைக்குப் புதுமையா இருக்கணும்டாம்பீ! அதுக்கு அலங்காரம்லாம் பண்ணக் கூடாது.
அலங்காரங்றது ஒவ்வொரு காலத்துக்கும் ஒவ்வொண்ணா இருக்கும். ஒரு காலத்து அலங்காரம்இன்னொரு
காலத்துல பழசா போயிடும்டாம்பீ!" அப்பிடின்னு அதுக்கு ஒரு விளக்கத்தையும் சொல்லும்.
"அலங்கார வேல வேணும்னா நம்மகிட்ட
வராதீங்க! ஏதோ ஒரு தோதுக்கு வேலையப் பாக்குறேம். அந்த வேலையைப் பாக்குறதுக்கே தோது
பண்ணிட்டு நிக்க முடியா"ன்னும் அது வெளிப்படையாவே சொல்லிப்புடும். ஆனா சுப்பு
வாத்தியாரு அப்படிக் கெடையாது. வேலைன்னு ஆரம்பிச்சா நுணுக்கமா அலங்காரத்தோட செய்யணும்னு
நெனைப்பாரு. அவங்களோட அப்பங்காரரான சாமிநாதம் ஆச்சாரியும் அப்படித்தாம். அவரு மர வேலைய
ஒரு கலையாத்தாம் செய்வாரு. அவரு செஞ்ச வேலையை அதுல இருக்குற நயத்தைப் பாத்து அவருதாம்
செஞ்சதுன்னே சொல்லிப்புடலாம். பெரிப்பாவைப் பொருத்த வரைக்கும் அவரோட நெனைப்புங்றது
நமக்காகத்தான் வேலையே தவிர, வேலைக்காகல்லாம் நாம்ம கெடையாதுங்றதுதான்.
செயராமு பெரிப்பா அப்படிக் கோத்துக் கொடுத்த
அந்தப் பத்தாயத்துல எந்த வருஷமும் நெல்லுமணிக கொறைஞ்சது கெடையாது. அந்த ராசிக்காகவே
பிற்பாடு அதுக்கு வயசாகிக் கண்ணு பார்வைப் புரியாம போன காலத்திலயும் வேலை ஓடிட்டே
கெடந்துச்சுன்னா நீங்க நம்புவீங்களோ என்னவோ! கண்ணு பார்வை புரியாமப் போன அந்தக்
காலத்திலயும் அது வேலை செஞ்ச அந்த ஞாபகத்துலயே அதாவது அந்த பழக்க தோஷத்துலயே வேலையப்
பாத்துச்சு. அந்த அளவுக்கு வேலை அதோட மனசுல நூலறந்துப் போயிருந்துச்சு. அதோட வாழ்க்கையில
அது கோத்த பத்தாயத்தையோ, பீரோலையோ, கட்டிலையோ இத்தனைன்னு சொல்லிட முடியாது. முன்னாடி
அது கண்ணு பாத்து செஞ்ச வேலையைப் பிற்பாடு அது மனச மட்டும் ஆதாராம வெச்சி மனக்கண்ணுலயே
பாத்துக்கிட்டு, மனசுக்குள்ளயே கணக்குப் பண்ணிக்கிட்டு மரவேலைங்களல செஞ்சுக்கிட்டு
இருந்துச்சு.
செயராமு பெரிப்பா செஞ்சு கொடுத்த அந்தப்
பத்தாயத்துக்கு நீலம், பச்சைன்னு வித விதமா ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை பெயிண்டு
அடிச்சி அழகு பாக்கறதுதாம் சுப்பு வாத்தியாருக்கு வேலை. ஒவ்வொரு வருஷமும் புது நெல்லு
கொட்டுறதுக்கு முன்னாடி பத்தாயத்தை முழுசும் கழட்டி தொடைச்சி வெயில்ல காயப்போட்டு,
காய்ஞ்ச பின்னாடி பத்தாயப் பூட்டி, ஒரு நாளு பூரா அப்படியே போட்டு, அதுக்குள்ளார அரைமணி
நேரத்துக்குச் சாம்பிராணியப் போட்டு பெறவுதாம் காய வெச்ச நெல்லை அதுல கொட்டுவாரு
சுப்பு வாத்தியாரு. காய வெச்ச நெல்லைக் வேப்ப இலையையும், நொச்சித் தழையையும் கலந்துகட்டி
கொட்டுன பத்தாயத்தை ஒரு ராத்திரி மூட மாட்டாரு. மறுநாளுதாம் மூடுவாரு. நொச்சித் தழையிலயும்
மூணு தழை நொச்சியா இல்லாம, அஞ்சு தழை நொச்சியா பாத்துக் கொண்டாந்துதாம் கொட்டுவாரு.
*****
No comments:
Post a Comment