16 Dec 2019

சம்சாரிகளின் கனவுகள்



செய்யு - 300
            செடி, கொடிங்க, மர, மட்டைங்க, ஆடுங்க, மாடுங்க, மனுஷங்க வளருவாங்க. ஒரு வீடு வளருமான்னா கேட்டாக்க நீங்க சுப்பு வாத்தியாரு வீட்டைத்தாம் பார்க்கணும். வீட்டுல எதாச்சிம் பண்ணி புதுசு புதுசா சேர்த்துக் கட்டிக்கிட்டு இருக்கிறது அவருக்கு ஒரு சுபாவாமாவே ஆயிடுச்சு. ஒரு ரெண்டு நிமிஷ நேரம் அசந்து ஒக்கார தோது கிடைச்சாலும் அந்த நேரத்துலயும் வீட்டுல உள்ள நெலை, சன்னலைத் தொடைக்கிறதுன்னு எறங்கிடுவாரு சுப்பு வாத்தியாரு. தேங்கா எண்ணெயையும், மண்ணெண்‍ணெயையும் கலந்து ஒரு விநோதமான கலவையை உண்டு பண்ணி ஒரு பழந்துணிய வெச்சிக்கிட்டு அதாலத்தாம் வீட்டோ நெலை, கதவு, சன்னல்களைத் தொடைப்பாரு. துடைச்சி முடிச்சதும் பார்த்தாக்க அப்போ பெயிண்டு வெச்ச மாதிரி எல்லாம் பளபளக்கும்.

            வருஷத்துக்கு ஒரு தடவை பெயிண்டு டப்பாவையும், பிரஸையும் வாங்கி வெச்சிக்கிட்டு நேரம் கிடைக்கிறப்பல்லாம் கொஞ்சம் கொஞ்சமா கதவு, சன்னலு, நெலைக்கெல்லாம் மாசக்கணக்குல பெயிண்டு அடிச்சிக்கிட்டு கெடப்பாரு. "ஏம்டாம்பீ! இவருக்கு இந்த வேலயத்த வேல! வூட்டுல வேற எதாச்சிம் வேலயப் பாத்தாலும் உருப்படியாவும். இப்பிடி வூட்டுல வேலயப் பாத்துக்கிட்டுக் கெடக்குறாரே!"ன்னு விகடுகிட்ட பேசுறது போல சுப்பு வாத்தியாருக்கு சாடையா பாட்டு விடும் வெங்கு. சுப்பு வாத்தியாரு எதையும் கண்டுக்கிட மாட்டாரு. அவரு செய்யுறதுலயே கவனமா இருப்பாரே தவிர வேற எதையும் காதுல வாங்கிக்க மாட்டாரு. தன்னோட வூட்டுல புள்ளைக் குட்டிகளைப் போஷாக்கா வளத்தது போல, வூட்டையும் ஷோக்கா வளத்தவரு சுப்பு வாத்தியாரு. ஒண்ணு வூட்டை நீட்டிக் கட்டிக்கிட்டு எதாச்சிம் வேலையப் பாத்துட்டு இருப்பாரு, இல்ல வூட்டுக்குள்ள எதாச்சிம் வேலையப் பாத்துட்டு இருப்பாரு.
            ஒரு சம்சாரிக்கு வூடுங்றது எப்பவும் கனவு, லட்சியம், உசுருன்னு எப்படி வேணாலும் சொல்லலாம். தமிழ்ல முக்திங்றத வீடுபேறுன்னு ஏன் சொல்றாங்கன்னா வீடு அவுங்களுக்குத் தர்ற அமைதியையும், நிம்மதியையும் வெச்சுத்தாம் போலருக்கு. வெளியில எவ்வளவுதாம் பிரச்சனைன்னாலும் வூட்டுக்கு வந்து சித்த நேரம் துண்ட விரிச்சிப் படுத்து எழுந்திரிச்சா எல்லா பிரச்சனையும் தீர்ந்தது போல மனசுக்கு ஒரு அமைதிக் கொடுக்குறது வூடுதான்னு அடிக்கடிச் சொல்வாரு சுப்பு வாத்தியாரு. ஒண்ட ஒதுங்க ஒரு வூடுல்லன்னா நாலு பேரு நம்மள மதிக்க மாட்டான்னு அவரு அடிக்கடிச் சொல்வாரு. சம்சாரிக்கு வூடுங்றது ஒரு ஆசெ, கனவுன்னா... வீட்டைக் கட்டி முடிக்கிற சம்சாரிக்கு அடுத்த ஆசெ, கனவுன்னா அது வயலுகள வாங்கிப் போடுறதுதாம்.
            வயல்களப் பொருத்த மட்டில பாத்தீங்கன்னா 'இந்திரன் மாறுவான், இந்திராணி மாற மாட்டாங்'றது ஒரு சம்சாரியோட நெனைப்பு. இந்திரங்றத நெலத்தை வெச்சிருக்கிறவங்களயும், இந்திராணிங்றத நெலத்தையுமா அவுங்கச் சொல்லுவாங்க. நெலத்தை வெச்சிருக்கிறவங்க மாறுவாங்களே தவிர, நெலம் மாறாதுங்றது அவங்களோட கருத்து. அதாவது நெலம் நிரந்தரம், அதெ வாங்கிப் போடணும்ங்றதுல கருத்தா இருப்பாங்க கிராமத்துச் சம்சாரிங்க. நெலத்தை வாங்கிப் போட்டாக்கா அவங்கத்தாம் இந்திரன்ங்க. அந்த இந்திரப் பதவிய விட்டுப்புட கூடாதுல்ல. இந்திரப் பதவிய வுட்டுப்புட்டா இந்திராணி அடுத்து இந்திரனா வர்றவணுக்குல்லப் போயிப்புடுவா. அதால நெலத்தை வாங்கிட்டாங்கன்னா அதெ சாமானியத்துல விக்க மனசு வராது அவுங்களுக்கு.
            எம்மாம் கஷ்டம்னாலும் சம்சாரிங்க பல்ல கடிச்சிக்கிட்டாவது தலையை அடமானம் வைக்கிறதுக்குக் கூட சம்மதிப்பாங்களே தவிர, சோறு போடுற வயலுகள விக்க மட்டும் சம்மதிக்க மாட்டாங்க. அதெ வித்த இந்திரப் பதவியில்ல போயிடுது. திட்டையிலயும், வடவாதியிலயும் இருந்த பலபேரோட நெனைப்பு இப்படி இருந்ததால அவரு குடி வந்த திட்டையிலயும் சரி, வடவாதியிலயும் ரொம்ப காலத்துக்குச் சுப்பு வாத்தியாரால எந்த வயலையும் வாங்கிப் போட முடியல. இருந்தாலும் அவரு மனசுக்குள்ள திட்டையிலயோ, வடவாதியிலயோ ஒரு துண்டு துணி நெலத்தையாவது வாங்கிப் போடணும்னு ஆசெ ஒரு கனவு போல இருந்துக்கிட்டே இருந்துச்சி.
            குடி இங்க திட்டைக்கு வந்துட்டதால இங்க பக்கத்துல நெலம் இருந்தா நல்லா இருக்கும்ணு அது ஒரு யோசனெ வேற சுப்பு வாத்தியாருக்கு. இங்க திட்டையில நெலம் கை மாறுறதுங்றது ரொம்ப கம்மி. அப்படியே கைமாறுனாலும் கண்ணும் கண்ணும் வெச்ச மாதிரி, காதும் காது வெச்ச மாதிரித்தாம் கைமாறும். நெலம் கைமாறி ஆறெழு மாசங்கழிச்சுத்தாம் வெளியிலயே விசயம் தெரியும்னா பாத்துக்குங்க. நெலத்தை வெச்சிருந்த யாரும் அம்மாம் சாமானியமா நெலத்தைக் கைமாத்தி விட மாட்டாங்க. அத்தோட இங்க திட்டையிலயும், வடவாதியிலயும் இருந்த நெலங்களுக்குப் பத்திரச் சுத்தங்றது அறவே கெடையாது.
            திட்டையிலயும், வடவாதியிலயும் நெலத்தை வாங்குறவங்க கைப்பத்திரமா எழுதி எழுதி வித்துக்கிட்டும், வாங்கிக்கிட்டும் இருந்தாங்க. கெரயம் பண்ணணும்னா அதுக்கு வேற ஏன் தண்டத்தக் கொடுத்து அழுவணும்னு நெனைச்சி அவங்கவங்க இருந்துட்டதால திட்டையிலயும், வடவாதியிலயும் பத்திரப்பதிவு பண்ணி கெரயம் ஆன வயலுங்க ரொம்ப கம்மியா இருந்துச்சி. இந்தக் கிராமத்து சம்சாரிங்களோட ‍நெனைப்புத்தாம் நீங்க அறிஞ்ச கதையாச்சே. அதால அப்படிக் கெரயம் பண்ணவங்களும் நெலத்தை விக்காம சாவடிக்குத்தாம் விட்டுக்கிட்டு இருந்தாங்க. சாவடிக்கு விடுறதுன்னா வருஷத்துக்கு இம்மாம் பணம்னோ அல்லது இத்தனை நெல்லு மூட்டைகள்னோ வயலோட சொந்தக்காரங்ககிட்ட பேசி முன்கூட்டியே பணத்தைக் கொடுத்துட்டோ அல்லது நெல்லு விளைஞ்ச பிற்பாடு நெல்லு மூட்டைகளோ கொடுத்துப்புட்டோ அந்த வருஷத்துக்கு வயலைச் சாகுபடிப் பண்ணிக்கிறதுதாம். அப்படித்தாம் நெலம் பெரும்பாலும் கை மாறாம திட்டையிலயும், வடவாதியிலயும் வெள்ளாமை விவசாயம்லாம் நடந்துக்கிட்டு இருந்துச்சி. அது போல சாவடிக்கு நெலத்தை விவசாயம் பண்றதுல சுப்பு வாத்தியாருக்கு விருப்பம் இல்லாதால அவரு திட்டையிலயும், வடவாதியிலயும் வயலு வாங்குற ஆசையெ கொஞ்ச வருஷத்துக்கு மறந்து போச்சு .

            சுப்பு வாத்தியாருக்கு ஓகையூர்ல் இருந்த ரெண்டரை நிலந்தாம் ரொம்ப வருஷத்துக்கு சோறு போட்டுக்கிட்டு இருந்திச்சி. திட்டையிலேந்து ஒரு வயலு வந்து சோறு போடணுங்ற அவரோட ஆசை ரொம்ப வருஷத்துக்கு கனவாவே இருந்திச்சி.  பிற்பாடு நாலஞ்சு வருஷம் கழிச்சி ஓகையூர்ல அந்த நெலத்துக்குப் பின்னாடி இருந்த ஒன்றரை மா நெலத்த வாங்க முடிஞ்ச சுப்பு வாத்தியாருக்கு திட்டையிலயோ, வடவாதியிலயோ வயல வாங்க முடியல.
            திட்டையில அவரு குடி வந்து ஆறு வருஷ காலம் கழிச்சுத்தாம், வைத்தி தாத்தா மூலமா திட்டையில சவுக்கண்டித் திடலுக்குப் பக்கத்தாப்புல பனைமரத்தடிப் பக்கத்துல எழுவது குழி நெலம் ஒண்ணு விக்குற தோதுல இருக்குற சேதி தெரிஞ்சது சுப்பு வாத்தியாருக்கு. அந்த நெலம் வைத்தி தாத்தாவோட நெலம் இருந்த ஒன்றரை மாவுக்குப் பக்கத்துல இருந்துச்சி. அதால சேர்த்தாப்புல இருக்கட்டும்னு அந்த நெலத்தை மொதல்ல வைத்தி தாத்தா வாங்குறதாத்தாம் முடிவாச்சி. வைத்தி தாத்தா பிற்பாடு என்ன நெனைச்சாரோ தெரியல, மருமவனுக்கு இங்க ஒரு நெலம் இருக்கட்டுமேன்னு அதெ சுப்பு வாத்தியாரையே வாங்கிகிக்கச் சொல்லிட்டாரு. அப்படி வாங்குன எழுவது குழி நெலந்தாம் திட்டையில அவரு வாங்குன மொத நெலம். அடுத்த ரண்டு வருஷத்துல வடவாதி சினிமா கொட்டாய்க்குப் பக்கத்துல இருவது குழி நெலம் விக்குற தோதுக்கு வந்தப்போ அது சின்ன நெலமா இருக்கேன்னு அதையும் சுப்பு வாத்தியார்ர வாங்கிக்கச் சொன்னாரு வைத்தி தாத்தா. இப்படிக்கி தொண்ணூறு குழி நெலம் இங்க திட்டையிலயும் வடவாதியிலயும், ஓகையூர்ல நாலு மா நெலமும் சுப்பு வாத்தியாருக்கு இருந்துச்சு.
            திட்டையில சொந்தமா மனைக்கட்டு வாங்கி குடி வந்த பிற்பாடு, ஓகையூர்ல அவருக்கு இருந்த மொத்த நாலு மா நெலத்துல விளையுற மூட்டைகள்ல பதினெட்டு மூட்டைகள வூட்டுக்கு எடுத்து வெச்சிக்கிறதெ ஒரு வழக்கமா வெச்சிக்கிட்டாரு சுப்பு வாத்தியாரு. மீதி மூட்டைகள யேவாரிக்கிட்ட போட்டுடுவாரு. திட்டையில, வடவாதியில வெளையுற நெல்லு பூராவும் யேவாரிகிட்ட போயிடும். ஓகையூர்ல அவரு மொத மொதலா வாங்குன நெலத்திலேர்ந்துதான் அவரு வூட்டுக்கான நெல்லை எடுத்து வெச்சிப்பாரு. அதெ ஒரு ராசி மாதிரி இப்பவும் பண்ணிக்கிட்டு இருக்காரு சுப்பு வாத்தியாரு. மிச்ச மீதி நெல்லையெல்லாம் யேவாரிக்கிட்டப் போட்டு இருக்கற கடங்கப்பிய அடைச்சிக்கிட்டுக் கெடப்பாரு. சம்சாரிக்கு ஆசெ, கனவுகளுக்குக் கொறைச்சல் இருக்காதது போல கடங்கப்பிக்கும் எப்புவம் கொறைச்சல் இருக்காது.
            ஓகையூரு நெலத்திலேந்து வர்ற நெல்லு மூட்டைகள்ல அவரு எடுத்து வைக்கிற பதினெட்டு மூட்டைகள்ல அத்தனையும் வருஷத்துக்குத் தேவைப்படாது. பதினெட்டு மூட்டைங்றது அவருக்கு ஒரு கணக்கு. அந்த கணக்குப்படி மூட்டைங்க வீட்டுக்கு வந்தாவணும். அத்தனை மூட்டைகள்ல ஒம்போது அல்லது பத்துலேந்து  அல்லது‍ ரொம்ப அதிகபட்சமா பன்னெண்டு மூட்டைகளே அவுங்க தேவைக்குப் போதும். மீதி மூட்டையில இருக்குற நெல்லு சொந்த பந்தங்களோட கலியாணத்துக்கோ, சொந்த பந்தங்கள்ல கஷ்டப்படுறவங்களுக்கோ அரிசியாக்கிக் கொடுத்திடுவாரு. எப்படியும் வருஷத்துக்கு ஒண்ணு ரெண்டு கல்யாணமாவது வரும். அப்போ ஒரு மூட்டை அரிசி, ஒன்றரை மூட்டை அரிசின்னு இவரே மெனக்கெட்டு நெல்லவிச்சி, ஆவாட்டி, அரிசியாக்கிக் கொண்டு போயிக் கொடுத்துட்டு வந்துடுவாரு.
            சுப்பு வாத்தியாரு ஓகையூரு வயல்லேர்ந்து அறுவடை பண்ணி கண்டுமுதலாயி வர்ற பதினெட்டு மூட்டைங்க அத்தனையையும் வீட்டுக்குள்ளத்தாம் மூட்டைகளா அடைச்சி வெச்சிருந்தாரு. விதை மூட்டைகள திண்ணையில செங்கல்ல அடுக்கி வெச்சி அது மேல பலகையைப் போட்டு அடுக்கி வெச்சிருப்பாரு. அவரோட கூரை வீட்டுக்கு வர்றவங்கள ‍முதன் முதலா அநேகமாக வரவேற்கிறது அவரு வூட்டோட வெதைநெல்லு மூட்டைங்கத்தாம். திண்ணையக் கடந்து அந்த கூரை வூட்டோட கூடத்துக்குள்ள கதவைத் தொறந்துகிட்டு நொழைஞ்சா ஒருக்களிச்சிக்கிட்டுத்தாம் ஒரு ஆறடி வந்தாத்தாம் செளகரியாக வர முடியும். நெல்லு மூட்டைகள அப்படி அங்க அடுக்கி வெச்சிருப்பாரு.  
            நெல்லை மூட்டையாக் கட்டி அடுக்கி வெச்சிருக்கிறதுல ஒரு செரமம் என்னான்னா பத்து மூட்டையக் கட்டி அடுக்கி வெச்சிருந்தா அதுல ஒரு மூட்டைய எலிக்கும், பெருச்சாளிக்கும் கப்பமா கட்டியாவணும். அதுங்க தின்னது போன மிச்ச மூட்டைங்கத்தாம் மனுஷனோட சாப்பாட்டுக்கு. சம்சாரி வூட்டுல சம்சாரி பட்டினிக் கெடந்தாலும் சம்சாரி வூட்டு எலியும், பெருச்சாளியும் பட்டினியாக கெடக்காதுங்ற அளவுக்கு அதுங்க பூந்து வெளையாடும். அதுங்க தின்னு தின்னு எலிய பாக்கறதுக்கு பெருச்சாளி அளவுக்கும், பெருச்சாளிய பாக்கறதுக்க சின்ன எருமை கன்னுகுட்டி அளவுக்கும் இருக்கும்ங்க. இந்த எலிங்க, பெருச்சாளிங்க ரெண்டுக்கும் ஒரு முடிவு கட்டுறதுன்னா சம்சாரி நெல்லைக் கொட்டி வைக்கிறதுக்கு குதுரைத் தயாரு பண்ணிக்கணும், இல்ல மரத்துல பத்தாயத்தைச் செஞ்சி வெச்சாகணும். இதெ பண்ணலன்னா அது எலிக்கும், பெருச்சாளிக்குத்தாம் நல்ல வேட்டையா போவும்.
            அந்தப்படி எலிக்காகவும், பெருச்சாளிக்காவும் பத்தாயமோ, குதுரோ வீட்டுக்கு ஒண்ணு வேணுங்றது ஒரு விசயம்னா, வீட்டைக் கட்டி முடிச்சதும் சம்சாரிக்கு வர்ற  அடுத்து கனவு ஒரு பத்தாயத்தைச் செஞ்சு வைக்கணுங்றதுதாம். வீடுன்னா பத்தாயம் இருக்கணும்ங்றது வீட்டைக் கட்டுற சம்சாரிக்கு அடுத்த லட்சியமாப் போயிடும். சுப்பு வாத்தியாருக்கும் அந்த லட்சியம், கனவு வந்திடுச்சு. வீட்டைக் கட்டி, வயலை வாங்கிப் போடுறது போல பத்தாயங்றதும் ஒரு சம்சாரியோட பெருங்கனவுன்னு சொல்லலாம். கிராமங்கள்ல பத்தாயம் இருக்குற வூடுகள ஒரு மதிப்பாத்தாம் பாப்பாங்க!
*****


No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...