ஒரு முடிவு தெரியாமல் போவதன் வேதனை வாழ்க்கைக்கு
எப்போதும் உண்டு. அதன் காரணமாகவே ஒரு முடிவு தெரிந்தாக வேண்டும் என்று நோக்கத்தோடு
மனிதர்கள் இதனால் கதைகளை, புதினங்களை, காவியங்களைப் படைக்கின்றனர். வாழ்க்கை அப்படியா?
அது முடிவுறாத கதை, அந்தமில்லாத காவியம், நிறைவுறதா புதினம், எப்போதும் நடந்து கொண்டிருக்கும்
இதிகாசம்.
எந்த நீர்க்குமிழி எப்போது உருவாகுமோ?
எப்போது உடைந்துப் போகுமோ? யார் இந்த நீர்க்குமிழிகளை உருவாக்குவாரோ? ஓர் ஆத்திகவாதி
அதைப் பார்த்தால் கடவுள் என்பார். அக்கடவுளே நீர்க்குமிழிகளை ஆக்குகிறார், காக்கிறார்,
அழிக்கிறார் என்பார். நாத்திகவாதி அதைப் பார்த்தால் அதுவாக உருவாகிறது, உடைகிறது, அதற்கும்
கடவுளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பார். ஒரு விஞ்ஞானி அதைப் பார்த்தால் அதற்கான
அறிவியல் பூர்வமான விளக்கத்தை காற்றையும், நீரையும் தொடர்புபடுத்திக் கூறுவார். ஒரு
தத்துவவாதி அதைப் பார்த்தால் உண்டாவதும், உடைந்து போவதும் இயற்கையானது, அது அப்படித்தான்
நிகழ்ந்து கொண்டிருக்கும், அதை ரசி, எதுவும் செய்வதற்கில்லை என்பார். ஒரு நீர்க்குமிழிக்கும்
மனித வாழ்க்கைக்கும் கால இடைவெளி வித்தியாசப்படுகிறதே தவிர வேறென்ன வேறுபாடு இருக்கிறது?
அநேகமாக ஒரு நீர்க்குமிழி உருவாவதற்கும், உடைந்து போவதற்கும் உங்களால் என்ன செய்ய
முடியும் நீங்களே காலம் தாழ்ந்து உடையப் போகும் ஒரு நீர்க்குமிழி எனும் போது?
கித்தாஸ் பண்டாரம் எங்கே போனாரென்று கேள்வி
விகடு பேச்சை முடித்ததும் எழுகிறது. அவன் அங்கும் இங்கும் தேடிப் பார்க்கிறான். வாழ்க்கையில்
எல்லா கேள்விகளுக்குமா விடை கிடைக்கிறது? விடை கிடைக்காத கேள்விகள் வாழ்க்கையில் அநேகம்.
மனிதருக்கு ஒரு விடை தெரியாத கேள்வி உண்டாகும் போது வானில் ஒரு புதிய நட்சத்திரம்
உண்டாகிறது. கோள்கள் ஒவ்வொன்றாக உண்டாகின்றன. ராசிபலன்கள், சோதிடம், சாதகம் என்றெல்லாம்
உண்டாகிறது. அவர் எப்போது போனார் என்பது அங்கே டிக் டிக் டிக் என்று சுழன்று கொண்டிருக்கும்
கடிகாரத்திற்குத் தெரிந்திருக்கலாம். அது வாய் திறந்து பேச வேண்டுமே! எங்கே போனாரென்று
திசைகளுக்குத் தெரிந்திருக்கலாம். எந்தத் திசை வந்து அவரின் திசையைக் காட்டிக் கொடுக்கப்
போகிறது?
விகடு யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல்
வில்சன் அண்ணன் வீட்டிற்கு வெளியே வந்து டி.வி.எஸ்.வீகோவை எடுக்கிறான். வீகோவின்
மேல் ஒரு புத்தகம் இருக்கிறது. அந்த இருட்டின் கரிய நிறத்தில் என்ன புத்தகம் என்று
தெரியாத அந்தப் புத்தகத்தை வெளிச்சத்தில் எடுத்து வந்து பார்க்கிறான். எஸ்.இராமகிருஷ்ணன்
எழுதிய 'யாமம்' நாவல் அது. அதைப் பெரும்போக்காய் பிரித்தால் அதனுள்ளே ஒரு நான்காக
மடிக்கப்பட்ட ஒரு காகிதம். காகிதத்தில் தமிழைச் சித்திர வடிவில் எழுதினால் எப்படி இருக்குமோ
அப்படி எழுதி ஒரு கடிதம். கித்தாஸ்தான் எழுதி வைத்திருக்கிறார். அந்தப் புத்தகத்தையும்
வைத்து அதனுள்ளே காகிகத்தையும் வைத்திருக்கிறார்.
அதைப் படித்துப் பார்க்கிறான் விகடு.
*****
No comments:
Post a Comment