14 Dec 2019

21.0



            விகடு டி.வி.எஸ்.வீகோவில் போய்க் கொண்டிருக்கிறான், மூன்றாவது அகல் கூட்டத்துக்கு. ஜூன்ஸ் பேண்டும், டீ சர்ட்டும், பின்னால் வேட்டியால் கட்டிய பண்டார மூட்டையும், தலையில் ஹெல்மெட்டுமாக கை காட்டியவரைப் பார்த்து அவன் வண்டியை நிறுத்துகிறான். அவன் வண்டியை நிறுத்தியதும் அவன் எங்கே போகிறான் என்று எதையும் கேட்காமல் ஏறிக் கொள்கிறார் அவர்.

            விகடு அவரிடம், "எங்கேய்யா போகணும்?" என்கிறான்.
            "நீ எங்கே போகிறாயோ அங்கே போ!" என்கிறார் அவர்.
            "ஐயா! நான் மணமங்கலம் வரைக்கும் ஓர் இலக்கியக் கூட்டத்துக்குப் போறேங்கய்யா!" என்கிறான் அவன்.
            "அப்படியானால் அங்கேயே போ!" என்கிறார் அவர்.
            "உங்களுக்கு அங்கே கூட்டம் நடக்குறது தெரியுமா? அங்க யாரைப் பார்க்கணும்?" என்கிறான் விகடு.
            "எனக்குப் பாதைகளும் இல்லை. பயணங்களும் இல்லை. எல்லாம் பாதைகளே. எல்லாமும் பயணங்களே. பார்க்க வேண்டியவர், பார்க்கக் கூடாதவர் என்று யாருமில்லை. எல்லாரும் பார்க்கப்பட வேண்டியவர்களே. யாதும் செல்ல வேண்டிய இடங்களே. எதுவும் அனுபவிக்கப்பட வேண்டியதே. நீ கூட்டத்துக்குச் செல்வதானால் கூட்டதிற்கு வருகிறேன். வீடு திரும்புவதானால் வீட்டிற்கு வருகிறேன். எனக்கேது இடம்? எனக்கேது முடிவு? எனக்கேது சிந்தனை? எங்கே நடப்பது என்றாலும் அது அவனுக்குத் தெரியும். அங்கே அவன் எம்மை அனுப்பி வைப்பான். எல்லாம் அவன் செயல். அவன் காட்டும் இடம் சென்று கொண்டே இருப்பேன்! அவனே தொடக்கம். அவனே முடிவு. அவனே எல்லாம். நீயும் நானும் வழியில் சந்தித்துக் கொள்ளும் பயணிகள். பயணத்தில் எவர் எவரையும் சந்திக்கலாம். பயணங்கள் எப்படி வேண்டுமானாலும் திசை மாறலாம். அதைத் தீர்மானிக்க முயலாதே!" என்கிறார் அவர்.
            "நீங்க நம்ம கூட்டத்துல கலந்துக்குறீங்களாய்யா?" என்கிறான் விகடு.
            "கலப்பதும், கலக்காமல் இருப்பதும் அவன் சித்தம். உன்னால் அதை முடிவு செய்ய இயலாது. நீ ஏன் முடிவு செய்து களைத்துப் போகிறாய்? எது நடக்குமோ அது நடக்கும்! வண்டியைச் செலுத்துவதே உன் வேலை. சக்கரங்கள் சுழன்று உன்னை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கும். நீ சக்கரத்தின் கால்களால் நடப்பவன். உனக்கென்று கால்கள் இல்லை இப்போது. இதைப் புரிந்து கொள்!" என்கிறார் அவர்.
            "நவீன கவிதைப் படிக்குறாப்புல ஒண்ணுமே புரியலீங்களய்யா?" என்கிறான் விகடு.
            "நீயென்ன திருஞானசம்பந்தனா? ஞானப்பால் உண்டவனா? இந்த வயதுக்கே புரிய வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய்? உனக்குப் புரிய வேண்டிய காலத்தில் புரிய வரும்! சக்கரத்தைச் சுழல விடு. கால சக்கரத்தைச் சுழல விடு. எல்லாம் தெரிய வரும்!" என்கிறார் அவர்.
            "இது இலக்கியக் கூட்டம்ங்கய்யா!" என்கிறான் விகடு.
            "கூட்டம் அது போதும். அதைப் பிரிக்காதே அந்தக் கூட்டம், இந்தக் கூட்டம் என்று. நான்கு ஆடுகள் கூடி நிற்பதும் கூட்டமே. ஆடுகளின் பாஷை தெரியுமா உனக்கு? பத்துக் கழுதைகள் கூடி நிற்பதும் கூட்டமே. அங்கே ஓர் உரையாடல் நடந்து கொண்டிருக்கிறது என்றால் உனக்குப் புரியுமோ? உனக்குக் கழுதை பாஷை தெரியாது. அதனால் அதன் கூட்டப்பொருள் நீ அறிய மாட்டாய். எங்கும் கூட்டம் நடக்கிறது. நீ மனிதனாகப் பிறந்து விட்டாய். அகந்தை உனக்கு. அதனால் இலக்கியக் கூட்டம் என்று பினாத்துகிறாய். அதோ வானில் பார்! பறவைகள் பறந்து செல்கிறது அல்லவா! பறவைக் கூட்டம் அது. அந்தக் கூட்டத்தில் முன்னால் பறக்கும் பறவையின் பேச்சைக் கேட்கிறாயா நீ? அங்கே ஒரு கூட்டம் நடக்கிறதப்பா! கூட்டமாம் கூட்டம் இலக்கியக் கூட்டம்!" என்று சிரிக்கிறார் அவர்.
            விகடுவுக்கு கூட்டத்திற்கு ஒரு புதிய ஆள் கிடைத்து விட்ட சந்தோஷம். எதையும் புதிய கோணத்தில் பேசும் இவரைக் கூட்டத்தில் பேச வைத்து விட வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொள்கிறான்.
            "ஐயா! நீங்கள் இலக்கியம் படித்திருக்கீங்களய்யா?" என்கிறான் விகடு.
            "சங்க இலக்கியம் அத்தனையும் பால பாடம். சித்தர் பாடல்கள் அனைத்தும் விரல் நுனியில். திருமந்திரம் தொண்டையில் நிற்கிறது. சாரு நிவேதிதா ஆதர்சம். எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் வரை படித்திருக்கிறேன். இது உன் இலக்கியக் கூட்டத்துக்குப் போதுமோ நானறியேன். போதாதென்றால் சொல் கூட்டத்தில் மெளனமாயிருப்பேன். தனிமையில் உரையாற்றுவேன். யாதும் சாத்தியமே நமக்கு." என்கிறார் அவர்.
            "கூட்டத்தில் ஏதாவது ஒரு தலைப்பில் பேசலாங்களய்யா!" என்கிறான் விகடு.
            "தலைப்பு! ஒரு தலைப்பில் பேச வேண்டும்! எல்லாம் பாகுபாடு, பின்னமாக்கல்தாம் உங்களுக்கு. எப்படித்தான் உங்களால் எல்லாவற்றையும் சின்னப்படுத்தி வாழ முடிகிறதோ? எதிலும் முழுமையில்லை. எல்லாம் பாகம்தான். எல்லாம் பகுதிதான். ஒரு சிறு வட்டத்துக்குள் சுற்றும் எறும்புகளே! உலகில் இருக்கும் அத்தனை மனிதர்களின் எடைக்குச் சமமாக பூமியில் இருக்கும் எறும்புகளின் எடை இருக்கிறது. நீங்கள் மனிதர்களோ? எறும்புகளோ? நிச்சயம் எறும்புகள்தான். சிறு வட்டத்தைச் சுற்றும் எறும்புகள். பேசுவேன். பேசிக் கொண்டே இருப்பேன். பேச மாட்டேன். பேசாமல் இருப்பேன். எது அவ்விடம் நிகழ்கிறது என்று நான் எப்படி அறிவேன். சொல்ல முடியாதப்பா! நீ தொடர்ந்து பேசிக் கொண்டே வந்தால் இடையிலே உன் சக்கரக் கால்களை நிறுத்தச் சொல்லி இறங்கினாலும் இறங்கி விடுவேன். எந்த நேரத்தில் எது நடக்குமோ? அடுத்த நொடியே பிரளயம் வந்து அழிந்து போகுமோ? நீ என்னவோ கூட்டத்திற்குப் போகிறேன் என்கிறாய். அங்கே கூட்டத்தை நிகழ்த்தப் போகிறேன் என்கிறாய். அதெப்படி காலத்திடம் அவ்வளவு ஆணவத்தோடு நீ சவால் விடுகிறாயோ? ஆடு! ஆடும் வரை ஆடு! எந்த மனிதன் ஆட்டத்தை நிறுத்துகிறான். இவன் நிறுத்த மாட்டான் என்பதால்தான் ஆடற்கலையில் நிற்கிறான் எம்பெருமான். அவன் ஆடலாம். நீ ஆடலாமா?" என்கிறார் அவர்.
            "ஐயா! நீங்க பேசுறது கொஞ்சம் புரியுற மாதிரியும் இருக்கு. புரியாத மாதிரியும் இருக்குங்கய்யா!" என்கிறான் விகடு.
            "ஒன்று புரிய வேண்டும். அல்லது புரியாமல் போக வேண்டும். உனக்குப் புரியவில்லை என்பதுதான் உண்மை. நீ மனிதன் அல்லவா! அதனால் நடிக்கிறாய். புரியவில்லை என்பதை வெளிப்படையாக ஒத்துக் கொள்ள உன் கெளரவம் தடுக்கிறது. அதனால்தான் நீ புரிந்தது போலவும், புரியாமல் இருப்பது போலவும் இருப்பதாகச் சொல்லி மலுப்புகிறாய். வறட்டுக் கெளரவம் பார்க்காதே. சரணடைந்து விடு." என்கிறார் அவர்.
            "ஐயா! இப்போ உண்மையாகவே ஒன்றும் புரியவில்லை" என்கிறான் விகடு.
            "நடிக்க வேண்டாம் நண்பனே! பேசாமல் வா! நான் தியானிக்க வேண்டியிருக்கிறது. ஊழிக் கூத்தைப் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் நேரமில்லை." என்கிறார் அவர்.
            அதற்கு மேல் விகடு எதுவும் பேசவில்லை. சக்கரங்கள் சுழன்றதில் வில்சன் அண்ணன் வீட்டிற்கு முன் வந்தாகிறது.
            சென்ற அகல் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட ஒன்று என்னவென்றால், கூட்டத்திற்கு வரும் போது ஒவ்வொருவரும் யாரேனும் ஒருவரை அழைத்து வந்தால் கூட்டத்தின் எண்ணிக்கை அதிகமாகும் என்பது. இது வாசகர்களாகிய நீங்கள் அறிந்ததுதான். அப்படி ஒரு ஆளைப் பிடித்து விட வேண்டும் என்று முயன்ற விகடுவுக்கு யாரும் கிடைக்காமல் போக, ஏமாற்றத்தோடு வந்து கொண்டிருந்தவனுக்கு இப்படி ஒரு ஆள் வம்படியாக ஏறிக் கொண்டால் எப்படி இருக்கும்? மிகுந்த குஷியோடும் அவரோடும் அகலின் மூன்றாவது கூட்டத்திற்கு வருகிறான். அப்படி விகடுவால் அழைத்து வரப்பட்டவர்தான் கித்தாஸ் பண்டாரம்.
*****


No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...