16 Dec 2019

21.2



            கித்தாஸின் கடிதம் இப்படித் தொடங்குகிறது :-

            விகடு! நீ உலகத்தை மாற்ற நினைக்கிறாய். அது தேவைக்கேற்ப மாறிக் கொண்டு இருக்கிறது. நீ மாற்ற வேண்டியதில்லை. மாற வேண்டியது நீயே.
            நீ நடத்தும் இந்தக் கூட்டங்களை நிறுத்துவது நல்லது. இதனால் ஒரு பயனும் விளையப் போவதில்லை. மாறாக நீ உரையாடலாம். அது சரியானது. நீ எந்த அளவுக்குச் செய்யப் போகிறாய்? மேடைப்பித்துத் திரிபவர்களின் பட்டியலில் இணைந்து விடாதே. மேடை என்பது ஒரு காலத்திய தேவை. இன்று நிலை அப்படியில்லை. தேவை உரையாடல்கள் மட்டுமே.
            உனது கூட்டம் எப்படி இருக்கிறது தெரியுமா? ஹிட்லரின் பிரசங்கம் போலிருக்கிறது. முசோலியினியின் பிரகடனங்கள் போல இருக்கிறது. அறமே எனினும் அழுத்திச் சொல்லப்படும் போது அதுவும் சர்வாதிகாரமே. இப்படி ஓர் அற விளக்கத்தை நீ கேள்விப்பட்டிருக்க மாட்டாய். உலகில் ஒவ்வொரு உயிரும் விருப்பப்படி வாழும் உரிமையைப் பெற்றிருக்கின்றது. அந்த இயற்கை உரிமையைக் குழைத்து விடாதே.
            ஒழுங்குகள், விதிகள் தேவை. அது எந்த அளவுக்குத் தேவை என்று பார். அதற்கான அமைப்புகள் அதைச் சரியாக செய்யட்டும். நீ ஒருவனாக நின்று நிலைநாட்ட முயலாதே. அப்படி முயன்றால் உன் சுயநலத்தின் திசையில், உன் ஆசையின் திசையில் ஒழுங்குகளையும், விதிகளையும் உருவாக்குவாய். காலம் காலமாய் அதுதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
            நீ நடத்தும் கூட்டங்களால் பல பேரைப் பாதிக்க முயல்கிறாய். அந்த பாதிப்பு நிச்சயம் நீ எதிர்பார்த்தது போல இருக்கப் போவதில்லை. அது ஓர் தீவிரத் தன்மையில் எதிர் நிலையில் பாதிப்பை ஏற்படுத்துமானால் அதற்கு நீதான் பொறுப்பேற்றாக வேண்டும்.
            வாழ்க்கையை அனுபவி. நொடிகளை ரசி. உனக்குத் தேவையில்லை இந்த வேலையற்ற வேலை. நான் சொல்வதானால் நீ கேட்பாயா? எனக்கு அது தெரியாது. இது நிச்சயம் உன்னுடைய பாதையாக இருக்காது. நீ விரும்பினால் என்னோடு வரலாம். அதற்காக நான் செல்லும் பாதையைச் சொல்லி விட்டுச் செல்ல மாட்டேன். நீ விரும்பினால் என்னைத் தேடிக் கண்டுபிடித்து அடை. என்னை அடைவதற்காக என்னுடைய விலாசத்தை உன்னிடம் விட்டுச் செல்வேன் என்று எதிர்பார்க்காதே.
            எப்படியாகினும் இந்த உலகைப் புரிந்து கொள்ள நிறைய இருக்கிறது. முழுமையாகப் புரிந்து கொண்ட பிறகே எதையும் மாற்றத் தேவையில்லை என்பதைப் புரிந்து கொள்வாய். அதுவரை மாற்ற வேண்டும் என்று துடிப்பாய். அது உன் மனசஞ்சலம் என்று உணரும் நாள் வரை உன்னைத் திருத்த முடியாது.
            என்னுடைய பாதையை நோக்கி வா என்று உன்னை அழைக்க மாட்டேன். வருவதும், வராமல் போவதும் உனது விருப்பச் சித்தம். என்னைத் தேடாதே. தேடிக் கண்டுபிடிக்க முடிபவன் இல்லை இந்த கித்தாஸ்.
            கித்தாஸ் ஒரு பூலோக சஞ்சாரி. கித்தாஸ் ஒரு பெருவெடிப்பு.
இப்படிக்கு அருளாசிகளுடன்,
கித்தாஸ்.
*****


No comments:

Post a Comment

இருக்கும் போதும்… இல்லாத போதும்…

இருக்கும் போதும்… இல்லாத போதும்… சம்பாதிக்கும் காலத்தில் ஆயிரம் ரெண்டாயிரம் என்று கடன் கொடுக்க ஆயிரம் பேர் ஐயா கடன் வேண்டுமா என்று அ...