14 Dec 2019

நாலு காசுக்கு நாலு திசையிலயும் அலைச்சல்!



செய்யு - 298
            மனைக்கட்டுக்குப் பணத்தைத் தேத்துறது சுப்பு வாத்தியாருக்குப் பெரும்பாடா போச்சுது. நாலா திசைக்கும் அலைஞ்சிப் பணத்தைப் பெரட்டுறதுக்குப் படாத பாடு பட்டாரு. அவரு பட்ட பாடுக்கு ஏத்தாப்புல எங்கயும் யாரும் அவருகிட்ட பணத்தைக் கண்ணால கூட காட்டல. இதுக்கு மேல அங்க இங்க அலையாம நேரா அண்ணங்காரர்கிட்ட ஏதாச்சிம் ஒதவி கெடைக்கலாம்னு சுப்பு வாத்தியாரு விருத்தியூரு கெளம்பிப் போனாரு. அங்கப் போயிக் கேட்டாக்க செயராமு பெரிப்பா, "நீதாம்டா கவர்மெண்டு உத்தியோகம் பாக்குறே! நாம்ம ன்னா கவர்மெண்டு உத்தியோகமா பாக்குறேம்? எங்கிட்ட ஏதுடா காசி? வேணும்ன்னா வூட்டைக் கட்டுறப்ப சொல்லு! வந்து காசிப் பணம் வாங்காம முடிஞ்ச வேலையப் பாத்துக் கொடுக்குறேம். அதாம்டா யம்பீ நம்மால முடிஞ்சது"ங்குது. சுப்பு வாத்தியாருக்கு ஏமாத்தமாப் போச்சுது செயராமு பெரிப்பா சொன்ன பதில கேட்டதும்.

            விருத்தியூரு வந்தது வந்தாச்சு, பணம் கெடைக்காட்டியும் பரவாயில்ல, அப்படியே கண்ட்ரமாணிக்கம் போயி பாடஞ் சொல்லிக் கொடுத்த விகடபிரசண்டரு வாத்தியார்ர பாத்து விசாரிச்சுட்டுப் போவோம்னு கெளம்புனாரு சுப்பு வாத்தியாரு. தங்கிட்ட படிச்சப் பையன் தன்னை மறக்காம வந்து பாத்துட்டுப் போறதுல விகடபிரசண்டருக்கும் ஏகத்தும் சந்தோஷம். அந்த சந்தோஷத்தோட சந்தோஷமா சுப்பு வாத்தியார்ர பத்தி, பிள்ளைக் குட்டிங்க பொறந்ததைப் பத்தி, இப்போ குடியிருக்குற எடத்தைப் பத்தி எல்லாம் விசாரிச்சிருக்காரு விகடபிரசண்டரு. அந்த விசாரிப்புலத்தாம் சுப்பு வாத்தியாரு தனக்கு மகன் பிறந்த சங்கதியிலேந்து, ஒழுகச்சேரியிலேந்து ஓகையூரு மாத்தலானது, இப்போ ஓகையூர்லேந்து திட்டைக்கு மாத்தல் வாங்க முயற்சி பண்றது வரைக்கும் எல்லாத்தையும் சொல்லி, தற்சயமத்துல மனைக்கட்டு ஒண்ணு வாங்குறதுக்கு காசைப் பெரட்ட முடியாம அல்லாடுறது வரைக்கும் எல்லாத்தையும் சொல்றாரு.
            எல்லாத்தையும் கேட்டுக்கிட்ட விகடபிரசண்டரு சுப்பு வாத்தியார்கிட்ட ஒரு யோசனையையும் சொல்றாரு. "யப்பாடி சுப்பு! நாம்ம இருக்குற மொதலியாரு சங்கத்துல ஒரு பரஸ்பர சகாய நிதி லிமிடெட்ட குடவாசல்ல ஆரம்பிச்சுக்கிறாங்கப்பா. அதுல கடன உடன வாங்கிக்கிலாம். ஒனக்கு இப்போ ஐயாயிரம் வரைக்கும் காசைத் தோது பண்ண வேண்டிருக்குல்ல. நமக்கு இருக்குற நெலமைக்கு நாம்ம அஞ்ஞ நாலாயிரத்து வரைக்கும் லோனைப் போடலாம். எம் பேருல லோனைப் போட்டு ஒனக்குத் தர்றேம். மாசா மாசம் கட்ட வேண்டிய தவணையை நீயி எம் பேர்ல இருக்குற கணக்குக்கு குடவாசல்ல இருக்குற அந்த பேங்குல கொண்டாந்து போட்டுடுறீயா? ஒமக்குச் சம்மதம்னா சொல்லு. செஞ்சி விடறேம். காசி விவகாரம். மாசம் பொறந்தா எந்தத் தேதிக்குத் தவணையைக் கட்டணுமோ அந்த தேதிக்குள்ளார பணத்தைக் கட்டிப்புடணும் பாத்துக்கோ. பெசகினா அபராதம் போடுவாம். சங்கத்துலயும் எம் பேரு கெட்டப் பேரா போயிடுமப்பா. என்ன பண்ணலாம்னு யோஜிச்சுச் சொல்லு. இப்ப சொல்றதனாலும் சொல்லு. ஊருக்குப் போயி யோஜனைப் பண்ணி கடுதாசி போடுறதனாலும் போடு. நாம்ம போயி அஞ்ஞ சொன்னதிலேர்ந்து பத்து நாளுக்குள்ள காசிய தூக்கிக் கையிலத் தந்துடுவாம்."ங்றாரு விகடபிரசண்டரு.
            சுப்பு வாத்தியாருக்குச் சந்தோஷம் தாங்க முடியல. தன்னாலயும் நாலாயிரம் காசைப் பெரட்ட முடியுங்றதே அவருக்குத் தனியா ஒரு தெம்பைத் தருது. இந்த விசயத்தை ஊருல போயி என்னாத்த யோஜிச்சு கடுதாசிப் போடுறதுன்னு, அந்த கணத்துலயே ஒரு முடிவுக்கு வந்து சுப்பு வாத்தியாரு சொல்றாரு, "நீஞ்ஞ செஞ்சிக் கொடுக்குற இந்த ஒதவிய நாம்ம ஆயுசுக்கும் மறக்க முடியாதுங்கய்யா! நீஞ்ஞ சொல்ற போலயே செஞ்சிப்புடலாம்யா! நாம்ம ஏதும் பணம் வாங்குறதுக்கு அடையாளமா பத்திரத்துல கையெழுத்துப் போடணும்னாலும் போட்டுத் தர்றேம்யா!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "அதல்லாம் வாணாம். எம் பேர்ல வாங்குற கடனை ஒனக்குத் தர்றேம். அவ்வளவுதாம். பங்கமில்லாம மாசா மாசத்துக்குப் பணத்தைக் கட்டிப்புட்டு அடைச்சிட்டா போதும். வேற ன்னடா யப்பாடி நமக்கு வேணும்? எல்லாம் ஒம் பேர்ல உள்ள நம்பிக்கைத்தாம். கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த பயெ நீயி. ஒனக்கு ஒதவி பண்ணா அதோட தன்மை ஒனக்குத் தெரியும். நீயும் ஒங் காலத்துல ஒனக்கு ஒரு நேரம் வர்றப்போ இந்த மாதிரி ஒதவியா யாருக்காவது பண்ணி நமக்குப் பரிகாரம் பண்ணிக்கோ. அவ்வளுதாங். பெறவென்ன? நாம்ம நாளைக்கே போயி நம்ம சங்கத்துப் பேங்குல விஜாரிச்சுப்புட்டு ஒனக்கு ஒரு கடுதாசியப் போடுறேம். யப்பாடி ஒம்மட வெலாசத்தை எழுதித் தந்துட்டுப் போடாப்பா!"ங்றாரு விகடபிரசண்டரு. சுப்பு வாத்தியாரும் ஒரு தாள்ல அவரோட வெலாசத்தை எழுதிக் கொடுத்துட்டு வடவாதிக்கு வந்துட்டாரு. அவரு வந்த ஏழாவது நாளு விகடபிரசண்டர்கிட்டேயிருந்து கடுதாசி வருது. வர்ற வாரத்துல வியாழக் கெழமை அன்னிக்கு கண்ட்ரமாணிக்கம் வந்து பணத்தை வாங்கிட்டு போவலாம்னு அதுல எழுதியிருக்காரு விகடபிரசண்டரு.

            எல்லாமும் வாத்தியார்ட்ட பேசிட்டு வந்ததுதாம். இருந்தாலும் அதெ நம்ப முடியாம கடுதாசியத் திரும்பத் திரும்பப் படிச்சுப் பாக்குறாரு சுப்பு வாத்தியாரு. இப்பிடியெல்லாமும் வாழ்க்கையில நடக்குமாங்றது அவருக்கு மனசுக்குள்ள அதிசயமாக இருக்கு. வாத்தியாரு சொன்னபடியே அந்த வாரத்துல வியாழக் கெழமை அன்னிக்கு லீவைப் போட்டுட்டு கண்ட்ரமாணிக்கம் போயி விகடபிரசண்டர்கிட்டேயிருந்து பணத்தை வாங்கிட்டு வந்தாரு சுப்பு வாத்தியாரு. அப்படி பணத்தை வாங்குறப்பவே விகடபிரசண்டரு வாத்தியாரு லோன் போட்டு வாங்குன பேங்கோட விலாசம், லோனுக்கான கணக்கு நம்பரு எல்லாத்தையும் ஒரு தாள்ல குறிச்சி வுட்டு மாசா மாசாம் பணத்தை மட்டும் சரியாக் கட்டிப்புடணும்னு கண்டிச்சாப்புல சொல்லி அனுப்புறாரு. அவரு அப்படிச் சொன்னதுக்கு எந்த பங்கமில்லாம பணத்தைக் கொண்டு போயி மாசா மாசம் குடவாசலு போயி கட்டுனாரு சுப்பு வாத்தியாரு. அப்படிக் கட்டப் போறப்ப கட்டி முடிச்சிட்டு விகடபிரசண்டரு வாத்தியார்ர கண்ட்ரமாணிக்கத்துலயும் போயி பாத்துப் பணத்தக் கட்டுன விசயத்தைச் சொல்லிட்டு வந்திடுவாரு சுப்பு வாத்தியாரு.
            பிற்காலத்துல சுப்பு வாத்தியாருக்குப் பணத்தேவை வந்தப்ப எல்லாம் அவரு விகடபிரசண்டரு வாத்தியாருகிட்ட கண்ட்ரமாணிக்கத்துல போயித்தாம் நின்னாரு. அவரும் ஒவ்வொரு தடவையும் அலுத்துக்காம கொள்ளாம சங்கத்துப் பேங்குல அவரு பேர்ல லோனைப் போட்டு அதெ அப்படியே சுப்பு வாத்தியாருக்குத் தந்தாரு. சுப்பு வாத்தியாரு மச்சு வூடு கட்டுற வரைக்கும் விகடபிரசண்டரு வாத்தியாரோட ஒதவி கொறையில.
            சுப்பு வாத்தியாரு மச்சு வூடு கட்டுறப்ப அதெ போல பணத்துக்காகப் போயி நின்னப்பத்தாம் விகடபிரசண்டரு வாத்தியாரால உதவ முடியல. அதுக்குக் காரணம் அவங்களோட புள்ளைங்க எல்லாம் தலையெடுத்து பெரும் ‍பெரும் ஆளுங்களப் போயிடுச்சுங்க. யேவார தொழில்ல வலுத்த கையிங்களா இருந்ததால, "நம்ம ரோட்டேஷனுக்கே பணம் தட்டாயிருக்கு. இதுல யாரு யாருக்கோ ஏம் கடன உடன வாங்கிக் கொடுக்குதீயே?"ன்னு அவரோட புள்ளைங்க அவர்ர பாத்து நேருக்கு நேராவே சவுண்ட வுட ஆரம்பிச்சிட்டுங்க. பாத்தாரு சுப்பு வாத்தியாரு நம்மால அவுங்க குடும்பத்துல சச்சரவு வந்துப்புடக் கூடாதுன்னு நெனைச்சிக்கிட்டு, "பரவாயில்லீங்கய்யா! இம்மாம் காலத்துக்கு செஞ்ச ஒதவிய ஒருக்காலும் மறக்க மாட்டேம்யா! எம்மட வூட்டுல எல்லா நல்ல செலவும் ஒங்கக் கையால வாங்குன காசால பண்ணதுங்கய்யா! இந்த மச்சு வூடு கட்டுற நல்ல செலவையும் ஒங்கக் கையால வாங்குற காசாலத்தாம் பண்ண விரும்புறேம். ஒங்கக் கையால ஒத்த ரூவா காசெ மட்டும் கொடுங்கய்யா. அதெ நாம்ம லட்ச ரூவாய நெனைச்சுக்கிட்டு எடுத்துட்டுப் போறேம்!" அப்பிடின்னிருக்காரு.
            அதெ கேட்ட விகடபிரசண்டருக்குக் கண்ணு கலங்கிப் போயி, நூத்து ரூவாய தாள ஒண்ண வூட்டக்குள்ள போயி எடுத்தாந்து, சுப்பு வாத்தியாரு கையில கொடுத்திருக்காரு. அதெ வாங்கிட்டு கால்ல வுழுந்த சுப்பு வாத்தியார்ர எழுப்பி விட்டு, விபூதியப் பூசி வுட்டு, "யப்பாடி! இனுமே இந்தப் பக்கம் வாரதப்பா! பணம்னு வந்து நின்னுடாதப்பா! நல்லபடியா இருந்து நல்ல வெதமா பொழைச்சுப் போப்பா!" அப்பிடின்னு சொல்லிப்புட்டு மேக்கோண்டு ஒண்ணும் சொல்ல முடியாம உள்ளார போயிட்டாரு. அத்தோட விகடபிரசண்டரு வாத்தியாரு வூட்டுப்பக்கம் போறத நிறுத்திட்டாரு சுப்பு வாத்தியாரு.
            கடைசியா அவரோட சாவு சங்கதியச் சொல்லிட்டு ஒரு கடுதாசி வந்ததுதாம். அதெப் பாத்துப்புட்டு துக்கம் விசாரிக்கப் போனாரு சுப்பு வாத்தியாரு. அப்போ அவரோட புள்ளைங்க ரொம்ப மருவாதியா இவர்ர கூப்புட்டு விசாரிச்சிக்கிறாங்க. "கடெசீக் நேரத்துல யப்பா ஒஞ்ஞ பேரைத்தாம் சொல்லிட்டுக் கெடந்தாரு. ஒங்கள வரச் சொல்லிக் கடுதாசிப் போட்டுடலாம்னு நெனைக்குறதுக்குள்ள சவமாயிட்டாரு. அந்தச் சங்கதியத்தாம் ஒங்களுக்குக் கடுதாசியா போட முடிஞ்சது. அவரோட டைரியிலத்தாம் ஒஞ்ஞலோட வெலாசம், நீஞ்ஞ அவருக்கு எழுதுன எல்லா கடுதாசியும் இருந்துச்சு. நீஞ்ஞ படிச்சக் காலத்துல நீஞ்ஞ எழுதுன ஒரு டெஸ்ட்டு பேப்பர்ர கூட அதுல வெச்சிருப்பாரு. ரொம்ப காலத்துக்கு முன்னாடி உள்ள பேப்பர்ல அது. அத்தெ எஞ்ஞகிட்ட காட்டி அடிக்கடி, எப்டி அச்செடுத்தாப்புல எம்மட ஸ்டூடண்ட் எழுதிருக்காம் பாரும்பாரு! அப்போ அவரோட மொகத்தைப் பாக்கணுமே. அப்போ எங்களுக்கு அத்து பெரிசா தெரியல. இப்போ போயிச் சேந்தப்போ நெனைக்குறாப்புல இருக்கு. கடைசீ நேரத்துல சாவக் கெடந்தப்போ ஒங்களுக்கு எந்த ஒதவி தேவைன்னாலும் பண்ணச் சொன்னாரு யப்பா! நீஞ்ஞ ஒங்களுக்கு என்னா ஒதவி தேவைன்னாலும் வர்லாம்." அப்பிடின்னுருக்காங்க அவரோட பிள்ளைங்க.
            தன்னோட வாத்தியார்ர, தனக்கு சகல விதத்துலயும் ஒதவி பண்ணி அப்பா ஸ்தனாத்துல இருந்தவர்ர இடையில ஒரு தபா வந்து பாத்திருக்காலேமேன்னு அப்ப சங்கடமா இருந்திருக்கு சுப்பு வாத்தியாருக்கு. இப்போ அவரோட புள்ளைங்க மனசு மாறி ஒதவி பண்றதுக்குத் தயாரா இருந்தும் சுப்பு வாத்தியாரு அப்பையும் செரி, அதுக்குப் பிற்பாடும் செரி எந்த ஒதவியையும் அவுங்ககிட்ட கேட்கல. தனக்கு மொறைன்னா அது வாத்தியாரோட முடிஞ்சிப் போயிடுச்சுங்றதுல அவரு சரியா இருந்துக்கிட்டாரு. தனக்கு தன்னோட வாத்தியார்ட்ட கேட்க உரிமெ இருக்கு, அவரோட புள்ளைங்ககிட்ட கேக்க என்னா உரி‍மெ இருக்குன்னு நெனைச்சுக்கிட்டாரு சுப்பு வாத்தியாரு.
            சுப்பு வாத்தியாரு மொத மொதலா விகடபிரசண்டரு வாத்தியாரு மூலமா வாங்குன நாலாயிரத்து ரூவா கடன நாலு வருஷத்துக்கு மாசா மாசம் நூத்து முப்பதுங்குற அளவுக்குத் தவணையா கட்டி முடிச்சாரு. அந்த நாலு வருஷமும் குடும்பத்தையும் பாத்துக்கிட்டு தவணைத் தொகையையும் கட்டுறதுக்குள்ள வாயைக் கட்டி வயித்தைக் கட்டி சுப்பு வாத்தியாரு முழிப் பிதுங்கிப் போயிட்டாரு. அத்தோட கைமாத்தா வேற வைத்தி தாத்தாகிட்டேயும், லாலு மாமாகிட்டேயும், விநாயகம் வாத்தியார்கிட்டேயும் ஆளுக்கு ஐநூறு ரூவா மேனிக்கு வாங்கியிருந்தாரு. அது சேர்ந்து அது ஒரு ஆயிரத்து ஐநூத்து ரூவாய்க்குத் திருப்பிக் கொடுக்க வேண்டியிருந்துச்சு. அதெ அவரு கொடுக்குறதுக்குள்ளு அதுக்கு ஒரு வருஷக் காலம் ஆயிப் போயிடுச்சு.
*****


No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...