15 Dec 2019

பாலு காய்ச்சுறதே வேலையாப் போச்சு!



செய்யு - 299
            செயராமு பெரிப்பா பணங் காசு கொடுத்து ஒதவலன்னாலும் சொன்னபடியே மனைகட்ட வாங்கிப் போட்டதும் வந்து வேலை பாத்துக் கொடுத்துச்சு. பொதுவா வீட்டோட மனைக்கட்ட வாங்குனாலும் அந்த வூட்டுல அப்படியே குடி போயிட மாட்டாங்க கிராமத்துச் சனங்க. அந்த வூட்டுல பேருக்காவது சின்னதா ஒரு மாத்தம் பண்ணிட்டுத்தாம் குடி போவாங்க. எந்த மாத்தமும் பண்ண அவசியமில்லனாலும் வூட்டுக்கு வெள்ளையடிச்சி கூரை மாத்திட்டுத்தாம் குடி போவாங்க. வாங்குன வூட்டுல அப்படியே குடி போவக் கூடாதுங்றது இங்க கிராமத்துல ஒரு பழக்கம். அந்தபடிக்குக் கோவாலு ஆச்சாரிக்கிட்டேயிருந்த வாங்குன வூட்டுல சின்னதா இல்லாம பெரிசாவே நெறைய மாத்தம் பண்ண வேண்டி இருந்துச்சு.

            கோவாலு ஆச்சாரி அவுங்க பாட்டன், முப்பாட்டன் எப்டி வீட்டை வெச்சிருந்தாங்களோ அப்படியேத்தாம் வெச்சிருந்தாரு. அந்த வூட்ட எடுத்து முன்ன பின்ன கட்டணும்னோ, உசரத்தைக் கொஞ்சம் தூக்கிக் கட்டணும்னோ அவருக்குத் தோணல. அந்தக் கொறையப் போக்கணும்னுதாம் சுப்பு வாத்தியாரு அந்த எடத்தை வாங்குனாரோ என்னவோ! அவரு வூட்டை வளைச்சு வளைச்சு வளத்துக்கிட்டுப் போன கதெ இருக்கே! அதுக்கு முன்னாடி கொஞ்சம் அந்த எடத்துல இருந்த வூட்டுல செஞ்ச மாத்தத்தப் பாத்துப்புட்டு பின்னாடி அதெ பார்ப்போம். இருந்த கொஞ்ச நஞ்ச எடத்தையே வித்துக் காலத்தை ஓட்டுனவரு கோவாலு ஆச்சாரி. அவருக்கு அதெ எடுத்துக் கட்ட, பாக்க எங்க நேரம் கெடைச்சிருக்கப் போவுது? அந்த வூட்டை வாங்குனப்போ வூட்டோட சுவருங்க எல்லாம் நாலடி அஞ்சடி அளவுக்குத்தாம் இருந்துச்சுங்க. அதெல்லாம் அம்பது அறுவது வருஷத்துக்கு மிந்தி வெச்ச சுவருகளா இருந்திருக்கும். அம்பது அறுவது வருஷத்துக்கு முந்தி வெச்ச மண்ணு சுவர்களனாலும் அதெல்லாம் பாறாங்கல்ல வெச்சிக் கட்டுன மாதிரி அழுத்த திருத்தமா இருந்துச்சுங்க. அப்படி வேலைப்பாடா பண்ணியிருந்துக்காங்க. அந்தக் காலத்து வேலையெல்லாம் அப்படித்தாம் ரொம்ப முறையா சட்ட திட்டமா இருக்கும். அந்தச் சுவத்துக்கு ஏத்தபடி கூரையும் தணிஞ்சாப்புலத்தாம் இருந்துச்சு. இதெ வந்துப் பாத்தாரு செயராமு பெரிப்பா. பாத்தவரு கூரையை மொத்தமா எடுத்துப்புட்டாரு.
            செயராமு பெரிப்பா ஆசாரின்னாலும் கரணையையும், தூக்குச்சட்டியையும், மேல ரெண்டடி தூக்குற அளவுக்குத் தேவையான செங்கல்லுகளையும் வாங்கியாரச் சொல்லி அவரே தலையில ஒரு துண்டைக் கட்டிக்கிட்டு கொத்தனாரா வேலையைச் செய்ய ஆரம்பிச்சிட்டாரு. மண்ணைக் கொழைச்சுத் தர்றதுக்கும், செங்கல்லைத் தூக்குத் தர்றதுக்கும் கூட ஒரு கையாளை மட்டும் வெச்சிக்கிட்டாரு. அதாவது மண்ணு சுவத்துக்கு மேல செங்கல்லு சுவரு. சுவத்தையும் வெச்சி அவரே மேல மண்ணையும் பூசி முடிச்சிக்கிட்டாரு. அவரே வடவாதி, திட்டை, மணமங்கலம், ஓகையூர்னு அங்கங்க அலைஞ்சு கூரைப் போடறதுக்குத் தோதா நல்ல கல்லு மூங்கியா பாத்து வாங்கி அந்த எடத்துல வெச்சி கழியில கழிக்க வேண்டிய கழிச்சி ஆளுகளப் பிடிச்சி அவுங்க தலையில ஏத்தி விட்டு வூட்டுப்பக்கம் கொண்டாந்துட்டாரு.
            நல்ல அம்சமாக மழைப் பேஞ்சா தண்ணி தங்காம தேங்காம கீத்துங்க ரொம்ப நாளைக்கு நிக்குறதுக்கு ஏத்தாப்புல வாட்டமா கூரைக்கான உள்கூட்டை மூங்கில வெச்சி அம்சமா போட்டாரு. அவரு அவ்வளவு அம்சமா போட்ட உள்கூட்டை விடுறதுக்கு மனசில்லாம சுப்பு வாத்தியாரு அந்த வீட்டைத் தட்டி விட்டுப்புட்டு பிற்காலத்துல மச்சு வீடு கட்டுனப்பவும் ஒரு வேலையைப் பண்ணாரு. அந்த உள்கூட்டை அப்படியே ஆளுங்கள வெச்சி தூக்கி மாட்டுக் கொட்டகைக்கு மாத்திக்கிட்டாரு. மாடுங்கள விக்குற வரைக்கும் அது மாட்டுக் கொட்டகையில அப்படியே இருந்துச்சு அந்த உள்கூடு. பிற்பாடு அதெ மச்சு வீட்டுக்குப் பின்னாடி தூக்கி வெச்சி ஒரு கொட்டகையாவும் வெச்சிருந்தாரு. அந்த அளவுக்கு செயராமு பெரிப்பா தரமான மூங்கியா தேர்வு பண்ணி கூரைக்கான உள்கூட்டை பண்ணியிருந்துச்சு. அந்த உள்கூட்டோட அளவு அம்சமும் அப்படி இருந்துச்சு. அந்த உள்கூட்டை உண்டு பண்ண பெரிப்பா ரெண்டு ஆளுகள மட்டுந்தாம் தொணைக்கு வெச்சிக்கிட்டுச்சு. ரொம்ப ஆளுகள தொணைக்கு வெச்சிக்கிட்டு தம்பிக்காரனுக்கு செலவ அதிகம் பண்ணிடக் கூடாதுன்னு அது கவனமா இருந்துச்சு. தம்பிக்காரனுக்கு பணங்காசு, சொத்துபத்த கொடுத்து ஒதவி பண்ணாட்டாலும், இது மாதிரியாவது ஒதவி பண்ணணுங்றதுல அது குறியா இருந்துச்சு. எடத்தை வாங்கிப் போட்டதோட சரி சுப்பு வாத்தியாரு. அந்த எடத்துல வந்து குடியிருக்கிறாப்புல எல்லாத்தையும் சரி பண்ணி ராப்பகலா வேல பாத்து மெனக்கெட்டது எல்லாம் செயராமு பெரிப்பாத்தாம்.

            கையில இருந்த காசு, விகடபிரசண்டரு வாத்தியாரு மூலமா வந்து காசு, வைத்தி தாத்தா, லாலு மாமா, விநாயகம் வாத்தியார்ன்னு கைமாத்தா வாங்குன காசு எல்லாம் சேர்த்து இருந்த எட்டாயிரத்து சொச்சம் ரூவாயும் எடம் வாங்குனது, அதுக்கு ரிஜிஸ்தரு பண்ணணுது, வூட்டைச் சரிபண்ணிச் செலவு பண்ணுதுன்னு போக கையில தம்புடி தேறல. எல்லாம் தயாரான பின்னாடி வூட்டுக்குக் குடி போறதுக்கு நாலு பேரைக் கூப்புட்டு சாப்பாட்ட போட்டு பண்ணலாம்னு பாத்தா அதுக்கு கையில காசு இல்லாம போயிடுச்சு. அப்போ செயராமு பெரிப்பாத்தாம் சொன்னிச்சி, "காசிக்காக ரொம்ப அல்லாடமா பால காய்ச்சிட்டு குடி போயிடு பாத்துக்கலாம். பின்னாடி கையில காசி வந்து தோதுபடுறப்பா ஊருல நாலு பேர கூப்பிட்டு சோத்தப் போட்டுக்கலாம். ரொம்ப யோஜனெ பண்ணிக்கிட்டுக் கெடக்க வாணாம். கடங்கப்பிய வேற கண்ணு மண்ணு தெரியாம வாங்கி வெச்சிருக்கீயேடாம்பீ!" அப்பிடினுச்சு.
            சரிதான்னு சுப்பு வாத்தியாரும் ஊருல நாலு பேர்கிட்ட சொல்லி, வைத்தி தாத்தா வூட்டுக்குச் சொல்லி, லாலு மாமா வூட்டுலப் போயி சொன்னாக்கா அது, "ஒங்களுக்கு இதாம் வேல. வருஷத்துக்கு ஒரு வூடு மாறிக்கிட்டு, பாலு காய்ச்சறேம், தண்ணிய காய்ச்சிறேம் வந்திட்டுப் போங்கன்னு வந்து நிக்குறது? இப்படி வருஷத்துக்கு நாலு வூடு மாறி பாலு காய்ச்சிறேம்னு வந்து நிக்குறதுக்கு எவங்கிட்டே நேரம் கெடக்கு? ஒங்களுக்கு வேல வெட்டியில்ல. இத்த ஒரு வேலையா வெச்சிக்கிட்டு? எல்லாத்துக்கும் அப்டியா வேல வெட்டி இல்லாம கெடக்காங்க? அக்கம் பக்கத்துல இருக்குறவங்ககிட்ட சொல்லிக் காய்ச்சிப்புட்டு உள்ள போற வழியப் பாருங்க! ச்சும்மா தொட்ட தொண்ணூறுக்கும் வந்து நின்னுகிட்டு அஞ்ஞ வா, இஞ்ஞ வான்னுகிட்டு. இஞ்ஞ மனுஷன் சோலியில்லாமலா கெடக்குறாம் அஞ்ஞ இஞ்ஞ வந்து நிக்குறதுக்கு? பேசாம போவீயளா? எதுக்கெடுத்தாலும் தொணதொணத்துக்கிட்டு!" அப்பிடினிட்டு லாலு மாமா. ஐநூத்து ரூவாய கைமாத்தா கொடுத்தெல்லாம் ஒதவி பண்ணிருக்காரேன்னு கூப்புட வந்தா இப்படிச் சொல்றாரேன்னு ஒண்ணுஞ் சொல்ல முடியாமா தலையைக் குனிஞ்சிட்டு வந்துட்டாரு சுப்பு வாத்தியாரு. இப்படித்தாம் திட்டைக்கு அவரு பாலை மட்டும் காய்ச்சிக் குடிச்சிப்புட்டு குடி வந்தாரு. இப்போ திட்டைக் கிராமத்துல அவரும் ஆளாயிட்டாரு.
            அப்படிக் குடி வந்த வீட்டை அவரு வருஷத்துக்கு வருஷம் நீட்டிக்கிட்டே போன கதைக்கு இப்ப வந்திடலாம். வூடு பொழக்கம் பத்தல, சாமாஞ் செட்டுகள போட்டு வைக்கிறதுக்கு எடம் பாத்தல, நெல்லு மூட்டைகள அடுக்கி வெச்சிக்கிறதுக்கு எடம் பத்தலன்னு அவரு கொல்லைக் கடைசி வரைக்கும் வீட்டை இழுத்துக்கிட்டே போனாரு.
            அவரு வூட்டுக்குப் பின்னாடி இருந்த கொல்லைக அப்போ திட்டைப் பண்ணையத்துல பண்ணைக்காரய்யாவுக்குச் சொந்தமா இருந்துச்சு. பண்ணைக்காரய்யா மன்னார்குடிக்கு ஜாகையா போயி இருவது வருஷத்துக்கு மேல ஆயிப் போச்சு. இதுக்கு மேல ஊருல அந்த எடங்க சும்மா கெடந்து என்னாவப் போவுதுன்னு பண்ணைக்காரய்யா அந்த எடங்களல விக்கலாம்னு முடிவு பண்ணப்போ சுப்பு வாத்தியாரு அவரு வூட்டக்குப் பின்னாடி இருந்த எடத்தை 12 குழிய வாங்கிக்கிட்டாரு. அதுக்கு அப்போ பதினாலாயிரமோ என்னவோ கொடுத்ததா ஞாபவம்னு சொல்லுவாரு சுப்பு வாத்தியாரு. இது அவரு வூட்டை வாங்கி ஏழெட்டு வருஷத்துக்குப் பின்னாடி நடந்த சமாச்சாரம். வாங்குனவரு அந்தக் கொல்லையிலத்தாம் குடிதண்ணிக்குப் பைப்பைப் போட்டாரு. அது நல்ல தண்ணியா அமைஞ்சிப் போச்சுது. இந்த ஊருல ரொம்ப ரொம்ப நல்ல தண்ணின்னா அது இந்த ஊரு முச்சந்தியில இருக்குற பைப்புத் தண்ணியும், அடுத்ததா சுப்பு வாத்தியாரு வூட்டுல இருக்குற அவரு வூட்டுத் தண்ணியும்தான்.
            அவரு பைப்பு போட்டுருக்குற கொல்லைக்குப் பின்னாடி ஒரு ஊருணிக் குட்டை இருந்துச்சி. அந்தக் குட்டையோட கரையில வூட்டுத் தேவைக்கு மூங்கிலுக்கு ஆவும்ணு ரெண்டு மூங்கிக் குத்தைப் போட்டு வெச்சாரு. அதுலேந்து மூங்கியை வெட்டி வெட்டித்தாம் சுவத்தை வெச்சி கொட்டாய் கொட்டாயா போட்டு வீட்டை வளத்துக்கிட்டு இருந்தாரு சுப்பு வாத்தியாரு. இவரு கொட்டையா போடணுங்றதுக்காவே அந்த மூங்கிக் குத்தும் வளந்து தொலைச்சதோ என்னவோ! வருஷ வருஷம் குத்தைக் காலி பண்ணுற அளவுக்கு அந்த மூங்கில எதாச்சிம் வேலையைப் பண்ணிட்டுக் கெடப்பாரு சுப்பு வாத்தியாரு. பின்னாடி போடுற கொட்டாய்க்கெல்லாம் பாதிச் சுவருதாம் வைப்பாரு. மீதிச் சுவத்துக்கு மூங்கில பொளந்து போட்டு பிளாட்சா எடுத்து அதுல மூங்கித் தட்டிய தயார் பண்ணி வெச்சிடுவாரு.
            அந்தக் குட்டை ஒண்ணு மட்டும் பின்னாடி கொல்லையில இல்லாம போயிருந்துச்சுன்னா இவரு பாட்டுக்கு வீட்டை இழுத்துட்டுப் போயி மெயின்ரோட்டுல விட்டுருப்பான்னு ஊருல பேசிப்பாங்க. ஏம் இப்படி வீட்டை பின்னாடி கொட்டாயி கொட்டாயா போட்டு இழுத்துகிட்டு போறார்னு ஊருல கேட்டப்ப அவருக்குச் சொல்ல காரணம் நெறையவே இருந்துச்சு. பீரோலு வைக்க எடம் பத்தல, பத்தாயம் வைக்க எடம் பத்தல, பெட்டிப் படுக்கைய வைக்க எடம் பத்தலன்னு எதாச்சிம் ஒரு காரணத்தைச் சொல்லிக்கிட்டே இருந்தாரு.
*****


No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...